குடியரசு தலைவரின் உரைக்கு பிரதமரின் பதிலுரை

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் நரேந்திர  மோடி இன்று மக்களவையில்  பதிலளித்தார்.

அவையில் உரையாற்றிய பிரதமர், குடியரசுத்தலைவரின் உரைக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, உரையின் மையப் புள்ளியாக இருந்த வளர்ச்சியடைந்த பாரதம் யோசனையை எடுத்துரைத்தார். குடியரசுத்தலைவர் தமது உரையில் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பியதாகவும், அவரது வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவரின் உரை குறித்து நேற்றும் இன்றும் பல உறுப்பினர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொணட நிலையில், அவையின் விதிகளை மதித்து குடியரசுத்தலைவர் உரை மீது தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  மோடி குறிப்பாக நன்றி தெரிவித்தார். அவர்களின் நடத்தை எந்தவொரு அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினருக்கும் குறைந்ததல்ல என்றும், அவர்களின் சிந்தனைகள் இந்த விவாதத்தின் தகுதியை மேலும் செழுமைப்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் மிகப்பெரிய தேர்தலில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி அரசைத்தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், தற்போதைய அரசைத்தொடர்ந்து மூன்றாவது முறையாகத்தேர்ந்தெடுத்ததற்காக இந்தியக் குடிமக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், இது ஜனநாயக உலகில் பெருமைக்குரிய தருணம் என்றும் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக அரசின் முயற்சிகள் வாக்காளர்களுக்குத்  தீர்மானிக்கும் காரணிகளாக இருந்தன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், ‘மனிதகுலத்திற்கான சேவை கடவுளுக்கு செய்யும் சேவை’ என்ற நம்பிக்கையுடன் மக்களுக்கு சேவை செய்வதில் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். நாடு சுதந்திரம் அடைந்த பின் இவ்வளவு குறுகிய காலத்தில் 25 கோடிக்கும் அதிகமான ஏழைகள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று அவர் குறிப்பிட்டார்.

2014-ம் ஆண்டுக்குப் பின் ஊழலை சகித்துக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை உறுதிபட தெரிவித்த பிரதமர், நாட்டின் வாக்காளர்கள்தான் தங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என்றார். இன்று இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இப்போது பெருமிதம் கொள்கிறார். தமது அரசின் கொள்கைகள், முடிவுகள் மற்றும் பணிகள் ஒவ்வொன்றும் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதாக மோடி கூறினார். உலக அரங்கில் இந்தியாவின் இருப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், நமது தேசத்தின் மீதான உலகின் கண்ணோட்டம் மாறியுள்ளது என்றும், இது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார். அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் பிரதிபலிக்கும் ‘தேசம்  முதலில்’ என்ற ஒற்றை நோக்கத்தைப் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த நம்பிக்கையுடன், நாடு முழுவதும் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்று பிரதமர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரத்துடனும், சர்வ பந்த் சம்பவ் அதாவது அனைத்து மதங்களும் சமம் என்ற கொள்கைகளுடனும் மக்களுக்கு சேவை செய்ய அரசு பாடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.

குறிப்பிட்ட பிரிவினரை திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் ஆட்சி மாதிரியை இந்தியா நீண்காலமாக பார்த்து வருவதாக மோடி குறிப்பிட்டார். இந்தியாவிலேயே முதல் முறையாக மதச்சார்பின்மையை நோக்கித் தமது அரசு திருப்தியுடனும்,மக்களின்  உறுதியுடனும்  பணியாற்றி வருவதாகப பிரதமர் குறிப்பிட்டார். தமக்கு திருப்தி என்பது அரசின் பல்வேறு கொள்கைகளில் செறிவை அடைவதும், இந்தியாவின் கடைசி நபருக்கும் சேவை அளிப்பதை உறுதி செய்வதும் அவர்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதும் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தம்மைப் பொறுத்தவரை இந்த செறிவூட்டல் தத்துவம், உண்மையான அர்த்தத்தில் சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை என்று பொருள்படும் என்றும், இது தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் த மோடி கூறினார்.

இந்திய மக்களின் முதிர்ச்சியையும், லட்சியத்தையும் இந்தத் தேர்தல் மீண்டும் நிரூபித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.”எங்களின் கொள்கைகள், நோக்கங்கள், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்” என்று பிரதமர் தெரிவித்தார். இந்தத்  தேர்தலில் வளர்ச்சியடைந்த பாரதம் தீர்மானத்தை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், நாடு முன்னறும்போது ஒவ்வொரு குடிமகனின் கனவுகளும் நனவாகும் என்றும்  எதிர்கால சந்ததியினரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தையும் அது அமைக்கிறது என்றும்  குறிப்பிட்டார். முந்தைய தலைமுறையினர் எப்போதும் ஏங்கிக் காத்திருந்த  வளர்ச்சியடைந்த இந்தியாவின் பலன்களை அறுவடை செய்ய இந்திய மக்கள் உரிமை உடையவர்கள் என்று பிரதமர் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழ்க்கை நிலை மற்றும் வாழ்க்கைத் தரம் பெருமளவில் மேம்படும் என்றும், மக்களிடையே பெருமித உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார். “இந்தியாவின் நகரங்கள் உலகின் மற்ற வளர்ச்சியடைந்த நகரங்களுடன் சமமாகப் பங்கேற்கும்” என்று அவர் உறுதியளித்தார்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பல்வகையான மற்றும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார். இது திறன்கள், வளங்கள் மற்றும் ஆற்றலின் அடிப்படையில் அனைவருக்கும் வளர்ச்சியை உறுதி செய்கிறது.

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற லட்சியத்தை நேர்மையாகவும், தீவிரமாகவும் நனவாக்க அரசு சாத்தியமான அனைதது முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு உறுதியளித்தார். “காலத்தின் ஒவ்வொரு கணமும், எங்கள்  உடலின் ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் எண்ணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2047-க்காக 24 x 7 ” என்று மோடி தெரிவித்தார்.

2014-க்கு முந்தைய காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அப்போது தேசம் முழுவதும் விரக்தியில் இருந்தது. மக்களிடையே நம்பிக்கை இழப்பு என்பது அந்தக் காலத்தில் தேசத்திற்கு மிகப் பெரும் இழப்பாக இருந்தது  என்றும் அது மாபெரும் ஏமாற்றத்தை உருவாக்கியது என்றும் பிரதமர் கூறினார்.  ஊழல்களாலும் கொள்கை முடக்கத்தாலும் சிதைந்த சகாப்தத்தை நினைவுகூர்ந்த அவர், இது சிதைந்த பொருளாதாரங்களின் பட்டியலுக்குள் நாட்டைத் தள்ளியது.  அப்போது சாமானிய மக்கள் அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டதாகக் கூறிய அவர், வீடு வாங்குவதாக இருந்தாலும், எரிவாயு இணைப்பாக இருந்தாலும், பொது விநியோக முறையின் மூலம் தானியங்கள் பெறுவதாக இருந்தாலும் லஞ்சம் என்பது பொது நடைமுறையாக  இருந்தது என்று கூறினார்.

2014-க்கு முன் தங்களின் ஏழ்மையான நிலைக்கு ஒவ்வொரு நாளும் தங்களின் விதியை நொந்து கொள்ளும் நிலைக்கு நாட்டின் குடிமக்கள் தள்ளப்பட்டதாக பிரதமர் கூறினார்.  மாற்றத்திற்கான தருணத்தில் அவர்கள், எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் எதுவும் சாத்தியமில்லை என்றிருந்தவர்களை  அனைத்தும் சாத்தியம் என்று நம்ப வைக்கும் நிலைக்கு கொண்டு வரும்  மாற்றத்திற்கானதாக  அரசின் முயற்சிகள் இருந்ததைப் பிரதமர் எடுத்துரைத்தார். அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டப் பிரதமர், வெற்றிகரமான 5 ஜி அறிமுகம், மிக அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி,  தேசத்தின் வங்கி முறையைப் பலப்படுத்த மாற்றம் மிகுந்த கொள்கைகள்,  பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாத கொள்கை, 370-வது பிரிவு நீக்கம் ஆகியவற்றை  சுட்டிக்காட்டினார்.  370-வது பிரிவு என்ற சுவர்கள் தகர்க்கப்பட்ட நிலையில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல்களில் சாதனை அளவாக வாக்காளர்கள் வருகை இருந்ததை  எடுத்துரைத்தார்.

140 கோடி மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பகத்தன்மை என்பது வளர்ச்சிக்கான உந்து சக்தியாக  மாறியிருக்கிறது என்று பிரதமர் கூறினார். இந்த நம்பிக்கை உறுதியாக எதையும் செய்து முடித்தல் என்பதன் அடையாளமாகும் என்று பிரதமர் கூறினார்.

நமது விடுதலைப் போராட்டக் காலத்தின் போது இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்று குடிமக்கள் எண்ணியதை நிறைவேற்ற இன்று அவர்கள் உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் இருக்கிறார்கள் என்று  மோடி குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியைப் பாராட்டிய பிரதமர், இந்தியா இன்று தாமே போட்டியிட வேண்டிய அவசியத்தைக் கொண்டுள்ளது என்றும் நமது பழைய சாதனைகளை முறியடித்து அடுத்த நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றும் கூறினார்.  தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சிப் பாதையில் இந்தியா  கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்ததாக மாறியுள்ளது என்றார்.   நாடு  அதிவேகத்தில் முன்னேற்றமடையும் என்று நம்பிக்கைத் தெரிவித்த அவர், அனைத்துத் துறைகளையும் நாங்கள் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வோம் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பத்தாவது பெரிய பொருளாதாரம் என்பதிலிருந்து  ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்பதாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்த திரு மோடி, உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா விரைவில் மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா தற்போது உலகின் பெருமளவில் செல்பேசி  தயாரிக்கும் மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்பதை கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோடி,  இதே போன்ற வளர்ச்சியை அரசின் 3-வது பதவிக் காலத்தில் குறைக்கடத்தித் துறை அடையும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

நாடு புதிய சாதனைகளையும், புதிய உச்சங்களையும் எட்டிய போதும் சாமானிய மக்களுக்குச் சேவை செய்வதிலயே அரசு தீவிரக்கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார். ஏற்கனவே அனைத்து வசதிகளையும் கொண்ட நான்கு கோடி வீடுகள்  கட்டப்பட்டு ஏழைகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், வரும் காலங்களில் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும் என்று மோடி கூறினார். மகளிர் சுயஉதவிக்குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் அரசின் திட்டம் பற்றியும் எடுத்துரைத்தார். 3-வது பதவிக் காலத்தில் வேகமாகவும் தீவிரமாகவும் பணியாற்றவும் மும்மடங்கு பயன்களை உருவாக்கவும் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் எடுத்துரைத்தார்.

60 ஆண்டுகளுக்குப் பின் ஒரு அரசு 3-வது முறையாக பதவிக் காலத்திற்கு  வந்திருப்பது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இது அரசின் முயற்சிகள் மற்றும் மக்களிடையே அரசு ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையைக் குறிக்கிறது என்றார்.   இத்தகைய  சாதனைகள் மலிவான அரசியலால் பெறப்பட்டது அல்ல என்றும் மக்களின் ஆசிகளால் பெறப்பட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார். நிலைத்தன்மையையும், தொடர்ச்சியையும் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத்  தேர்ல்களில்  மக்களின் தீர்ப்பைப் பாராட்டிய பிரதமர், மக்களவைக்கான தேர்தலில்  ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் ஆகியவற்றில் மகத்தான வெற்றி பற்றியும் குறிப்பிட்டார்.  நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் எங்கள் பக்கம் இருந்தார்கள் என்பதால் பல மாநிலங்களில் வாக்குப் பகிர்வு அதிகரித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மக்களின் தீர்ப்பை பொறுமையோடு எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மக்களின்  செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் லியுறுத்தினார்.  வளர்ச்சியின் பாதையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நிறைவேற்ற தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். வளர்ச்சியின் புதிய பாதையில், இந்தியா கூட்டாகப் பயணம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், குழப்பம்,  சட்டமீறல்கள், பிரிவினைக் கொள்கைகள் ஆகிய பாதையை தேர்வு செய்பவர்களுக்கு  எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டார்.  பொருந்தாத பொருளாதாரக் கொள்கைகள் பற்றியும் எச்சரித்த அவர், அந்தக் கொள்கைகள் நாட்டைப் பொருளாதாரக் குழப்பத்தில் தள்ளிவிடும் என்றும் நாட்டில் தவறான தகவல்களைப் பரப்பிவிடும் என்றும் கூறினார்.  இந்த மாண்புமிகு அவையின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் பராமரிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மூலம்  எதிர்க்கட்சிகளை  பிரதமர் வலியுறுத்தினார். சரி செய்யும் நடவடிக்கைகளை அவைத்தலைவர் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைத்தெரிவித்த அவர், அப்போது தான் இந்த அவையின் புனிதம் இடையூறு இல்லாமல் பாதுகாக்கப்படும் என்றார்.

அவசர காலம் பற்றி பேசிய பிரதமர், அப்போது தேசத்தை ஆட்சி செய்தவர்கள் நாட்டில் சர்வாதிகாரச் சூழலை உருவக்கினார்கள் என்றும் இதனால் மக்களுக்குப் பரவலாக கொடுமைகள் செய்யப்பட்டன என்றும் நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்றும் கூறினார்.   புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளித்தது போல் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்க முந்தைய அரசின் செயலின்மையை சுட்டிக்காட்டி அமைச்சரவையிலிருந்து பாபா சாஹேப் அம்பேத்கர் பதவி விலகிய காலத்தை அவர் நினைவுகூர்ந்தார்.  ஜெகஜீவன் ராம், சௌத்ரி சரண்சிங், சீதாராம் கேசரி போன்ற முக்கியத் தலைவர்கள் தாக்குதலுக்கு ஆளானதையும் அவர் எடுத்துரைத்தார்.

தத்துவ ஞானி சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ உரையை  மேற்கோள் காட்டிய பிரதமர், சகிப்புத் தன்மையையும் அனைவருக்கும் ஏற்புடையதையும் போதித்துள்ள ஒரு சமயத்தை சார்ந்திருப்பது குறித்து  அவர் பெருமிதம் கொண்டதாகக் கூறினார்.   பாரதத்தின் ஜனநாயகமும், பன்முகத்தன்மையும் இந்து சமூகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமை உணர்வால் மட்டுமே மலர்ந்தது என்று அவர் கூறினார்.  ஆனால் இன்று இந்து சமூகம் தவறாக  குற்றம் சாட்டப்படுகிறது என்றும் அதற்கு எதிராக சதி செய்யப்படுகிறது என்றும் கூறி அதற்காக கவலைத் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின்  வீரம் மற்றும் பலத்தைப் பாராட்டிய திரு மோடி, கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதை எடுத்துரைத்தார்.  எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வகையில், இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  தேசத்தின் பாதுகாப்பை மனதில் கொண்டு, எந்த நேரத்திலும் போருக்குத் தயாராக இருக்கும் வகையில்,  ராணுவத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். நீண்டகாலமாக நிலுவையில் இருநத முப்படைகளின் தலைமைத் தளபதி நியமனத்திற்கு பின் ராணுவத்தின் கட்டமைப்பு சரியான திசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

நமது ராணுவத்தை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முக்கிய சீர்திருத்தங்களைப் பிரமர் எடுத்துரைத்தார்.  ராணுவம் இளமையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நமது படைகளில் ஏராளமான இளைஞர்களை   அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார். தேசத்தின் பாதுகாப்பு முக்கியமான விஷயம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய  மோடி, போரிடத்தகுதியானதாக ராணுவத்தை மாற்றுவதற்கு உரிய நேரத்தில் அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்றார்.

ஆயுதங்களாக இருப்பினும், தொழில்நுட்பமாக இருப்பினும் போர் முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிட்ட திரு மோடி, தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் குறைக்கூறல்களுக்கு அப்பால் அதிகரித்து வரும் சவால்களை சமாளிக்க நமது படைகளை வலுப்படுத்துவது  அரசின் பெரும் பொறுப்பாக உள்ளது என்றார்.

நீண்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்பது தமது அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.  கொவிட் பெருந்தொற்று சிரமங்கள் இருந்த போதும், இந்தத் திட்டத்தை அமல்படுத்த தமது அரசு 1.2 லட்சம் கோடி ரூபாயை  வழங்கியது என்று அவர் கூறினார்.

அண்மையில், எழுப்பப்பட்ட வினாத்தாள் கசிவு பற்றி கவலை தெரிவித்த பிரதமர், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கு தமது அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று நாட்டின் இளைஞர்களுக்கு உறுதியளித்தார். நட்டிற்கும் இளைஞர்களுக்குமான பொறுப்புகளை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

நீட்  யுஜி தேர்வுத் தாள் கசிவு சம்பவம் தொடர்பாக  நாட்டின் பல பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய திரு மோடி, மத்திய அரசு ஏற்கனவே கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது என்றும் ஒட்டுமொத்தத் தேர்வு முறையை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி என்பது அரசின் மிகப்பெரிய தீர்மானம் என்று கூறிய பிரதமர், உலகில் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் தீர்மானம் பற்றி எடுத்துரைத்தார்.  அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான  குடிநீர் விநியோகம், அனைத்து ஏழைகளுக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகள் வழங்குதல், தற்சார்புடையவையாக ஆயுதப்படைகளை  வலுப்படுத்துதல், நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையை அதிகரித்தல், இந்தியாவைப் பசுமை  ஹைட்ரஜன் மையமாக மாற்றுதல், அடிப்படைக் கட்டமைப்பை நவீனமாக்குதல்,  புதிய வளர்ச்சியடைந்த இந்தியாவில்  வேலைவாய்ப்புகளையும், சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்குதல், திறன் மேம்பாட்டை அதிகரித்தல், இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைத்தல் ஆகியவை பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார்.  அண்மைக்கால ஆய்வு ஒன்றைக் குறிப்பிட்ட பிரதமர், கடந்த 18 ஆண்டுகளில் தனியார் தொழில்துறையில் சாதனை அளவாக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பது பற்றி கூறினார்.

டிஜிட்டல் இந்தியா இயக்கத்தைப் பாராட்டிய பிரதமர், உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் இந்தியா ஒளிரும் உதாரணமாக விளங்குகிறது என்றார்.  ஜி20 உச்சிமாநாடு பற்றிக் குறிப்பிட்ட அவர், உலகில் வளர்ச்சியடைந்த நாடுள் கூட, நமது டிஜிட்டல் இயக்கத்தால் வியப்படைந்துள்ளன என்றார்.

இந்தியாவின் முன்னேற்றத்துடன் போட்டி மற்றும் சவால்களின் அதிகரிப்பை உள்வாங்கிய  பிரதமர், இந்தியாவின் ஜனநாயகம், மக்கள்  மற்றும் பன்முகத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில்  நாட்டின் முன்னேற்றத்தை ஒரு சவாலாகப் பார்ப்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை செய்தார். “ஒவ்வொரு முயற்சியிலும் சந்தேகத்தை உருவாக்குவதன் மூலமும், அதன் அடித்தளத்தை பலவீனப்படுத்துவதன் மூலமும் இந்தியாவின் முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த ஒரு வலுவான முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. அத்தகைய முயற்சிகள் முற்றிலுமாகக் களையப்பட  வேண்டும்” என்ற உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை பிரதமர் மேற்கோள் காட்டினார். இந்தக் கருத்துக்கள் குறித்து ஒட்டுமொத்த அவையும் தீவிர விவாதம் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இதுபோன்ற சக்திகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தேச விரோத சதித்திட்டங்களை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று பிரதமர் மோடி கூறினார்

இந்தியாவின் முன்னேற்றத்தை உலகம் மிகுந்த உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று கூறிய மோடி  வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவும் அவையின் ஒவ்வொரு உறுப்பினரும் பங்களிப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.   தேசத்தின் நலனில் உறுப்பினர்கள் அக்கறைக் காட்ட முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.நாட்டு மக்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் நறைவேற்ற நாம் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.  தற்போதைய காலத்தில் ஆக்கப்பூர்வமான அரசியலின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.   நல்ல நிர்வாகம், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் நாம் போட்டியிடுவோம் என்று அவர் கூறினார்.

பிரதமர் தமது உரையின் போது உத்தரப்பிரதேசத்தின் ஹத்தரஸ் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.  இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் விருப்பம் தெரவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு உறுதி செய்துள்ளது என்றும்   மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது என்றும் கூறிய அவர், மத்திய அரசு, மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தின் முதல் முறை உறுப்பினர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த பிரதமர் மோடி, அவர்கள் நிறைய கற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கையும் தெரிவித்தார். குடியரசுத்தலைவரின் உரைக்கு தமது நன்றியை வெளிப்படுத்தயதோடு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தங்களின் எண்ணங்களைத் தெரிவித்து  பங்களிப்பு செய்த உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...