சமூக நீதி காத்த வீரர் – உலகத் தலைவர் நரேந்திர மோடி

சமூக நீதி காத்த வீரர் – உலகத் தலைவர் நரேந்திர மோடி

இன்று (செப்டம்பர் 17) மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள். இந்நாளில் அவரைப் பற்றி எழுத வேண்டும் என்பதற்காக கடந்த இரு மாதங்களாக அவரைப் பற்றி படிக்கத் தொடங்கினேன். 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பிரதமராக கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பது சாதாரணமானது அல்ல.

திரு. நரேந்திர மோடி 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி குஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகர் என்ற ஊரில், திரு. தாமோதர தாஸ் மோடி, திருமதி ஹிராபென் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். ஆனால், அவரைப் பற்றி எழுத நான் 1947ஆம் ஆண்டுக்கு முன் செல்ல வேண்டியிருந்தது.

சுதந்திர இந்தியாவில் அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு. அடுத்து, அவரது மகள் திருமதி இந்திரா காந்தி அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்திருக்கிறார். நேரு தொடர்ச்சியாக 17 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் பதவியை வகித்துள்ளார். இந்திரா இடையில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. 1951, 1957, 1962 ஆகிய 3 மக்களவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றவர் நேரு. இந்திரா 1967, 1971 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களில் தொடர்ந்து வென்றிருக்கிறார்.

நேரு, இந்திராவுக்குப் பிறகு தொடர்ச்சியாக இரு மக்களவைத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையுடன் (2014, 2019) வென்று சாதனை படைத்திருப்பவர் மோடி மட்டுமே. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்றபோது பிரதமர் பதவி தங்கத் தட்டில் வைத்து நேருவுக்கு வழங்கப்பட்டது. நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி குறுகிய காலத்திலேயே மரணமடைய, பிரதமர் பதவி நேருவின் ஒரே வாரிசான இந்திரா காந்திக்கு எளிதாகவே வந்து சேர்ந்தது.

நேருவும், இந்திராவும் வலுவான அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள். செல்வம் கொழிக்கும் குடும்பத்தில் பிறந்தவர்கள். வெளிநாடுகளில் படித்தவர்கள். மேலைநாட்டு கலாச்சாரத்தில் தோய்ந்தவர்கள். தந்தையும், மகளும் பிரதமர் நாற்காலியில் அமர்த்தப்பட்டவர்கள். ஆனால், இவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் நரேந்திர மோடி.

மிகமிக எளிய, கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த மோடி, நேரு, இந்திராவின் இடத்தை எட்டியிருப்பது சாதாரணமானது அல்ல. சாதனை சரித்திரம். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில், மெகாசானா ரயில் நிலையத்தில் தேநீர் கடை வைத்திருந்தவரின் குடும்பத்தில் பிறந்தவர் மோடி. சிறு வயதிலேயே வறுமையை அனுபவித்தவர். தந்தைக்கு உதவியாக ரயில் நிலையத்தில் தேநீர் விற்கும் பணியை பல்லாண்டுகள் செய்தவர். பள்ளியில் படிக்கும்போது ஆர்எஸ்எஸ் அமைப்புடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு, ஒருநாள் அவரை பிரதமர் பதவியில் உட்கார வைக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

1965ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் நடைபெற்ற காலத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில்கள் மெகாசானா ரயில் நிலையம் வழியாக செல்வது வழக்கமாக இருந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் ஊட்டிய தேசபக்தியின் காரணமாக 15 வயதான நரேந்திர மோடி ராணுவ வீ்ரர்களுக்கு தேநீர் வழங்கி மகிழ்ந்தார். இந்த சம்பவம் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற லட்சியத்தை மோடியின் மனதில் விதைத்தது. ஆனால், குடும்ப வறுமை காரணமாக அவரால் ராணுவத்தில் சேர முடியவில்லை.

1967-ல் அதாவது தனது 17-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி நாடெங்கும் பயணிக்கத் தொடங்கினார். அப்போது துறவியாக என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இதற்காக கொல்கொத்தாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று அங்குள்ள துறவிகளை சந்தித்து உரையாடியுள்ளார். ஆனால், இறைவன் அவருக்கு வேறு பணியை விதித்திருந்ததால் துறவியாகும் கனவு தகர்ந்தது.

1972 அக்டோபர் 3-ம் தேதி ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்காக (முழுநேர ஊழியர்) பொதுவாழ்வுக்குள் அடியெடுத்து வைத்தார். தொடக்கத்தில் அவருக்கு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை சுத்தம் செய்தல், கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் தான் வழங்கப்பட்டது. எந்தப் பணியாக இருந்தாலும் அதனை முழு ஈடுபாட்டோடு செய்து முடிப்பது மோடியின் வழக்கம். அதனால் ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் பேரன்பைப் பெற்றார்.

1975 ஜூன் 3-ம் தேதி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தினார். ஒரே உத்தரவில் பலநூறு ஆண்டுகள் போராடி பெற்ற சுதந்திரம் பறிக்கப்பட்டது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எதுவும் இல்லை. இந்திராவின் அரசை எதிர்த்து ஒரு வார்த்தை உதிர்த்தாலும் சிறைதான். இந்த கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்த போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பெரும் பங்கு வகித்தது. அப்போது சீக்கியராக வேடம் தரித்து இந்திராவின் அடக்குமுறைை எதிர்த்து மோடி நடத்திய சாகசப் போராட்டங்கள் இன்றும் பேசப்படுகிறது.

நெருக்கடி நிலை விலக்கப்பட்ட பிறகு 1978 ஜூன் 3-ம் தேதி வதோதரா பகுதியின் விபாக் பிரச்சாரக்காக மோடி நியமிக்கப்பட்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் விபாக் பிரச்சாரக் என்பது மிக முக்கியமான பொறுப்பு. நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களைக் கொண்ட பகுதியை விபாக் என்று நிர்வாக வசதிக்காக ஆர்எஸ்எஸ் பிரித்து வைத்துள்ளது. தனது திறமையான செயல்பாடுகளால் இரண்டே ஆண்டுகளில் அதாவது 1980 டிசம்பர் 30ம் தேதி தெற்கு குஜராத் மற்றும் சூரத் பகுதியின் ஆர்எஸ்எஸ் அமைப்பாளராக உயர்ந்தார்.

ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்காக இருந்தபோது குஜராத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரானப் போராட்டங்கள், மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் மோடியின் பங்களிப்பும் இருந்தது. அதனால், 1987 பிப்ரவரி 3-ம் தேதி குஜராத் மாநில அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 37 வயதில் இந்தப் பொறுப்பை அடைவது என்பது அரிதினும் அரிதான ஒன்று.

மோடி அமைப்பு பொதுச்செயலாளரான பிறகு குஜராத்தில் பாஜகவின் வளர்ச்சி மேகமெடுத்தது. மோடியின் திட்டமிடல், சாதுர்யம், உழைப்பு, திறமையால் 1987-ல் ஆமதாபாத் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. குஜராத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பாஜகவுக்கு பெரும் உந்து சக்தியாக இருந்தது இந்த வெற்றி. குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக அதிக இடங்களைப் பெற மோடியின் திட்டமிடலும், உழைப்பும் உதவியது.

பாஜக தலைவராக இருந்த திரு. எல்.கே.அத்வானி, திரு. முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் நடத்திய யாத்திரைகள் அதுவும் 1990-ல் அத்வானி நடத்திய சோம்நாத் – அயோத்தி யாத்திரை, 1991-ல் முரளிமனோகர் ஜோஷி நடத்திய ஏக்தா யாத்திரை ஆகியவை இந்திய அரசியல் போக்கையே மாற்றியமைத்தவை. இந்த யாத்திரைகளின் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தியவர் மோடி.

மோடியின் திறமை அவரை தேசிய அரசியலுக்கு நகர்த்தியது. 1995 ஜூன் 5-ம் தேதி அவர் பாஜக தேசியச் செயலாளராக தலைநகர் டெல்லியில் அடியெடுத்து வைத்தார். தேசியச் செயலாளராக அவரதுப் பணிகள் கட்சியின் வளர்ச்சிக்கும், பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காரணமாக இருந்தது. அதனால் பாஜகவின் மிகமிக முக்கியமான பதவியான தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. 1998 ஜூன் 3-ம் தேதி அப்பொறுப்பை ஏற்றார்.

இந்திய அரசியலைப் புரட்டிப்போட்ட தொலைபேசி அழைப்பு:

2001 அக்டோபர் 1-ம் தேதி விமான விபத்தில் இறந்த நண்பர் ஒருவரின் இறுதிச் சடங்கில் மோடி கலந்து கொண்டிருந்தார். அப்போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் இருந்து மோடிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அன்று மாலை வாஜ்பாய் அவர்களை பிரதமர் இல்லத்தில் சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே, “நீங்கள் கொஞ்சம் குண்டாகி விட்டீர்கள். டெல்லியில் அதிக ஆண்டுகள் இருந்து விட்டதால் பஞ்சாபி உணவுகளை சாப்பிட்டு எடை அதிகமாகி விட்டது என்று நினைக்கிறேன். அதனால் உங்களை குஜராத்திற்கு அனுப்ப இருக்கிறோம்” என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

அப்போது குஜராத் அரசியல் குழப்பமான சூழல் இருந்ததால் அதனை சரி செய்யும் பொறுப்பை தனக்கு கூடுதலாக வழங்கப் போகிறார்கள் என்று மோடி நினைத்திருக்கிறார். ஆனால், “மிஸ்டர் மோடி. நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்க குஜராத் செல்லுங்கள்” என்று கட்டளையிட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத, குஜராத்தில் கட்சியை சீரமைக்கும் பணிக்கு மாதத்தில் 10 நாள்களை ஒதுக்குகிறேன். ஆனால், முதல்வர் பதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அதன்பிறகு மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அத்வானி, குஜராத்திற்கு சென்று முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என்று உறுதியுடன் கூறிவிட்டார். இப்படித்தான் 2001 அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வரானார் மோடி.

அதன்பிறகு குஜராத்தில் நடைபெற்ற அனைத்தும் உலகம் அறிந்தவை. ரயிலில் ராம பக்தர்கள் 58 பேர் எரித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குஜாரத்தில் நடைபெற்ற கலவரத்தை வைத்தக் கொண்டு, அவரை எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் வில்லனாக சித்தரித்தன. இந்திய அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் மோடி அளவுக்கு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட தலைவர் யாரும் இருக்க முடியாது.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குஜராத்தின் வளர்ச்சியில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். மோடி அளித்த நிலையான ஆட்சி, திறமையான, ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றால் பின்தங்கிய மாநிலமாக இருந்த குஜராத் வளர்ச்சியடைந்தது. ‘குஜராத் மாடல்’ வளர்ச்சி என்று உலகமே பேசத் தொடங்கியது. உலக முதலீட்டாளர்கள் குஜராத்தில் குவியத் தொடங்கினார். அவரை வில்லனாக சித்தரித்த அதே ஊடகங்கள் அவரை கதாநாயகன் என்று கொண்டாடத் தொடங்கின.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் அடைந்த தொடர் வெற்றி அவரை நாடு முழுவதும் கவனிக்க வைத்தது. நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் மோடியை தங்களுக்கான தலைவர் என்ற உணரத் தொடங்கினர். 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் சோனியா காந்தி வழிகாட்டுதலில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சி எப்படியாவது குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைத்து, முதல்வர் பதவியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டனர். அதற்காக பல்வேறு சதிச் செயல்கள் அரங்கேற்றப்பட்டன. கடவுளின் அருளாலும், மக்களின் ஆதரவாலும் அனைத்து தடைகளையும் தகர்தெறிந்தார்.

2014 மக்களவைத் தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக தனிப்பெருமை பெற்றது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை. இந்த வரலாற்றுச் சாதனையை நிறைவேற்றிக் காட்டியவர் மோடி. 2001-ல் குஜராத் முதல்வராகத்தான் அம்மாநில சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அதுபோல 2014-ல் பிரதமராகத்தான் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். 2014 தேர்தலைவிட 2019-ல் 21 இடங்கள் அதிகம் அதாவது 303 தொகுதிகளில் வென்று 2-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளார். மோடியின் மக்கள் செல்வாக்கிற்கும், ஆட்சித் திறனுக்கும் மக்கள் அளித்த சான்றிதழ் தான் இந்த வெற்றி.

கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு நிகழ்த்தியிருக்கும் சாதனை காலம் கடந்தும் நிற்கும். மக்களிடம் எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தும் நாட்டின் நலனுக்காக பணமதிப்பிழப்பு போன்ற துணிச்சலான நடவடிக்கையை எடுத்தார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றின் பலன்கள் இப்போது தெரியத் தொடங்கியிருக்கின்றன.

இந்திய அரசியலில் யாருக்கும் கிடைக்காத அனுபவம் கிடைக்கப் பெற்றவர் மோடி. 17வயதில் வீட்டை விட்டு வெளியேறியவர் துறவியாகும் எண்ணத்துடன் நடந்தும், ரயில்களில் பயணித்தும் நாடு முழுக்க சுற்றித் திரிந்தார். 22 வயதில் ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியரான அவர், 15 ஆண்டுகள் குஜராத்தில் கிராமம், கிராமமாக, வீடு, வீடாக மக்களைச் சந்தித்தும் அவர்களுடன் தங்கி, உணவருந்தி இயக்கம் வளர்க்கும் பணியில் இருந்தார்.

37-வது வயதில் குஜராத் மாநில பாஜக அமைப்புப் பொதுச்செயலாளராக அரசியலில் நுழைந்த அவர், 14 ஆண்டுகள் பல்வேறு மாநிலங்களிலும், தேசிய அளவிலும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். 2001 முதல் 2014 வரை 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக பணியாற்றினார். 15 ஆண்டுகள் மக்களோடு மக்களாக இருந்து ஆர்எஸ்எஸ் பணி, 14 ஆண்டுகள் கட்சிப் பணி, 13 ஆண்டுகள் முதல்வராக அரசு நிர்வாகப் பணி என்று கலவையான அனுபவம் கொண்ட தலைவர்கள் யாரும் இல்லை. அந்த அனுபவம்தான் மோடியை இன்று உலகத் தலைவராக உயர்த்தியிருக்கிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாதிகளை சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க அரசியல் சாசன சட்டத் திருத்தம், மத்திய அமைச்சரவையில் முதல் முறையாக 12 பட்டியலின, 8 பழங்குடியின, 28 பிற்படுத்தப்பட்ட, 11 பெண்களுக்கு வாய்ப்பு என்று சமூக நீதியை நிலைநாட்ட மோடி எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிடுக் கொண்டே செல்லலாம். உண்மையிலேயே ‘சமூக நீதி காத்த வீரர்’ என்றால் அது பிரதமர் மோடிதான். இந்திய மக்களின் பேரன்பைப் பெற்று, இன்று உலகத் தலைவராக உயர்ந்துள்ள பிரதமர் மோடி வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் வெல்வார். அடுத்து வரும் 2029 தேர்தலிலும் வெற்றி பெறுவார். மோடியை வீழ்த்தும் தலைவர் இந்திய அரசியலில் இன்னும் பிறக்கவில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...