1984 சீக்கிய படுகொலை

1984 அக்டோபர் 31 அன்று காலை 9:30 மணியளவில் தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் பிரதமர் இந்திரா காந்தி சரமாரியாகச் சுடப்பட்டார். உடனடியாக எய்ம்ஸுக்கு (All India Institute of Medical Sciences) எடுத்துச் செல்லப்பட்ட* அவர் சில மணிநேரங்களுக்குப் பிறகு- இறந்ததாக அறிவிக்கப்பட்டார். சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்* கலவரம் தொடங்கிய இடமும் அதுதான். இந்திராவின் உடலைக் காண வந்த குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்கின் கார்மீது அங்கிருந்த கும்பல் கற்கள் வீசித் தாக்கியது. காரணம், ஜெயில் சிங்* ஒரு சீக்கியர்.

அரசாங்கமும் காவல் துறையும் சீக்கியர்களுக்குப் பாதுகாப்பளிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை உணர்த்த இந்த ஒரு நிகழ்வு போதுமானது.

ஆனால் அரசாங்கமும் காவல் துறையும் அடுத்த நான்கு நாட்கள் நடந்த கலவரங்களுக்கும் படுகொலைகளுக்கும் முழு ஒத்துழைப்பைத் தந்தன. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் அப்போது தில்லிப் பல்கலைக்கழகத்தில் இளம் ஆங்கிலப் பேராசிரியர். எழுத்தாளராகப் பரிணமித்திருக்கவில்லை. ‘‘திருமதி காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ஒரு மதப் பிரிவினருக்கு எதிராக நடந்த வன்முறை என் வாழ்க்கையின் மீது ஆகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. திரும்பிப் பார்க்கையில், அந்தக் காலகட்டத்தின் அனுபவங்கள் நான் எழுத்தாளனாக உருவாவதில் முக்கியத்துவம் பெற்றுள்ளதைக் காண்கிறேன்; எந்த அளவிற்கு என்றால் அவற்றைப் பற்றி நான் இதுவரை எழுதவே முயலவில்லை’’ என்று 1995இல் த நியூ யார்க்கர் இதழில் எழுதிய கட்டுரையில் (The Ghosts of Mrs Gandhi) கோஷ் கூறுகிறார். பல்கலைக்கழகத்திலிருந்து தனது நண்பருடன் நண்பரின் வீட்டிற்குப் பேருந்து ஒன்றில் போகையில் அவர்களது பேருந்தை எய்ம்ஸ் அருகே ஒரு கும்பல் நிறுத்தி சீக்கியர் யாராவது இருக்கிறார்களா என்று தேடியபோது பேருந்தில் இருந்த அனைவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு பேருந்தில் இருந்த ஒரு சீக்கியரைக் காப்பாற்றியதையும் பின்னர் தனது நண்பரின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்த வயதான சீக்கியத் தம்பதியினரைத் தன் நண்பரின் குடும்பத்துடன் சேர்ந்து மற்றொரு வன்முறைக் கும்பலிடமிருந்து காப்பாற்றியதையும் அக்கட்டுரையில் விவரிக்கிறார். இரண்டு கும்பல்களிலும் யாரிடமும் இந்திரா இறந்தது குறித்து வருத்தத்தையோ வேதனையையோ அவர் பார்க்கவில்லை என்பதையும் கோஷ் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல தான் வந்த பேருந்தில் சீக்கியர் யாராவது இருக்கிறார்களா என்று கேட்ட அந்தக் கும்பலில் யார் குரலிலும் கோபமே இல்லை என்பதையும் அதுவே தனக்கு அசாதாரணமான அச்சத்தைத் தந்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார். கோஷ் மட்டுமல்ல வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்தைக் கண்ட அனைத்து சாட்சிகளின் கருத்தும் இதுவே. ஆக இது இந்திராவின் படுகொலையால் வேதனையுற்ற அல்லது கோபமுற்ற சிலரின் வெறியாட்டம் அல்ல. தில்லி நிர்வாகமோ (அப்போது தில்லி நிர்வாகம் லெப்டினென்ட் கவர்னரின் கீழ் இருந்தது. முதல் சட்டசபைத் தேர்தல் 1993இல்தான் நடந்தது) மத்திய அரசோ நினைத்திருந்தால் ஒரு சில மணிநேரங்களில் கலவரத்தை ஒடுக்கியிருக்க முடியும், ஒரே ஒரு சீக்கியரின் உயிருக்குக்கூட ஆபத்து வந்திருக்காது. ஆனால் அன்றே பிரதமராகப் பதவியேற்ற ராஜீவ் காந்திக்கோ உள்துறை அமைச்சர் நரசிம்மராவிற்கோ தில்லியின் லெப்டினென்ட் கவர்னர் பி.ஜி. காவலுக்கோ அது நோக்கமாக இல்லை. இந்திராவின் படுகொலை நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு சப்தர்ஜங் சாலையிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வமான இல்லத்தில் நடந்த கூட்டத்தில் லெப்டினென்ட் கவர்னர் காவல், காங்கிரஸ் தலைவர் எம்.எல். பொடேதார், தில்லி மாநகரக் காவல் துறை ஆணையர் உட்படப் பல உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் காவல் துறை உயரதிகாரி ஒருவர், ‘‘தில்லியின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது, பாதுகாப்பிற்கு உடனடியாக ராணுவம் அழைக்கப்பட வேண்டும், இல்லாவிடில் ஒரு ஹோலோகாஸ்ட் நடைபெறும்’’ என்று எச்சரித்தார் என்றும் ஆனால் இந்தக் கருத்து கண்டுகொள்ளப்படவில்லை என்றும் மிகவும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்ததாக People’s Union for Democratic Rights (PUDR) மற்றும் People’s Union for Civil Liberties (PUCL) இணைந்து வெளியிட்டிருந்த Who are the guilty ? என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

{qtube vid:=IzW4dZewZfg}

தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் தொடங்கிய அதே நேரத்தில் கொல்கத்தாவில் உள்ள சீக்கியர்களுக்கு எதிராக அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ்காரர்களும் சமூக விரோதிகளும் தாக்குதல் தொடுத்தனர். மேற்கு வங்கத்தின் அன்றைய முதல்வர் ஜோதிபாசு எடுத்த நடவடிக்கையால் நிலைமை ஒரு மணிநேரத்திற்குள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. ஒரு சீக்கியரின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படவில்லை. சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில், 1984ஆம் ஆண்டின் பல வில்லன்களுக்கு மத்தியில் உண்மையான ஒரு நாயகன் என ஜோதி பாசுவை ராமச்சந்திர குஹா வர்ணித்திருந்தார். 
நீதிபதி ஜி.டி. நானாவதி கமிஷன் முன்னர் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி அளித்த சாட்சியத்தில், ‘‘எனது நண்பர் மிஸ். லைலா பெர்னாண்டஸ் அன்று மாலை என் வீட்டிற்கு வந்தார். நகரத்தில் நடந்துகொண்டிருந்த கோரச் சம்பவங்களை விவரித்தார். அன்றைய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவைத் தொடர்புகொள்ள முடிவுசெய்தோம். அவரைச் சந்தித்தோம். நகரில் நடந்துகொண்டிருந்த கொலைகளைப் பற்றிக் கூறினோம். படுகொலைகளைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டினோம். உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் விவரித்தேன். ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது, ராணுவத்தைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது ஆகியவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும். ராவுடன் அரை மணி நேரம் இருந்தோம். அவர் யாருக்கும் எந்த உத்தரவும் பிறப்பிப்பதாகவோ வேறு அவசர நடவடிக்கைகள் எடுப்பதாகவோ தெரியவில்லை. அவரிடம் எந்தப் பரபரப்பும் ஆர்வமும் தெரியவில்லை. இது அவர் வழக்கமாக நடந்துகொள்ளும் விதமாக இருக்கலாம் அல்லது நடந்துகொண்டிருக்கும் செயல்களால் அவரும் உலுக்கப்பட்டு இருக்கலாம். இந்தச் சந்திப்பு எனக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்’’ என்று கூறியிருந்தார். ஆனால் நரசிம்ம ராவ், தான் அப்படியெல்லாம் உலுக்கப்படக்கூடியவர் அல்ல என்பதை பாபர் மசூதி இடிப்பின்போது மற்றொரு முறை நிரூபித்துக் காட்டினார். ராம் ஜெத்மலானி மட்டுமல்ல பல எதிர்க் கட்சித் தலைவர்களும் நாடாளு மன்ற உறுப்பினர்களும் நரசிம்ம ராவையும் லெப்டினன்ட் கவர்னரையும் தொடர்ந்து சந்தித்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படியும் ராணுவத்தை அழைக்கும் படியும் கேட்டுக்கொண்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேய்கள் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். 
அக்டோபர் 31இலிருந்து நவம்பர் 3வரை தில்லியில் இருந்த சீக்கியர்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் வார்த்தைகளே சாட்சி: ‘‘நாஜி ஜெர்மனியில் இருந்த ஒரு யூதரைப் போல எனது சொந்த நாட்டிலேயே நான் அகதியாக உணர்ந்தேன்’’. அப்போது குஷ்வந்த் சிங் மாநிலங்களவை உறுப்பினர், நெருக்கடி நிலை காலகட்டத்தில் சஞ்சய் காந்தியை ஆதரித்தவர். சீக்கியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பேசப் புகழ்பெற்ற பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்கை அவரது மாளிகையில் சந்தித்தபோது அவரிடம், ‘‘குல்தீப், கலவரங்களைப் பற்றி எனக்குச் சொல்லப்படுவதும் இல்லை, பத்திரிகைகளும் எனக்கு வருவதில்லை. எனக்கு ஏதாவது தகவல் கிடைக்கிறது என்றால் அது உங்களைப் போன்ற நண்பர்கள் மூலமாகத்தான். எதிர்காலத் தலைமுறைகள் என்னை எப்படி மதிப்பிடுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றார். குடியரசுத் தலைவர் தனது வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகிறார் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ். நருலா கூறினார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் பெரும் பணக்காரருமான குஷ்வந்த் சிங்கிற்கும் நாட்டின் குடியரசுத் தலைவருக்குமே இந்தக் கதி என்றால் சாதாரண நடுத்தர மற்றும் ஏழை சீக்கியர்களின் கதி என்னவாக இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. நான்கு நாள் கலவரத்தில் சுமார் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். சில குடும்பங்களில் ஒருவர் மிச்சமில்லாமல் கொல்லப்பட்டனர். பலர் உயிருடன் கொளுத்தப்பட்டனர். பல பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கண்ணெதிரே கொல்லப்படுவதற்குச் சாட்சியாக இருந்தனர். ஏராளமான பெண்கள் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாயினர். இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் திரிலோக்புரி, மங்கோல்புரி, டிரான்ஸ்-யமுனா காலனிகள், சுல்தான்புரி, பாலம் காலனி ஆகியவை. இதில் மிகுந்த வேதனையான விஷயம், இங்கிருந்த சீக்கியர்களில் பெரும்பான்மையானவர்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள். அப்படியிருந்தும் தங்கள் குடும்பங்கள் அழிக்கப்பட்டதை அந்தச் சீக்கியர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. 

{qtube vid:=3hQC9rHUX5A}

ந்தக் கொலைகள், தில்லி காங்கிரஸ் தலைவரும் மத்தியத் துணை அமைச்சருமான எச். கே. எல். பகத், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜ்ஜன் குமார், ஜகதீஷ் டைட்லர் மற்றும் தரம்தாஸ் சாஸ்திரி ஆகியோரின் வழிகாட்டுதலில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்பட்டன. திரிலோக்புரி மற்றும் டிரான்ஸ்-யமுனா பகுதிகளைச் சுற்றியிருந்த நகர்ப்புற கிராமங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட ஜாட் மற்றும் தலித் மக்கள் இவர்களுடன் தில்லி நகரின் சமூக விரோதக் கும்பல்களும் சேர்ந்து இந்தக் கொலை-கொள்ளையை நகரெங்கும் நடத்தினர். இவர்களது அராஜகத்தைக் காவல் துறை கண்டுகொள்ளாதது மட்டு மல்ல பல இடங்களில் இவர்களுடன் சேர்ந்துகொண்டது. PUCL மற்றும் PUDR இணைந்து நடத்திய ஆய்வில் இதில் பங்குகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் குறித்துத் தகவல்கள் திரட்டப்பட்டன. 
தில்லியில் வழக்கறிஞராக இருக்கும் ஹரவீந்தர் சிங் பூல்காவின் முயற்சியால் உருவான குடிமக்கள் நீதிக் குழு தொடர்ச்சியாக நடத்திய போராட்டத்தாலும் பல உண்மைகள் வெளிவந்தன. ஆனால் நீதி கிடைக்கவில்லை. நடந்த வன்முறை வெறியாட்டத்தில் தில்லியின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்ததுதான் இதற்கான காரணம். ஒரேயொரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம். குடிமக்கள் நீதிக் குழுவின் விடாத முயற்சியின் காரணமாகவும் 1989 டிசம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததுடன் வி.பி. சிங் பிரதமர் ஆகியிருந்ததாலும், சஜ்ஜன் குமார் மீதான வழக்குகளுக்கு உறுதியான சாட்சியங்கள் இருந்ததாலும் சிபிஐ அவரைக் காலை 6:30 மணியளவில் கைதுசெய்தது. ஆனால் கைதுசெய்தவரை வெளியே அழைத்துச் செல்ல முடியாதபடி காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் சஜ்ஜன் குமாரின் வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். அப்பகுதியின் காவல் நிலையத்திலிருந்தோ அருகிலிருந்த மற்ற காவல் நிலையங்களிலிருந்தோ சிபிஐ அதிகாரிகளுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுவிட்டபோதிலும் அந்த விஷயத்தை நீதிமன்றத்திடமிருந்து மறைத்து முன்ஜாமீனுக்கு மனு செய்யப்பட்டது. அப்போது தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரபீந்திர நாத் பைனே (சஜ்ஜன் குமாரைச் சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளிலிருந்து காப்பாற்றவே 1988இல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த இவரை ராஜீவ் அரசாங்கம் அவசரம் அவசரமாகத் தில்லி உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக நியமித்தது) வழக்கைத் தனது சகநீதிபதி எம். கே. சாவ்லாவிடம் விசாரணைக்கு அனுப்பிவைத்தார். அடுத்த சில நிமிடங்களில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருக்கும் ஒரு நபருக்கு முன்ஜாமீன் அளிக்கும் விநோதம் நடந்தது. இத்தகவல் சஜ்ஜன் குமாருக்குத் தெரிவிக்கப்பட்டு அவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து அங்கிருந்த தொண்டர்களிடம் தனக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்த பிறகுதான் சிபிஐ அதிகாரிகளால் அவரது வீட்டைவிட்டு வெளியேறவே முடிந்தது. அரசியல்வாதிகள், காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள் இடையே இருந்த இறுக்கமான தொடர்பே இதற்குக் காரணம். எதிர்க்கட்சிகளின் ஆட்சி இருக்கும் போது இதைச் சாதிக்க முடியுமென்றால் காங்கிரசின் ஆட்சியின்போது என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம். தில்லி வாழ் தமிழர்களின் பெரும் அதிர்ஷ்டம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது காலம் சென்ற சந்திரசேகர் பிரதமராக இருந்தார். (1984 கலவரம் உச்சத்தில் இருந்தபோது சீக்கியர்களைக் காப்பாற்ற கலவரப் பகுதிகளுக்குச் சந்திரசேகர், சுவாமி அக்னிவேஷ் மற்றும் சுமார் நூறு பேருடன் சேர்ந்து ஊர்வலமாகத் தானும் சென்றதை அமிதவ் கோஷ் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.) 

{qtube vid:=3hQC9rHUX5A}

2007 குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடியை மரண வியாபாரி என்று சோனியா காந்தி குறிப்பிட்டார். ஆனால் தன் கணவர் ராஜீவை ஒருபோதும் அப்படி சோனியா கருதமாட்டார். ஆனால் ராஜீவின் லட்சணம் என்ன?  இந்திராவின் படுகொலையை அடுத்து வந்த இந்திராவின் முதல் பிறந்தநாள் விழாவில் (19 நவம்பர் 1984) தில்லியில் பேசிய ராஜீவ் காந்தி, ‘‘இந்திராஜியின் மரணத்தைத் தொடர்ந்து நாட்டில் சில கலவரங்கள் நடந்தன. மக்கள் மிகவும் கோபமுற்றனர், அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவே உலுக்கப்பட்டதைப் போல் தோன்றியது. ஒரு பெரிய மரம் வீழ்கிறபோது அதைச் சுற்றியுள்ள நிலம் சிறிது அதிர்வது இயற்கையே’’ என்றார். அதாவது, மூவாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டது ஓர் இயல்பான, இயற்கையான விஷயம். அது நடக்காமல் இருந்திருந்தால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டுமென்பது ராஜீவின் கருத்து. நடந்த காட்டுமிராண்டித்தனம் குறித்து அவரிடம் ஒரு துளி வருத்தமோ வருத்தப்படுகிற மாதிரியான பாவனையோகூட இல்லை. பஞ்சாபில் சில தீவிரவாதிகள் அங்கிருந்த இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியதிலோ காலிஸ்தான் கேட்டதிலோ தில்லி சீக்கியர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை, ஆனாலும் வேட்டையாடப் பட்டார்கள்.  இந்திரா காந்தியின் மரணம் தேர்தல் வெற்றிக்கு உதவும் என்பதால் காங்கிரஸ் கட்சி உடனே தேர்தலை நடத்திப் பெரும் வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலில் சீக்கியர்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டிவிட்டும் (ஏற்கனவே இந்திரா காந்தி தனது தேர்தல் வெற்றிக்காக இந்து மதவாதத்தின் பக்கம் சாய்ந்திருந்தார்), இந்திய தேசம் ஆபத்தில் இருப்பதாகப் பிரச்சாரம் செய்தும் வரலாறு காணாத வெற்றியைக் காங்கிரஸ் பெற்றது. 
அதுவரை துணை அமைச்சராக இருந்த எச்.கே.எல். பகத் அவர் ஆற்றிய ‘சீக்கியப் பணிக்காக’ நாடாளுமன்ற விவகார அமைச்சராக (கேபினட் அமைச்சர்) பதவி உயர்வு பெற்றார். வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜகதீஷ் டைட்லர் துணை அமைச்சரானார். தங்களது பாரபட்சமற்ற தன்மையை நிரூபிப்பதற்காகவோ என்னவோ சஜ்ஜன் குமாருக்கு அந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. தேர்தல் வெற்றிக்குப் பிறகு 1985 ஜனவரி 17ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் இணைக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், ‘‘இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து பெருத்த உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. உறுதியான நடவடிக்கைகள் மூலம் குறுகிய காலத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது அரசாங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது’’ என்றார். இதுதான் ராஜீவ் காந்தியின் அரசாங்கம் தெரிவித்த அதிகபட்ச அனுதாபம். அதுவும் ஒரு சீக்கியர் குடியரசுத் தலைவராக இருந்திராவிட்டால் இந்த வார்த்தைகளாவது அந்தப் பேச்சில் இடம்பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். அடுத்ததாக இரு அவைகளும் தனித்தனியாக நிறைவேற்றிய ஒரு பொதுத் தீர்மானத்தில் இதைப் பற்றி ஒரு வார்த்தையும் கிடையாது. மன்னிப்புக் கோருவது இருக் கட்டும் ராஜீவ் காந்தி தான் உயிருடன் இருந்தவரை ஒருபோதும் 1984 கலவரத்திற்காக வருத்தம்கூடத் தெரிவித்ததில்லை. 

{qtube vid:=SnTwY27l6TQ}

1984 கலவரம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று பலமான கோரிக்கை எழுந்தபோது அப்படி விசாரணைக் கமிஷன் அமைப்பது, “செத்துப்போன விஷயங்களை” மீண்டும் கிளறவே உதவும் என்றார் ராஜீவ். ஆனால் பஞ்சாப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த விசாரணைக் கமிஷன் அமைப்பதை ஒரு முன்நிபந்தனையாக அகாலி தலைவர் சந்த் லோங்வால் வைத்ததால் வேறு வழியின்றி அன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவரான ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. உண்மைகளை வெளிக்கொண்டுவருவதற்குப் பதிலாக விஷயங்களை மூடிமறைப்பதற்கும் கலவரங்களில் ஈடுபட்டவர்களையும் தூண்டியவர்களையும் காப்பாற்றவுமே அக்கமிஷன் அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெளிவானது. விசாரணைகள் வெளிப்படையாக நடத்துவதற்குப் பதிலாக ரகசியமாக நடத்தப்பட்டன. தொடக்கத்திலேயே இதன் நம்பகத்தன்மை மிகக் குறைவாக இருந்ததால் சாட்சியம் அளிக்கப் பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் யாருமே வரவில்லை. இதற்காக, இந்த விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடிய குடிமக்கள் நீதிக் குழுவின் உதவியை மிஸ்ரா நாட வேண்டி யிருந்தது. இக்குழு மும்முரமாகப் பணியில் ஈடுபட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அபிடவிட் சமர்ப்பிக்க வைத்தது. ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களோ இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்களின் பெயர்களில் அபிடவிட் சமர்ப்பித்தனர். இந்தத் தலைவர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபடவில்லை என்றும் மாறாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினர் என்றும் அவை கூறின. ஆனால் இந்த ஏமாற்று உடனடியாக அம்பலமானது. இந்த விஷயம் பத்திரிகைகளில் வெளியானது காங்கிரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது. காங்கிரஸ் தலைமையைக் காப்பாற்ற விரும்பிய மிஸ்ரா, விசாரணை ரகசியமாக நடைபெறுவதால் இனிப் பத்திரிகைகள் இது தொடர்பான விஷயங்களை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டார், ஒரு கமிஷனுக்கு அப்படி உத்தரவிட அதிகாரமில்லை என்றபோதும். இறுதியாக அறிக்கையைச் சமர்ப் பித்த மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியோ அதன் தலைவர்களோ யாரும் கலவரத்தில் ஈடுபடவோ அதைத் தூண்டவோ இல்லை என்று ‘தீர்ப்பளித்தார்.’ பெயர் தெரியாத ஒரு சில சமூக விரோதிகளின் செயல்கள் இவை என்பது மிஸ்ரா அறிக்கையின் சுருக்கம். இதற்குப் பரிசாக அவர் பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
1999இல் சோனியா காந்தி சீக்கியர்களிடம் மன்னிப்பு தெரிவித்தார். ஆனால் இது அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே செய்யப்பட்டது என்பது ஜகதீஷ் டைட்லர், பகத், சஜ்ஜன் குமார் உட்பட யார்மீதும் எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுக்கவில்லை என்பதிலிருந்து மட்டுமல்ல இவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடத் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். 
1999இல் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததன் விளைவாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி. டி. நானாவதி தலைமையில் மீண்டும் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இது தனது அறிக்கையை 2005இல் அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது சமர்ப்பித்தது. பகத், ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார், தரம் தாஸ் சாஸ்திரி ஆகிய தில்லியின் முக்கியக் காங்கிரஸ் தலைவர்கள் உட்படப் பல உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்குப் படுகொலைகளை நடத்தியதில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியது. ஆனால் அதே நேரத்தில் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோருக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற நற்சான்றிதழையும் வழங்கியது. 1960களின் தொடக்கத்தில் யேல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஸ்டான்லி மில்கிராம் நடத்திய ஆய்வில் ‘அதிகாரத்திற்குப் பணிவது என்ற இயல்பின் காரணமாகவே மனித சமூகத்தில் பெருமளவில் வன்முறைகள் நடந்தேறுகின்றன’ என்பதைத் தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார். அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல் என்ற தன்மையின் காரணமாகவே ராணுவ அதிகாரிகளால் தங்களது வீரர்களைத் தாங்கள் கட்டளையிடும் எதையும் செய்யவைக்க முடிகிறது. ஆக, வன்முறையில் ஈடுபடுகிறவர்களைவிட அப்படி ஈடுபட அவர்களுக்கு உத்தரவிட்ட தலைவர்கள் மற்றும் அவர்களைத் தூண்டியவர்கள் முக்கியமாகத் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதை அறிந்திருந்தும் அதைத் தடுக்கும் அதிகாரத்தில் இருந்தும் (அது அவர்களது முதலும் முக்கியமான கடமையும்கூட) மௌனம் காத்த ராஜீவும் நரசிம்ம ராவும் கடும் தண்டனைக்கு உரியவர்கள். ஒருக்கால் தேசிய ஜனநாயகக் கூட்டணியே 2004 பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியமைத்திருந்தால் நானாவதி கமிஷனின் அறிக்கை இத்தகைய நற்சான்றிதழை அளித்திருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். இந்தத் தேசத்தில் அமைக்கப்பட்ட பெரும்பாலான கமிஷன்களின் லட்சணத்தைப் பார்த்தாலே இது தெரியும். ஒரு அயோக்கியதனத்தை மூடி மறைக்க அதை விசாரிக்க ஒரு கமிஷனை அமைப்பதைவிட நல்ல விஷயம் ஏதுமில்லை என்பது நமது ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருக்கிறது
 
இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் விளைவாகத்தான் பிரதமர் மன்மோகன் சிங் சீக்கிய சமூகத்திடம் மன்னிப்புக் கோரினார். எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல கூட்டணி ஆட்சியில் இருந்த திமுகவும் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்திருந்த சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளும் அப்போது வெளியுறவுத் துறைத் துணை அமைச்சராக இருந்த டைட்லர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரின. சோனியா நிலை இருதலைக்கொள்ளி எறும்பாக இருந்தது. ஏனெனில், டைட்லர்மீது எடுக்கும் நடவடிக்கை அவரை முதலில் அமைச்சராக்கிய ராஜீவின் தவறை ஒப்புக்கொள்வதுடன் வன்முறையில் ராஜீவிற்கு இருந்த ஒப்புதலையும் ஏற்பதாகிவிடும். இந்த நிலையில் நாடாளு மன்றத்தில் பேசிய மன்மோகன், “21 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லை, நீதியும் கிடைக்கவில்லை என்ற உணர்வே இருக்கிறது’’ என்று மழுப்பலாகப் பேசினார். டைட்லர் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்ட பின்னர், ‘‘எனது அரசாங்கத்தின் சார்பாக, இந்த நாட்டு மக்களின் சார்பாக, இப்படி ஒரு விஷயம் நடந்ததற்காக அவமானத்தில் தலை குனிகிறேன்’’ என்று மன்மோகன் மன்னிப்புக் கோரினார்
. 
ஆனாலும் 2009 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் டைட்லருக்கும் சஜ்ஜன் குமாருக்கும் காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்தது. ஜர்னைல் சிங் என்ற பத்திரிகையாளர், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில் டைட்லர் குறித்த வழக்குகள் அனைத்தும் மூடப்படும் என்று சிபிஐ அறிவித்தது குறித்து எழுப்பிய கேள்விக்குத் தனது சகாவிற்கு சிபிஐயின் நற்சான்றிதழ் கிடைத்திருப்பதில் தனக்கு மகிழ்ச்சி என்று கூறினார். இந்தப் பதிலால் கொதிப்படைந்த ஜர்னைல் சிங் நாட்டின் கவனத்தை ஈர்க்கச் சிதம்பரத்தை நோக்கி ஆனால் அவர்மீது படாதவாறு தனது ஷூவை எறிந்தார். இந்தச் செயலால் 1984 கலவரம் மீண்டும் மக்கள் பார்வைக்கு வந்தது. டைட்லர் மற்றும் சஜ்ஜனுக்குப் பதிலாக வேறு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். சஜ்ஜன் குமாருக்குப் பதிலாக அவரது சகோதரர் நிறுத்தப்பட்டார். அவர் பெரும் வெற்றியும் பெற்றார். டைட்லருக்கு அப்படி யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. இதுதான் காங்கிரஸ் வழங்கிய நீதி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...