ஒருவன் துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம் – என்று, இன்னா செய்யாமை என்னும் குறளில் உயர்ந்த மனிதர்களின் இலக்கணத்தைப் போதிக்கிறார் வள்ளுவர். நாம் பலருடைய வரலாற்றைப் படித்திருக்கிறோம். ஆனால், இந்தக் குறளின் வடிவமாக வாழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகளே ஆவார். பலவீனமான உடலாக இருந்த
போதும், ஆன்ம பலத்தை அவர் உயர் ஆயுதமாகப் பயன்படுத்தினார். இந்த ஆன்ம பலம் எதிரிகளோடு நேருக்கு நேர் நின்று மோதும் மன வலிமையை அவருக்குத் தந்தது.
தான் அவமானப்பட்டு அந்த அவமானத்தின் மூலம் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய மக்களின் வாழ்வின் துயரத்தை உணர்ந்து, அந்தத் துயரத்தைத் தீர்ப்பதற்கு அகிம்சை என்ற ஆயுதத்தைத் தானும் பயன்படுத்தி, தன்னுடைய அணியினருக்கும் அவற்றைக் கற்றுக்கொடுத்து, அவர்களையும் அகிம்சா வழி செல்பவர்களாக மாற்றி விடுதலைப் போராட்ட களத்தில் இறக்கினார். சத்தியம், அகிம்சை எனும் மந்திரத்தை அவர் தம் உயிரில் எழுதி வைத்தார். ஒவ்வொரு நாளும் தனக்கேற்பட்ட அனுபவங்களின் வழியே அவர் தம்மைப் புடமிட்டுக் கொண்டார். இலட்சியங்களைத் தேர்ந்தெடுத்து அதனை அடைந்திடும் மார்க்கத்தை இதுதான் என உறுதிப்படுத்திக் கொண்டார். எதிரிகளை ஆயிரம் முறை மன்னிக்க வேண்டும் என்னும் பைபிளின் வாசகங்களைக் கிறித்துவர்கள் வேதங்களில் படித்தனர்; அதனைப் பரப்பினர். ஆனால், அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் உத்தமர் காந்தியடிகள்தான்.
நேட்டாலிலிருந்து டர்பனுக்குச் செல்லும் வழியில் மேரீட்ஸ்பர்க் என்னும் இடத்தில் இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்திட கருப்பர்களுக்கும் உரிமையில்லை; இந்தியர்களுக்கும் உரிமை இல்லை என இரயில்வே ஊழியர்களும், அந்நாட்டின் காவல்துறையினரும் காந்தியடிகளை மிரட்டி இரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அவரது உடைமைகளைத் தூக்கி வெளியே எறிந்து அவரை அவமானப்படுத்தினர். சார்லஸ் டவுனிலிருந்து ஜோகன்ஸ்பர்க் செல்லும்போது குதிரை வண்டிக்கார வெள்ளையன் மகாத்மாவைத் தீண்டத்தகாதவராகப் பாவித்து படிக்கட்டில் இருக்க வலியுறுத்தி அடித்துத் தள்ளியதையும், ஆசிய நாட்டுக்காரர்களுக்கு எதிரான கருப்புச் சட்டத்தை எதிர்ப்பதில் காந்தி மிக நிதானமாக நடந்து கொள்வதாகக் கருதி அமீர் என்பவர் மகாத்மா காந்தியை அடித்து வீழ்த்தியதும், மகாத்மா காந்தியடிகள் எதிர்பாராமல் நடந்தது. ஆனால், அவர் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டு பகைவரின் எதிரே சென்ற ஒரு நிகழ்வு நம்மை உறைய வைக்கிறது.
பம்பாயிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு கோர்லாண்டு என்னும் கப்பலில் காந்தியடிகளும், அவரது மனைவி மக்களும் பயணமானார்கள். அருகில் நாடேரி என்னும் கப்பலும் ஆப்பிரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்தது. இவ்வேளையில் பெரும் புயல் ஒன்று அந்தக் கப்பல்களைத் தாக்கியது. சுமார் 24 மணி நேரம் கழித்து புயல் நின்றது. சுமார் 18 நாட்கள் பயணப்பட்டு அந்தக் கப்பல்கள் டர்பன் வந்து சேர்ந்தன. டோர்லாண்டு, நாடேரி கப்பல்களில் சோதனை நடந்தது. அதன் பின்னர் மக்கள் வெளியேற வேண்டிய நிலை. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினம் கப்பலில் அனுசரிக்கப்பட்டது. அதில் கப்பலில் இருந்தவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்து கொண்டாடினர். ஒவ்வொருவரும் இறுதியாக தன்னுடைய உள்ளங்களில் பட்டவற்றைப் பேசினார்கள். ஆனால், கரையில் ஆயிரக்கணக்கான வெள்ளையர்கள் கூடி நின்று மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களை சிறுபான்மையினர் ஆக்கிவிட்டு இந்தியர்களைக் கொண்டு வந்து
அதிகப்படுத்தி, வெள்ளையர்களுக்கு எதிரான கிளர்ச்சியை நடத்த திட்டமிட்டு இரண்டு கப்பல்களில் இந்தியர்களை ஆப்பிரிக்காவுக்குக் அழைத்துக் கொண்டு வருகிறார் என்னும் தவறான எண்ணத்தின் அடிப்படையில் அந்த வெள்ளையர்கள் மகாத்மா காந்தியை அடிப்பதற்காகவும், அவரைக் கொல்வதற்காகவும் திரண்டு வந்த செய்தி கப்பல் தலைவருக்குக் கிடைத்தது. அந்தச் செய்தியைக் கப்பல் தலைவரும் மகாத்மா காந்தியடிகளுக்குச் சொன்னார். அப்போது மகாத்மா காந்தியடிகள், கிறிஸ்துவர்கள், மேலை நாட்டவர்கள் கிறிஸ்துவர்களாக இருந்த போதிலும் கிறிஸ்துவின் போதனைகளை அவர்கள் கைகொள்வதில்லை. மாறாக, அவர்கள் பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால், கீழை நாட்டு மக்களோ அகிம்சையையும், அமைதியையும் கொண்ட வாழ்க்கையை விரும்பி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார். இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் ஆங்கிலேயர், “அகிம்சையைப் பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே! உங்கள் கொள்கைகளை உங்களாலே பின்பற்ற முடியுமா? டர்பனில் வெள்ளைக்காரர்கள் பயமுறுத்தும்படியான காரியத்தைச் செய்துள்ளனர். ஆனால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்கு மகாத்மா காந்தி, “நான் கோபம் கொள்ளமாட்டேன். சட்டப்படி வழக்கும் தொடர மாட்டேன். உண்மையில் அவர்கள் மீது எனக்குக் கோபம் கிடையாது. அவர்களுடைய அறியாமைக்காகவும், குறுகிய மனப்பான்மைக்காகவும் நான் வருந்துகிறேன். ஆனால், அதற்காக அவர்களுக்குப் பதிலுக்குத் தீங்கு செய்ய என் மனம் இடம் கொடாது,” என்று சொன்னார். அதைக் கேட்டவர் புன்னகை புரிந்தார்
காந்தியடிகள் ஆப்பிரிக் காவில் இந்தியரைக் கொண்டு வந்து இந்தியர் களை அதிகமாக்கி வெள்ளையர்களைச் சிறுபான்மையினராக ஆக்க எண்ணி இருந்த தாக கருதி அந்தக் கப்பல்கள் துறைமுகத்தில் பல நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் கரையிலிருந்து மகாத்மா காந்தியை இறங்க விடாதீர். இறங்கினால் கொன்று விடுவோம் என்ற செய்திகள் மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன. இதனை உணர்ந்த நேட்டால் அரசாங்கத்தின் அட்டர்னி, “காந்தி அவர்களுக்குத் தங்கள் பெயரில் தனிப்பட்ட கோபத்தில் ஐரோப்பிய மக்கள் உள்ளனர். கப்பலிலிருந்து நீங்களும், உங்களது குடும்பத்தாரும் பகலில் இறங்க வேண்டாம். இரவில் இறங்கினால் நலம் என செய்தி அனுப்பினர். மேலும், துறைமுகத் தலைமை அதிகாரி டாட்டம் உங்களைப் பத்திரமாக அழைத்துப் போய் நீங்கள் தங்க வேண்டிய வீட்டில் சேர்ப்பார்,” என்றும் அந்தக் குறிப்பில் அவர் எழுதியிருந்தார்.
சற்று நேரத்தில் டர்பனில் உள்ள இந்தியர்களுக்கான வழக்கறிஞர் லாப்டன் அங்கு வந்தார். அவர் காந்தியிடம், “நீங்கள் இருட்டிய பிறகு நகருக்குள் போகும் யோசனை எனக்குப் பிடிக்கவில்லை. எதற்காக இப்படி பயப்பட வேண்டும்? உங்கள் குழந்தைகளையும், மனைவியையும் முதலில் ஒரு வண்டியில் ஏற்றி ரஸ்டம்சி வீட்டிற்கு அனுப்பி வைப்போம். நாமிருவரும் நடந்து போவோம். யாரும் உங்களுக்குத் தீங்கு செய்வார்கள் என்று நான் கருதவில்லை. நகரம் இப்போது அமைதியாய் இருக்கிறது. கிளர்ச்சி அடங்கி விட்டது. அப்படியே ஏதேனும் அபாயம் வருவதாய் இருந்தாலும், அதற்காக நாம் பயப்பட்டுக் கொண்டு திருடனைப் போல் இருட்டில் போவதா? கூடவே கூடாது. உங்கள் விருப்பம் என்ன?” என்று கேட்டார்.
காந்தியடிகளுக்கும் அது நியாயம் எனப்பட்டது. அதன்படி ஒரு வண்டியில் காந்தியடிகளின் மனைவி மக்களை ஏற்றி அனுப்பி வைத்தார்கள். பின்னர், கப்பல் தலைவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு இருவரும் கப்பலில் இருந்து இறங்கினார்கள். இறங்கி வீட்டிற்குச் செல்லத் தொடங்கியபோது வெள்ளைக்காரச் சிறுவர்கள் காந்தியை அடையாளம் கண்டு விட்டார்கள். காந்தி, காந்தி என்று அந்தச் சிறுவர்கள் கூச்சல் போட இதனைக் கேட்ட நூற்றுக்கணக்கான வெள்ளையர் அந்த இடத்தில் குவிந்து விட்டார்கள். அவர்களும் மகாத்மா காந்திக்கு எதிராக முழக்கமிட்டார்கள்.
இதனைப் பார்த்த வழக்கறிஞர் லாப்டன் மனம் வேதனை அடைந்தது. காந்திக்கு இவர்களால் தொந்தரவு வந்துவிடக் கூடும் எனக் கருதி, ஒரு ரிக்ஷாவை அழைத்து அதில் காந்தியடிகளை ஏற்றுவற்கு முற்பட்டார். ஆனால், அந்தக் கூட்டம் ரிக்ஷாக்காரனை அடித்து விரட்டியது. இன்னொரு கூட்டம் காந்தியடிகளை லாப்டனிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தியது.
பின்னர் கம்பாலும், கைகளாலும் காந்தியடிகளைப் பலமாகத் தாக்கினார்கள். அந்த அடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் காந்தியின் உடல் தளர்ந்து போனது; தலை சுற்றியது. நூற்றுக்கணக்கானோர் அடியைத் தனித்து விடப்பட்ட காந்தியடிகளின் உடல் தாங்குமா? உடலெல்லாம் காயம். தலை சுற்றியது. மனம் மட்டும் திடமாக இருந்தது. அடிகளைத் தாங்காத காந்தியடிகள் ஒரு வீட்டுக் காம்பவுண்ட் சுவர்க் கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். அதேவேளையில் டர்பனில் போலீஸ் சூப்பிரடண்ட் அலெக்ஸாண்டருடைய மனைவி வந்தார். அவர் காந்தியை அடிப்பவர்களைத் தன் கையில் வைத்திருந்த குடையால் தாக்கி காந்தியைக் காப்பாற்றினார். இதற்கிடையில் ஓர் இந்தியர் ஓடிச் சென்று காவல் நிலையத்தில் இருந்த போலீஸ் சூப்பிரடண்ட் அலெக்ஸாண்டரை அழைத்து வந்தார்.
அலெக்ஸாண்டர் காந்தியடிகளைத் தன்னுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். காந்தியடிகளின் பாதுகாப்பிற்காக அவரை இரவு அங்கேயே தங்கச் சொன்னபோது காந்தியடிகள் அதனை மறுத்து விட்டார். அப்படியானால் நீங்கள் மாறுவேடத்தில்தான் செல்ல முடியும். அதுதான் உங்களுக்கு நலம் என்று காந்தியடிகளிடம் சொன்னார். அவரும் அதை ஒப்புக் கொண்டு ஓர் இந்தியக் காவலனைப் போல வேடமணிந்து ஒரு சந்தின் வழியாக இரண்டு காவலர்கள் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டார். டர்பன் துறைமுகத்தில் காந்தியடிகளைத் தாக்கிய தகவல் அறிந்த நேட்டால் குடியேற்ற நாடுகளின் அமைச்சர் ஜோசப் சேம்பர்ளின், காந்தியடிகளைத் தாக்கியவர்களைக் கைது செய்ய உடனே நடவடிக்கை எடுக்கும்படி நேட்டால் அரசுக்குத் தகவல் அனுப்பினார்.
இதனையடுத்து நேட்டால் அட்டர்னி ஜெனரல் எஸ்கோம்ப் காந்தியை அழைத்து, “நான் முதலில் கூறிய யோசனைகளை நீங்கள் கேட்டிருந்தால் இவ்வளவு துன்பம் ஏற்பட்டிருக்காது. அதற்காக வருந்துகிறேன். நீங்கள் விரும்பினால் உங்களைத் தாக்கியவர்கள் மீது புகார் எழுதித் தாருங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்,” என்று சொன்னார். இதனைக் கேட்ட காந்தியடிகள், “யார் மீதும் வழக்கு நடத்த எனக்கு விருப்பமில்லை. இரண்டொரு மனிதர்களை நான் அடையாளம் கண்டுபிடித்து சொல்ல முடியும். அதனால் என்ன பயன்? அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் எனக்குத் திருப்தி கிடையாது. என்னைத் தாக்கியவர்கள் மீது எனக்குக் கோபமும் கிடையாது. அவர்கள் மீது நான் கோபப்படவும் மாட்டேன். குற்றம் உங்களைப் போன்ற சமூகத் தலைவர்களுடையது. நீங்கள் மக்களுக்குச் சரியான வழிகாட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்ய நீங்கள் தவறிவிட்டீர்கள். யாருக்கும் தண்டனை வாங்கித் தர நான் விரும்பவில்லை. இந்தியாவில் நான் இருந்தபோது நேட்டால் வெள்ளைக்காரர்கள் மீது ஏதோ அவதூறு பிரச்சாரம் செய்ததாக நம்பி அவர்கள் இவ்விதம் நடந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையை உணரும்போது அவர்களே தங்களுடைய செயலுக்காக வருந்துவார்கள்,” என்று சொன்னார்.
இதனைக் கேட்ட அதிகாரி காந்தியடிகளின் உயர்ந்த சிந்தனையைக் கேட்டுக் கண்கலங்கினார். மகாத்மாவின் மீது அவருடைய மதிப்பு இன்னும் உயர்ந்தது. அந்த அதிகாரி சொன்னார். அப்படியானால் நீங்கள் சொன்னவற்றை எழுத்துப்பூர்வமாகத் தாருங்கள். அது உடனே தேவையில்லை. நீங்கள் வீட்டிற்குச் சென்று அனைவரோடும் கலந்து பேசி தந்தால் போதும் என்று சொன்னார். அதனைக் கேட்ட காந்தியடிகள் இது விஷயமாக நான் யாரையும் கலக்க வேண்டியதில்லை. தங்களிடம் வருவதற்கு முன்பே இதுபற்றி நன்கு ஆலோசித்துதான் வந்தேன். இந்த நிமிடத்தில் நீங்கள் கேட்டபடி நான் எழுதித் தருகிறேன் என்று சொல்லி எழுதியும் கொடுத்தார்.
காந்தியடிகள் தம்மைத் தாக்குவதற்கு ஒரு கூட்டம் கரையில் இருக்கிறது. அவர்களால் தம் உயிருக்கு ஆபத்து உண்டு என்று தெரிந்திருந்தும் அதனை அகிம்சா வழியில் ஆத்ம பலத்தால் எதிர்கொண்டார். கப்பலை விட்டு இறங்கும் முன்பு அங்கு இருந்தவர்களிடம் எந்த உறுதியைச் சொன்னாரோ அதனை நிறைவேற்றினார். அத்துடன் அங்குள்ள அனைத்துப் பத்திரிகையாளர் களிடமும் தாம் இந்தியாவில் பேசிய பேச்சுகளின் தொகுதியைத் தந்து வெளியிடும்படி வேண்டினார். தென்னாப்பிரிக்காவில் உள்ள பத்திரிகைகளும், ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய பத்திரிகைகளும் அவற்றை வெளியிட்டன. அவரது இந்தியப் பேச்சு வெளியிடப்பட்ட பின்பு அங்குள்ள ஐரோப்பியர்கள் அதைப் படித்துப் பார்த்த பின்னர் மிகவும் வெட்கி தலைகுனிந்தார்கள். காந்தியடிகளைத் தாக்கியது மிகக் கேவலமான செயல் என்று அந்த நாட்டுப் பத்திரிகைகள் எழுதின; வருத்தம் தெரிவித்துக் கொண்டன. ஆம்! அண்ணல் காந்தியடிகள்தாம்
நன்றி; சிவ சந்திரன் லண்டன்
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.