தேசத்தின் சிகரமான காஷ்மீரிலும் பாரதிய ஜனதா கட்சி தனது வெற்றிப் பயணத்தைத் துவங்கி இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெற்றுள்ள வெற்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த லோகசபா தேர்தலிலிருந்தே நாடு புதிய அரசியல் திசையில் பயணிக்கத் துவங்கிவிட்டதை அறியாதவர்கள் தான் இதனால் வியப்படைவார்கள். இஸ்லாமியர்கள் அதிகமுள்ள இம்மாநிலத்தில் பாஜக வென்றுள்ளதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், மதரீதியாக மக்கள் பிளவுபட்டதால் பாஜக ஆதாயம் அடைந்ததாக குறைகூறத் துவங்கி இருக்கின்றனர்.
அதுபோலவே பழங்குடியினர் அதிகம் வாழும் ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றதை என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. அங்கு முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரகுவர்தாஸ் பழங்குடியினத்தைச் சாராதவர் என்று கூறி மக்களிடையே பிளவு ஏற்படுத்த இப்போதும் முயற்சிக்கிறார்கள். சுயநலவாதிகள் திருந்துவதில்லை.
இவ்விரு மாநிலத் தேர்தல் முடிவுகளும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வலிமையூட்டுவதாகவும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசியல் நிலைபெற உதவுவதாகவும் அமைந்திருப்பது தேசநலன் விரும்புவோருக்கு மகிழ்ச்சி ஊட்டியுள்ளது.
ஜார்க்கண்டில் முழு வெற்றி:
ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது, நவம்பர் 2000-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான். பழங்குடியினர் அதிகமாக உள்ள பகுதிகள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பிகார் மாநிலம் பிரிக்கப்பட்டு ‘ஜார்க்கண்ட்’ என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆனால், மாநிலம் உருவானதில் இருந்தே அங்கு நிலையான அரசியல் அமையவில்லை. சுயநலமே பிரதானமாகக் கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) என்ற பழங்குடியினரின் ஆதரவு பெற்ற கட்சியின் அரசியல் விளையாட்டுகளாலும், ஊழல்களாலும், இம்மாநிலம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதறியது.
மாநிலத்தில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக, ஜே.எம்.எம். ஆகியவற்றிடையே நிலவிய சுமுகமற்ற அரசியல் சமன்பாடுகளால் மாநிலத்தின் வளர்ச்சியில் தேக்கம் நிலவியது. பாஜக இங்கு வலுவான சக்தியாக இருந்தபோதும், முழுப் பெரும்பான்மையை இதுவரை பெற்றதில்லை. வேறெந்தக் கட்சியும் இதுவரை முழுப் பெரும்பான்மையை இங்கு பெற முடிந்ததும் இல்லை. அதன் காரணமாக ஆட்சிக் கவிழ்ப்பும், கட்சி மாறுவதும், கூட்டணிக் குழப்பங்களும் இங்கு தொடர்கதையாக இருந்தன. ஜே.எம்.எம். தலைவரான சிபு சோரன் இதன் மூலகர்த்தாவாக விளங்கி வந்தார். ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகள் மக்களின் நல்லாட்சிக்கான தாகத்தை வெளிப்படுத்திவிட்டன. பாஜக- அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கூட்டணி சட்டசபையில் சரிபாதிக்கு மேல் வென்றிருப்பதன் மூலமாக அதிகாரத் தரகர்கள் ஓரம் காட்டப்பட்டுள்ளனர்.
போதாக்குறைக்கு நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ளதாகவும் ஜார்க்கண்ட் உள்ளது. இங்குள்ள பஸ்தர் மண்டலத்தில் நக்சலைட்களின் ஆட்சியே சில இடங்களில் உண்டு. சட்டசபை தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களை நக்சலைட்கள் எச்சரித்தும் கூட, மக்கள் பெருந்திரளாக வந்து வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளனர். உண்மையில் இது மக்களின் வெற்றி!
தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி “எங்களுக்கு பெரும்பான்மை தாருங்கள். மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறோம்” என்று அளித்த வேண்டுகோளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சிபு சோரனும் அவரது குடும்பத்தினரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பற்றிய கிரஹணமாக இத்தனை நாட்கள் இருந்துவந்தனர். அவர்களின் வெற்றி 19 இடங்களுக்குள் சுருக்கப்பட்டதால், இப்போது மாநிலம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
மாநிலத்தின் மொத்தமுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை:81. இதில் பாஜக- 37, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம்- 5 இடங்களில் வென்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 8 இடங்களில் வென்று காங்கிரசைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இதுவரை மாநிலத்தை ஆண்ட ஜே.எம்.எம். 19 இடங்களில் வென்று இரண்டாமிடம் பிடித்தது. மோடிக்கு எதிராக கூட்டணி அமைத்திருப்பதாகக் கொக்கரித்த ஜனதா பரிவார் கட்சிகளால் ஓரிடத்திலும் கூட இங்கு வெல்ல முடியவில்லை.
சிறுகட்சிகள் கூட ஐந்து இடங்களில் தனித்து வென்றுள்ளபோது தங்களால் ஏன் வெல்ல முடியவில்லை என்பது குறித்து நிதிஷும் லாலுவும் தனித்திருந்து சிந்திப்பது நல்லது. விரைவில் பிகாரில் தேர்தல் நடக்கும்போது மோடி எதிர்ப்பு மட்டுமே தங்களுக்கு உதவாது என்பதை அவர்கள் பூரணமாக உணர்வார்கள். கொள்கையற்ற, ஊழல் கூட்டணியினரான தாங்கள் எதிர்ப்பதாலேயே பாஜக அங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்பதை அவர்கள் விரைவில் உணர்வார்கள்.
ஜார்க்கண்டில் முதல்வர்களாக இருந்த பாபுலால் மராண்டி (முன்னாள் பாஜக) , அர்ஜூன் முண்டா (பாஜக), மதுகோடா (காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜே.எம்.எம்.- ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி) ஆகியோர் இத்தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர். இதன்மூலமாக ஆட்சி மாற்றத்தை வெகுவாக மக்கள் விரும்பியது தெரிகிறது.
கொலை வழக்கில் சிபு சோரன் தண்டிக்கப்பட்டதால் தான் அவரது மகன் ஹேமந்த் சோரன் இங்கு வாரிசு அடிப்படையில் முதல்வரானார். காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த மதுகோடா ஊழல் வழக்கால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். இவ்வாறான குற்றப் பின்னணிக்கு மாற்றாக பாஜகவை மக்கள் இப்போது தேர்வு செய்து தங்கள் ஜனநாயக உணர்வை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இப்போது பாஜக சார்பில் முன்னாள் துணை முதல்வரும் பாஜக தேசிய துணைத் தலைவருமான ரகுவர் தாஸ் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக உள்ளார். பழங்குடி இனத்தை சார்ந்தவர்களே இதுவரை மாநில முதல்வராக இருந்ததை இவர் மாற்றி அமைக்கிறார். அர்ஜுன் முண்டாவின் தோல்வியால் இந்நிலை சாத்தியமாகி உள்ளது. மாநிலத்தில் உள்ள 35 சதவீத பழங்குடியினர்- 65 சதவீத பிற மக்கள் என்ற சமன்பாட்டை ரகுவர் தாஸ் சமயோசிதமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் கையாள வேண்டி இருக்கும்.
இந்த வெற்றிக்கு பாஜகவின் ஸ்தாபன பலம், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்புடனான கூட்டணி, எதிர்க்கட்சிகளின் ஊழல் ஆகியவை காரணமாக இருப்பினும், அதனை முறைப்படுத்தி வெற்றிக்கனி பறித்தவர்கள் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் தான்.
வழக்கம் போல, ஜார்க்கண்டில் பாஜக வெல்ல மோடி காரணம் இல்லை என்று பிதற்றத் துவங்கி உள்ளன எதிர்க்கட்சிகள். அவர்கள் அப்படியே பேசிக்கொண்டு இருக்கட்டும். அவர்களின் காலடியில் உள்ள நிலத்திலும் பாஜக கொடி பறக்கும்போது தான் அவர்கள் நிதர்சனத்தை உணர்வார்கள். அவர்கள் தெரிந்தே உளறுகிறார்கள். மதச்சார்பின்மையின் ஆண்டவரே இவர்களை மன்னியும்!
ஜம்மு காஷ்மீரில் வெற்றிப்பயணம் துவக்கம்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் நிலையான ஆட்சி சுதந்திரத்துக்குப் பிறகு அமையவில்லை. மாநிலத்தில் நிலவும் பிரத்யேக அரசியல் சூழலாலும், பிரிவினை வாதிகளின் ஆதிக்கத்தாலும், இங்கு ஆட்சி நிர்வாகம் சிறப்புற நடைபெறவில்லை. ஷேக் அப்துல்லா- பரூக் அப்துல்லா- ஓமர் அப்துல்லா என வாரிசு அடிப்படையில் இயங்கும் தேசிய மாநாட்டுக் கட்சி (என்.சி.) , முப்தி முகமது சையத்- அவரது மகள் மெஹ்பூபா ஆகியோரின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) ஆகிய இரு கட்சிகளிடையிலான அதிகாரப் பகடையாட்டத்தில் காஷ்மீர் திணறி வந்தது.
மாநிலத்தின் நில அமைப்பிலும் பல சிக்கல்கள். ஹிந்துக்கள் மிகுதியான ஜம்மு, பௌத்தர்கள் மிகுந்த லடாக், இஸ்லாமியர்கள் பெருவாரியான காஷ்மீரப் பள்ளத்தாக்கு என மூன்றாகப் பிரிந்துள்ள இந்த நில அமைப்பிகளிடையே சரியான போக்குவரத்து வசதியோ, தகவல் தொடர்போ இன்னமும் அமையவில்லை. மலைப்பகுதியான இமயச்சாரல் காரணமாக இங்கு இன்னும் தேசத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சாத்தியமாகவில்லை. அதற்கு மாநிலத்தின் நிலையற்ற அரசியல் சூழலும், பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தலும் காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.
காஷ்மீரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து பிரிவினைவாதிகளுக்கு ஆயுதமும் நிதியுதவியும் அளித்து வருவதால், இங்கு மக்கள் பாதுகாப்பாக வாழ்வதே கேள்விக்குறியாகி இருந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் (1998- 2004) உள்துறை அமைச்சராக அத்வானி இருந்தபோது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளால் தான் அங்கு அமைதி ஓரளவுக்குத் திரும்பியது. அதன் விளைவாக கடந்த பத்தாண்டுகளில் அங்கு ஜனநாயக ஆட்சி மெல்ல அரும்பி இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது, பயங்கரவாதிகளின் மிரட்டலையும் மீறி பெருவாரியாக மக்கள் வாக்களித்தது, அவர்களது நம்பிக்கையைக் காட்டியது.
ஒருகாலத்தில் ஆள்கடத்தல் காஷ்மீரில் சகஜம். பிடிபி. தலைவரின் மகள் மெஹ்பூபாவே கடத்தப்பட்டு, அதற்கு விலையாக பிரிவினைவாதிகள் விடுதலை செய்யப்பட்டதை மறக்க முடியாது. அது விபி.சிங் பிரதமராக இருந்த காலம். இப்போது மோடியின் காலம். அதே மெஹ்பூபா இப்போது பாஜக உடன் கைகோர்க்கத் தயார். நாட்டில் நல்லவை நடந்தேற வேண்டுமானால் நல்லவர்கள் வலிமை பெற்றாக வேண்டும் என்ற நியதி இப்போது உண்மையாகி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் மொத்த சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை: 111. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் காஷ்மீரின் பெரும்பகுதி உள்ளதால், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள 87 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் பாதிக்கு மேல் வெல்பவரே அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியும்.
இதிலும், காஷ்மீரப் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் எண்ணிக்கைக்கு அதிகமாகவே அங்கு பிரதிநிதிகள் தேர்வாகின்றனர். லடாக்கிலும், ஜம்முவிலும் அதிகமான மக்கள் இருப்பினும் அவர்களின் பிரதிநிதித்துவம் பள்ளத்தாக்கை விட குறைவு. இதன் காரணமாக, ஜம்மு மக்களின் அரசியல் அபிலாஷைகள் மட்டம் தட்டப்படுகின்றன.
உதாரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஹஸரத்பால் தொகுதியில் வென்ற பி.டி.பி. பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 13,234.இங்கு வெற்றி வித்யாசம் சுமார் மூவாயிரம் மட்டுமே. ஆனால், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள காந்திநகரில் பாஜக வெல்ல 56,679 வாக்குகள் பெற வேண்டியிருந்தது. இங்கு வாக்கு வித்யாசம் சுமார் 17 ஆயிரம். இந்த பாரபட்சம் காரணமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அரசியவாதிகளின் கரமே ஓங்கி இருக்கிறது. இந்த உண்மையை எந்த மதச்சார்பற்ற ஊடகமும் இதுவரை சொல்லியது கிடையாது. இதற்குக் காரணமான 370-வது ஷரத்தை நீக்க வேண்டும் என்று தான் பாஜக நீண்டகாலமாகப் போராடி வருகிறது.
இந்தத் தேர்தலில் பாஜக 370-வது ஷரத்து குறித்து அதிகமாகப் பேசவில்லை. அதை எதிர்க்கட்சியினர் விடாமல் சுட்டிக் காட்டிக்கொண்டே இருந்தனர். அதன்மூலமாக பாஜகவை மாநில அரசியலில் தனிமைப் படுத்த நடந்த முயற்சிகளை பாஜக புத்தி சாதுரியத்துடன் புறந்தள்ளியது.
இம்முறை காஷ்மீரப் பள்ளத்தாக்கில் பல தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் பாஜக சார்பில் நின்றபோது தான் பாஜகவின் ஊடுருவலை பிற கட்சிகள் தாமதமாக உணர்ந்தன. அவர்கள் பெருத்த எண்ணிக்கையில் வாக்குகள் பெறாவிடிலும், பாஜக அங்கு இப்போது ஆதரவாளர் படையைப் பெற்றுவிட்டது. தவிர சஜ்ஜத் லோனே போன்ற முன்னாள் பிரிவினைவாதிகள் பாஜகவை வெளிப்படையாகவே ஆதரித்ததும் புதிய காட்சி.
அண்மையில் நிகழ்ந்த இயற்கைக் சீற்றத்தின்போது காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட பாரபட்சமில்லாத நிவாரணப் பணிகள் அம்மாநிலத்தில் மக்களிடையே மோடி அரசுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன. தவிர, ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவரான இந்தரேஷ் குமாரின் நீண்டகால அரும்பணியும் காஷ்மீரில் தற்போது பலனளித்துள்ளது.
மேலும், ஓமர் அப்துல்லாவின் நிர்வாகச் சீர்கேடுகளும், பிரிவினைவாதிகளுக்கு உதவிவந்த பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பிரச்னைகளும் மக்களின் மனக்கண்களைத் திறந்துவிட்டுள்ளன. ஆயினும் இஸ்லாமியர்கள் பெருவாரியாக பி.டி.பி, என்,சி, காங்கிரஸ் கட்சிகளுக்கே வாக்களித்துள்ளனர். இவற்றைக் கண்டுகொள்ளாத ‘செக்யூலர்’ ஊடகங்கள், ஜம்முவில் ஹிந்துக்கள் மதரீதியாக பாஜகவை தேர்வு செய்துள்ளதாக விமர்சிப்பது அவர்களின் கள்ளத்தனத்தையே காட்டுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்த 87 தொகுதிகளில் பி.டி.பி. 28 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாகியுள்ளது. அதையடுத்து பாஜக 25 தொகுதிகளில் வென்று தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டது. சஜ்ஜத் லோனே உள்பட அதன் தோழர்கள் இரண்டு இடங்களில் வென்றுள்ளனர். இதுவரை மாநிலத்தை ஆண்ட ஓமரின் என்.சி.கட்சி 15 இடங்களிலும், அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 12 இடங்களிலும் பிறர் 5 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தொகுதிகளில் இரன்டாவது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும், வாக்குகளின் சதவீதத்தில் பி.டி.பி.யை முந்தி முதலிடம் பிடித்திருக்கிறது பாஜக. இங்கு, பாஜக- 23 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பாஜக வரலாற்றிலேயே முதல்முறை. தவிர, இதுவரை மாநிலஅரசியலில் காங்கிரஸ் பெற்றுவந்த முக்கியத்துவம் இப்போது பாஜகவின் தோள்களுக்கு இடம் மாறி இருக்கிறது.
யாருக்கும் பெரும்பான்மை கிட்டாத சூழலில் இரு கட்சிகள் இணைந்தே ஆட்சி அமைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கொள்கை மாறுபாடுள்ள கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தமான நிலைமை இங்கு காணப்படுகிறது. பிளவுபட்ட இந்த தேர்தல் தீர்ப்பால் பிரிவினைவாதிகள் பலம், பெற்றுவிடக் கூடாது.
ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் பாஜக இம்மாநிலத்தில் முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்ற முனைப்பில் என்.சி., காங்கிரஸ் கட்சிகள் தவிக்கின்றன. அவை பி.டி.பி. கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், அக்கட்சிகளின் அரசியல் நாடகத்தைப் புரிந்து கொண்டுள்ள பி.டி.பி. பாஜகவுடனும் பேச்சு நடத்துகிறது. அனேகமாக இவ்விரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தால் அது வலுவான ஆட்சியாக இருக்கும். அது சமூக நோக்கிலும் தேச ஒருமைப்பாட்டுக்கு வலுக்கூட்டுவதாக இருக்கும்.
நன்றி; சேக்கிழான்
நன்றி; தமிழ் ஹிந்து
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.