கொத்து கொத்தாக வரும் ட்ரோன் படைகளை தடுத்து அழிக்கும் திறன் கொண்ட புதிய ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. மிகவும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதத்துக்கு, ‘பார்கவ அஸ்திரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், பல வகைகளில் நமக்கு பயன்படுகிறது. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு விரைவாக செல்லும் என்பதால், இது விவசாயம், மீட்புப் பணிகள், மருத்துவம் என, பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த ட்ரோன் தற்போது ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. குண்டு அல்லது வெடிபொருளை அதில் இணைத்து ஏவினால், இலக்கை நோக்கி பறந்து சென்று, மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும்.
ரஷ்யாவுக்கும், உக்ரைன் நாட்டுக்கும் இடையே நடக்கும் போரில், ட்ரோன்கள் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கும், நமக்கும் நடந்த மோதலில், ஆசியாவில் முதல் முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. அணுகுண்டுகள் வைத்துள்ள இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்த ட்ரோன் யுத்தம் என்பதால், உலகம் முழுதும் அதை உன்னிப்பாக கவனித்தது.
தனித்தனி ட்ரோன்களாக ஏவினால், அவை பறக்கும்போதே இந்தியா குறிவைத்து தாக்கி அழித்து விட்டதால், கொத்து கொத்தாக ட்ரோன்களை ஏவியது பாகிஸ்தான். ஒரே நேரத்தில், 300க்கு மேற்பட்ட ட்ரோன்களை இந்திய எல்லைக்குள் உள்ள இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் அனுப்பியது. அப்படி இருந்தும், ஏவுகணைகள் அனுப்பி அந்த ட்ரோன்களை இந்தியா துவம்சம் செய்தது.
இருப்பினும், விலை குறைந்த ட்ரோன்களை அழிப்பதற்காக, எக்கச்சக்க விலையுள்ள ஏவுகணைகளை பயன்படுத்த நேர்கிறதே என பல நாடுகள் கவலைப்பட்டன. இந்தியாவும் அந்த எண்ணத்தில் பல ஆண்டுகளாக தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது.
அதன் விளைவாக, இப்போது ட்ரோன்களை அழிப்பதற்கு மிகவும் குறைந்த செலவிலான ஆயுதத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எஸ்.டி.ஏ.எல்., எனப்படும் ‘சோலார் டிபன்ஸ் அண்டு ஏரோஸ்பேஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம், இந்த ஆயுதத்தை வடிவமைத்துள்ளது.
முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான இதற்கு, பார்கவ அஸ்திரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மஹாபாரதத்தில் கர்ணனுக்கு, பரசுராமன் வழங்கிய அஸ்திரமே பார்கவ அஸ்திரம். அந்த பெயரே, இந்த ஆயுதத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. தர்மத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படும் நீதியின் ஆயுதமாக இது சித்தரிக்கப்படுகிறது.
ஏற்கனவே, ஜனவரியில் இந்த ஆயுதம் சோதித்து பார்க்கப்பட்டது. மீண்டும், ஒடிஷாவின் கடலோரம் உள்ள கோபால்பூர் சோதனை மையத்தில் இருந்து, இது நேற்று ஏவப்பட்டது; இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
இது, வழக்கமான ஏவுகணைகளின் அளவை விட மிகவும் சிறியது. அதனால், குறு ஏவுகணை அல்லது மினி மிஸைல் என்கின்றனர். ஒரே நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் ட்ரோன்களை அழிப்பதற்காக, இந்த ஏவுகணைகளை அதிக எண்னிக்கையில் செலுத்த முடியும்.
விமானப்படை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்த சோதனை வெற்றிகரமாகவும், துல்லியமாகவும் அமைந்ததாக ராணுவம் தெரிவித்தது.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |