தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பா.ஜ.க. முன்னாள் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணன் இந்த அறிக்கையை வெளியிட்டார். அதை விவசாயி, மீனவர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய 3 பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 44 ஆண்டுகளாக நடந்து வரும் இருண்ட ஆட்சியை

அகற்றி விட்டு, உன்னதமான ஆட்சியைத் தர முடியும் என்ற நம்பிக்கை பா.ஜ.க.வுக்கு உள்ளது. அதன்படி இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

* தமிழர்களின் உண்மையான புத்தாண்டான சித்திரை 1ந்தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்.

* சிறுபான்மை மாணவி களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

* அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படும்.

* மாணவர்களுக்கு வருட தொடக்கத்திலும், தேர்வு நேரத்திலும் பேனா, பென்சில் இலவசமாக கொடுக்கப்படும்.

* அரசு பள்ளிகளில் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படும்.

* 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு யோகா, தியானம் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும்.

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டு இலவச பால் கொடுக்கப்படும்.

* பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பெயரில் வங்கியில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.

* ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும்

* சுய உதவிக்குழுக்கள் மூலம் “நாப்கின்”கள் தயா ரித்து ஏழைப் பெண்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக கொடுக்கப்படும்.

* பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.

* இரட்டை தம்ளர் முறை ஒழிக்கப்படும்.

* நதிநீர் இணைப்பு கொள்கைப்படி தமிழக நதிகள் இணைக்கப்படும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* விவசாயத்துக்காக தனி பட்ஜெட் போடப்படும்.

* மலிவு விலையில் விவசாயிகளுக்கு விதைகள் கொடுக்கப்படும். மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பது தடை செய்யப்படும்.

* ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒரு கறவை பசுமாடு குறைந்த விலையில் கொடுக்கப்படும்.

* கச்சத்தீவை திரும்ப பெற்று தமிழர்களின் மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்.

* அரசே சூப்பர் மார்க்கெட் நடத்தும்.

* மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

* பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். அதுவரை விவசாயிகள் நலன்கருதிகள் இறக்க அனுமதிக்கப்படும்.

* இந்து கோவில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

* அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்களாக பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும்.

* வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றும் உரிமை ஆகாது. எனவே அச்சுறுத்தி ஆசைகாட்டி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகும். எனவே கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் பா.ஜ.க. சார்பில் 194 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். எங்கள் வேட்பாளர்களின் நேர்மை, தூய்மை, உழைப்பை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். யார் வெற்றி பெற வேண்டும், யாரால் தூய்மையான ஆட்சியை தரமுடியும் என்பதை முடிவு செய்து வாக்களியுங்கள் என்றார். அகில இந்திய செயலாளர் முரளிதரராவ் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவர் எத்திராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Click here to Download English Version

Click here to Download Tamil Version

Tags:

Leave a Reply