‘பாட்காஸ்ட்’ எனப்படும் இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி வாயிலாக, பல உலக தலைவர்களின் பேட்டிகளை வெளியிட்டுள்ளவர், அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப நிபுணரான, லெக்ஸ் பிரிட்மேன்.
இவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் மூன்று மணி நேரம் கலந்துரையாடிய நிகழ்ச்சி, நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த ஜனவரியில், ‘ஜெரோதா’ நிறுவனத்தின் இணை நிறுவனரான, பாட்காஸ்ட் நிபுணர் நிகில் காமத்துக்கு, பிரதமர் மோடி இதுபோன்ற பேட்டி அளித்திருந்தார். அந்த வரிசையில், பிரதமரின் இரண்டாவது பாட்காஸ்ட் பேட்டி இது.
இந்த பேட்டியின் துவக்கத்தில், ”நான் கடந்த இரண்டு நாட்களாக, வெறும் தண்ணீர் மட்டும் குடித்து உபவாசம் இருந்தேன். அப்போது தான், உங்களுடைய ஆன்மிக நிலைக்கு கிட்டத்தட்ட நெருங்கி, ஒரே மன ஓட்டத்துடன் இருக்க முடியும் என்று நினைத்தேன்,” என, பிரிட்மேன் கூறினார்.
பேட்டியில் மோடி கூறியதாவது:
என்னுடைய பலம், என்னுடைய பெயரில் இல்லை. நாட்டின் 140 கோடி மக்களின் ஆதரவு மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரியம், கலாசாரமே என் பலம்.
உலக தலைவர்களுடன் நான் கைகுலுக்கும்போது, 140 கோடி இந்தியர்களும் கைகுலுக்குவதாகவே நான் கருதுகிறேன்.
இந்தியா, கவுதம புத்தர், மஹாத்மா காந்தியின் மண். நாங்கள் எப்போதும் சண்டை, சச்சரவுகளை விரும்பவில்லை. நல்லிணக்கத்தையே விரும்புகிறோம். அதனால்தான், உலகில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது, அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளோம்.
நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றபோது, பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தோம். அவர்கள் அமைதியின் பாதையை விரும்புவர் என்று நினைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். விமர்சனங்களே, ஜனநாயகத்தின் ஆன்மா. அது சிறந்த நிர்வாகம், நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. நான், 50 ஆண்டுகளாக உபவாசம் இருந்து வருகிறேன். இது மத ரீதியிலான ஒரு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், சுய ஒழுக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இரவு எவ்வளவு இருளாக இருந்தாலும், காலையில் நிச்சயம் வெளிச்சம் கிடைக்கும். இதுதான், இளைஞர்களுக்கு நான் கூற விரும்பும் அறிவுரை. பொறுமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை நான் மிகவும் நம்புகிறேன். நான் இங்கு ஏதோ ஒரு செயலுக்காக வந்துள்ளேன். அதற்காகவே, என்னை அந்த சக்தி அனுப்பி வைத்துள்ளது. நான் எப்போதும் தனிமையாக உணர்ந்ததில்லை. என்னை அனுப்பிய சக்தி என்னுடனேயே இருப்பதாகவே கருதுகிறேன். உங்களுக்குள் உள்ள மாணவரை எப்போதும் துாங்க வைத்து விடாதீர்கள்.
இந்தியா என்பது பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பே நாகரிகமான நாடாக இருந்து வந்துள்ளது. இந்தியா என்பது கலாசாரத்தின் அடையாளம். இங்கு 100க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேச்சு வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு 40 – 50 கி.மீ., துாரத்துக்கும் இடையே, கலாசாரம், பழக்க வழக்கம் இங்கு மாறுபட்டு இருக்கும். ஆனாலும், இந்த நாட்டை ஒரு இழை இணைக்கிறது.
இந்தியா உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக உள்ளது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், 98 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றனர். இதில், 64 கோடி பேர் ஓட்டளித்தனர். இது மிகப் பெரும் சாதனை.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான இந்த கலந்துரையாடல், என்னுடைய வாழ்க்கையில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்று. நான் பார்த்த வரையில், பிரதமர் மோடி வசீகரிக்கக் கூடிய மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். பன்முகத்தன்மை மற்றும் சிக்கல்கள் நிறைந்த ஒரு நாட்டை ஒருங்கிணைத்த தலைவராக அவர் உள்ளார். அதனால்தான், கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும், உலக நாடுகளால் அவர் மதிக்கப்படுகிறார்.
லெக்ஸ் பிரிட்மேன்
பிரபல பாட்காஸ்டர்
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |