காவேரிக் கரை ஆற்றில் பல மகான்கள் வாழ்ந்து உள்ளார்கள். அவர்கள் பல்வேறு மகிமைகளைக் கொண்டவர்கள். அவர்கள் பஜன சங்கீத சம்பிராதயத்தை சேர்ந்தவர்கள். அந்த சம்பிரதாயத்தை சேர்ந்த மூன்று முக்கியமான மகான்களில் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் என்பவரின் வரலாறு சுவையானது. அவரை

சிவபெருமானின் மனித அவதாரம் என்றே கருதுகிறார்கள். அவர் வரலாற்றுக் கதை மிகப் பெரியது என்பதினால் அவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான அற்புதங்களை மட்டும் கூறுவதே சரியாக இருக்கும்.

ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் பிறப்பு பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் பிறப்பால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். மாத்வா பிராமண குலத்தில் பிறந்தவர் மற்றும் இளமையிலேயே தமிழ்நாட்டில் வந்து குடியேறி வாழ்ந்தவர் என்று கூறுவார்கள். அவர் பெரும் சிவ பக்தர். அவருடைய தந்தை மைசூர் மானில மன்னரிடம் திவானாக பணி புரிந்து கொண்டு இருந்தவர். தந்தை மரணம் அடைந்ததும் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாளுக்கு திவான் பதவியை மன்னன் கொடுக்க அதை அவர் நிராகரித்து விட்டு வாழ்க்கையில் தனது குறிகோளான சிவ வழிபாடு செய்ய சுந்தரி அம்மாள் என்ற பெயர் கொண்ட தனது மனைவியுடன் தஞ்சாவூருக்கு வந்து அந்த நகரின் அருகில் காவிரிக் கரையில் இருந்த திருவிசைனல்லூர் எனும் குக்கிராமத்தில் குடியேறினார். திருவிசைனல்லூர் என்பது சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய தாலுக்காவான திருவிடைமருதூரில் இருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் தினமும் காவேரி நதியில் குளித்தப் பின் அந்தக் கரையைத் தாண்டி இருந்த மகாலிங்கஸ்வாமி ஆலயத்துக்குச் சென்று அவரை தரிசித்தப் பின்னரே வீடு திரும்பி உணவு அருந்துவார். மகாலிங்கஸ்வாமியின் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் மகிமை எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணம்.

ஒருமுறை பாண்டிய மன்னனான வரகுண பாண்டியன் என்பவர் தவறுதலாக ஒரு பிராமணரைக் கொன்று விட அவருக்கு பிரும்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இறந்து போன பிராமணன் அவர் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டு மன வேதனையை அளித்து வந்தார். ஆகவே அந்த மன்னன் மதுரை சோமசுந்தரர் ஆலயத்தில் சென்று பிரும்மஹத்தி தோஷத்தைக் களைய பூஜை செய்தபோது அந்த மன்னன் கனவில் வந்த சிவபெருமான் தன்னை திருவிடைமருதூரில் வந்து வணங்கினால் அவரை தொடர்ந்து கொண்டு வந்து இருந்த பிரும்மஹத்தி பிரச்சனை அழியும் என்றார்.

அப்போது தஞ்சாவூர் சோழ மன்னன் ஆதிக்கத்தில் இருந்ததினால் பாண்டிய மன்னன் அந்த நாட்டின் மீதே படையெடுத்து சென்று சோழ மன்னனை விரட்டி விட்டு அந்த ஆலயத்துக்கு சென்றான். அவனை தொடர்ந்து வந்து கொண்டு இருந்த பிரும்மஹத்தியால் ஆலயத்துக்குள் நுழைய முடியாது என்பதினால் ஆலய வாயிலிலேயே மன்னன் திரும்ப வரும் வரை அமர்ந்து இருந்தது. ஆலயத்துக்குள் சென்ற மன்னனிடம் பண்டிதர்கள் பிரும்மஹத்தி தோஷத்தைக் களையும் பூஜை செய்து விட்டு பின்புரிய வாயிலினால் வெளியேறி விடுமாறு கூறினார்கள். ஆகவே மன்னன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரும்மஹத்தி வாயிலிலேயே இன்றும் அமர்ந்து இருப்பதான ஐதீகம் உள்ளதினால் அந்த ஆலயத்துக்கு சென்பவர்கள் ஆலயத்தில் நுழைந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் இன்னொரு வழியே வெளியில் சென்று விட வேண்டும் என்பார்கள்.

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மகாலிங்க ஸ்வாமிகளையே "ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள்" தினமும் வணங்கி வந்தார். ஒரு நாள் பெரும் மழை பெய்து ஓய்ந்தது. அதனால் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதினால் குளித்தப் பின் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாளினால் மறுபக்கக் கரையில் இருந்த சிவபெருமானின் ஆலயத்துக்கு செல்ல முடியவில்லை. ஆகவே மனம் வருந்தி தூரத்திலிருந்தே தொலைவில் தெரிந்த ஆலயத்தை மனதார தரிசனம் செய்தப் பின் வீடு திரும்பினார்.

அன்று இரவு அவர் வீட்டிற்கு அவருக்கு நன்கு பரிச்சயமான ஆலய பண்டிதர் வந்து 'இன்று ஏன் ஆலயத்துக்கு வரவில்லை' என அவரிடம் கேட்டு அதற்கான காரணத்தை விசாரித்தப் பின் அவருக்கு ஆலயப் பிரசாதமான வீபுதியைத் தந்தார். தனது வீட்டிற்கே பண்டிதர் வந்து பிரசாதத்தைக் கொடுக்க வைத்துள்ள சிவபெருமானின் கருணையை எண்ணி மிகவும் மனம் மகிழ்ந்த ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் வந்துள்ள பண்டிதரை அன்று இரவு தன வீட்டிலேயே தங்கி விட்டு மறுநாள் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

இரவில் குளிர் அதிகமாக இருந்ததினால் அவருக்கு போர்த்திக் கொள்ள தன்னிடம் இருந்த ஒரு பச்சை நிற சால்வையைத் தந்தார். மறுநாள் விடிந்து பார்த்தால் அந்தப் பண்டிதரைக் காணவில்லை. வந்தவர் எப்போது கிளம்பிச் சென்றார் என மனைவியைக் கேட்டபோது அவளும் அவரைத் தேடியப் பின் அவரைக் காணவில்லை என்பதினால் தன்னிடம் கூடக் கூறாமல் சென்று விட்டாரே என வருந்தினாள்.

காலை குளித்துவிட்டு ஆலயத்துக்குச் சென்ற ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆலய சன்னதி திறக்கும் முன் தன் வீட்டிற்கு வந்த பண்டிதரை சந்தித்தார். அவரிடம் ' இரவு வீட்டுக்கு வந்து விட்டு காலையில் சொல்லாமலேயே போய் விட்டீரே ஸ்வாமி' எனக் கேட்க அவரோ ' நான் எங்கே ஸ்வாமி உங்கள் வீட்டிற்கு வந்தேன்?' என்று கேட்க முந்தய நாள் இரவில் நடந்ததை ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அவரிடம் கூற அவர் திகைத்து நின்றார். அப்போதுதான் புரிந்தது முதல் நாள் சிவபெருமானே பண்டிதர் உருவில் வந்து தனக்கு பிரசாதம் தந்து உள்ளார் என்பது.

'சரி பூஜை செய்து பிரசாதம் கொடுங்கள்' என்று கேட்டு விட்டு சன்னதிக்கு சென்றவர்கள் அப்படியே பிரமித்து நின்றார்கள். முதல் நாள் இரவு ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் கொடுத்த அதே பச்சை நிற சால்வை சிவலிங்கத்தின் மீது போர்த்தி இருந்த கோலத்தில் சிவலிங்கம் காட்சி அளித்தது !

இதே சம்பவத்தைப் பற்றிய இன்னொரு கதை 'அந்த ஆலயப் பண்டிதர் அவர் கரையில் நின்றிருந்தபோதே அவரிடம் வந்து பிரசாதத்தைக் கொடுத்ததாகவும் , அவர் பிரசாதத்தை கொடுத்து விட்டு சென்று விட்டப் பின்னர் தன் நிலைக்கு வந்த அய்யாவாள் வந்த பண்டிதர் ஒரு சொட்டு கூட நனையவில்லை…எப்படி நதியில் வந்து இருக்க முடியும், ஒரு படகு கூட தென்படவில்லையே என யோசனை செய்தார் என்றும், மறுநாள் ஆலயம் சென்று அது குறித்து பண்டிதரிடம் கேட்டபோது அந்தக் கரைக்கு அந்த வெள்ளத்தில் தான் எப்படி வந்து இருக்க முடியும் என்று அந்த அந்தணர் கூறியப் பின்னர்தான் அய்யாவாளுக்கு வந்திருந்தது சிவபெருமானே என்பது புரிந்தது' என்று கூறுகிறது.

ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் வாழ்க்கையில் இன்னொரு சம்பவம். அந்த காலத்திலேயே ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஜாதி – மதபேதங்களைப் பார்க்காதவர் . பிராமணராக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாகவே மதித்து வாழ்ந்தவர். அவர் வீட்டின் பின் புறத்தில் அவர் வயலில் வேலை செய்து வந்த பண்ணையாளும், அவன் மனைவி மற்றும் குழந்தைகளும் இருந்தார்கள். வேலையாட்கள் பிராமணர்கள் அல்லாதவர்கள் என்பதினால் அந்த காலத்தில் வயலின் ஒரு மூலையில் வேலையாட்களின் வீடுகளும் இருக்கும்.

ஒரு நாள் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாளின் வீட்டில் அவருடைய தந்தையின் திவசம் வந்தது. வீட்டில் சமையல் தயாராகிக் கொண்டு இருந்தது. சமையல் வாசனை மூக்கைப் பிளந்தது. பின்புறத்தில் வேலை செய்து கொண்டு இருந்த அந்த வேலைக்காரர்கள் அந்த வாசனையைக் கண்டு 'ஆகா இந்த சமையல் எவ்வளவு சுவையாக இருக்கும்' என தமக்குள்ளேயே பேசிக் கொண்டு இருந்தார்கள். இன்னும் திவசம் ஆரம்பிக்கவில்லை , பண்டிதர்களும் வரவில்லை. அவர்களுக்காக காத்திருந்த அய்யாவாளினால் வேலைக்காரகளின் மனதில் ஓடிய எண்ணத்தை உணர முடிந்தது. காரணம் அவர் மனதில் உள்ளதை அறிந்து கொள்ளும் அதி சக்தி பெற்றவர் .

ஆகவே மனம் இளகிய அவர் உடனே தனது மனைவியை அழைத்து சமையல் செய்து இருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விட்டு மீண்டும் சமைக்குமாறு கூறி விட்டார். அந்த நேரம் பார்த்து பிராமணர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் வந்து திவசம் செய்யும் முன்னரே வேலையாட்களுக்கு வீட்டில் இருந்து சாப்பாட்டைக் கொடுத்து விட்டதினால் தாம் திவசத்தை செய்ய முடியாது என்று கூற அய்யாவாள் அவர்களிடம் நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர்களை திவசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்களோ கர்வம் பிடித்தப் பண்டிதர்கள். நெடுநாட்களாகவே அய்யாவாள் புகழைக் கண்டு ஆத்திரம் அடைந்து இருந்தவர்கள். ஆகவே அவர்கள் திதியை செய்து கொடுக்க வேண்டும் என்றால் திதிக்கான நேரம் முடியும் முன்னரே கங்கை நீரில் அவர் குளித்து விட்டு சமையல் செய்தால் அதை நடத்துவோம் என்று நடக்க முடியாத காரியத்தை ஒரு நிபந்தனையாகக் கூறினார்கள்.

ஆனால் அய்யாவாள் அசரவில்லை. 'பத்து நிமிடம் பொறுங்கள்' எனக் கூறி விட்டு அவர்கள் எதிரிலேயே கங்கை நதி மீது கங்காஷ்டகம் பாடத் துவங்க அடுத்த சில நிமிடங்களில் அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை நீர் பாய்ந்து வெளி வந்து அனைத்து இடங்களிலும் ஓடத் துவங்க வீடுகளும், சாலைகளும் கிணற்றில் இருந்து வந்த நீரினால் முழுகத் துவங்க பண்டிதர்கள் அஞ்சி நின்றார்கள். அவர்கள் அய்யாவாள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அந்த நதியை தடுத்து நிறுத்துமாறு வேண்ட மீண்டும் அய்யாவாள் கங்கை நதியை வேண்டிக் கொள்ள நதியின் நீர் கிணற்றில் திரும்பிப் பாய்ந்தது.

மற்றும் ஒரு சம்பவம். ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அடிக்கடி எங்காவது சென்று அமர்ந்து கொண்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து தியானத்தில் அமர்ந்து இருப்பாராம். அவராக எழுந்து வரும் வரை அவரை யாரும் எழுப்பச் செல்ல மாட்டார்கள். அவர் அந்த ஊரில் இருந்த மாணவர்களுக்கு வேதங்களை சொல்லிக் கொடுத்து வந்தார். அவரிடம் வேதம் பயில பல மாணவர்கள் வருவது உண்டு.

ஒருமுறை அய்யாவாள் தியானத்தில் அமர்ந்து இருந்தபோது அவர் வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களுக்கு பாடம் எடுக்கச் செல்லவில்லை. அப்போது யாருக்கும் தெரியாமல் அவர் உருவிலேயே வந்த சிவபெருமான் அன்றைய பாடத்தை எடுத்து நடத்திவிட்டுச் சென்றார். அந்த விஷயம் யாருக்குமே தெரியாது. மறுநாள் தியானம் கலைந்து எழுந்துவந்த ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு பாடம் எடுக்கத் துவங்க அவர்களோ முன்தினமே அந்தப் பாடத்தை அவர் எடுத்து விட்டதாகக் கூற, அய்யாவாள் திகைத்தார். தான் தியானத்தில் அமர்ந்து இருந்தபோது சிவபெருமானைத் தவிர வேறு யார் தன் உருவில் வந்து இருக்க முடியும் என நினைத்தவர் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இப்படியாகப் பல அற்புதங்களை நடத்திவந்த ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஒரு நாள் திருவிடைமருத்தூரில் இருந்த மத்யார்ஜுனசிவன் ஆலயத்துக்குள் திடீர் என ஒருநாள் நுழைந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் கருவறைக்குள் ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்து அணைக்க அப்படியே அவர் அங்கேயே மறைந்து விட்டாராம்.
கிணற்று நீரில் கங்கை நதி பாய்ந்த சம்பவம் நடந்தது கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று என்பதினால் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பவுர்ணமியில் மக்கள் அங்கு சென்று அந்த கிணற்று நீரில் நீர் எடுத்து நீராடுகிறார்களாம்.

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply