வியாபாரத்தை  செழிக்க வைக்கும்  ஸ்ரீ வியாபார விநாயகர்  அடேங்கப்பா… ஐந்து கரத்தான், ஆனை முகத்தான், தொந்தி கணபதி என விநாயகப் பெருமானுக்கு த்தான் எத்தனை எத்தனைத் திரு நாமங்கள்! மதுரையில் இருக்கும் ஒரு கணபதியை, மொட்டைப் பிள்ளையார், ஸ்ரீ வியாபார விநாயகர் என்று அன்புடன் அழைக்கின்றனர் பக்தர்கள்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ. தொலைவில் இருக்கிறது கீழ மாசி வீதி. இங்கே அமைந்திருக்கும் ஸ்ரீமொட்டை விநாயகர் கோயில், வெகுபிரபலம். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப் பட்ட அழகிய ஆலயம் இது.

மதுரையின் மையப்பகுதியில், வியாபாரம் சிறந்து விளங்கும் இடத்தில், இந்தபிள்ளையார் அமைந்துள்ளதால் இவரை ஸ்ரீ வியாபார விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.

அந்நியர் படையெடுப்பின்போது, ஸ்ரீமீனாட்சியம்மன் ஆலயத்தை சேதப்படுத்த திட்டமிட்டனராம். அப்போது, மொட்டை விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு, விபூதி பூசிக் கொண்டு, வியாபாரிகள் தங்கள் கடைகளை திறப்பதைப் பார்த்துக்கோபமுற்ற அந்நிய தேசத்து மன்னன், பிள்ளையாரின் சிரசை துண்டாக்கி, ஆற்றில் தூக்கி வீசினானாம். பிறகு சிவனாரின்_பேரருளால் அந்த சிரசு மீண்டும் அதேஇடத்துக்கு வந்ததைக்கண்டு ஆடிப்போன அவன், உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டான் என்கிறது கோவிலின் ஸ்தல வரலாறு. ஆக, மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தையே காப்பாற்றிய விநாயகர் இவர் எனப்போற்று கின்றனர் பக்தர்கள்.

புதிதாக வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பவர்கள், கடை திறப்பவர்கள் இங்கு வந்து மொட்டை விநாயகருக்கு அபிஷேகம் செய்து, 108 சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வியாபாரம் செழிக்கும் என்பது ஐதீகம்.

இந்தப் பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்யும் அன்பர்கள், தினமும் மொட்டை விநாயகரைத் தரிசித்த பின்னரே கடை திறப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும் அதிக மதிப்பெண்கள் எடுக்கவும் விநாயகரைத் தரிசித்து, தோப்புக்கரணமிட்டு வேண்டிச் செல்கின்றனர். தேர்வு நாளில், இவரின் திருவடியில் பேனாவை வைத்து வேண்டிக்கொண்டால், ஜெயம் நிச்சயம் எனச் சொல்லி மகிழ்கின்றனர் மாணவர்கள்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு வந்து விநாயகப் பெருமானுக்கு பொங்கல் வைத்தும், அபிஷேகம் செய்தும் தரிசித்துச் செல்கின்றனர்.

Leave a Reply