துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் வாழ்வின் நெகிழ்ச்சியான அத்தியாயம்!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி (நவம்பர் 20 அன்று) காலமானதைத் தொடர்ந்து, உத்தராகண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான பஞ்சூர் சோகத்தில் மூழ்கியுள்ளது. தாயின் இறுதிச் சடங்கின்போது, தான் துறவறம் பூண்ட பிறகு தாயிடம் பிச்சை (பிக்ஷை) பெற்ற நெகிழ்ச்சியான தருணத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுகூர்ந்து கண்கலங்கினார்.
**துறவியாகத் திரும்பிய ‘அஜய்’**
பூர்வாசிரமத்தில் ‘அஜய் சிங் பிஷ்த்’ என்று அழைக்கப்பட்ட யோகி ஆதித்யநாத், 1993-ம் ஆண்டு கோரக்பூர் சென்றார். அங்கு 1994 ஜனவரி 14-ம் தேதி முறைப்படி துறவறம் ஏற்று ‘யோகி ஆதித்யநாத்’ ஆனார். சந்நியாசம் பெற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, துறவற மரபின் முக்கியச் சடங்கான தனது தாயிடமே முதல் பிக்ஷை (பிச்சை) பெறும் சடங்கை நிறைவேற்றுவதற்காக அவர் தனது சொந்த கிராமமான பஞ்சூருக்குத் திரும்பினார்.
**கண்ணீரும் வைராக்கியமும் சந்தித்த தருணம்**
வீட்டு வாசலில் காவி உடையுடன் சந்நியாசியாக வந்து நின்ற மகனைக் கண்ட தாய் சாவித்ரி தேவியால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தோட, தனது மகனுக்கு அரிசி, பழங்கள் மற்றும் நாணயங்களை பிக்ஷையாக வழங்கினார். மகனை மீண்டும் பிரிய மனமில்லாத அந்தத் தாய், வீட்டிலேயே தங்கிவிடுமாறு உருக்கமாகக் கெஞ்சினார்.
அப்போது, *”அம்மா, நான் இங்கே தங்குவதற்காக வரவில்லை; துறவற தர்மப்படி பிக்ஷை கேட்கவே வந்துள்ளேன்”* என யோகி உறுதியுடன் பதிலளித்தார். தாய்ப்பாசத்திற்கும், துறவற வைராக்கியத்திற்கும் இடையே நடந்த அந்த உணர்ச்சிகரமான உரையாடலுக்குப் பின், மகனின் முடிவை மதித்து கண்ணீருடன் வழியனுப்பி வைத்தார் சாவித்ரி தேவி.
**அதிகார நிழல் படாத எளிமையான வாழ்க்கை**
மகன் நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த போதிலும், சாவித்ரி தேவியின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பஞ்சூர் கிராமத்திலேயே மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த அவர், மகனின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு அரசு சலுகையையும் பெற்றதில்லை.
முதல்வரான பிறகும் கிராமத்திற்குச் செல்லும் யோகியை, பழைய பாசத்துடன் ‘அஜய்’ என்றே அவர் அழைத்து வந்தார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கிராமத்திற்குச் சென்ற யோகி தாயின் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும், உடல்நலக்குறைவால் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயை நேரில் சென்று நலம் விசாரித்ததும், முதல் பதவிக் காலத்தில் லக்னோவில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சாவித்ரி தேவி ஒரே ஒருமுறை வந்து மகனைச் சந்தித்ததும் இன்றும் பலரால் நெகிழ்வுடன் நினைவுகூரப்படுகிறது. சுயமரியாதைக்கும் எளிமைக்கும் இலக்கணமாக வாழ்ந்த சாவித்ரி தேவியின் மறைவு, அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |