எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ.

குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் வசிஷ்டரிடம் தன் மனக் குறையை கூறுகிறான் தசரதன். வசிஷ்டன் “பூதலம் முழுதும் காக்கும் புதல்வரையளிக்கும் வேள்வி” நீ செய்தால் உன் குறை தீரும் என்றபடி செய்ததால் ராமன் பிறந்தான், கோசலை வயிற்றில்.

வனவாசத்தில், கடத்தப்பட்ட சீதையைத் தேடி நாலாபக்கமும் சென்று தேடுகிறது வானரக் கூட்டம். எங்கும் காணவில்லை சீதையை. இனி செய்வதற்கொன்றுமில்லையோ என்று நினைக்கையில் சம்பாதியின் மூலம் ராவணன் சீதையை இலங்கைத்தீவில் வைத்திருப்பதை அறிந்து கொண்டனர்.

கடல் கடந்து போவது அசாத்தியம் என்ற போது அனுமன் செய்ய முடியும் என்றறிந்து அவனை அனுப்ப, அவனும் சென்று வந்தான் “கண்டேன் சீதையை” என்ற நல்ல செய்தியுடன்.

கடல் கடக்க வேண்டும், சேனையுடன். என்ன செய்வது என்று செய்வதறியாது நின்ற பொழுது, நளன் முதலானோர் ராமர் சேது கட்டி கடல் கடக்கின்றனர்.

14 வருடம் கழித்து வருவேன் என்று சொல்லிவிட்டு சென்றவன் இன்னும் வரவில்லை. இன்றோடு 14 வருடம் முடிகிறது. வந்தானில்லை என் அண்ணன் ராமன். இனி வாழ்வதில் பிரயோசனமில்லை என்று உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறான் பரதன். “நில்!ராவண வதம் முடிந்து நம் மன்னன் ராமன், இதோ, அயோத்தி திரும்பி வந்து கொண்டிருக்கிறான்” என்ற உயிர் காக்கும் செய்தியோடு அனுமன் நிற்கிறான் பரதன் முன்.

எல்லாம் முடிந்துவிட்டது. ராமன் பிறந்த இடத்தில் அவனுக்கு ஒரு கோவில் கட்ட முடியவில்லை என்று மனது விம்மிக் கொண்டிருந்த கோடானு கோடி பக்தர்கள், “மூன்றாய் கூறு போடு” என்று வேறு ஒரு கோர்ட் சொன்னதை அடுத்து கடைசியாக உச்ச நீதிமன்றம் செல்ல, நெடுங்காலம் கழித்து, ராமன் பிறந்தஇடத்தில் அவனுக்கு கோவில் கட்டலாம் என்ற நற்செய்தி வருகிறது.

எல்லாமே கடைசி நிமிடத்தில் நடக்கிறது.

ராமா!

இனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்துக்கொள். வந்தாலும் கடைசி நிமிடம் வரை எங்களை பதை பதைக்க வைக்காதே. நீ எங்களுக்கு கொடுத்திருப்பது மனித இதயம். அது அவ்வளவு வலிமையானது அல்ல. இன்று காலையில் இருந்து பூவிலும் மெல்லிய இதயம் கொண்ட உன் ராம சேனை “கோசலை தன் குல மதலாய்” என்று உன் நாமம் நாவில் தாங்கி மனம் நடுங்கிக் கொண்டிருந்தது, நற்செய்தி வரவேண்டும் என்று.

இனிமேல் குறை வராது என்ற நம்பிக்கையுடன் “அன்னவர்க்கே சரண் நாங்களே”.

நன்றி ச. சண்முகநாதன்

Comments are closed.