மார்கழி மாதம் சுக்லபட்ச வளர் பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிகசக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது
ஏகாதசி எப்படி உருவானது?
சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவா சுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள்படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர்புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒருகுகையில் நன்றாக உறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒருபெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்குசென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகா விஷ்ணுவிடமே திரும்பி வந்தது.
தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்ததேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து, அந்ததேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.
“நீ தோன்றிய இந்தநாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகலநன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசிவழங்கி, பிறகு அந்த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக் கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.
ஏகாதசி விரதத்தின் மகிமை
ருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர் ஏகாதசிவிரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக்கொண்டார். அதனால் தன் நாட்டுமக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்கவேண்டும் என்று அரசாங்க உத்தரவிட்டார். அத்துடன் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காதவர்கள் ராஜ தண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் ஆணையிட்டார். இதனால் எட்டுவயது குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை கடைபிடித்தார்கள்.
ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்லபலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள்.
அரசரால் திண்டாடிய மோகினி
அரசர் ருக்மாங்கதன், தன்நாட்டு மக்களை கட்டாயப்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னதால் துஷ்ட மோகினிக்கு வேலை இல்லாமல் போனது. ஆம். யார் ஏகாதசி விரதம் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கஷ்டத்தை தரவேண்டிய துஷ்டதேவதைக்கு, அரசர் ருக்மாங்கதன் நாட்டில் மட்டும் அதற்குவேலை இல்லாமல் போனது. காரணம் மக்கள் அனைவரும் ஏகாதசிவிரதத்தை அரசருக்கு பயந்து நிறைவேற்றினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த மோகினி, கடைசியில் விஷ்ணு பகவானிடம் ருக்மாங்கதனை பற்றி புகார்சொன்னாள்.
தன் பக்தனான ருக்மாங்கதன், தன் நாட்டு மக்கள் மேல் அதிக பிரியத்துடன் இருப்பதால் இப்படி செயல்படுகிறான் என்பதை உணர்ந்த ஸ்ரீவிஷ்ணு பகவான், ருக்மாங்கதன் முன் தோன்றி,
“நீ யாரையும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கவேண்டும் என்று கட்டாயபடுத்தக்கூடாது. ஏகாதசிவிரதம் என்பது புண்ணியத்தை கொடுக்ககூடியது. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே விரதத்தை கடைபிடிப்பார்கள். இயற்கைக்கு விரோதமாக நீ யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.” என்று தன்பக்தனான அரசர் ருக்மாங்கதனுக்கு சொன்னார் ஸ்ரீவிஷ்ணு பகவான்.
இப்படி பாவத்தை போக்கி புண்ணியம் தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை. ஏகாதசிவிரதம் யார் இருக்கவில்லையோ அவர்களிடம்தான் துஷ்ட மோகினிக்கு வேலை என்கிறது புராணம்.
நோய்வாய் பட்டவர்கள் விரதத்தை கடைபிடிக்க முடியுமா?
ஏகாதசி விரதம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆனால் வியாதியால் அவதிப் படுபவர்கள் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க முடியாதல்லவா.? ஆகவே நோய் வாய்பட்டு விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள் ஏகாதசி விரததன்று உணவுசாப்பிடும் முன்னதாக இறைவனை வணங்கிய விட்டு சாப்பிடலாம் எனகிறது சாஸ்திரம்.
ஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிப்பது?
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, உணவுசாப்பிட்டு இறைவனுடைய நாமத்தையும், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களையும், மந்திர ஸ்தோத்திரங்களையும், பாடல்களையும் உச்சரிக்கவேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் பெருமாள் கோயிலுக்குசென்று, சொர்க்கவாசல் வழியாக இறைவனை வணங்கி தரிசித்துவிட்டு, அன்று நாள்முழுவதும் இறைவனுடைய நாமத்தையும், பாடல்களையும், புராணங்களையும் படிக்கவேண்டும்.
மறுநாள் துவாதசி அன்று கோவிலுக்குசென்று இறைவனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை சமைத்து படைத்து பூஜித்த பிறகு, ஒருவருக்காவது அன்னதானம் செய்த பிறகு சாப்பிடவேண்டும்.
விரதத்தை கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை பல்லில் படாமல் சாப்பிடவேண்டும். சாப்பிடும் முன் இறைவனுடைய நாமத்தை உச்சரிக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
இதனால் புண்ணியம் கிட்டும். வைகுண்ட ஏகாதசிவிரதம் இருந்தால் முன்னோர்களின் சாபமும் நீங்கிடும்.
சொர்க்கவாசல் உருவான கதை
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, அவருடைய இருகாதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்கமுடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணு பகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது கைடபருடன் போர்செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
“பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனைகாட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல்பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.
“எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்குவாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும் போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்துசெய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.
இந்த ஏகாதசி நன்னாளில், “ஓம் நமோ நாராயணாய” என்று உச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின் அருளையும்பெறுவோம்.
நன்றி நிரஞ்சனா
Leave a Reply
You must be logged in to post a comment.