ஆனந்திபென் நல்ல ஆசிரியர், நல்ல முதல்வர்

து 1987 ம் ஆண்டின் பிற்பகுதி,  மொஹினாபா கன்யா வித்யா லாயா பள்ளியின் முதல்வர், தம் பள்ளி மாணவர்களை ஒரு நாள், நர்மதை ஆற்றங் கரையில் இருக்கும், வதோதரா அருகே உள்ள நரேஷவர் என்னும் சுற்றுலா தலத்திற்கு அழைத்து செல்கிறார்.

மாணவிகள் உற்சாகமாக விளையாடுகிறார்கள். அதுவும் குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட சொல்லியா தர  வேண்டும்… பிள்ளைகளின் சேட்டையால் அந்த பகுதி முழுவதும் உற்சாகம் கொப்பளிக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களை, “தண்ணீரில் பார்த்து விளையாடுங்கள்…” என்று அதட்டுகிறார்கள். ஆனால், ஒருபயனும் இல்லை. குழந்தைகள் அதை காதில்வாங்கியதாக தெரியவில்லை. அப்போதுதான் அந்த துர்சம்பவம் நிகழ்கிறது. நர்மதை ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு மாணவிகள், ஆற்றில் மூழ்குகிறார்கள். விளையாடிக் கொண்டிருந்த பிற மாணவிகளிடையே கூச்சல். ஆசிரியர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள். அப்போது, அந்தப் பள்ளியின் முதல்வர் சற்றும் யோசிக்காமல் ஆற்றில் குதித்து, மூழ்கிய இரண்டு பிள்ளைகளின் தலைமுடியை பிடித்து, அவர்களை மீட்கிறார்.

அடுத்த நாள் பத்திரிகை செய்திகள், அந்தப் பள்ளி முதல்வரை கொண்டாடுகின்றன. தலைப்பு செய்தியில் இடம் பிடிக்கிறார். அவரின் அந்த வீரமிக்க செயலை பாராட்டி, வீர தீர செயலுக்காக வழங்கப்படும் மாநில அரசின் சிறப்பு விருதும் வழங்கப்படுகிறது. மாநிலமே அவரைக் கொண்டாடுகிறது. பாரதிய ஜனதா கட்சி, அவரை தங்கள் கட்சியில் இணையச் சொல்லி, அவரின் கணவர் மூலமாக அழைப்புவிடுக்கிறது. அவரும் அதே ஆண்டு பா.ஜ.கவில் இணைக்கிறார்.

கணிதத்திலும், அறிவியலிலும் திறமை வாய்ந்த அந்தப் பள்ளி முதல்வர்தான், பின் குஜராத்தின் முதல்வர் ஆன ஆனந்திபென் பட்டேல்.

 

ஆனந்திபென்னின் இளமை காலம்:

சுதந்திரக் கனல், தேசம் முழுவதும் பற்றி எரிந்த காலம் அது. தேசத்தின் பெரும் பகுதியினர் அப்போது காந்தியால் ஈர்க்கப்பட்டிருந்தனர். அதற்கு அந்த எளிய விவசாயியும் விதிவிலக்கல்ல. அவர் விவசாயி மட்டுமல்ல, ஆசிரியரும் கூட.  காந்தி முன்மொழிந்த எளிய வாழ்வை, அந்த எளிய மனிதர் இறுகப் பற்றி வாழ்ந்தார். தம் உடைகளை தாமே நெய்து உடுத்தினார். தம் பிள்ளைகளும் அவ்வாறாகதான் இருக்க வேண்டும் என்று பழக்கப்படுத்தினார். அத்தகைய குடும்பத்தில்தான், ஆனந்திபென்  அந்த எளிய மனிதருக்கு எட்டாவது குழந்தையாக ,1941 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி பிறந்தார்.

கல்வியின் முக்கியத்துவத்தை அந்த குடும்பம் உணர்ந்தே இருந்தது. ஆனந்தியை படிக்கச் சொல்லி உற்சாகமூட்டியது. அவர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது, அவருடன் சேர்ந்து படித்த பெண்கள் மொத்தம் மூன்று பேர்தான். படிப்பில் மட்டும் சுறுசுறுப்பாக இல்லாமல், விளையாட்டிலும் மிக திறமையானவராக இருந்தார். பள்ளி காலத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் விளையாட்டில் மாவட்ட அளவில் சாம்பியனாக இருந்தார். கல்லூரி காலத்திலும் இந்த சாதனைகள் தொடர்ந்தன. தனது விளையாட்டு சாதனைகளுக்காக ‘வீரபாலா’ என்ற விருதையும் அவர் பெற்றார்.  

1960 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தார். அந்த கல்லூரியில், முதலாமாண்டு அறிவியல் படிப்பு சேர்ந்தவர்களில் இவர் ஒருவர் மட்டும்தான் பெண். ஆனால், அது அவருக்கு தடையாக இருக்கவில்லை.  வெற்றிகரமாக இளங்கலை அறிவியலை முடித்தார்.  இவரின் இந்த ஆர்வத்தை பார்த்த அவரது கல்லூரிப் பேராசியர் ஒருவர், ஆனந்திபென்னை பிள்வாய் கிராமத்தில் உள்ள பெண்பிள்ளைகளுக்கு, 'கல்வியின் முக்கியதுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அவரும் அந்தப் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பெண்கள் ஏன் கல்விபயில வேண்டுமென்றும் தொடர்ந்து மக்களுடன் உரையாடினார்.  இதுதான் அவர் மேற்கொண்ட முதல் சமூக பணி.

இந்த சமயத்தில் ஆனந்திபென்னின் மூத்த சகோதரி சரிதாபென்,  தனது முப்பது வயதில் கணவரை இழந்தார். கணவனை இழந்த ஒரு பெண், எத்தகையை சமூக இன்னல்களை அந்த காலத்தில் எதிர் கொள்வாரோ, அத்தகைய அனைத்து இன்னல்களையும் சரிதா எதிர்கொண்டார். இது ஆனந்தியை மிகவும் பாதித்தது. இதுவே ஆனந்தியை,  பெண்களின் முன்னேற்றத்திற்காக அப்போது இயங்கி கொண்டிருந்த மகிளா விஹாஸ் குரூக்கில் இணைய வைக்க காரணமாக அமைந்தது.

இது குறித்து பின்பு ஆனந்தி, “கணவனை இழந்த பெண்கள் மோசமான சமூக அழுத்தங்களை அக்காலத்தில் எதிர்கொள்ள நேரிட்டது. நானே அதை நேரடியாக கண்டிருக்கிறேன். இதுதான், நான் மஹிளா விஹாஸில் சேர காரணமாக அமைந்தது. நான் அங்கு 40க்கும் மேற்பட்ட கைம்பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து இருக்கிறேன்.” என்றார்.

பின்பு, 1962 ம் ஆண்டு மாஃபட்லால் பட்டேலுக்கும், ஆனந்திக்கும் திருமணம் ஆனது. நிச்சயம் அவரின் கல்வி தாகத்திற்கு, திருமணம் ஒரு தடையாக இருக்கவில்லை. அவர்,  திருமணத்திற்கு பின் அறிவியலில் முதுகலை பட்டத்தைப் பெற்றார். பின் கல்வியல் படிப்பிலும், தங்கப்பதக்கத்துடன் பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மொஹினாபா கன்யா வித்யாலாயா பள்ளியில் ஆசிரியராய் பணியில் சேர்ந்தார். கற்பிப்பதில் மட்டும் அல்ல நிர்வாகத்திலும் ஆனந்தி சிறந்து விளங்கினார். அப்போது பள்ளியில் நடந்த ஒரு விஷயத்தை நினைவு கூர்கிறார், அவருடன் பணிபுரிந்த மீனாக்‌ஷி தேசாய்.

“ மாநில அளவில், பல்வேறு காரணங்களுக்காக அப்போது பந்த் நடைபெற்றது. அப்போது வழக்கம் போல் இயங்கிய எங்கள் பள்ளிக்கு வந்த ஒரு கூட்டம், 'பள்ளியை மூட வேண்டும், விடுமுறை அறிவிக்க வேண்டும்' என்றது. ஆனால், அந்த கூட்டத்தை லாவகமாக சமாளித்தார் ஆனந்தி. 'பள்ளி துவங்கிவிட்டது, இப்போது மாணவர்களை வீடுகளுக்கு திரும்பச் சொல்வது சரியாக இருக்காது. அது மட்டுமல்ல, மாணவர்கள் வீடு திரும்பும்போது ஏதாவது அசாம்பாவிதம் நேர்ந்து, பிள்ளைகளுக்கு ஏதாவது ஏற்பட்டால், அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது' என்றார்.  இதற்கு பதில் சொல்ல முடியாத அந்தக் கூட்டம், திரும்பிச் சென்றது.  எப்போதும் அப்படிதான், ஆனந்தி தாம் நம்பிய விஷயங்களை தைரியமாக வெளியே சொல்வதற்கு அஞ்சுபவராக என்றுமே இருந்ததில்லை” என்கிறார் மீனாக்‌ஷி.

ஆனந்தியின் அரசியல் நுழைவு:

நாம் முதல் பத்தியில் பார்த்தது போல. ஆனந்தியின் அரசியல் நுழைவு 1987 ம் ஆண்டுதான் நேரிட்டது. அவரது அரசியல் பிரவேசத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது. 1985 – 87 வரையிலான காலகட்டத்தில், வட குஜராத் பகுதிகளை மோசமான வறட்சி கவ்வியது. எங்கும் பசி, பஞ்சம், பட்டினி. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட நான்கு நாட்கள் 'நயாய் யாத்ரா'வில் ஆனந்தி பங்கேற்றார். அப்போது சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களுடன் அவர் உரையாடியது, அவருக்கு சமூகம், அரசியல் குறித்த பரந்துப்பட்ட பார்வையை திறந்துவிட்டது. அவரே பின்பு, “நான் தீவிரமாக அரசியலில் இயங்க, அந்த யாத்ராவும் ஒரு காரணம். அரசியல் மூலமாக மட்டும்தான், ஏழ்மையான மக்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று அந்த யாத்ரா எனக்கு உணர்த்தியது” என்றார்.   இதனைத் தொடர்ந்து, ஆனந்தி, பாஜக பெண்கள் அணிக்கான தலைவராகிறார்.

இதுபோல இன்னொரு யாத்ராதான், ஆன்ந்தியை அரசியலில் முன்வரிசைக்கு அழைத்து வந்தது. 1992 ம் ஆண்டு, ஸ்ரீநகர் லால் சவுக்கில், இந்திய தேசியக் கொடியை ஏற்ற பி.ஜே.பி திட்டமிடுகிறது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறார்கள், “லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்…”என்கிறார்கள். ஆனால், எதற்கும் ஆனந்தி அஞ்சவில்லை. தையரியமாக நரேந்திர மோடி மற்றும் முரளி மனோகர் ஜோஷியுடன், அந்த ஊர்வலத்தில் பங்கேற்று, இந்திய தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

இந்த நிகழ்வு இந்திய அளவில் அவருக்கு ஒரு பிரபல்யத்தை தேடித் தருகிறது. இது அவர் ராஜ்ய சபா எம்.பி ஆகவும் காரணம் ஆகிறது. தனது கட்சி கேட்டுக் கொண்டதன் பெயரில், 1998 ம் ஆண்டு, அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மண்டல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்; கேஷ்பாய் பட்டேல் அமைச்சரவையில்  கல்வி அமைச்சராகவும் ஆகிறார்.

இந்த புள்ளியிலிருந்துதான், ஆனந்தி குஜராத் முதல்வர் ஆனதற்கான அரசியல் பயணம் துவங்குகிறது.

தம் முடிவுகளில் தீர்க்கமானவர்:

2002 ம் ஆண்டு, பதான் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார். பின் அதே தொகுதியில் 2007 ம் ஆண்டும் போட்டியிட்டு வெல்கிறார்.  2008 ம் ஆண்டு, அவர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்,  ஒரு தலித் மாணவியை ஆறு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக 2012 ம் ஆண்டு, கத்லோடியா தொகுதிக்கு மாறுகிறார். அங்கேயும் வெற்றி பெறுகிறார். குஜராத் சட்டமன்ற வரலாற்றில் ஒரு பெண் நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெறுவது முதல் முறை என்ற சாதனையையும் படைக்கிறார்.

மோடி அமைச்சரவையில் ஆனந்தி, பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்து உள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட பணியில் சிறப்பாக பணியாற்றி, மோடியின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். அவர், பதான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்தான்,  பதானில் மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. நர்மதை அணையின் குறுக்கே, 100 க்கும் நேற்ப்பட்ட தடுப்பணைகள் கட்டப்படுகின்றன; 700 கி.மீ நீளத்துக்கு சாலைகள் போடப்படுகின்றன.
 
இந்த நிர்வாக திறமைதான் 2014 ம் ஆண்டு, நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றபோது, குஜராத்தின் முதல்வர் பதவியை அவருக்கு பெற்றுத் தந்தது.
 
இதையெல்லாம் கடந்து, 'ஆனந்தி சுதந்திரமாக யோசிக்கக் கூடியவர், பிறர் தரும் அழுத்தங்களுக்காக தாம் சரியென்று நினைத்து எடுத்த முடிவுகளை மாற்றாதவர்' என்கிறார் ஆனந்தியிடமிருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த  மாஃபட்லால் பட்டேல்.

“அப்போது குஜராத பா.ஜ.க தலைவராக இருந்தவர்  ருபாலா. அந்த சமயத்தில் அகமதாபாத் நகராட்சி தேர்தலில், தனக்கு வேண்டபட்டவருக்கு ‘சீட்’ அளிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தார். ஆனால், ஆனந்தி அவர் பரிந்துரைத்த யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. உண்மையாக கட்சிக்கு யார் உழைத்தார்களோ, அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்தார். அந்த அளவுக்கு தம் முடிவுகளில் தீர்க்கமானவர் ஆனந்தி…”என்கிறார் மாஃபட்லால்.

" அவர் எப்போதும் அவசரப்பட்டு முடிவு எடுக்கமாட்டார். ஆனால், அவர் ஒரு முறை முடிவு எடுத்துவிட்டார் என்றால், அதிலிருந்து கிஞ்சித்தும் பின் வாங்க மாட்டார்" என்கிறார் அவரின் சகா பாய்லால் பட்டேல்.

நன்றி விகடன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...