தமிழக பா.ஜ.,வின் ஐந்தாவது மாநில மாநாடு, மதுரையில் 10, 11ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிடவும், பணிகளை வேகப்படுத்தவும், மாநிலம் முழுக்க, மாநாட்டு ஏற்பாட்டாளர்களை, மாநாட்டுப் பந்தலுக்கு வரவழைத்திருந்தனர். நிர்வாகிகளின் எண்ணிக்கையே 2,000த்தை நெருங்கியிருந்தது.

வந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆறு லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து, நிர்வாகிகள் வாய் பிளந்தனர். மாநாட்டுப் பந்தலின் முகப்பில், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை போல, “செட்டிங்’ போடப்பட்டிருந்தது. கண்காட்சி அரங்கு, உணவு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

பிரமாண்ட ஏற்பாடு : நேற்றைய கூட்டத்தில், கட்சியின் முன்னாள் தலைவர் இல.கணேசன் பேசுகையில், “”ஜனசங்க காலத்தில் இருந்து நடந்த எந்த மாநாட்டிலும், இந்த பிரமாண்டத்தைப் பார்த்ததில்லை. அந்தக் காலத்தில், நமது கட்சி நடத்தும் மாநாடுகளுக்கு, இன்று வந்த அளவு தான் கூட்டமே வரும். பா.ஜ., ஆளுங்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் கூட, இப்படி ஒரு பிரமாண்டத்தைப் பார்த்ததில்லை. திராவிட கட்சிகளுக்கு இணையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: மாநாட்டு ஏற்பாடுகள் பற்றி, மாவட்ட வாரியாக நான் வந்து சொன்னால் நிறைவு தராது என்பதால் தான், உங்களையே நேரடியாக வரவழைத்தேன். மாநாட்டு தினத்தன்று, காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை, வருகைப் பதிவு நடக்கும். நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய். அதன் பிறகும் தொண்டர்கள், பொதுமக்கள் வரலாம். ஆனால், அவர்களது எண்ணிக்கை சேர்க்கப்படாது. காலை 10 மணிக்கு கொடியேற்றப்படும். கலந்துகொள்ளும் ஒவ்வொரு தொண்டரின் பெயர், தொலைபேசி எண், நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டுள்ள மூன்று விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒன்று காவல் துறைக்கும், மற்றது மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடமும், மூன்றாவது, நிர்வாகிகளிடமும் இருக்கும்.

மூவர்ணம்: தொண்டர்களுக்கு உதவ, மூன்று உடையில் ஆட்கள் இருப்பர். வெள்ளை உடை அணிந்தவர்களிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளலாம். காவி உடை அணிந்தவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். மஞ்சள் அணிந்திருப்பவர்கள், மாநாட்டு ஏற்பாட்டாளர்கள்.

வருவோர் அனைவருக்கும், இரண்டு வேளை தேனீர், காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படும். இரவு உணவு, வாகனங்களிலேயே வழங்கப்பட்டுவிடும். அவர்களுக்கும் தனித்தனி வண்ணங்களில், “டோக்கன்’ வழங்கப்படும். அந்தந்த வண்ணத்துக்குரிய வரிசையில் நின்று உணவு பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட வாரியாக தங்கும் இடம் மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் பொதுக் குழுக் கூட்டத்தில், 244 உறுப்பினர்கள், செயற்குழுவுக்கு எதிர்பார்க்கப்படும் உறுப்பினர்கள் (மாவட்டத்துக்கு 100 பேர்) மட்டுமே கலந்துகொள்ள முடியும். எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் குழப்பமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, எல்லா கட்டங்களிலும், கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது

Tags; thamarai sangamam , தாமரை சங்கமம, மதுரை தாமரை சங்கமம்

Tags:

Leave a Reply