தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் தற்போதைய நிதி ஆதார நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
இதில் மின்சாரவாரியம் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட மாநில பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த கடன் சுமை 2 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து விட்டதாகவும் இதர தமிழகத்தின் பொதுக்கடன் 5.7 லட்சம் கோடியாகவும் அதிகரித்து விட்டதாக நிதி அமைச்சரின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது.
கவலை அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த நிதிநிலை அறிக்கை நம்மை எல்லாம் அதிர்ச்சியுடன் சிந்திக்க வைக்கிறது.
இதில் கவனிக்கவேண்டிய செய்திகள் பல உண்டு.
கடந்த பல ஆண்டுகளாகவே தமிழக அரசின் நிதி நிலை கவலை அளிக்கக் கூடிய விதத்தில் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சாமானிய மக்களும் சரளமாகப் பேசும்படி தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருந்ததை அனைவரும் அறிவர் ஆனாலும் ஏற்கனவே இருக்கும் பலருக்கும் வழங்கப்படும், பரவலாக்கப்பட்ட, பயனற்ற திட்டங்களையும், ஏற்கனவே இருக்கும் மானியங்களையும் சமாளிக்கவே நிதி ஆதாரம் போதாத போது, புதிது புதிதாக இலவச திட்டங்களையும் மானியங்களையும் செயல்படுத்துவதும் இந்த நிதி நிலையை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்குவதாகவே அமையும்.
ஏற்கனவே covid-19 கொரோனா நோய் தொற்றால் மக்களின் தொழில் வருமானம் பாதிக்கப்பட்டு அடிப்படைத் தேவைக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் அடித்தட்டு மக்கள் அதிக சிரமத்தை எதிர் கொண்டிருக்கும் போது, அரசின் செலவும் நிதி சுமையும் அதிகரித்து விட்டதாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியானது மக்களுக்கு கவலையளிப்பதாக அமைகிறது.
இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக அரசு மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை எப்படி அமையப் போகிறது. இழப்புகளை எல்லாம் மக்கள் மீது திணிக்க போகிறதா இந்த அரசு? அல்லது நிர்வாக குறைபாடுகளாலும், அல்லது திட்டமிடலில் உள்ள குறைபாடுகளாலும், மேலும் செலவினங்கள் அதிகரித்து உள்ள துறைகளையும் நிர்வாக முறைகேடுகளையும் சீர் செய்யப் போகிறதா இந்த அரசு?
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், கடந்த சில மாதங்களாக மின்சார வாரியத்தில் மின் கட்டணங்கள் பயனீட்டு அளவை விட கூடுதலாக வசூலிக்கப் படுவதாக ஒரு பரவலான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பேசப்படுவதை அறிவாரா?.
லட்சக்கணக்கான கோடிகளில் மின்சார வாரியம் கடனில் இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிடும்போது, அதை ஈடுகட்ட தான் இப்படி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, என்ற சந்தேகம், மக்களுக்கு எழுவதை தவிர்க்க முடியாது.
இனி தமிழக அரசால் விதிக்கப்படும் வரி விகிதங்கள் அரசின் கட்டணங்களும் அனைத்து துறைகளிலும் அதிகரிக்கக்கூடும் என்ற மக்களின் அச்சத்தை விலக்கும் வகையில் மாநில அரசு பொருளாதார சீர்திருத்தங்களை வளர்ச்சிப் பாதையை நோக்கி செய்ய வேண்டும்.
“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை “
என்று வள்ளுவர் வலியறிதல் என்ற அதிகாரத் தலைப்பில் குறளில், ஆக் மக்களின் வலியறிந்து, அரசின் வலிமை அறிந்து, பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடா விட்டால் அதனால் தீங்கு இல்லை என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கேற்ப, விழாக்கள், விருந்துகள், விளம்பரங்கள், வீண் ஆடம்பரங்கள் போன்ற செலவினங்களைச் சுருக்கி, இழப்புக்களை தடுத்து பயனற்ற மானியங்களை நிறுத்தி இலவசங்களை, கருணைத் தொகைகளை எளியவர்களுக்கும் ஏழைகளுக்கு மட்டும் வழங்கி, பொருள் போகும் வழி தடுத்து, வருவாய் ஆதாரங்களை எல்லாம் மீட்டெடுக்கும் வழிகளை செய்தால் தமிழக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.
உலக வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க நிதி அமைச்சரும் அவருக்கு உதவிகள் செய்ய பொருளாதார நிபுணர் குழுவும் இருப்பதால் மக்கள், எக்கச் சக்க எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் புதிய ஆட்சி, முந்தைய ஆட்சிகளையும், அரசுகளையும் குறை சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், இருட்டை இகழ்வதை விட வெளிச்சத்தை தூண்டுவதே நல்லது என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப மக்கள் கவலைகளையும், ஏக்கங்களையும் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, ஆக்கப் பணிகளை ஊக்கமுடன் செய்யவும், மக்கள் சுமைகளைக் குறைக்கவும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
2championships