யோகக்கலையின் எழுச்சி! காலத்தின் தேவை!

இந்தியப் பெருங்கலைகளுள் மிகப் புராதனமானதும் தற்காலத்தில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுத்திகழ்ந்து வருகின்ற இந்து மதச்சார்புடைய பாரம்பரிய கலையாகவும் மிளிர்ந்து வருகின்ற யோகக் கலையானது மனித வாழ்க்கை நெறிமுறைகள் பற்றித் தத்துவார்த்த ரீதியாகத் தெளிவுற விளக்கி நிற்கின்றது.

இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னெழுந்த இக்கலை, நீண்ட வரலாற்றுப் பின்னணியுடையது. இறைவனால் மனிதனுக்காக உவந்தளிக்கப்பட்டு இறையருள் பெற்ற அருளாளர்கள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டது. வேற்று மதப்பிரிவினரால் இக்கலை பற்றிய பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்பிரசாரங்கள், எதிர்க் கருத்துக்கள் எல்லாம் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் அவற்றையெல்லாம் முறியடித்து காலம் கடந்தும் தற்போதும் தன்னிலை மாறாது பேண்தகுநிலையில் வாழ்ந்து வருகின்றதெனில் இக்கலை பற்றிய உலகமக்களது பார்வையானது விசாலமானதாகும்.

இதனடிப்படையில் நோக்கின் காலத்தின்தேவை கருதியும் அதன் முக்கியத்துவம் உணர்ந்தும் உலக அரசியல் தளத்தில் உயர்பீடமாக விளங்கும் ஐ.நா சபையால் கடந்த ஆண்டு முதல் (2015) பிரகடனம் செய்யப்பட்டு உலகெங்கும் புத்தெழுச்சியுடன் கொண்டாடப் பட்டு வருகின்ற தினமாக சர்வதேச யோகா தினமானது அமைகின்றது.

வழமையாக கொண்டாடப் பட்டு வருகின்ற ஏனைய சர்வதேச தினங்களைப் போலல்லாது இது தனித்துவமும் புனிதத்துவமும் பெற்றுநிற்கிறது. இக்கலைக்கு நீண்டவரலாறுண்டு. சனாதன தர்மம் என போற்றப்படுகின்ற இந்து மதத்தின் வேரிலிருந்து முகிழ்த்த பெருமையுடையது. உலகில் வழங்கிவருகின்ற மதப் பிரிவுகளுக்கெல்லாம் ஆதியாய், அநாதியாய் விளங்கும் இந்து மதமானது பல்வேறு அரும்பெரும் கலைகளின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. அத்தகைய சிறப்பிற்குரிய, மக்களது வாழ்வியற் செல்நெறிக்கு மிகவும் அவசியமான கருத்துக்களை தன்னகத்தே கொண்டமைந்துள்ள இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தால் கூட வியந்துநோக்கப்படும் புனிதமான கலையாக யோகக்கலை விளங்குகிறது.

தற்போது மனித வாழ்வியலானது சகலவிதத்திலும் மாற்றம் கண்டுவருகிறது. இயற்கையை புறமொதுக்கி நவீன அறிவியலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் அதனால்விளைகின்ற எதிர்மறையான பின் விளைவுகள் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் அக்கறை கொள்வதில்லை. நம்மை தாக்கிவருகின்ற நோய்களுக்கெல்லாம் முக்கிய காரணமாக எமது அன்றாட நடவடிக்கைகளே அமைகின்றன. எமது இயற்கையை விரோதிக்கும் செயற்பாடுகளால் தான் இவ்விதமான எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதை உணரவேண்டும். யோகம் சார்ந்த வாழ்க்கை முறையானது இயற்கையோடு இணைந்த அறிவியலாகவே வளர்க்கப்பட்டது. முற்காலத்தில் வாழ்ந்த மெஞ்ஞானிகள் அறிவில் தற்கால விஞ்ஞானிகளையும் விஞ்சிய நுண்மாண் நுழைபுலமுடையவர்களாக விளங்கினார்கள்.

இவர்களது ஆய்வு முடிவுகள் தந்த தத்துவங்கள் யாவும் காலம் கடந்து நிற்கும் அழியாச் சிறப்புடைய வையாகும்.அவ் வகையினதாக யோகக் கலையும் நோக்கற்பாலது. இன்றைய நவீன விஞ்ஞானத்தின் ஆய்வுப் புலத்தில் மெச்சத்தக்க விதத்தில் அதன் தத்துவ விசாரம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கலை பற்றிய கருத்துக்கள் பல்வேறு நூற்பரப்புக்களில் காணப்படினும் யோகக்கலையின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி மாமுனிவரது யோக சூத்திரமே இக்கலை சார் கருத்துக்களை தெளிவுற விளக்கி நிற்கும் முக்கியமான மூல நூலாகக் கொள்ளப்படுகிறது.

இதில் காணப்படும் 196 சூத்திரங்களும் நான்கு பாதங்களாக வகுக்கப்பட்டு இரத்தினச் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. இதில் வருகின்ற அட்டாங்க யோகம் எனும் பகுதி மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத எட்டுப் படிநிலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி போன்ற எட்டு நிலைகளே அவையாகும்.

மனித வாழ்வை மேலுயர்த்தி ஆன்ம ஈடேற்றம் பெற வைப்பதற்கு உயர்தரமான கருவி இன்றியமையாததாகும். சாதாரணமாக இயல்பாகவே மனிதனிடமிருக்கின்ற மிருகத்தனமான குணத்தை நீக்கி அவனை தெய்வீக நிலைக்கிட்டுச்செல்வதற்கான நற்கருவியாக யோகமானது திகழ்கின்றது.

யோகம் என்பது “யுஜ்” என்ற வினையடியால் எழுந்தது. இதற்கு இணைதல் அல்லது ஒன்று சேர்தல் என்ற பொருள்தரும். இதன் படி நோக்கின் உடல், மனம், ஆன்மா என்பவற்றை ஒன்றுசேர்க்கும் கருவியாக இது தொழிற்படுகின்றது. இதன் உள்ளார்ந்த விளக்கத்தை பார்த்தால் எமது தூல உடலானது தானாகத் தொழிற்பட மாட்டாது. அதன் தொழிற்பாட்டிற்கு சூட்சுமப் பொருளான மனதின் சக்தி இன்றியமையாதது. அதேபோல் மன இயக்கப்பாட்டிற்கும் ஏதோவொரு எத்தன சக்தியானது மிகஅவசியம் எனத்துணிந்தால் அதுவே ஆன்மா எனும் வகுதிக்குள்ளடங்கும். எனவே இம் முப்பொருட்களதும் பரஸ்பர இயக்கப் பாட்டிற்கான இணைப்புக் கருவியாக யோகம் தொழிற்படுகின்றது.

பொதுவாக, யோகம் என்பதற்கு இந்துதத்துவம் சார்ந்த பலவித நூல்களிலும் பலவிதமான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருப்பினும் யோகத்தின் தந்தையாக விளங்கும் பதஞ்சலி யோகசூத்திரத்தில் சமாதி பாதத்தில் வருகின்ற முதற் சூத்திரம் இதற்கு தெளிவான விளக்கம் தருகிறது. அதாவது “யோக சித்த விருத்தி நிரோதக…” எனும் சுலோகம் ஆழ்ந்த தத்துவ உட்பொருள் கொண்டது. யோகம் சித்த விருத்திகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது. அதாவது சித்தம் என்பது எண்ணங்களின்- சிந்தனைகளின் ஒட்டுமொத்த இருப்பிடமாகும். இது பல நிலைகளில் பலவாறு செயற்படும் தன்மையது. நான், எனது எனும் அகங்கார, மமகாரங்களும் சேர்ந்தியங்கும் முனைப்புறு தன்மையே சித்தமாகும்.

இதுவே மனித வாழ்வைச் சீர்ப்படுத்தவும் சீரழிக்கவும் காரணமாகிறது. துன்பம், விரக்தி, வெறுப்பு, கவலை போன்ற பல விரும்பத்தகாத எதிர்மறையான விளைவுகளுக்கும் மகிழ்வு, இன்பம், வெற்றி, களிப்பு முதலிய பல விரும்பப்படுகின்ற நேர்மறையான சம்பவங்களுக்கெல்லாம் காரணம் மனமாகும். எனவே முதலில் ஐம்புலன்களிடமிருந்தும் மனதை பிரித்தெடுத்து எதுவும் நிலையற்றது என்ற யதார்த்தத்தை உணர்ந்து மெய்யெது? பொய்யெது? என்றாய்ந்துணரும் வேளை மனதை எண்ணங்களற்றதாக்குவது மிக எளிது. எனவே நமது மனதில் பதிந்துள்ள எண்ணங்களின் முழுத்தொகுதிகளின் ஒட்டுமொத்த எழுச்சி நிலைகளே சித்த விருத்தியாகும். அவற்றை மனதினின்றும் அழித்தலே சித்த விருத்தி நிரோதக என்பதன் பொருள் விளக்கமாகும்.

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் பண்படுத்தவல்ல இக்கலையை மக்களனைவரும் இன, மதபேதம் கடந்து பின்பற்றத் தலைப் படுவதுடன் அதனை புனிதத்துவம் கெடாது தொடர்ந்து பேணுவதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதே இத்தினமானது சொல்லும்செய்தியாக அமைகின்றது. வழமை போலவே நாம் ஒவ்வொரு உலக தினம் வரும்போதெல்லாம் பெரும் பணச்செலவுடனும் ஆரவாரத்துடன் பகட்டாகக் கொண்டாடிவருவது வழமையென்றாகி விட்ட நிலையில் அத்தினங்கள் வெளிப்படுத்தி நிற்கும் தாற்பரியங்களறியாது, அர்த்தங்கள் புரியாது வெறும் ஆடம்பரமான கொண்டாட்டங்களிலேயே கவனம் செலுத்தி எமது நேரத்தையும் பணத்தையும் வீணடித்து வருகிறோம்.

எனவே இத்தினத்தினையும் புத்தெழுச்சியுடன் கொண்டாடும் வேளையில் அதன்புனிதம் கெடாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியபொறுப்பு அனைவரின் முன் விரிந்துள்ளது. இத்தினத்தை அங்கீகரிப்பதில் முன்னின்று உழைத்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அவரது அயராத முயற்சியும் இந்து மதத்தின்பால் அவருக்கிருக்கும் ஆழமான காதலும் யோகத்தின் மீதான தீராத பற்றுறுதியும் அவரை அவ்வாறு செயற்படத் தூண்டியதெனில் மிகையில்லை. இந்துமதம் சார் கலையொன்றுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவமாகவே கருதப்படும்.

எனவே இந்துமதம் சார்ந்த கலைவடிவங்கள்,பொக்கிசங்கள் அருகி அழிந்துவரும் நிலையில் தற்காலத்திற்கு மிகவும் அவசியமான யோகக்கலையின் எழுச்சியானது காலத்தின் தேவையாகும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராம புறங்களில் பண பரிமாற்றத் ...

கிராம புறங்களில் பண பரிமாற்றத்தின் சேவையை அதிகரிக்க ஏற்பாடு இந்திய அஞ்சலக வங்கி மற்றும் ரியா மணி ட்ரான்ஸ்பர் ...

கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L ...

கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L முருகன் பேட்டி விவசாயிகள் கவுரவ நிதி மூலம் அவர்களின் கண்ணியத்தை காக்கும் ...

இந்திய திபெத் எல்லை காவல் படையி ...

இந்திய திபெத் எல்லை காவல் படையின் மீட்பு குழுவிற்கு அமித் ஷா பாராட்டு லாகூல், ஸ்பிட்டி ஆகிய இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட ...

17-வது தவணையாக ரூபாய் 20,000 கோடியை ப ...

17-வது தவணையாக ரூபாய் 20,000 கோடியை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார் பிரதமரின் உழவர் நல  நிதி உதவித் திட்டத்தின் கீழ் சுமார் ...

உத்திரபிரதேசம், பீகார் இன்று மற ...

உத்திரபிரதேசம், பீகார் இன்று மற்றும் நாளை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார் ரூ.20,000 கோடிக்கும் ...

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ வ ...

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர்  ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...