கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்தவும், அங்குவசிக்கும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுமார் 5 கிராமங்களை கொண்ட கிராமங்கள் தொகுப்பை "வில்லேஜ் கிளஸ்டர்' உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

நமது நாடு சுதந்திரம் அடைந்த போது கிராமங்களில் வேலை வாய்ப்பின்மை பிரச்னை எதுவும் இல்லை. பொருளாதார ரீதியாக நமதுநாடு தற்போது வளர்ச்சியடைந்த போதிலும், நகரங்களை போல கிராமங்களில் முன்னேற்றம் ஏற்பட வில்லை. அதோடு, கிராமங்களில் வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இதனால், வேலை தேடி கிராம மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இத்தகைய நிலைமையை தடுத்து நிறுத்தி, கிராமங்களிலும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் கிராமங்கள் தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இந்தக் கிராமங்கள் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும். ஒவ்வொரு கிராம தொகுப்புக்கும் குறைந்தபட்சமாக 5 ஆண்டுகளுக்கு ரூ.70 கோடி முதல் ரூ. 120 கோடிவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக, மத்திய அரசு சார்பில் தேசியஅளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். இன்னும் 5-7 ஆண்டுகளில் இத்தகைய கிராமங்கள் நகரங்களைப்போல வளர்ச்சியடையும்.

நாட்டின் வளர்ச்சியில் கிராமப்புற மக்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் யோசனைப்படி அனை வருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் தொடங்கபட்டது. இந்த திட்டத்தின் கீழ்  75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடர்ந்து செயல்பாட்டில்தான் உள்ளன. இதேபோல, அனைத்துக் கிராமங்களிலும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கும் மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கும், கிராம பஞ்சாயத்து வார்டுகளை பெண்களுக்கு தொடர்ச்சியாக இரண்டுமுறை ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, வருகிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசியல் சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.

மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் செளதரி வீரேந்தர் சிங்

Leave a Reply