" வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது". நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; முடிவுகள் எடுக்க புத்தகம் துணைபுரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி துலங்கும் !
அடிமைகளின் சூரியன் எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், புத்தகங்கள் படித்தே உயர்ந்தவர். அவர் ஒரு தச்சுத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். தனது தீவிரப் படிப்பினால் தேசம் புகழத் திகழ்ந்தார்! "ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு" என்னும் நூலை இரவல் வாங்கிப் படித்தார். அந்த நூல், அவர் மனதில், தான் எதிர்காலத்தில் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை உருவாக்கியது. அந்த சிந்தனை, அவரை அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகவும் உயர்த்தியது! இது வரலாறு நமக்கு கூறும் செய்தி.
லண்டன் நூலகத்தில், இருபது ஆண்டுகள், அரிய நூல்களைப் படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ், உலகின் பொதுவுடைமைத் தந்தையாக உயர்ந்தார்.
"காஞ்சிபுரத்திலிருந்து, முதுகலைப் பட்டதாரியான ஓர் இளைஞன், சென்னை நோக்கிச் சென்றான்; முடிவில் தமிழகத்தின் முதல்வராகத் திரும்பினான்" – என்று பேரறிஞர் அண்ணாவைப் புகழ்வார்கள்! அவர், சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் படித்தவர். நூலகம் திறக்கும் பொழுது உள்ளே நுழைந்து, இரவு அடைக்கும் பொழுது வெளியே வருவார். அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டபோது, அவர் அரிதான நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். அந்த நூல் முழுவதையும் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையையே ஒரு நாள் ஒத்திவைக்கும்படி மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது, வாசிப்பின் மேல் வைத்த அவரின் நேசிப்பை உணர்த்துகிறது!
இந்தியாவின் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு, "நான் மறைந்தபின் உடல் மீது மலர் மாலைகளை வைக்கவேண்டாம்; என் மடி மீது புத்தகங்களைப் பரப்புங்கள்" – என்று கேட்டுக் கொண்டார்!.
இந்தியாவின் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், மாஸ்கோ நகருக்குச் சென்ற பொழுது, தங்கும் விடுதியில் தனக்கு இரண்டு அறைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். முதலில் அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டன. அவர் அங்கு சென்ற பின்னர்தான் புரிந்தது. அவர் தங்குவதற்கு ஓர் அறை; படிப்பதற்காக எடுத்துச் சென்ற புத்தகங்களை வைப்பதற்கு ஓர் அறை! இதுவும் வாசிப்பின் மீதான வரலாற்றுச் செய்தியல்லவா?.
புத்தகங்களை படித்தவர்கள் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தரப் போராடியுள்ளர்கள்; வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்கள்! புத்தகங்கள் மட்டுமே, நமக்கு ஏற்படுகிற பிரச்சனைகளைத் தீர்க்க நல்ல வழியை நயம்படச் சொல்லும்.
மனச் சோர்விலும், இறுக்கத்தில் உழலும்போதும் நல்ல புத்தகங்கள் அமைதியையும், தெளிவையும், வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கும். நமக்கும், நமது வீட்டிற்கும் தேவையான பொருட்களை நாம் தவறாமல் வாங்குகிறோம். அதைப் போல, நமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்கிடத்தரப்படும் பணம், செலவு அல்ல; மூலதனமாகும்! அது, வட்டியை ஈட்டித் தருவதைப்போல அறிவைப் பெருக்கச் செய்யும் மூலதனம்!
புத்தகங்கள் படிக்க நேரம் இல்லை என்று பெரும்பான்மையோர் கூறுகிறார்கள். விமானம், பேருந்து, தொடர்வண்டி பயணத்தின் போது, மருத்துவரை, உயர் அலுவலர்களை, தலைவர்களைச் சந்திக்க காத்திருக்கும் போதும், புத்தகங்கள் படிக்கலாம். நேரம் வீனாய்க் கழியாமல், பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புத்தகப் படிப்பிற்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கலாம்.
நாம் நமது நண்பர்களுடன் கேளிக்கைகளிலும், வீண் பேச்சுகளிலும், அரட்டைகளிலும் பொன்னான நேரத்தை வீணடிக்கிறோம். ஆனால், நம்மை உயர்த்திக் கொள்ள புத்தகங்களைப் படிப்பதற்கு மட்டும் நேரம் இல்லை என்று புலம்புகிறோம். இது வேடிக்கையாக இல்லை?! எனவே, நமக்கு கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் புத்தகங்களைப் படிப்போம்.
நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்ட வேண்டும்.
ஒவ்வொருவரும், புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது, குடும்பமே, வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள்.
நல்ல புத்தகங்களைப் படித்து, கெட்டுப் போனவர்கள் யாரும் உலகில் இல்லை. புத்தகங்கள் படிப்பதைக் கடமையாய்க் கொண்டவர்களும், வாசிப்பதை உயிர் என மதித்தவர்களும் மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்.
புத்தகங்கள் பெற்றோரைப் போல அறிவுரை கூறும்; மனைவியைப் போலத் தாங்கி நிற்கும்; மக்களைப் போன்று மகிழ்ச்சியளிக்கும்; நெருங்கிய நண்பனாய் ஆலோசனை வழங்கும்!
அதனால் தான் அறிஞர் ரஸ்கின், "புத்தகங்களைப் போன்ற சிறந்த கருவூலம் வேறு எதுவும், மனிதனுக்கு இருக்க முடியாது" – என்றார். "ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது" என்பார் பேரறிஞர் விக்டர் ஹியுகோ. அறிவை விருத்தி செய்ய நல்ல புத்தங்களை நாளும் படிப்போம். வாசிப்பை நேசிப்போம்! வாழ்க்கையிலும் பயன்படுத்துவோம்! புத்தகங்களை, காலமென்னும் அலை கடலின் ஓரம் உயர்ந்து நிற்கும், கலங்கரை தீபங்கள் என்போம்!!
Tags; நூலறிவு நூலறிவின் பயன் , நூலகம் பற்றிய கட்டுரை , நூலகம் கட்டுரை, கற்றலின் பயன், கல்வி கற்றல்
நன்றி பி. தயாளன்
You must be logged in to post a comment.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Wow its great to read I also love to read books
Its useful