1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, ஜெனரல் ஓ டயர் பிறப்பித்த உத்தரவின் பேரில், 90 துப்பாக்கி வீரர்கள் கொண்ட படையும், ஒரு பீரங்கி வண்டியும் சுட்டுக் கொன்றனர். அரசியல் காரணங்களுக்காக உண்மையான எண்ணிக்கை வெளியே சொல்லப்படாவிட்டாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்படனர் என்பது நிதர்சனம்.
உதம் சிங்கின் சபதம்..
இப்படுகொலையைக் கண்டு மனம் கொதித்த உதம் சிங், அமிர்த சரஸில் நீராடி, ஹரிமந்திர் சாகிப்பில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரைக் கொல்லுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார். 1899ல் பிறந்த உதம் சிங் ஆசாத் இளவயதிலேயே தம் பெற்றோரை இழந்தார். சீக்கிய தர்ம கால்ஸா அனாதை இல்லத்தில் தன் சகோதரருடன் வளர்ந்தவர். பலமுறை ஆப்பிரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே இந்திய தேசிய நடவடிக்கைகளில் தீவிரப் பங்கு பெற்றார் உதம்சிங்.
1927-ல் பகத்சிங்கிற்காகத் துப்பாக்கிகளையும் தளவாடங்களையும் பாரதத்துக்குள் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் தாம் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் சார்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை கொலை செய்யப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதற்காக அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் இருந்த போதே (1931) பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1931ல் உதம் சிங் விடுதலை செய்யப்பட்டார். தமது பெயரை முகமது சிங் என மாற்றிக்கொண்டார். மிகத் தெளிவான திட்டத்துடன் அவர் வேலை செய்தார். 1933-ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934-ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார். அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மைக்கேல் டயரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அவருக்கு டயரைக் கொல்ல பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஏனெனில் தமக்கு எளிமையாக இருக்கும் என்பதைக் காட்டிலும் அச்செயல் உலக மக்களுக்கு ஒரு செய்தியாக அமைய வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.
“அதற்கு வாய்ப்பில்லை சர்… டயர்”
1940 மார்ச் 13 – ஏறக்குறைய இருபது ஆண்டுகள் இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் டயர். கூட்டத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் உதம் சிங். புத்தகத்துக்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் 0.45 ஸ்மித் வெல்ஸன் கைத்துப்பாக்கி. பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன் பேச்சில் டயர் குறிப்பிட்டான். இத்தருணத்தில் கூட்டத்தில் இருந்த உத்தம் சிங் எழுந்தார். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப் போவதில்லை சர். மைக்கேல் டயர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். உதம் சிங்கின் குறி தவறவில்லை முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, மைக்கேல் டயர் அங்கேயே மரணம் அடைந்தான்.
சிரித்த முகத்துடன் கைதானார் உதம் சிங். உதம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை அகிம்சைவழியில் கொண்டு செல்ல உறுதியேற்றிருந்த மகாத்மா மற்றும் பண்டித நேரு ஆகியோர் இதைக் கண்டித்தனர். “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறினார் காந்தியடிகள். பண்டித நேரு, மகாத்மா காந்தி ஆகிய இருவருமே இச்செயலினால் தமது இயக்கம் பிரிட்டிஷ் அரசிடம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் பேச்சு வார்த்தைகளுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.
ஆனால் பொதுக்கூட்டங்களில் மக்களிடையே உதம் சிங்கின் செயல் பெருமதிப்போடு பேசப்பட்டது. “தேசத்தின் மீதிருந்த களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது” என்பதே மக்கள் மனதின் கீதமாக இருந்தது. பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் உத்தம்சிங்கின் தீரச்செயலைப் பாராட்டின. 1940ம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவு தினத்தன்று உதம் சிங் ஜிந்தாபாத் எனும் கோஷம் எழுப்பப்பட்டது. அதே நேரம் பஞ்சாப் காங்கிரஸ் அரசு உதம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் பிதாமகர்களால் ஓரங்கட்டப்பட்டு அதனை விட்டு விலகிச் சென்று பாரத விடுதலைக்குப் போராடத் தீர்மானித்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே உதம் சிங்கை வெளிப்படையாகப் பாராட்டினார்.
“நான் மரணத்துக்கு அஞ்சவில்லை”
பிரிட்டிஷாருக்குத் தமது கோட்டையிலேயே தமது சாம்ராஜ்யத்தின் வலிமை வாய்ந்த தளபதியை ஓர் இந்தியன் கொன்றான் என்பது அவமானகரமாக இருந்தது. “உதம் சிங் மனநிலை பிறழ்ந்தவர்” என ஒரு பிரச்சாரத்தை அவர்கள் தொடங்கினார்கள். இந்நிலையில் பஞ்சாப் பிரமுகர்கள் பலர் உதம் சிங்கை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என வக்கீல்களைத் தேடி அலைந்து இறுதியில் கிருஷ்ண மேனனை வக்கீலாக அமர்த்தினர். கிருஷ்ண மேனன் உதம் சிங்கைத் தான் பைத்தியம் என ஒப்புக்கொள்ளும்படியும் அப்படிச் சொன்னால் தப்பித்துவிடலாம் என்றும் கூறினார். உதம் சிங் வேதனையுடன் அதனை மறுத்துவிட்டார். நீதிமன்ற விசாரணையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கோர்ட்டுக்குத் தம்மை விசாரிக்க உரிமையோ தகுதியோ இல்லை என்று கூறியதுடன் பிரிட்டிஷ் நீதிபதியையும் அங்கிருந்த இதர பிரிட்டிஷாரையும் நோக்கி கூறினார்.
“நான் மரணத்துக்கு அஞ்சவில்லை. நான் என் தாய் நாட்டை விடுவிக்க உயிர்துறப்பதில் பெருமை அடைகிறேன். நான் போனபிறகு என்னுடைய இடத்தில் என் தேச இளைஞர்கள் வருவார்கள். வந்து அசிங்கம் பிடித்த நாய்களான உங்களை விரட்டுவார்கள். நீங்கள் இந்தியாவுக்கு வருவீர்கள், பிறகு பிரிட்டனுக்குத் திரும்பிப் பிரபு ஆவீர்கள், பாராளுமன்றத்துக்குப் போவீர்கள். நாங்கள் பிரிட்டனுக்குள் வந்தால் எங்களைத் தூக்கில் போடுவீர்கள். ஆனால் நீங்கள் பாரதத்திலிருந்து வேரும் வேரடி மண்ணுமின்றிக் களையப்படுவீர்கள். உங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுக்கு நூறாகச் சிதறும். பாரதத்தின் வீதிகளில் எங்கெல்லாம் நீங்கள் சொல்லும் மேற்கத்திய ஜனநாயகத்தின் கொடியும் கிறிஸ்தவமும் ஆக்கிரமித்துள்ளதோ அங்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கிகள் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறது.”
இத்தகைய உணர்ச்சி மயமான உரையின்மூலம் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர், பார்வையாளர்களுக்கு அவர் ஒரு பைத்தியம் என்கிற பிரிட்டிஷ் பிரச்சாரம் எத்தனை பொய் என்பதையும் தான் ஒரு தேசபக்தர் என்பதையும் புரிய வைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவரை நீதிமன்றத்திலிருந்து காவலாளர்கள் இழுத்துச் செனறனர். இறுதியாக அவர் “பாரத மாதா கீ ஜே!” என முழக்கமிட்டபடி இழுத்துச் செல்லப்பட்டார். நீதிபதி அட்கின்ஸன் அங்கிருந்த பத்திரிகையாளர்களையும் பார்வையாளர்களையும் அங்கு நிகழ்ந்தவற்றை வெளியே சொல்லக்கூடாதென உத்தரவிட்டார். ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிற்றை முத்தமிட்டார். “தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.
1962-ல் நேரு உதம் சிங்கை தேசபக்தர் என அறிவித்தார். 1974-ல் உதம் சிங்கின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு அவரது சொந்த மாநிலமான பஞ்சாபில் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.