அறியாமையாலும், அரசியல் காரணங்களுக்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பதுபோல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட்வீரர் முத்தையா முரளிதரன். தமிழரான முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகசாதனை படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இதற்கான மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முரளிதரன் போலவே விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்கு பல பிரபலங்கள் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்புதெரிவித்தனர். படத்தில் இருந்து விலக வேண்டும் எனக்கூறினர். விஜய் சேதுபதிக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் அதிகளவில் கருத்துகள் பகிரப்பட்டுவந்தன.
இந்நிலையில் இதுதொடர்பாக முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கை: இதுநாள் வரை என் வாழ்க்கையில் பலசர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனதுவாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதுற்கான சிலவிளக்கங்களை கூற விரும்புகிறேன்.
என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு, முத்தையா முரளிதரன் நான்படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையன்பதாலும், இதற்கு பின்னால், எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர் எனது பயிற்சியாளர்கள் சகவீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும், அதற்கு காரணமானவர்களுக்கு ஒருஅங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.
இலங்கையில், தேயிலைதோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம், தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபோரில் முதலில் பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையக தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் 70களில் நடந்தகலவரம், வன்முறை, தொடர்குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறோம்.
என் 7 வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரில் நிகழும் இழப்புஅதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். 30 ஆண்டுகளுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை அதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கைபயணம் நடந்தது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம்தான் 800.
இது இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான். உதாரணமாக, நான் 2009ம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019 ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான் நாள் என திரித்து எழுதுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இரண்டுபக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே நான் 2009ம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்ற கருத்தைதெரிவித்தேன். ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை. ஆதரிக்கவும் மாட்டேன்.அடுத்து எனது பள்ளிகாலம் முதல் நான், தமிழ்வழியில் படித்து வளர்ந்தவன்தான்.
எனக்கு தமிழ்தெரியாது என்பது மற்றுமொரு தவறான செய்தி. தமிழ் மாணவர்கள் தாழ்வுமனப்பான்மை உடையவர் என முரளி கூறுகிறார் என சொல்கின்றனர். இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்வதால், எல்லோரிடமும் ஒரு தாழ்வுமனப்பான்மை இருக்கதான் செய்யும் அதுஇயற்கை அது என்னிடத்திலும் இருந்தது காரணம் எனது பெற்றோரும் கூட அப்படிப்பட்ட சிந்தனையில் இருந்தார்கள். அதையும் மீறி கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் பளளியின் கிரிக்கெட் அணியில் என்னை பங்கேற்க தூண்டியது. எனதுமுயற்சியால் அணியில் சேர்ந்தேன். எனது திறமையால் நான் ஒருதவிர்க்க இயலாதவனாக மாறினேன். எனவேதான் தாழ்வுமனப்பான்மையை தூக்கி எறிந்து உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள் என்ற எண்ணத்தில்தான் கூறினேன்.
என்னை பொறுத்தவரையில் சிங்களர்களாக இருந்தாலும் மலையக தமிழர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒருமலையக தமிழனாக நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழமக்களுக்கு செய்த உதவிகளே அதிகம். செய்யும் நன்மைகளை சொல்லிக் காட்டுவதை என்றைக்கும் நான் விரும்பவுதில்லை. ஆனால், இன்று அதைசொல்லியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.
ஐ.நாவின் தூதராக இருந்த போது, 2002ம் ஆண்டு விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளி குழந்கைளுக்கும் அந்த திட்டத்தை எடுத்து சென்றது முதல் பின் சுனாமிகாலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகளை அந்த மக்கள் அறிவார்கள்.
போர் முடிந்தபின் கடந்த 10 ஆண்டுகளாக எனது தொண்டு நிறுவனம் மூலம் ஈழமக்களுக்கு செய்யும் உதவிகள் தன் அதிகம். ஈழத்தமிழர்கள் வாம் பகுதிகளில் எனது தொண்டு நிறுவன கிளைகள் மூலம் குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் என பலவகைகளில் பல உதவிகள் செய்து வருகிறேன். மக்கள் நல்லிணக்கத்திற்காக ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டிகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடத்தி வருகிறோம். இதுபோல் ஏராளமான விஷயங்கள் உள்ளது. நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது . நான் இந்தியாவில் பிறந்து இருந்தால், நான் இந்தியஅணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனதுதவறா
இவை அனைத்தும் விடுத்து சிலர் அறியாமையாலும், சிலர் அரசியல் காரணங்களுக்ககவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பதுபோல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது. எவ்வளவு விளக்கமளித்தாலும், எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும், என்னைப்பற்றி ஒருபக்கம் தவறான செய்திகள் பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |