" மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்
நூலோர்கள் செக்கடியில் நோவதும் காண் கிலையோ!
மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தமிழ் காணாயோ! "
மகாகவிபாரதியர்.

கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டுத் திலகர், செக்கிழுத்த செம்மல் என்று மக்களால் போற்றப்படும் தளபதி வ.உ.சி. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் சிற்றூரில் உலகநாத பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார்.

திண்ணைப் பள்ளிக் கூடத்தில் விரப்பெருமாள் அண்ணாவி என்ற ஆசிரியரிடம் கல்வி பயின்றார். தனது மகனுக்கு ஆங்கில மொழியைக் கற்பிக்க விரும்பிய அவரது தந்தை தமது சொந்த செலவிலேயே ஒட்டப்பிடாரத்தில் புதிய பள்ளி ஒன்றைக் கட்டினார். சிதம்பரனார் ஒருவருக்காகக் கட்டப்பட்ட அந்தப் பள்ளி ஊரில் உள்ளவர்கள் பலரும் கற்கப் பயன்படுவதாயிற்று. புதிய பள்ளியில் சில காலம் பயின்றார். பின்பு தூத்துக்குடி சென்று செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். கால்டுவெல் கல்லூரியில் சேர்ந்து மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சிப் பெற்றார்.

வழக்கறிஞராக வேண்டுமென்று எண்ணிய சிதம்பரனார் திருச்சிக்குச் சென்று சட்ட நிபுணர்களிடம் படித்துச் சட்டத் தேர்வில் வெற்றிப் பெற்று வழக்கறிஞரானார். சிதம்பரனாரின் பாட்டனார், பெரிய தந்தை, தந்தையார் ஆகிய அனைவருமே வழி வழி வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இவரது வீட்டிற்கு 'வக்கீல் ஜயா வீடு ' என்ற சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. சிதம்பரனார் தனது வழக்கறிஞர் தொழிலில் வருமானம் ஒன்றே பெரிதென எண்ணாமல், ஒழுக்கம், வாய்மை, நேர்மை, பிறர் நலம் பேணுதல் இவற்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அவரது கடமை உணர்ச்சியையும் , நேர்மையான உள்ளத்தையும் கண்டு நீதிபதிகள் அவரைப் பெரிதும் மதித்து வந்தனர்.

1900 ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று வழக்கறிஞர் தொழில் செய்தார். தமது 23 ஆவது வயதில் திருச்செந்தூர் சுப்பிரமணியப் பிள்ளை அவர்களின் புதல்வி வள்ளியம்மை என்பவரை மணந்தார். அந்த அம்மையார் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓராண்டிலேயே இயற்கை எய்திவிட்டார். பின்பு அவ்வம்மையாரின் குடும்பத்திலேயே மீனாட்சி என்ற பெண்ணை மணம் புரிந்து கொண்டார்.

தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் வாணிகப் பொருட்களை பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் கப்பல்களே ஏற்றுமதி, இறக்குமதி செய்து வந்தன. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் கொட்டத்தை அடக்க எண்ணி தூத்துக்குடி வணிகர்களின் ஆதரவோடு 1906 ஆம் ஆண்டு சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றைத் தோற்று வித்தார்.

முதலில் ஷாலைன் ஸ்டீம்ஸ் கம்பெனியிடம் குத்தகைக்குக் கப்பல்களை எடுத்து இயக்கினார். இதையறிந்த வெள்ளையர்கள் அந்தக் கம்பெனி முதலாளியை மிரட்டி கப்பல்களின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்ய வைத்தனர். இதனால் சிதம்பரனார் கொழும்புக்குச் சென்று கப்பல் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து வந்தார். பின்பு சொந்தமாகக் கப்பல் வாங்கிட முடிவு செய்து பம்பாய் சென்று கப்பல் வாங்கி வந்தார். அக்கப்பலின் பெயர் ' காலியா ' என்பதாகும்

சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு பிரிட்டிஷ் அரசு பல வகையிலும் தொல்லை தந்து அழித்து விட வேண்டுமென்று செயல் பட்டது. ஆதே நேரத்தில் சுதேசிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்கள் சிதம்பரனாரை அரசியலிலிருந்து விலகிக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அவர்கள் மக்களின் சுதேசி உணர்வைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் முதலீடு செய்த பணக்காரர்கள் அவர்களது குறிக்கோள் இலாபம் ஒன்று மட்டுமே, ஆனால், சிதம்பரனாரின் குறிக்கோள் கப்பல் வைத்து சுதேசியம் வளர்ப்பதாகும். ஏனவே, அரசியலை விட்டு விலகும் பேச்சுக்கு இடமில்லை என்று சிதம்பரனார் மறுத்து விட்டார். இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பங்கு தாரர்கள் சுதேசிக் கப்பல் கம்பெனியின் காரியதரிசி பதவியிலிருந்து விலகிவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள். தான் கண்போல காத்து வந்த சுதேசிக் கப்பல் கம்பெனியின பதவியிலிருந்த விலகி முழு மூச்சாக அரசியலில் தீவரமாக ஈடுபடலானார்.

திருநெல்வேலியில் 1908 ஆம் ஆண்ட தேசாபிமான சங்கம் நிறுவப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தும் , பொது மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், பொதுக் கூட்டங்கள் மூலம் சிதம்பரனாரும், சுப்ரமணிய சிவாவும் தீவர பிரச்சாரம் செய்தனர்.

" ஆளப்பிறந்த மக்கள் அடிமைகளாக வாழ்வதா ? பண்டம் விற்க வந்த வணிகக் கூட்டம் பாரத நாட்டை, ஆள்வதென்றால், அதை நாம் பார்த்திருப்பதா? முப்பது கோடி மக்களை ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஜந்து லட்சம் வெள்ளையர்கள் ஆள்வதென்றால் இதைவிட அவமானம் வேறென்ன இருக்க முடியும் ? " என்று அனல் தெறிக்க உரை நிகழ்த்தி சிதம்பரனார் பொது மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டினார்.

" பேச்சுரிமை உண்டு, தாய் நாடு வாழ்க என்று முழக்கமிடுவது குற்றமா? எங்கள் நாட்டு வாணிபம் வளம்பெற கப்பல் ஓட்டுவது குற்றமா? நாங்கள் முப்பது கோடி மக்களும் ஒன்றுபட்டு உங்களை எதிர்ப்பதென்ற முடிவுக்கு வந்து விட்டோம். இனியும் அடக்கு முறைகளால் ஆள்வது ஆகாத காரியம் சுட்டுக் கொல்வதல்ல, சதையைத் துண்டு துண்டாக வெட்டி எடுத்து வேதனைப் படுத்தினாலும் எங்கள் முடிவு மாறாது. இதயத்தே வளரும் சுதந்திரப் பற்றும் மாயாது இது திண்ணம் " என்று மாவட்ட ஆட்சியர் விஞ்சு துரைக்கு சிதம்பரனார் பதிலடிக் கொடுத்தார். ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி மாவட்டத்தை விட்டு உடனே வெளியேறச் சம்மதிக்க வேண்டுமென்றும் , அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்றும் எழுதித் தர வேண்டும் என சிதம்பரனாரை எச்சரித்தார். அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க முன்வராமல் தன் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் எனத் துணிச்சலாக அறிவித்தார். உடனே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரனார் கைது செய்யப்பட்டவுடன் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் வெளியேறிப் போராட்டம் செய்தனர். சிதம்பரனாரையும் சுப்பிரமணிய சிவாவையும் விடுதலை செய்யக் கோரி பொதுக் வட்டங்குளும், ஊர்வலங்களும் நடைபெற்றன. நகரம் முழுவதும் கலவரம் வெடித்தது. காவல்படை குவிக்கப்பட்டது கலவரக்காரர்களைத் துணை மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரை தனது கைத்துப்பாக்கியால் சுட்டார். இதில் 4 பேர் மரணமடைந்தனர். 3 பேர் காயமடைந்தனர். மூன்று நாள் கலவரம் நீடித்தது.

அரசை நிந்தனைப்படுத்தி பேசியதாகவும், சுப்ரமணிய சிவாவுக்கு உணவளித்து உதவியதாகவும் காவல் துறையினர் வழக்கு போட்டனர். இரண்டு மாதம் வழக்கு நடைபெற்றது. சிதம்பரனார் தரப்பில் மகாகவி பாரதியார் உள்பட பல சான்றோர்கள் சாட்சி கூறினார்கள். ஆனாலும், வெள்ளையர் அரசாங்கம் சிதம்பரனாருக்கு அரசு நிந்தனைக் குற்றத்திற்காக இருபதாண்டுக் கடுங்காவல் தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்காக இருபதாண்டுக் கடுங்காவல் தண்டனையும் அளித்து , நாற்பது ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்தது. தீர்ப்பில் சிதம்பரனார் பெரிய ராசத் துரோகி, அவரது எலும்புக் கூட ராஜ விசுவாசத்துக்கு விரோதமானது. சுப்பிரமணிய சிவா அவரது கையில் அகப்பட்ட ஒரு கோல், திருநெல்வேலி கலவரத்திற்கு இவர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது. சிதம்பரனாருக்கு அளிக்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து எழுதிய பத்திரிக்கைகளின் ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு நாற்பதாண்டு தண்டனை பத்து ஆண்டுகளாகக் குறைக்கப் பட்டது. மேலும், பிரிவு கவுன்சிலுக்கு மேல், முறையீடு செய்து பத்தாண்டுத் தண்டனையை ஆறாண்டுக் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சிதம்பரனார் தனது தணடனைக் காலத்தை கோயம்புத்தூர், கண்ணனூர் சிறைச் சாலைகளில் புழுப் பூச்சிகளும், கல்லும் ,மண்ணும் கலந்திருந்த மோசமான உணவும், கேழ்வரகு கூழும் சிதம்பரனாருக்குக் கொடுத்தனர். மாடுபோல் அல்ல, மாடாகவே உழைத்தார் சிதம்பரனார். சிறையில் செக்கிழுத்தார். இந்திய விடுதலைக்காகச் சிறைச் சாலையில் சொல்ல முடியாத துயரங்களையும், கொடுமைகளையும் அவமானங்களையும் அனுபவித்தார். 1912-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிதம்பரனார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டுத் திலகர், கன்னித் தமிழ் வளர்த்த கவிஞர் என்று போற்றப்படும் சிதம்பரனார் 1936- ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் நள்ளிரவில் இம்மண்ணுலக வாழ்விலிருந்து விடுதலைச் பெற்றர்ர். சிதம்பரனாரின் தியாகத்தையும் உறுதியையும், போராட்ட உணர்வையும் தமிழக இளைஞர்கள் பெற்று நாட்டிற்குப் பாடுபடுவதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.

" ஆளப்பிறந்த மக்கள் அடிமைகளாக வாழ்வதா? பண்டம் விற்க வந்த வணிகக் கூட்டம் பாரத நாட்டை ஆள்வதென்றால், அதை நாம் பார்த்திருப்பதா? முப்பது கோடி மக்களை ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஐந்து லட்சம் வெள்ளையர்கள் ஆள்வதென்றால் இதைவிட அவமானம் வேறென்ன இருக்கு முடியும் ? என்று அனல் தெறிக்க உரை நிகழ்த்தி சிதம்பரனார் பொது மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டினார். "

Tags; கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டுத் திலகர், செக்கிழுத்த செம்மல், வ உ சி. வ உ  சிதம்பரனார், வ உ  சிதம்பரம் பிள்ளை

Leave a Reply