கார்கில்: அகப்பட்ட பலநாள் திருடன்

கார்கில்: அகப்பட்ட பலநாள் திருடன் 1999 கார்கில் போர் நம் முதுகில் பாகிஸ்தான் குத்திய செயல். பிரிவினையின் போது நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து நட்புறவை முன்னெடுத்துச் செல்வோம். அண்டை நாடுகளுக்குள் சண்டை வேண்டாம் என்று சமாதானம் பேச வாஜ்பாயி தலைமையிலான நம் அரசு முயன்றுவந்த வேளையில்

 

ஒத்துழைப்புகளை நல்க ஒப்புக் கொண்டது நவாஸ் ஷெரீஃப் அரசு. வாஜ்பாய் ஷெரீஃப் சற்றும் எதிர்பாராத வகையில் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஊடுருவல் துவங்கியது.

1998ல் அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு உலகநாடுகளின் வற்புறுத்தலின் பேரில் இந்திய-பாகிஸ்தான் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பித்தன. 19 பிப்ரவரி மாதம் லாகூருக்கு பேருந்தில் சென்ற பிரதமர் வாஜ்பாயி காஷ்மீர் உள்ளிட்ட இருதரப்புப் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள தொடர் நடவடிக்கைகள் எடுக்க ஒப்புக் கொண்டார். அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

ஆனால் 1998-1999 குளிர்காலத்தில் பாகிஸ்தானின் ராணுவ, துணை ராணுவ, எல்லைக் காவல் படைகளில் சில பிரிவினருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்படையினர் முஜாகிதீன் போராளிகள் போல வேடமிட்டு கார்கில் பகுதியில் ஊடுருவினர். சியாசின் பனிச்சிகர உச்சியைக் கைப்பற்றுவதும் அதன் மூலம் இந்திய ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதுமே இதன் நோக்கம். இந்த இழிசெயலுக்கு "ஆபரேஷம் பதர்" (Operation Badr) என்று பொருத்தமான பெயரையும் சூட்டினர் பாகிஸ்தான் ராணுவத்தினர்.

சியாச்சின் பகுதியும் அதைச் சுற்றியுள்ள அமைப்பும் ஒரு இயற்கையான கோட்டை போன்றது. இதைக் கைப்பற்றி அங்கே ராணுவ தளம் அமைத்தால் எதிர்ப்பது மிகக் கடினம். கோட்டைக்குள் இருந்து  போரிடுவது போல சியாச்சினில் இருக்கும் படைகள் எதிர்ப்பை சுலபமாக முறியடிக்கலாம். ராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவமும் யுத்த காலத்தில் மிகவும் வசதிப்பட்டதுமான இந்தப் பிரதேசம் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றியுள்ள சில பகுதிகளில் நம் ராணுவம் ஆள் நிறுத்தவில்லை. கடும் குளிரும் (-48°C) ஒரு காரணம்.

இங்கே பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்கார்டு பகுதி பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆயுத மற்றும் உணவு வழங்கல் பணிகளுக்கு ஏதுவான இடம். இவையெல்லாம் கொண்டு சியாச்சின் பகுதியைக் கைப்பற்றிவிட்டால் இந்த முக்கியப் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து அதன் மூலம் நம் ராணுவத்தைவிட வலுவான நிலையில் கஷ்மீர் பகுதியில் வளைய வர பாகிஸ்தான் திட்டமிட்டது. அணு ஆயுதச் சோதனைகள் நிகழ்ந்த வேளையில் இப்படி ஒரு சண்டை நடந்தால் கஷ்மீர் பிரச்சினை சர்வதேச கவனத்தைப் பெறும். அதன் மூலம் கஷ்மீர் விடுதலை என்ற தனக்குச் சாதகமான தீர்வைப் பெற நிர்பந்திக்க முடியும் என்று பாகிஸ்தான் நம்பியது.

ஆனால் சமாதானம் பேசி அது சார்ந்த நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினால் பாகிஸ்தானின் இந்த ராணுவ நடவடிக்கை வேறு வழியின்றி நிறுத்தப்படும் என்று நம்பிக்கை வைத்துப் பாரதப் பிரதமர் வாஜ்பாயி லாகூருக்குப் பேருந்து யாத்திரை போனார். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி முஷரஃப் சமாதான நடவடிக்கைகளின் போது கூடவே நின்று சிரித்துக் கைகுலுக்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட போதும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் என்பதை அப்போதைக்கு இந்திய அரசும் உணரவில்லை. உளவுத்துறையும் அறியவில்லை.

ஊடுருவல் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை துவங்கும்போது அது பற்றி வாஜ்பாயி நவாஸ் ஷெரீஃபிடம் கேட்டார். அதற்கு "அப்படியா? எங்க ராணுவமா? நல்லாத் தெரியுமா?" என்று கேட்டார் நவாஸ் என்பது தகவல். அவருக்குத் தெரியாது. பாகிஸ்தான் வாஜ்பாயி நவாஸ் ஷெரீஃபிடம் ராணுவத்திலேயே பல தளபதிகளுக்குத் தெரியாது. ராணுவத்தில் முஷரஃப் தலைமையில் ஒரு நால்வர் அணி செய்த வேலை இது என்று ராணுவ உளவுத்துறை (DIA) அறிவித்தது. 1980களிலும் 1990களிலும் பாகிஸ்தானிய ராணுவம் இதுபோன்ற திட்டங்களை பாகிஸ்தானிய ஆட்சித்தலைமையிடம் கொடுத்திருக்கிறது, ஆனால் அவை போர் அச்சத்திலும் உலகநாடுகள் பழிக்கும் நிதிப் பிரச்சினைகளுக்கும் அஞ்சி கிடப்பில் போடப்பட்டன.

Hassan Abbas (2004). Pakistan's Drift Into Extremism: Allah, the Army, and America's War on Terror. M.E. Sharpe.
Crossed Swords: Pakistan, Its Army, and the Wars Within by Shuja Nawaz Oxford University Press

தாம் பிரதமராக இருந்த போதே கார்கில் ஆக்கிரமிப்பை முஷரஃப் தலைமையில் ஒரு ராணுவத் தளபதிகள் குழு திட்டமிட்டதாகவும் அதைத் தாம் தவறென்று தடுத்துக் கிடப்பில் போட்டதாகவும் மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பேநசீர் புட்டோ தெரிவித்துள்ளார். http://www.dailytimes.com.pk/default.asp?page=story_2-7-2003_pg7_19 மேலும் முஷரஃப் இத்திட்டப்படி ஸ்ரீநகர் சட்டமன்றக் கட்டிடத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவேன் என்று சூளுரைத்ததாகவும், அப்படி நடந்தாலும் சர்வதேச அழுத்தங்களின் காரணமாக அந்த இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிவரும் என்று தாம் திட்டத்தை நிராகரித்ததாகவும் பேநசீர் தெரிவித்தார்.

1999 ஜூன் 11ஆம் நாள் சீனா சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவத்தலைவர் முஷர்ஃபுக்கும் துணைத்தளபதி ஜெனரல் அஜீஸ்கானுக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை கார்கில் ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம் என்ரு நிறுவ இந்தியா வெளியிட்டது. ஜூன் 15ல் அமெரிக்க அதிபர் கிளிண்டன் நவாஸ் ஷெரீஃபிடம் கார்கில் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற வலியுறுத்தினார். நாம் கார்கிலில் வென்றது வரலாறு. ஆனால் அது இல்லை என்று முஷரஃப் தன் சுயசரிதைப் புத்தகத்தில் கூறியது கண்டு உலகமே நகைத்தது.

இவ்வளவுக்குப் பிறகும் முஷரஃப் கார்கில் ஆக்கிரமிப்பு முஜாகிதீன் (போராளிகள்) செய்தது. ராணுவத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. பாகிஸ்தான் அரசு முஜாகிதீன்களுக்கு தார்மீக ஆதரவு மட்டுமே தருவதாகவும் ராணுவ உதவிகள் செய்யவில்லை என்றும் கூறி வந்தார். சமீபத்தில் நமது ராணுவ வீரர்கள் தலை கொய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் ராணுவத்தின் தூண்ண்டுதலின் பேரில் இலியாஸ் கஷ்மீரி என்ற ஜிகாதி தீவிரவாதியால் நிகழ்த்தப்பட்டது என்று ஆதாரம் காட்டிய போதும் முஷரஃப் அதை மறுத்துப் பேசினார்.

பாகிஸ்தானியர்களைக் கிறுக்கர்களைப் போல இந்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன என்று கொதித்தார். நம்மூர் ஊடக நாட்டாமை அர்னாப் கோஸ்வாமி தம் விவாதங்களில் கலந்து கொள்வோரை மிரட்டியே பழக்கப்பட்டவர். ஆனால் முஷரஃபிடம் கார்கில் குறித்துக் கேட்டபோது கெஞ்சினார். "ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள், ஒரே ஒரு கேள்வி" என்று அர்னாப் கெஞ்ச, "முடியாது. கார்கில் பற்றிப் பேசவா வந்தேன்? கார்கில் பற்றிப் பேசவேண்டுமானால் 1971 போர், 1984 சியாச்சின் படைநிறுத்தம் ஆகியன குறித்தும் பேசவேண்டும். பேசலாமா?" என்று சவால் விட்டார் முஷரஃப். ஊடக நாட்டாமை தீர்ப்பை மாற்றிக் கொண்டு Musharraf ducks questions on Kargil என்று முடித்துக் கொண்டார்.

ஆனால் இப்போது கார்கில் போரில் முஷரஃபுக்கு ஆதரவாக உளவுத்துறையில் முக்கியப் பொறுப்பில் செயல்பட்ட ஜெனரல் ஷாஹித் அஜீஸ் கார்கில் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் ராணுவத்தின் பல துன்பங்களில் ஒன்று. அது முஷரஃப் நிகழ்த்திய பேரழிவு என்று  கூறியுள்ளார். ராணுவ ரீதியில் மட்டமான திட்டமிடலும், பற்றாக்குறையான முஸ்தீபுகளும், இந்திய எதிர்த்தாக்குதல் குறித்த தவறான அனுமானங்களும், உலக நாடுகளின் எதிர்வினை குறித்த போதிய அறிவின்மையும் பாகிஸ்தானின் தோல்விக்குக் காரணங்கள் என்று அஜீஸ் கூறியுள்ளார். http://www.defence.pk/forums/strategic-geopolitical-issues/231258-kargil-musharraf-s-disaster-gen-aziz.html

போர்க்களத்தில் நிறுத்தப்படும் நம் பிள்ளைகள் என்ற தலைப்பில் பாகிஸ்தானின் பிரபலமான 'தி நேஷன்' ஆங்கில நாளிதழில் வெளிவந்த தம் கட்டுரையில் ஜெனரல் அஜீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த பல வருத்தங்கள் அக்கட்டுரையில் உள்ளன. போரைத் துவக்குமுன் வேண்டிய முஸ்தீபுகள் செய்யாமல் தோற்றபின் போருக்கான காரணங்களை மாற்றிச் சொல்லி இவை சரியானதால் நம் தான் வென்றோம் என்று இறும்பூது எய்துவதே வழக்கமாக உள்ளது. இந்த சுய ஏமாற்றம் எத்தனை நாட்கள் செல்லுபடியாகும் என்று கேட்கிறார்.

முஷரஃபின் தனிப்பட்ட புகழுக்காக நிகழ்த்தப்பட்ட சோகம் கார்கில் என்கிறார் அஜீஸ். கார்கில் மலையில் சோறு தண்ணீர் இன்றித் தவித்துச் செத்த பாகிஸ்தானிய வீரர்கள் குறித்த விவரம் இன்னும் தெரியவில்லையாம். பாகிஸ்தான் ராணுவத தலைமையகம் கார்கில் குறித்த விசாரணைக்கு உத்தரவிட அதைத் தடுத்துவிட்டார் முஷரஃப். எதற்காக இந்த விசாரணை என்று கேட்டு கார்கில் குறித்த உண்மைகளை ஊற்றி மூடிவிட்டார். ஏன் இந்தப் போர் துவக்கப்பட்டது? எதற்காக இத்தனை உயிர்பலிகள்? பாகிஸ்தான் தன் ராணுவ வீரர்களையே முஜாகிதீன்கள் என்று கைகழுவவேண்டிய அவசியம் என்ன? போன்ற கேள்விகளை அஜீஸ் இப்போது எழுப்புகிறார்.

கார்கிலில் போரிட்டவர்கள் முஜாகிதீன்கள் இல்லை. ராணுவ அலைவரிசையில் முஜாகிதீன்களின் பேச்சு இருக்காது. முஜாகிதீன் போல வேடமணிந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கைத்துப்பாக்கியுடன் அங்கே அனுப்பட்டனர் என்கிறார் அஜீஸ். இந்தியா பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பே இல்லை என்று மேலிடம் சொன்னதைக் கீழ்நிலை உபதளபதிகள் நம்பினார்கள். ஆனால் இந்தியத் தாக்குதல் எதிர்பாராத விதமாக மிகக் கடுமையாக இருந்தது. ராணுவம் ஒருபக்கம், விமானப் படை ஒருபக்கம் என்று அலை அலையாகத் தாக்கினார்கள். சிகரங்களைப் பிடிக்கவில்லை என்ற போதும் துவக்கத்திலேயே இந்திய ராணுவம் பள்ளத்தாக்குகளில் பரவி நின்று பாகிஸ்தான் ராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியது. அதனால் சிகரத்தில் இருந்த வீரர்களுக்கு உணவோ ஆயுதமோ அனுப்ப முடியவில்லை. ஆனால் முஷரஃப் இந்த உண்மைகளை இன்னும் மறுக்கிறார்.

ஆனால் தோல்வி என்று தெரிந்ததும் முஷரஃப் பேச்சை மாற்றினார். "கஷ்மீர் பிரச்சினை குறித்து என்ன முன்னேற்றம் இப்போது ஏற்பட்டுள்ளதோ அது கார்கில் போர் நடந்ததால் மட்டுமே" என்று கூறுகிறார். தெரிந்தே தோல்வியில் வீரர்களைத் தள்ளி பலரைக் கொன்று அவர் அடைந்தது என்ன? இன்னும் எத்தனை சவப்பெட்டிகளில் மெடல் குத்தப் போகிறோம் என்று கேட்கிறார் அஜீஸ். முஷரஃப் பதில் சொல்லமாட்டார்.

நம் நாட்டின் மீது படையெடுப்பது என்றாலே எதிரிக்குக் குலை நடுக்கம் வரவேண்டும். 1965ல் அதைச் செய்தவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. ஆனால் அவர் மர்மமான முறையில் தாஷ்கண்ட்டில் இறந்தார். 1971ல் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசரப்படுத்திய போதும் என் திட்டம், என் போர், என் வீரர்கள். எனக்குத் தெரியும் போரிட என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லி வெற்றிக்கனியைத் தட்டிப்பறித்தவர் ஸாம் பகதூர் என்று அன்புடன் அழைக்கப்படும் ஃபீல்டு மர்ஷல் ஸாம் மனெக்‌ஷா. ஊடுருவினாலும் லேசாக விடமாட்டோம் என்று பாடம் புகட்டியவர் வாஜ்பாயி தலைமையிலான அரசின் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக். இவர் ஒரு போர்க்கைதியாக நான் விசாரிக்கவேண்டிய நபரை அரசு விருந்தினராக அழைப்பதா என்று முஷரஃப் இந்தியா வந்த போது வாஜ்பாயிடம் கோபப்பட்டவர்.

நன்றி ; அருண் பிரபு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...