ராணுவ துறையில் பல மாற்றங்களை காணலாம் – ராஜ்நாத் சிங்

பெங்களூரில், 15வது சர்வதேச விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ”ராணுவ துறையில், 2025ம் ஆண்டு, மாற்றத்திற்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன ஆயுதங்கள் வாங்குவது, பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துதல் என பல மாற்றங்களை காணலாம்,” என்று தெரிவித்தார்.

ராணுவ துறை அமைச்சகம் சார்பில், பெங்களூரு எலஹங்கா விமானப்படை தளத்தில், 1996ம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் சர்வதேச விமான கண்காட்சி மற்றும் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆசியாவில் நடக்கும் மிகப்பெரிய விமான கண்காட்சி இதுவாகும்.

அந்த வகையில், 15வது சர்வதேச விமான கண்காட்சியை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:

இந்த விமான கண்காட்சி மூலம், நாட்டின் தொழில் வளம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி உலகிற்கு எடுத்து காண்பிக்கப்படுகிறது. இந்தியாவின் நட்பு நாடுகளுடனான உறவு மேலும் வலுப்பெறும். அனைத்து நாடுகளும் ஒன்று கூடி செயல்பட்டால் மட்டுமே உலகில் அமைதியை நிலை நாட்ட முடியும். ஒரே நிலம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்தியா பயணிக்கிறது.

நாம் எப்போதும் அமைதியை கடைப்பிடிப்பவர்கள். வளர்ந்து வரும் நாடு என்ற பெயர் மாறி, வளரும் நாடாக இந்தியா மாறி வருகிறது. ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா மேம்பட்டு வருகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி முக்கிய பங்காற்றுகிறது. 2025 – 26ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், ராணுவ துறைக்கு, 6.81 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 1.80 லட்சம் கோடி ரூபாய் முதலீடும் அடங்கும். மொத்த பட்ஜெட்டில், 75 சதவீதம் நிதி, உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்பு

கடந்த முறை கண்காட்சியை ஒப்பிடுகையில், அஸ்தா, ஆகாஷ், நீர்மூழ்கி ஏவுகணை, மனிதன் இல்லா ராக்கெட் இப்படி பல புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்தாண்டு, ராணுவ உற்பத்தி 1.60 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். 30,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

ராணுவ துறையில், 2025ம் ஆண்டு மாற்றத்திற்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன ஆயுதங்கள் வாங்குவது, பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துதல் இப்படி பல மாற்றங்களை காணலாம். விருந்தினர் கடவுளுக்கு சமமானவர். விமான கண்காட்சிக்கு 26 நாடுகளின் ராணுவ அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்; 90 நாடுகளின் ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள் வந்துள்ளனர். 900க்கும் அதிகமான நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.

பிரயாக்ராஜில் பிரமாண்டமான முறையில் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. அதுபோன்று, இந்த விமான கண்காட்சியும் கும்பமேளா என்று சொல்லும் அளவுக்கு பிரமாண்டமாக நடக்கும். மஹா கும்பமேளா, இந்தியாவின் கலாசாரத்தை விளக்கினால், ‘ஏரோ இந்தியா’ இந்தியாவின் பலத்தை காண்பிக்கும்.

அடுத்த 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாறும் வகையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ‘மேக் இன் இந்தியா, மேக் பார் வேர்ல்டு’ என்ற முறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. புதிய தொழில்களுக்கு அரசு தரப்பில் ஊக்கமளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ இணை அமைச்சர் சஞ்சய் சேட், நாகலாந்து முதல்வர் நீபியூ ரியோ, முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான், ராணுவப்படை தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை துணை தளபதி தார்கர், கர்நாடக தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயல், ராணுவ துறை செயலர் ராஜேஷ்குமார் சிங் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

விமான சாகசம்

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. விமானங்கள், விமான உதிரி பாகங்கள், ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வானத்தில் விமானங்கள் சாகசம் செய்ததை பார்த்து, பார்வையாளர்கள், கை தட்டி ஆரவாரம் செய்தனர். பெரும்பாலானோர் மொபைல் போன்களில் படம், வீடியோ எடுத்து கொண்டிருந்ததை காண முடிந்தது. இன்றும், நாளையும், வணிக ரீதியான நிகழ்வுகள் நடக்கின்றன. வரும் 13, 14ம் தேதிகளில் பொது மக்கள், அரங்குகளை பார்க்கலாம்.

கண்காட்சி நடக்கும் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில், காலையிலும், மாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள், விமான நிலையத்துக்கு செல்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். ஆன்லைனில் டிக்கெட் வாங்கியவர்கள், முண்டியடித்து கொண்டு நுழைய முற்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...