குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது தாய்ப்பால் சேர்த்து நன்கு குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவினால், குழந்தையின் வயிற்றில் உள்ள கறுப்பு மலம் வெளியேறிவிடும்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் அம்மைத் தடுப்பு ஊசி போடுவார்கள். ஊசி குத்திய இடம் புண் ஆகாமல் இருக்க வேப்ப இலையும், பசு
மஞ்சளும் சேர்த்து அரைத்துத் தடவினால் விரைவில் ஆறி விடும்.
குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் வெற்றிலைச் சாறு, தாயப்பால், கோரோஜனை ஒரு அரிசி எடை அளவு கலந்து புகட்டினால் சளி இருந்தால் வெளியேறிவிடும்.
ஏழாம் நாள் துளசிச்சாறு எடுத்து தாய்ப்பாலில் கலந்து புகட்டினால் சளி கரையும். குழந்தைக்கு தலைக்குக் குளிப்பாட்டும் போது கொடுக்க (11ம் நாள்) சுக்கு, சித்தரத்தை, ஜாதிக் காய், மாசிக்காய் எல்லாவற்றையும் பாலில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெந்த சாமான்களை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும். குழந்தையைத் தலைக்குக் குளிப்பாட்டியவுடன் ஒரு சந்தனக் கல்லில் பாலில் வேக வைத்த இந்தச் சாமான்களை ஒரு முறை இழைத்து தாய்ப்பால் சேர்த்து (ஒரு கட்டிப் பெருங்காயத்தையும் இந்தச் சாமான்களுடன் வைத்துக் கொள்ளவும்.) பெருங்காயத்தையும் ஒரு இழை இழைத்து எல்லாவற்றையும் சேர்த்துப் புகட்டலாம்.
சுக்கு வாயுவைக் கலைக்கும் – சித்தரத்தை சளி பிடிக்காது – ஜாதிக்காய் தூக்கம் வரும் மாசிக்காய் பேதி ஆகாது – காயம் வாயுவைக் கலைக்கும்.
குழந்தைக்கு வயிற்று வலி இருந்தால் நாமக் கட்டியை இழைத்து, தொப்புளில் போடலாம்.
வசம்பு வாங்கி வந்து உப்புத் தண்ணீரில் நனைத்து, நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். "குழந்தை வயிற்று வலியால் " அழுதால் சந்தனக் கல்லில் ஒரு இழை இழைத்து தாய்ப்பால் கலந்து ஒரு பாலாடை அளவு புகட்டலாம். சுட்ட வசம்பின் சாம்பலை ஒரு வெற்றிலையில் போட்டு சிறிது தேன் கலந்து, நன்கு குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினாலும் வயிற்று வலி சரியாகும்.
குழந்தைக்கு வயிறு மந்தமாக இருந்தால், வெற்றிலைச் சாறு, தாய்ப்பால், கஸ்தூரி மாத்திரை மூன்றையும் கலந்து புகட்டுங்கள். வயிறு மந்தம் சரியாகும்.
வெற்றிலை, ஓமம், பூண்டு, உப்புக்கல் சேர்த்து அரைத்து வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்துப் புகட்டினால் வயிறு மந்தம் சரியாகும்.
தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தைப் போட்டு, காய்ச்சி மாந்தம் வரும்போது, விலாக்களிலும் மார்பிலும் தடவி, கறுப்பு வெற்றிலையை அடுப்பில் சூடு செய்து ஒத்தடம் கொடுத்தால் சரியாகும்.
வெற்றிலைக் காம்பை விளக்கொண்ணெயில் தோய்த்து குழந்தையின் ஆசன வாயினுள் வைத்தால் மலம் இளகி சுலபமாக வெளியேறும்.
கற்பூர வல்லி இலையை, சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளி கரையும். சிறிது பெரிய குழந்தையென்றால் கற்பூரவல்லி இலையை, காரமில்லாத பஜ்ஜி மாவில் தோய்த்து, பஜ்ஜியாகச் செய்து கொடுக்கலாம்.
கொய்யா இலையை நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து கொடுத்தால், பேதி நின்றுவிடும்.
ஆறு மாதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நொச்சி இலை, நுணா இலை, ஆடாதோடா இலை மூன்றையும் சேர்த்து நீர்விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளி கரையும்.
கண்டங்கத்திரி இலையை நீரி சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால் சளி கரையும்.
தூதுவளை இலையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து, தேன் கலந்து வடிகட்டிக் கொடுத்தால், சளி கரையும்.
மொசுமொசுக்கை நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, உப்புக்கல் சேர்த்து வடிகட்டிக் கொடுத்தால், குழந்தைக்குச் சளி பிடிக்காது.
வெண் புழுங்கல் அரிசியை ஊற வைத்து, ஓமம், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து தேன் குழல் அச்சில் மாவைப் போட்டு, ஒரு துணியில் சிறுசிறு வில்லைகளாகப் பிழிந்து காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வில்லையை எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் 5 நிமிடம் வைத்தால் வெந்து விடும். கீழே இறக்கி வைத்து சிறிது பால், சர்க்கரை சேர்த்து ஊட்டினால் குழந்தை புஷ்டியாக வளரும்.
ஆறு மாதக் குழந்தைக்கு, வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து, வடி கட்டிக் கொடுத்தால், வயிற்றில் பூச்சி வராது.
கேழ்வரகு இரண்டு ஸ்பூன் முதல் நாள் ராத்திரி ஊற வைத்து, மறுநாள் காலை மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் சிறிது தண்ணீர் வைத்து அரைத்த கேழ்வரகு விழுதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி, அந்தப் பாலைப் போட்டு கைவிடாமல் கிளறி (2 நிமிடம்) இறக்கவும். பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். 6 மாதக் குழந்தையாக இருந்தால், சிறிது ரசம் சேர்த்துக் கொடுக்கலாம். (அரைத்த கேழ்வரகை ஒரு துணியில் போட்டு வடிகட்டி அந்தப் பாலை எடுத்து உபயோகிக்கவும்.)
குழந்தையைக் குளிப்பாட்டும் வெந்நீரில், சிறிது யூகலிப்டஸ் இலையைப் போட்டு அந்த நீரில் குளிப்பாட்டினால் ஆரோக்கியமாக வளரும்.
குழந்தைக்கு ஆரம்பத்திலேயே தூளி பழக்கப் படுத்தக் கூடாது. பழக்கமானால் பிறகு தூளி இல்லாமல் தூங்காது
Tags; குழந்தையை, மருத்துவம் , நோய் தடுப்பு முறைகள், குழந்தை வளர்ப்பு முறைகள், பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை, குழந்தைகளை வளர்க்கும் முறை, வளர்ச்சி,
நன்றி ராஜரத்தினம்
You must be logged in to post a comment.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
1parasitic