அறிவோம் ஸ்ரீதோஷம் ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி? என்று நமது இந்து மன்னர் ஒருவர்,ஆங்கிலேயத் தளபதியிடம் கேட்டார்.”அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களுடைய மொழி இலக்கியங்களைப் படிக்காமல் பார்த்துக்கொள்; அதுபோதும்” என்றான் அந்த ஆங்கிலேயத் தளபதி.

இந்த சம்பவம் கி.பி.1840 வாக்கில் நமது பாரத நாட்டில் நிகழ்ந்த ஒரு உன்னதமான அதே சமயம் நம் ஒவ்வொருவரின் சிந்தனையையும் தூண்டும் உரையாடல் ஆகும்.நாம் ஏன் ஜோதிடம்,வேதங்கள், சமஸ்க்ருதம், தேவாரம், திருவாசகம், திரு மந்திரம், திருப்பாவை, திருவெம்பாவை முதலான நம்முடைய சமய இலக்கியங்களை வாசிப்பது கூட இல்லை; இவைகளை இழிவுபடுத்தும் எந்த ஒரு செயலையும் நாம் ஏன் கண்டிப்பதில்லை?

ஏனெனில்,இவையெல்லாம் நமது முன்னோர்கள் உருவாக்கிய பக்தியைத் தூண்டும் இலக்கியங்கள் என்பது தெரிந்தும் கூட,இதன் உள்ளார்ந்த மதிப்பீட்டை நாமே உணரவில்லை; இந்து தர்மத்தின் ஆணிவேராக இருப்பவை: குடும்ப அமைப்பு, பெண்களை உயர்வாகவும், மரியாதையாகவும் போற்றுதல், பசு, கோவில் இவைகளை பாதுகாத்தல் ஆகும். மேற்கு நாடுகளின் கலாச்சாரம் பெண்களை காமப்பொருளாக பயன்படுத்துகிறது.(ஹாலிவுட் படங்கள் இதையே வலியுறுத்துகின்றன.ஹாலிவுட்டைக் காப்பியடிக்கும் இந்தியத் திரைப்படங்களும் இன்று அதையே திரைப்படக்காட்சிகளாக் வெளியிடுகின்றன);

வழிபாட்டை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கிறது (சர்ச்களில் தேர்தல் சமயத்தில் எல்லாக் கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்கின்றனர்); குடும்பம் என்பதை மேல்நாட்டு சிந்தனையே ஒரு ஒப்பந்தமாக நினைக்கிறது.(நம் நாட்டில் குடும்பம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர்; வாழையடி வாழையாக குடும்பம் என்ற மரபு உறுதியாக இருக்கும்; ஏழேழு ஜன்மத்துக்கும் கணவன் மனைவி என்ற பந்தம் தொடரும்); பணம் சம்பாதிக்க மானத்தைக் கூட விற்கலாம் என்பதும் மேல்நாட்டுப் பண்பாடு ஆகும்.

1995 முதல் இந்தியாவில் ஊடுருவிய உலகமயமாக்கல்,இந்த மேல்நாட்டுக் கலாச்சாரமே சிறந்தது என்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. இதன் விளைவு? உள்ளார்ந்த மற்றும் ஆத்மார்த்தமான பக்தியுடன் கோவிலுக்குச் செல்வோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.சினிமாவும், டிவியும், செல்போனும், இண்டர்நெட்டும் பெண் இனத்தின் மீதான மதிப்பைச் சீர்குலைத்துவிட்டன; நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. நிஜமான நட்பு, பாசம் என்பவை மறக்கடிக்கப்பட்டு நயவஞ்சகம் என்பதை கணவன் மனைவிக்குள்ளும்; அக்கா தம்பிக்குள்ளும்,அண்ணன் தங்கைக்குள்ளும் தன்முனைப்புப்போரை(ஈகோ)த் தூண்டிவிட்டது.இதனால் முறையற்ற உறவுகளே உண்மையான அன்பு என்பதை இந்தியப் பெண்களும் நம்பத்து வங்கிவிட்டனர்.எப்படிப் பணம் சம்பாதித்தால் என்ன? வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையை பெரும்பாலான குடும்பங்கள் ஏற்கும் சூழ்நிலையை உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் நிர்ப்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவை குடும்பம்,பெண்,பசு,கோவில் இவைகள் மீதான மரியாதையையும்,பாதுகாப்பையும் சீரழித்துவிட்டன.இதைச் சரிசெய்யும் அரசாங்கமும் பொறுப்பாகச் செயல்படுவதில்லை;

இந்த சூழலில்,கொடூரமான பாவங்களுடன் பல மனிதர்கள் பிறந்துகொண்டிருக்கிறார்கள்.யாரையும் சுலபமாக சந்தேகப்படும் சுபாவம் சகஜமாகிவிட்டது. தனிமனித ஒழுக்கம் என்பது இன்று கானல் நீராகிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஸ்ரீதோஷம் எப்படி செயல்பட்டுவருகிறது என்பதை இங்கே கொஞ்சம் பார்ப்போம்:

10 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள், தெருவில் தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவனுடன் பேசிக்கொண்டே வந்திருக்கிறாள். அதைப்பார்த்த அந்த மகளின் அப்பா,அவள் வீட்டுக்கு வந்ததும்,அவளை சந்தேகப்பட்டு படுகேவலமாகத் திட்டியிருக்கிறார்.அப்படி ஆரம்பித்த திட்டு,சுமார் 20 வருடங்களாகத் தொடர, அந்த 10 வகுப்பு படிக்கும் மகளை மனநோயாளி அளவுக்கு மாற்றிவிட்டது;தனது மகள் எந்த ஒரு ஆணிடம் பேசினாலும் குற்றம்;என்ற அளவுக்கு அவளது ஆளுமையை தினம் தினம் சந்தேகம் என்னும் ஊசியால் குத்திக்கிழிக்க,அவளுக்கோ திருமணத்தின் மீதே வெறுப்பு வந்துவிட்டது.

அந்த அப்பா தனது மகள் மீது உண்டான சந்தேகத்தை அவளிடமே கேட்டு நிவர்த்தி செய்யாமல்,அவளைப் பற்றிக்கேவலமாகவும், இழிவாகவும் ஊரெல்லாம்,தெருவெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.விளைவு? அந்தக்குடும்பத்தில் அந்த 10 ஆம் வகுப்பு படித்த மகளுக்கு மட்டுமல்ல;அடுத்தடுத்து படித்துக்கொண்டிருந்த இரண்டு மகள்களுக்கும் இன்று வரை திருமணம் நடைபெற வில்லை ;இத்தனைக்கும் அந்த 10 வகுப்பு படித்த மகள் ஒழுக்கத்தின் முன் உதாரணமாகவே திகழ்ந்திருக்கிறாள். ஆனால்,அந்தக் குடும்பம் வாழும் தெரு என்ன நினைக்கிறது? பெத்த மகளைப் பற்றி அவளது அப்பாவே குறை சொல்லுகிறார்.இதில் உண்மையில்லாமல் இருக்குமா? என்று நினைக்கிறது. இது ஸ்ரீதோஷத்தின் அடையாளமாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை ஆகும்.

திருமணம் ஆகும் வரையிலும் தனது தாய் மற்றும் உடன்பிறந்த சகோதரியிடம் மட்டுமே முகம் பார்த்து நேருக்கு நேராகப் பேசுபவன் அந்த இளைஞன். பிற பெண்களிடம்(பெரியப்பா மற்றும் சித்தப்பா மகள்களிடமும் முகம் பார்த்துப் பேசுவதில்லை;அவ்வளவு கூச்சசுபாவம் உள்ளவன்) முகம் பார்த்துப் பேசத் தெரியாது.அப்பேர்ப்பட்ட இளைஞனுக்கு 25 வது வயதில் திருமணம் செய்து வைத்தனர்;அப்படி திருமணம் செய்து வைத்த நாள் முதல்,அவனைப் பெற்ற பெற்றோர்களே அவனது ஒழுக்கத்தைப் பற்றி தாறுமாறாக உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசி வருகிறார்கள்.ஓரிரு வருடங்களில் அந்த இளைஞனின் மனைவியே ,தனது மாமனார் மாமியாரின் பொய் பிரச்சாரத்தை நம்பி அவனை விட்டு நிரந்தரமாக பிரிந்து போய்விட்டாள். அப்படி போனப்பின்னர்,அந்த இளைஞனை வீட்டை விட்டே துரத்தி விட்டனர் அவனது பெற்றோர். இதுவும் ஸ்ரீதோஷத்தின் விளைவுக்கு உதாரணமாக இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை ஆகும்.

ஒரு தவறும் செய்யாமலேயே காமரீதியான அவமானங்களை யாரெல்லாம் அனுபவிக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஸ்ரீதோஷம் எனப்படும் பெண் சாபத்தினை அனுபவித்துவருகிறார்கள் என்று அர்த்தம். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது அல்லது சுக்கிரனுடன் செவ்வாயும் சேர்ந்து இரு கிரகங்களுடனும் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால்,அவர்கள் ஸ்ரீதோஷத்துடன் பிறந்துள்ளார்கள் என்று அர்த்தம்.

ஒரு ஜாதகரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்து, அந்த ஜாதகருக்கு ராகு அல்லது கேது அல்லது சுக்கிர மஹாதிசை வந்தால், அவர்கள் இந்தபிறவியிலேயே ஸ்ரீதோஷத்தை நீக்க வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது என்று பொருள்.முடிந்தால் இந்த திசைகள் ஆரம்பிக்கும் முன்பே ஸ்ரீதோஷத்தை நீக்கிவிடுவது நல்லது.அவ்வாறு செய்யாவிடில் அவர்கள் சுயமரியாதையை இழந்துவிடும் சூழ்நிலை உருவாகிவிடும். இன்றைய நவீன உலகத்தில் கணிப்பொறி மற்றும் இணையதள சேவைகள்,செல்போன் சேவைகள் ராகு மற்றும் கேதுவின் காரகத்துவமாகி செயல்படுத்துகிறது. சுக்கிரனோ சுகம், காம சுகம், தாம்பத்தியம், சுவையான உணவுகள், எதிர்பாலினர்(ஆண் எனில் பெண்;பெண் எனில் ஆண்) , காதல் வயப்படுதல் போன்றவைகளுக்குக் காரகத்துவமாகியிருக்கிறார்.

முற்பிறவியில் ஆணாகப்பிறந்து மனம்போல வாழ்ந்து வந்து,தனது அன்பான மனைவியின் கற்பினை கேவலப்படுத்தியவர்களும்,பெண்ணாகப் பிறந்து தனது ஒழுக்கமான கணவனை எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்தவர்களுமே இந்த ஸ்ரீதோஷத்துடன் பிறக்கிறார்கள்.எனவே, இந்த அவமானத்தை அனுபவத்தவர்களுக்கே இதன் வேதனையும், மனவலியும் புரியும்.

அறிவோம் ஸ்ரீதோஷம் ஸ்ரீதோஷம் இருக்கும் பெண்கள் தங்களுடைய 18 வது வயதுக்குப் பிறகு, மயிலாடு துறைக்கு அருகில் இருக்கும் மேலப் பெரும்பள்ளம் அருள்மிகு வலம் புரநாதர் வடுவகிர்க் கண்ணியம்மன் கோவிலுக்கு ஒரு வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்குள் செல்ல வேண்டும்.அப்படிச் செல்லும்போது,108 மண் விளக்குகள்,2 கிலோ சுத்தமான பசு நெய்,ஒரு மஞ்சள் துண்டு(வசதியிருந்தால் பட்டுத்துண்டு),ஐந்துமுக ருத்ராட்சங்கள் இரண்டு ஆகியவைகளைக் கொண்டு வர வேண்டும்.கோவிலுக்குள் நுழைந்ததும்,யாருக்கு ஸ்ரீதோஷம் இருக்கிறதோ,அவர் மூலவரை நோக்கியவாறு கோவிலுக்குள் 108 மண் விளக்குகளை வரிசையாக வைத்து,ஒவ்வொன்றிலும் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.அப்படி ஏற்றும்போது அவருக்கு யாரும் உதவி செய்யக் கூடாது; 108 நெய்தீபம் ஏற்றியப்பின்னர், கோவிலுக்குள்ளே வடக்கு நோக்கி மஞ்சள் துண்டினை விரித்து அதன் மீது அமர்ந்து, இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு, உள்ளங்கைகளை மடக்கிக் கொண்டு, முதலில் உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து, ஓம் (குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகு ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்; பிறகு ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும். வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுவோர் ஓம்ஹரிஹரிஓம் என்று ஜபிக்க வேண்டும்.(சிவாலயத்தில் இவ்வாறு ஜபிக்கலாம்;இதற்கு எதிர்வழிபாடு என்று பெயர்)ஜபித்து முடித்தப்பின்னர்,கோவிலுக்கு வெளியே இருக்கும்பசுக்களுக்கு ஆறு நாட்டு வாழைப்பழங்களை ஸ்ரீதோஷம் இருப்பவர் தர வேண்டும்,ஒரே ஒரு பசுவுக்கு ஆறு நாட்டு வாழைப்பழங்களைத் தர வேண்டும்.பிறகு வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல்,எவர் வீட்டுக்கும் செல்லாமல் நேராக அவரது வீட்டுக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு 24 வெள்ளிக்கிழமைகள் செய்தால் ஸ்ரீதோஷம் அடியோடு விலகும். மாதம் ஒரு வெள்ளிக்கிழமை செல்ல இயலாதவர்கள், ஒரு தமிழ் வருடத்திற்குள் 6 வெள்ளிக்கிழமையும் மீதி 18 வெள்ளிக்கிழமைகளை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சென்று வழிபட்டால் ஸ்ரீதோஷம் விலகிவிடும்.

ஸ்ரீதோஷம் இருக்கும் ஆண்கள் இதேபோல 24 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை,சீர்காழி, பூம்புகார் இந்த நகரங்கள் முக்கோணமாக அமைந்திருக்கின்றன.இந்த மூன்று நகரங்களுக்கு நடுவே மேலப்பெரும்பள்ளம் எனப்படும் மேலவலம்புரம் அமைந்திருக்கிறது.இதற்கு மிக அருகில் (3 கி.மீ) கேது ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலை ஒட்டி கடைகள் இல்லை;கோவிலின் ஸ்தலவிருட்சமாக பனைமரம் இருக்கிறது.கோவிலின் வாசலில் எரண்ட மகரிஷியின் ஜீவசமாதி இருக்கிறது.கோவிலுக்குள்ளே ஒரே சன்னதியில் காலபைரவரும்,சனீஸ்வரரும் இருக்கிறார்கள்.இவ்வாறு இருக்கும் கோவில்களில் சனிப்பிரீதி செய்தால்,சனியால் துன்பங்கள் வராது.(காலபைரவருக்கு சனிபகவான் கட்டுப்பட்டவர் என்று அர்த்தம்!) எனவே,நமது ஊரில் பரிகாரப் பொருட்களை வாங்கி வர வேண்டும்.இந்த 24 வெள்ளிக்கிழமைகளும் செல்ல இயலாதவர்கள் முதல் தடவை மட்டும் வெள்ளிக்கிழமை சென்று விட்டு,மீதி 23 தடவை ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லலாம்.இந்த 24 கிழமைகளும் சுயபரிகாரத்தை முடிக்கும் வரையிலும் எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது.அப்படி இருந்தால் மட்டுமே இந்த ஸ்ரீதோஷபரிகாரம் நம்மை பாதுகாக்கும்.

இப்படிக்கு ஜோதிட முனி ,கை. வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.

Leave a Reply