பல ஆண்டுகளாக விவசாயிகள் எதிர்பார்த்திருந்த புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தை மத்திய அமைச்சரவை அனுமதித்துள்ளது. அடுத்து வரும் காரீப் பருவம் முதலாக அமலுக்கு வரவிருக்கும் பிரதமர் பயிர்க் காப்பீட்டு திட்டம், ஒரே நாடு, ஒரே காப்பீடு என்பதாக இருக்கும்.
தற்போது அமலில் உள்ள இருவகையான பயிர்க் காப்பீட்டு திட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு குறைபாடு சுட்டிக் காட்டப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீடு கிடைப்பதில்லை மற்றும் சந்தா தொகையில் அரசு வழங்கக்கூடிய பங்குக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படுகிறது என்பதும், சந்தா தொகை அதிகமாக இருக்கிறது என்பதும், கணக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என்பதும்தான் பொதுவாக விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் இந்த குறைபாடுகள் அனைத்தையும் களையெடுத்ததாக அமைந்துள்ளது.
குளிர்காலச் சாகுபடியின்போது (ரபி) உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு சந்தா தொகையில் 1.5% மட்டும் விவசாயி செலுத்தினால் போதும். அதேபோன்று, பருவமழைக்காலச் சாகுபடியின்போது (காரீப்) உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு 2% சந்தா தொகை செலுத்தினால் போதும். மற்றபடி, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பணப்பயிர்களுக்கும் தோட்டப்பயிர்களுக்கும் சந்தா தொகையில் 5% செலுத்த வேண்டும்.
விவசாயிகள் இந்த அளவுக்குத்தான் காப்பீடு செய்ய முடியும் என்றோ, சந்தா தொகை இவ்வளவுதான்
வழங்கப்படும் என்றோ எந்த நிபந்தனையும் இல்லாத நிலையில், சாகுபடி செய்யப்படும் மொத்தப் பரப்புக்கும் விவசாயி காப்பீடு செய்வார். குறைந்த அளவே சந்தா தொகை செலுத்துவார். ஆகவே, தற்போது இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் 19 கோடி ஹெக்டேர் பரப்பளவில், குறைந்தபட்சம் 50 முதல் 60% சாகுபடி பரப்பு இந்த காப்பீட்டு திட்டத்தில் வந்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இதுவரை, சாகுபடி செய்யப்படும் பரப்பில் 25% மட்டுமே காப்பீடு செய்யப்படும் நிலை இருந்து வந்தது.
சந்தா தொகையில் அதிகபட்ச அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தபோது, விவசாயி தனது பயிர் காப்பீட்டை முழுமையாக பெற முடியாத நிலை இருந்தது. காப்பீட்டின் முழுஅளவைக் காட்டிலும் குறைவான தொகையே விவசாயிக்குக் கிடைத்தது. இதற்குக் காரணம், வேளாண் காப்பீட்டுக்காக அரசு நிர்ணயித்த தொகை அளவு மீறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டதுதான். இப்போது அந்த நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சந்தாத் தொகை கூடுதல் செலவை மத்திய,மாநில அரசுகள் இரண்டும் சமவிகிதத்தில் ஏற்றுக்கொள்ளும்.
பலத்த காற்று, நிலச்சரிவினால் ஏற்படும் பாதிப்புகளும் முந்தைய காப்பீட்டு திட்டத்தில் அடங்கும். தற்போதைய புதிய திட்டத்தில் மழை வெள்ளமும் பயிர்க்காப்பீடு கோருவதற்கு உரியதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அறுவடைக்குப் பிந்தைய சேதங்களைப் பொருத்தவரை, முந்தைய திட்டத்தில் புயல் மழையால் ஏற்பட்ட சேதத்துக்கு மட்டுமே காப்பீடு கோர முடியும். அதுவும், கடலோரப் பகுதியாக இருத்தல் வேண்டும். ஆனால், தற்போது இந்தியா முழுவதிலும் புயல் மழை அல்லது பருவம் தப்பிய மழையால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கும் காப்பீடு கோர முடியும் என்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
புதிய காப்பீட்டு திட்டத்தில் சேத மதிப்பை அளவிடுவதற்கு நவீன தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயிர்ச் சேதத்தின் தீவிரத் தன்மையை அறிதல், மதிப்பிடுதல் ஆகிய பணிகளில் செயற்கைக்கோள் (தொலைஉணர் கருவிகள் மூலம்) பயன்படுத்தப்படும். சிறுவிமானங்கள் (டிரோன்), நவீன செல்லிடப்பேசி ஆகியன பயன்படுத்தப்படும். இதனால் பயிர்ச்சேதம் உடனடியாக மதிப்பிடப்படுவதோடு, காப்பீட்டுத் தொகையில் 25% உடனடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படவுள்ளது. பயிர்ச்சேதத்தை செல்லிடப்பேசியில் படம் எடுத்துப் பதிவேற்றம் செய்யலாம்.
அதிக ஹெக்டேரில் சாகுபடி செய்யும் பெரிய விவசாயிகளும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் காப்பீடு பெற இந்தப் புதிய திட்டம் வழிவகுக்கிறது என்று பொதுவாகக் குறை சொல்ல நேரும். மானியம் வழங்குவதில் வேண்டுமானால் பெரிய விவசாயி, சிறு விவசாயி,பயிர்ப் பரப்பளவு எல்லாவற்றையும் வைத்து வரம்புகளை நிர்ணயிக்கலாம். ஆனால், பயிர்ச்சேதம் என்கின்றபோது, யாருடைய நிலம் என்றாலும் சேதம் சேதம்தானே!
ஒரு மாநிலம் முழுமைக்கும் ஒரேயொரு காப்பீட்டு நிறுவனம்தான் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இழப்பீடு கோரல், பெறல் எல்லாமும் அதிக அலைச்சல் இல்லாமல் முடியும் என்பது உறுதி.
இப்போது இதில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டியவர்கள், விழிப்பாக இருக்க வேண்டியவர்கள் விவசாயிகள் மட்டுமே. மழை வெள்ளம், புயல் ஆகியவற்றால் பயிர்ச் சேதமடையும் போது யாருக்கு இழப்பீடு என்பதில் நிலத்தின் உரிமையாளரே சிட்டா புத்தகம் காட்டி நிவாரணம் பெறும் நிலைமையும், குத்தகைக்குப் பயிரிட்ட விவசாயிக்கு ஏதும் கிடைக்காததால் பல இடங்களில் தகராறுக்கும் துயர சம்பவங்களுக்கும் வித்திட்டிருக்கின்றன.
காப்பீடு செய்யும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகை நேரடியாக சேர்க்கப்படும் என்பதாலும்,காப்பீடு செய்யப்பட்ட பயிருக்கு வங்கிக் கடன் கிடைப்பதும் எளிது என்பதாலும், விவசாயிகள் அனைவரும், தங்கள் அனைத்து வகை பயிர்களையும் காப்பீடு திட்டத்தில் உட்படுத்துவதே பாதுகாப்பானது.
நன்றி தினமணி
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.