வெள்ளையர் ஆட்சிக் காலத்தின்போது விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடிய வரும், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை வடிவமைக்க முன்னோடியாக இருந்தவருமான தீன் பந்து சோட்டு ராம் என்பவரின் 64 அடி உயரசிலையை அரியானா மாநிலம், சம்ப்லா கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

சோட்டு ராமின் பேரனும் மத்திய மந்திரியுமான பிரேந்தர் சிங், அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கத்தார் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சோட்டு ராமின் போராட்டமும், உழைப்பும் இந்த மாநிலத்தில் உள்ள லட்சக் கணக்கான விவசாயிகளுக்கு இன்றும் ஊக்க சக்தியாக இருப்பதாக புகழாரம் சூட்டினார்.

விவசாயத்துறைக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக் காட்டிய மோடி, வட்டிக்காரர்களின் கோரப்பிடியில் விவசாயிகளும், சிறு வணிகர்களும் சிக்காமல் இருக்க இவர்களுக்கு அரசு வங்கிக்கடன்கள் தாராளமயமாக்கப் பட்டுள்ளது.

வங்கிகளின் கதவுகள் விவசாயிகளுக்கு திறந்து வைக்கப் பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 66.50 லட்சம் மக்களுக்கு ஜன்தன் திட்டத்தின் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தற்போது உரியவிலை கிடைத்து வருவதாகவும், பயிர் காப்பீடு, நவீனவகை விதைகள், மண் வளத்தை பெருக்க போதுமான உரம் ஆகியவற்றை அரசு அளித்துவருவதாகவும் மோடி தெரிவித்தார்.

Leave a Reply