'பிருந்தாவனத்தில் மதியமும், இரவிலும் நடை சாத்தும்போது, ஒரு தொன்னைல நாலு லட்டும், வெத்தலை பாக்கு பீடாவும் வைக்கறதா சொல்றாங்களே. அந்தக் கதை உனக்குத் தெரியுமா மன்னார்?' எனக் கேட்டேன்.
''ஓ, அதுவா? ரொம்ப நாளைக்கு முந்தி ஒரு சேட்டு இங்க வந்திருந்தாரு. அப்போ அவர் இதைப் பத்தி வெலாவாரியா சொன்னாரு. அத்த ஒனக்கும் சொல்றேன் கேட்டுக்கோ' என உற்சாகமானான் மயிலை மன்னார்.
'கிட்டத்தட்ட எம்பது வருசத்துக்கு முந்தி இது நடந்துச்சாம். பிருந்தாவனத்துல க்கீற கண்ணனுக்கு பங்கி பிஹாரின்னு பேரு. அப்பல்லாம் ஊரு இம்மாம் பெருசா ஆவலை.இவ்ளோ கட்டடங்களும் கெடையாது. எலெக்ட்ரிசிடியும் பரவலா வரலை. எண்ணை வெளக்கும், பெட்ரோமாக்ஸ் விளக்குலதான் காலம் ஓடிச்சு.
கோவிலுக்கு வர்ற ஆளுங்க கூட்டமும் கம்மியாத்தான் இருக்கும். இந்தக் காலம் மாதிரி, அடிச்சுக்கோ, பிடிச்சுக்கோன்னு, வந்தோமா, எறங்கினோமா, சாமி பார்த்தோமா, கிளம்பினோமான்னு அரக்க பரக்க ஓடற கூட்டம் இல்லை. வந்தா நிம்மதியா 4 – 5 நாளு தங்கி, நல்லா தரிசனம் பண்ணிட்டுத்தான் போவாங்களாம்.. சாமிக்கு ஆறு வேளை படையல் வைப்பாங்க. தினுசு தினுசா, வகை வகையா பலகாரங்களும், இனிப்புமா அமக்களப்படும். ராத்திரி பூஜை ஆனதும் தெருவுல ஈ,காக்கா இருக்காது. விடிகார்த்தலிக்கா ஜனங்க எளுந்து, யமுனைல குளிச்சு, மத்தக் கோயிலுங்களை சுத்தக் கெளம்பிருவாங்க. ஏன்னா, பிஹாரி கண்ணன் கொஞ்சம் 'லேட்'ட்டாத்தான் முளிச்சுப்பாரு. சின்னக் கொளந்தைதானே! அப்பிடித்தான் எளும்பும்! அதுக்குள்ள மத்தக் கோவிலுங்களைப் பார்த்திட்டு, ஜனங்க கோவிலாண்டை வந்துருவாங்க. கடைக்காரங்களும் அப்பிடியே லேட்டாத்தான் தொறப்பாங்களாம்.
ஒரு நாளு, ஒரு பணக்காரரு வந்து ஒரு கடைக்காரராண்டை 40 கிலோ லட்டு காலைல அவசரமா வேணும்னு ஆர்டர் கொடுத்திருக்காரு. பெரிய ஆர்டரை வுட வேணாமேன்னு, கடைக்காரரும் ஒத்துக்கினாரு. வேலைக்கு இருந்த சின்னப் பசங்களை வெரட்டி வேலை வாங்கி ஜரூரா வேலையை ஆரம்பிச்சுட்டாரு. ஆனாக்காண்டிக்கு, பாதி வேலைகூட முடியலை. சின்னப் பசங்களை ராத்திரி ரொம்ப நேரம் வைச்சுக்ககூடாதுன்னு, அவங்களை அனுப்பிட்டு, இவரு மட்டும் லட்டு பிடிக்கறாரு.
கோவில் நடை சாத்தியாச்சு. அக்கம்பக்கக் கடைக்காரங்களும் கடையை மூடிட்டாங்க. 'லே, பெரிய ஆர்டர் போல. அதிர்ஷ்டக்காரம்ப்பா நீ. ராத்திரி முச்சூடும் வேலை க்கீது போல!' எனக் கேலி செஞ்சிட்டு அவங்களும் கெளம்பிட்டாங்க. இந்தாளு மட்டும் வேலைலியே குறியா க்கீறாரு. வெரசலா வேலையை முடிச்சிட்டு, சீக்கிரமா வூட்டுக்குப் போயி படுத்துறணும்னு நெனைக்கறாரு. அதும்போலவே, அல்லா வேலையும் முடிச்சிட்டு, எளுந்திருக்கற சமயத்துல, 'காகா'ன்னும் ஒரு கொரல் கேக்குது. காகான்னா சித்தப்பான்னு அர்த்தமாம். சேட்டு சொன்னாரு! ஒரு 9 – 10 வயசுப் பையன் ஒர்த்தன் கடை வாசல்ல நிக்கறான். ஆளைப் பார்த்தா உள்ளூராளு மாரி தெரியலை. பார்க்க நல்ல அளகா, சிரிச்ச மூஞ்சியா க்கீறான். இந்த நேரத்துல ஒரு சின்னப் பையன் தனியா நிக்கறானேன்னு கடைக்காரருக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு.
'ஆரு நீ? இந்த நேரத்துல இங்க இன்னா பண்றே?'ன்னு அதட்டறாரு. 'காகா, ரொம்பப் பசிக்குது காகா. கதவையெல்லாம் மூடிட்டாங்க. துண்றதுக்கு எதுனாச்சியும் தரியா?'ன்னு மலங்க மலங்க முளிக்கறான். பார்க்கவே பாவமா க்கீது இவருக்கு. ஒரு நாலு லட்டை எடுத்து, ஒரு தொன்னைல போட்டு அவன் கையுல கொடுக்கறாரு. அந்தப் பையன் தன்னோட கையுலேர்ந்து ஒரு தங்க வளையலைக் களட்டி, 'லட்டுக்கு கூலியா வைச்சுக்கோங்க காகா'ன்னு நீட்டறான். கடைக்காரருக்கு சொரேல்னு ஆயிருச்சு. 'அதெல்லாம் ஒண்ணும் வேணாம் போ. அத்த நீயே வைச்சுக்கோ'ன்னு சொல்லணும்னு மனசுல நெனைக்கறாரு. ஆனா, பேச்சே எளும்பலை. எப்போ கையை நீட்டினோம்? எப்போ வளையலை வாங்கிக்கினோம்னு நெனைப்பே இல்லை அவருக்கு. பையன் அவரைப் பார்த்து சிரிச்சுட்டு, லட்டை எடுத்துக்கினு போயிர்றான். அவன் போனதுக்கு அப்பாலதான் இவருக்கு புத்தில உறைக்குது…' நாலு லட்டுக்கு ஒரு தங்க வளையல் கூலியா? ஆராச்சும் கேட்டா நம்புவாங்களா? சின்னப் பையனை ஏமாத்திப் புடுங்கிகிட்டேன்னு தானே நெனைப்பாங்க? பையன் ஆரு, இன்னான்னுகூட தெரியாதே! இன்னா மடத்தனமா காரியம் பண்ணிட்டேன்'ன்னு கலங்கறாரு. பொண்டாட்டி கையுல சொன்னாக்கூட நம்பமாட்டாளேன்னு, வாசலுக்கு வந்து பார்க்கறாரு. பையனைக் காணோம். அந்த வளையலை வூட்டுக்கு எடுத்துக்கினு போவேண்டாம். காலைல விசாரிச்சு, ஆளைக் கண்டு பிடிச்சுக் கொடுத்துறலாம்'னு கடைலியே பெட்டில வைச்சுப் பூட்டிட்டு போயிப் படுக்கறாரு.
தூக்கமே வரலை அவருக்கு. காலைல எளுந்து, குளிச்சிட்டு, கடைப்பக்கமாப் போறப்ப, வளக்கம் போல கோவிலுக்கும் போறாரு. சாமி சன்னிதில ஒரே கொளப்பமா க்கீது. ஆளாலுக்கு என்னாத்தியோ தேடறாங்க. இன்னா சமாச்சாரம்னு விசாரிக்கக்கொள்ள, நேத்து ராத்திரி கோயில் பூட்றச்ச அல்லா சாமானும் சரியா இருந்துச்சாம். ஆனா, இப்ப பார்க்கக்கொள்ள, கிஸ்னன் கையுல ஒரு வளையலைக் காணும்னு சொல்றாங்க. ஆரும் உள்ளே வந்த தடயமும் இல்லை; பூட்டும் ஒடைக்கலை. இதென்ன அதிசியமா க்கீது? அல்லாம் அந்த கிஸ்னன் பண்ற லீலைப்பா?ன்னு ஆரோ சொல்லக்கொள்ள, இவருக்கு சட்டுன்னு ராத்திரி நடந்தது நெனைவுக்கு வருது.
ஒரே ஓட்டமா மேனேஜராண்டை ஓடி, நீங்கல்லாம் இப்ப ஒடனே என்னோட கடைக்கு வரணும். . என்னாண்டை ஒரு வளையல் க்கீது அத்தப் பார்க்கணும் நீங்கன்னு சொல்லி, மேனேஜர், பண்டாரி அல்லாரையும் இஸ்த்துக்கினு கடைக்கு வந்து பொட்டியைத் தொறந்து வளையலை எடுத்துக் காமிக்கறாரு. நடந்த விசயத்தியும் ஒண்ணு வுடாம சொல்லிப் பொலம்பறாரு. பார்த்தவங்களுக்கு ஒரே ஆச்சரியம். கோவில்ல காணாமப் போன அதே வளையல்!
அப்பத்தான் அந்தப் பூசாரிங்களுக்கு ஒரு விசயம் தெரியுது! முளிச்சுக்கினு க்கீறப்போ படையல் வைக்கறதோட, நடையை சாத்தறப்பவும் எதுனாச்சும் சாமிக்கு வைச்சுட்டுப் போவணும்னு! சின்னப் புள்ளைதானே அந்தக் குட்டிக் கண்ணன்! பசிக்காதா அவனுக்கு? அன்னிலேர்ந்து மத்தியானமும், ராவுலியும், கதவைச் சாத்தறப்ப, ஒரு தொன்னைல நாலு லட்டும், பீடாவும் ஒரு டம்ளர் தண்ணியும் வைச்சுட்டுப் போற வளக்கத்தை ஆரம்பிச்சாங்களாம்.' என அவன் சொல்ல, வாயைப் பிளந்தவாறே அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
'டேய், வாயை மூடு! ஒன் வாயுல கூட இப்ப நாலு லட்டை அடைக்கலாம் போலிருக்கே!' என மன்னார் கேலி செய்தான்.
'லட்டு இவ்விட இல்லா. சூடான மசால் வடை உண்டு. திணிக்கட்டோ?' என நாயர் முன் வந்தான்.
எது கிடைச்சாலும் சரி. எல்லாம் 'அவன்' கொடுப்பது' என நானும் சிரித்தேன்.
நன்றி : Dr . சங்கர் குமார் வட கரோலினா USA
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.