பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்… என காஷ்மீரின் அழகை கண்டு அனைவரும் வியப்படைகின்றனர். இயற்கையின் பேரழகு எல்லா இடங்களிலும் கொட்டிக்கிடக்கும் காஷ்மீர், பல ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து தற்போது தான், மெல்ல, மெல்ல மீண்டு வந்தது.
மோடி அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் பயங்கரவாத சுவடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மாய்ந்து வந்தன. அனந்த்நாக் மாவட்டத்தில், பனிமலையும், பசுமை போர்த்திய இயற்கை சூழலையும் கொண்ட பஹல்காம், ஜம்மு – காஷ்மீரின் மிகச் சிறந்த கோடை வாசஸ்தலங்களில் ஒன்று; கலாசார, பாரம்பரிய பெருமை கொண்ட நகரம். ஹிந்துக்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும் என ஏங்கும், அமர்நாத் குகை கோவில் செல்லும் வழித்தடத்தில், இந்த சுற்றுலா தலம் அமைந்துள்ளது.
பாக்., கைக்கூலிகள்
‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படும் இந்த அழகிய நகரம், சுற்றுலா பயணியர் வருகையால் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும். தற்போது கோடைகாலம் என்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தந்தனர். பஹல்காம் பனிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பைசாரன் புல்வெளியில், ஏப்., 22ம் தேதி, பாக்., கைக்கூலிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது அரசியல் சட்டப் பிரிவை, 2019ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அதற்குப்பின் நடந்துள்ள, மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இது. மக்கள் கூட்டத்துக்குள் நான்கைந்து பயங்கரவாதிகள் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதல் என, இதை சாதாரணமாக எடுத்துவிட முடியாது.
பெயர் கேட்டு துப்பாக்கி சூடு
இது இரு நாடுகளுக்கு இடையேயான, காலம் காலமான பகையின் பரிணாம மோதல். 1947ம் ஆண்டு, சிலரின் அரசியல் கனவுகளுக்காக இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தினர். அதன் காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், நாட்டு மக்களை மத ரீதியாக பிளவு படுத்த பயங்கரவாதிகளை கருவியாக பயன்படுத்தி, ஏவி விட்டுள்ளது, நமது அண்டை நாடான பாகிஸ்தான்.
சுற்றுலா பயணியரின் பெயரை கேட்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் கொடூரம், இங்கு அரங்கேறியுள்ளது. மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை பலி கொடுக்கும் இந்த பயங்கரவாதத்தின் தாக்கம், பஹல்காம் மட்டுமல்ல, பல நாட்டு எல்லைகளை தாண்டி எதிரொலிக்கும். இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்ட தருணம்; அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்த தருணம் என, துல்லிய நேரத்தை கணக்கிட்டு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தியா பதிலடி
பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், போர் சூளுரை எதுவும் விடுக்காமல், பயங்கரவாத பாகிஸ்தானின் ஆணி வேரையே அறுத்தெறியும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா அறிவித்துள்ள தடைகள், போரை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
முதலாவதாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என்பது பாகிஸ்தானை பொறுத்தவரை ஒரு அணு ஆயுத தாக்குதலுக்கு நிகரானது. ‘தண்ணீரும், ரத்தமும் ஒரே நேரத்தில் பாய்ந்தோடுவதை அனுமதிக்க முடியாது’ என பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அது தற்போது இந்தியா உலகுக்கு சொல்லும் செய்தியாக அமைந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு பேரிடி
இந்தியா- – பாகிஸ்தான் இடையே, 1960 செப்., 19ல் கராச்சியில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் நேரு – பாக்., அதிபர் அயூப் கான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஒன்பது ஆண்டு பேச்சுவார்த்தைக்குப்பின், உலக வங்கி மத்தியஸ்தம் செய்ய, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தின் விதிகளின்படி, சிந்து நதி திட்டத்தில் கிழக்கு நதிகளான -சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி நதிகளின் நீர் இந்தியாவின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டிற்கு கிடைக்கும். மேற்கு நதிகளான- சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தான் தண்ணீரை பெறுகிறது. மொத்தத்தில் சிந்து நதி அமைப்பிலிருந்து இந்தியாவுக்கு 20 சதவீத நீர் தான் கிடைக்கிறது. 80 சதவீதம் தண்ணீரை பாகிஸ்தான் பெறுகிறது.
இரு நாடுகள் இடையே பல போர்கள், மோதல்கள் நடந்தபோதும் தாக்குப்பிடித்த இந்த ஒப்பந்தம், தற்போது முதல் முறையாக மோடி அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது, பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமையும். காரணம், சிந்து நதி தண்ணீரையே பாகிஸ்தான் முழுக்க, முழுக்க தனது விவசாய மற்றும் தொழில் தேவைகளுக்காக நம்பியுள்ளது.
பாகிஸ்தான் பற்றவிடும் மதவாத – பயங்கரவாத தீயை தண்ணீரால் அணைக்கும் முயற்சியாக, தக்க பதிலடி தந்துள்ளது இந்தியா.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |