”நுாற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய ஆளுமையான மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் எண்ணங்கள், நம்மை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன,” என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143வது பிறந்த நாள் நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மத்திய கலாசாரத் துறையின் கீழ் செயல்படும் சாகித்ய அகாடமி சார்பில், பாரதியார் படைப்புகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது.
டில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ள ‘கால வரிசையில் பாரதி படைப்புகள்’ என்ற நுாலை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். தமிழகத்தின் 123 ஆண்டுகள் பழமையான, ‘அல்லயன்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த நுாலில், பாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கக் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.
பாரதியின் படைப்பு தொகுப்பை வெளியிட்டு மோடி பேசியதாவது: மாபெரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாளை நாடு கொண்டாடுகிறது. நான் அவரை பக்தியுடன் வணங்குகிறேன். அவரது மரபுக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன். மகாகவி சுப்ரமணிய பாரதியின் படைப்புகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
நாட்டின் தேவைகளை மனதில் வைத்து பாடுபட்ட சிறந்த சிந்தனையாளர் சுப்ரமணிய பாரதி. அவருடைய பார்வை மிகவும் விசாலமானது. அந்த காலக்கட்டத்தில் நாட்டிற்கு தேவையான அனைத்து திசைகளிலும் பாரதி பணியாற்றினார்.
அதேசமயம், எதிர்காலத்தில் நிகழ இருக்கும் விஷயங்களையும் முன்கூட்டியே கணித்து, அவற்றை தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். நம் நாட்டு குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் பாரதியின் தொலைநோக்கு பார்வை தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. சுப்ரமணிய பாரதி போன்ற ஆளுமை, நுாற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடியது.
அவருடைய சிந்தனை, புத்திசாலித்தனம், பல பரிமாண ஆளுமை ஆகியவை எல்லாரையும் ஆச்சரியப்படுத்துகின்றன. பாரதியின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியின் பொக்கிஷம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் கஜேந்திரசிங் ஷெகாவத், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |