கம்பர், ஒளவையார், வள்ளுவர், பாரதியார், இளங்கோ, போன்ற காலத்தால் அழியாத காவியங்களைசெய்த கவி பெருமக்களை பற்றி நாம் அறிவோம். கவி பெருமக்களிலே ஒருவர்தான் காளமேகப் புலவர். பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த அவர் மதுரகவி, ஆசுகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்றெல்லாம் போற்றப்பட்டவர் . நினைத்தவுடன் எதைபற்றியும் கவிபாடுவதில் வல்லவர்களே ஆசுகவி என அழைக்கபடுவார்கள். ஆசு கவிகவிகளிலே காளமேக புலவர் தன்னிகரற்றபேராற்றல் படைத்தவராய் விளங்கினார்.
காளமேக புலவர் பாண்டி நாட்டிலே திருமோகூர் என்ற திருதலத்திலே கோயில் பணியாளராயிருந்த ஒருவருக்கு மகனாகபிறந்தார் வரதன் என்பதே அவரின் இயற்பெயர்,
இளமைபருவத்தில் ஸ்ரீரங்கம் திருமால்கோயிலிலே வரதன் கோயிற்பணியாளாக வேலைபார்த்து கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து சில மைல் தூரத்தில திருவானைக்கா என்ற சிவத்தலம் உள்ளது . திருவானைக்கா சிவத்தலத்திலே நடனக்கலை மூலமாக இறை பணி செய்யும் தேவரடியார்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவரான மோகனாங்கி மிக அழகானவள். மோகனாங்கிக்கும் வரதனுக்கும் காதல் மலர்ந்தது.
மோகனாங்கி சிவன்கோயிலில் நடனமாடுபவள். வரதன் திருமால்கோயிலில் கோயிற்பணியாளாக வேலைபார்ப்பவர். சைவ சமயத்தவர்களுக்கும், வைணவசமயத்தவர்களுக்கும் இடையே சண்டை சச்சரவு நிறைந்திருந்தகாலம் அது. தன் காதலுக்கு சமயம்தடையாக இருப்பதை உணர்ந்த வரதன், திருவானைக்கா சென்றார். சைவ சமயத்தில் இணைந்தார் . சிவதீட்சைபெற்றார். மோகனாங்கியை மணந்தார் . திருவானைக்கா தலத்திலேயே அவருக்கு வேலையும் கிடைத்தது.
அன்று முதல் திருவானைக்கா சிவனோடு இருக்கும் தேவியை தினமும் வழிபட்டு வந்தார். தேவியின் மீது தீராத அன்பு கொண்ட பக்தனாகவாழ்ந்தார். வரதனின் அன்பில் குளிர்ந்த கலைமகள் சரஸ்வதி கனவிலே ஒருநாள் காட்சி கொடுத்தாள். தேவியின் திரு அருளால் வரதனுக்கு அறிவுகண் திறந்தது. கவிப்புனையும் ஆற்றல் பிறந்தது. அன்று முதல் கடல் மடை திறந்தது போல் கவிமழை பொழிந்து காளமேக புலவராய் திகழ்ந்தார்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருமலைராயன் பட்டினத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த சிற்றரசன் திருமலைராயன். தமிழ்மொழியில் தணியாத ஆர்வம்கொண்டு தமிழ்ப்புலவர்களை போற்றி ஆதரித்தான். அறுபத்து நான்கு புலவர்களுக்கு தனது அரச வையிலே இடம் கொடுத்தான். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான்.
தண்டிகைபுலவர்கள் என அழைக்கபட்ட அவர்கள் மிகவும் செருக்கு உடையவர்களாக இருந்தார்கள். வறுமையால்வாடி மன்னனை நாடிவரும் ஏழைப்புலவர்களை இகழ்ந்தார்கள். இது பற்றி கேள்வியுற்ற காளமேகபுலவர் திருமலை ராயனின் தமிழ் ஆர்வத்தை நேரில் கண்டறியவும், தண்டிகைபுலவர்களின் செருக்கை அடக்கவும் ஆசை கொண்டார்.
திருமலைராயன்பட்டினத்தில் அவர் கால் வைத்த போது தெருவழியே வாத்திய இசை முழங்க, மக்களின் வாழ்த் தொலிகள் எழும்ப அலங்கரிக்கப்பட்ட பல்லக்கொன்றிலே, அதிமதுர கவிராயர் என்ற புலவர் சென்று கொண்டிருந்தார். தண்டிகைப்புலவர்களின் தலைமைபுலவரான அவருக்கு கிடைக்கும் மரியாதைகளை கண்ட காளமேகபுலவர் தமிழ் மீது திருமலைராயனின் பேரார்வத்தை உணர்ந்தார். மனதால் அவனைப்புகழ்ந்தார்.
அதிமதுரக்கவிராயரை வீதியில் மக்கள் எல்லோரும் வாயாரப்புகழ்ந்து வாழ்த்துக்கோசம் செய்யும் போது காளமேக புலவர் மட்டும் அமைதியாக பார்த்து கொண்டிருப்பதை காவலன் ஒருவன் கண்டான் . அவரிடத்தில் வநது கவிராயரைபுகழ்ந்து கோசம் எழுப்பு என கட்டளை யிட்டான். காளமேக புலவர் கடுங் கோபமுற்றார். உடனே,
அதிமதுரம் என்றே அகிலம் அறியத்
துதிமதுர மாயெடுத்துச் சொல்லும் – புதுமையென்ன
காட்டுச் சரக்குலகிற் காரமில்லாச் சரக்குக்
கூட்டுச் சரக்கதனைக் கூறு
என்று பாடினார். காவலன் இது பற்றி அதிமதுரக்கவிராயரிடம் எடுத்துரைதான். கவிராயர் கடும் சினமடைந்தார். அரசனிடம் இதைபற்றி கோள்மூட்டினார். உடனே அரசன் காளமேகப்புலவரைக் கைது செய்து வருமாறு காவலர்களுக்கு கட்டளை பிறப்பித்தான்.
காளமேகபுலவர் அரசவைக்கு அழைத்து வரபட்டார். அரசனை கண்டதும் அவனை வாழ்த்தினார். ஆனால் அரசனோ புலவரை_மதிக்காமல், இருக்கையும் கொடுக்காமல் ஏழனம்செய்தான். அதிமதுரகவிராயரின் சூழ்ச்சிக்கு அரசன் அடிமை ஆகிவிட்டான் என்பதை உணர்ந்தார். உடனே, காளமேகபுலவர் சரஸ்வதியை தியானித்து பாடல்பாடினார். அரசனின் சிம்மாசனத்திற்கு இணையான உயரியஆசனம் ஒன்று அவையில்தோன்றியது. அதில் ஒய்யாரமாக அமர்ந்தார் காளமேக புலவர், கலைமகளின் அருள்பெற்ற காளமேகப்புலவரின் செயலைகண்டு, அஞ்சிய அதிமதுரமும், மன்னன் திருமலை ராயனும் தங்களது குற்றத்தை மன்னிக்க வேண்டும் என வேண்டினர். கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பதை சரஸ்வதி, இந்தநிகழ்வின் மூலம் எடுத்து காட்டினாள்.
Tags; காளமேகப் புலவர், காளமேகப்புலவர், காளமேகபுலவர், காளமேக புலவர்
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.