மதசார்பின்மைவாதிகளின் தத்துப்பிள்ளை

சையத் ஷராபுதின் தன்னுடைய மனைவியுடன் வெறுக்கத்தக்க ஒரு போலி என்கௌண்டரில் குஜராத்தில் கொல்லப்பட்டார். பல காலமாக இவர் இந்திய மதசார்பின்மைவாதிகளின்  தத்துப் பிள்ளையாக இருந்து வருகிறார். 2007 குஜராத் சட்டசபை தேர்தல்களில் சோனியாகாந்திதான்  முதலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஷராபுதீனை கொண்டு வந்தார். நரேந்திர மோடியை “மரண வியாபாரி” என சோனியா

வர்ணித்தார். ஆனால் இதனால் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு வோட்டுகள் கிடைக்கவில்லை. ஆனால் ஷராபுதீன் ஒரு முஸ்லிம் என்பதும் அவரை மோடியின் போலீஸ் கொன்றதும், தேசிய அளவில் அவரை மதசார்பின்மையின் தத்துப்பிள்ளையாக சித்தரிக்க ஏதுவாக அமைந்தன. இது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே.

தேசிய மனித உரிமைகள் கமிஷன் 2006 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 440 போலி என்கௌண்டர்களில் கொல்லப்பட்டவர்களைக்  குறித்து  கண்ணில் விளக் கெண்ணை  இட்டுக் கொண்டு ஆராய்ந்தது. இதில் குஜராத்தில் வெறும் 4 போலி என்கௌண்டர் கொலைகள் மட்டுமே நடந்துள்ளன. உத்திரபிரதேசத்தில் 231, ஆந்திராவில் 22, மகாராஷ்ட்ராவில் 33, அஸ்ஸாமில் 12 என போலி என்கௌண்டர் கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், ஷஹபுதீனின் கொலைக்கு “மதசார்பின்மை லேபிள்” ஒட்டப்பட்டு இருந்ததால், குஜராத்தின் 4 போலி என்கௌண்டர் கொலைகள் மட்டுமே முன்னணிக்கு கொண்டு வரப்பட்டன. சி.பி.ஐ.தான் ஷராபுதீனின் வழக்கை விசாரித்துக் கொண்டு இருந்தது. அதுவும் தன் பங்கிற்கு இந்த மதசார்பின்மை லேபில் “நன்கு பசை போட்ட மாதிரி ஒட்டிக் கொள்வதற்கு ஆவன செய்தது. குஜராத் பி.ஜே.பி. அரசாங்கம் (வகுப்புவாத அரசாங்கம் என்று பொருள் கொள்ள வேண்டும்), ஆந்திரா மற்றும் ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசாங்கங்கள் (மதசார்பின்மை அரசாங்கங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்) ஆகிய மூன்று அரசுகளும் ஷராபுதீனின் கொலையில் “பங்குதாரர்களாக ” இணைந்து செயல்பட்டுள்ளனர். ஆனால் இந்த முழு உண்மையை சி.பி.ஐ. மறைத்துவிட்டு குஜராத் அரசாங்கம் மட்டுமே ஷராபுதீனின் கொலையை முன் நின்று நடத்தியதாக சித்தரித்தது. மத்திய புலனாய்வு அமைப்பின் வழிகாட்டுதலும், அனுமதியும் இல்லாமல் இந்த மூன்று அரசுகளும் இவ்வாறு செயல்பட்டு இருக்க முடியுமா? ஆனால் ஷராபுத்தீனை ஏன் “இலக்காக ” தேர்ந்தெடுத்தார்கள்?

மும்பையில் 1993 ஆம் ஆண்டில் தாவூத் இப்ராகிம் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்த ஆயுதங்களை அனுப்பி வைத்தான். இதில் 300கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அப்துல்லத்திப் குஜராத்தில் இருந்த ஒரு ரவுடி. இவன் தாவூத் இப்ராகிம் அனுப்பிய ஆயுதங்களில் 24 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 27 கிறேனேடுகள், 5250 ட்ரிட்ஜுகள், 81 மகசின்கள் என ஒரு ஆயுதக் கிடங்கையே பதுக்கிவைத்து இருந்தான். எங்கு தெரியுமா? மத்தியப் பிரதேசத்தில் ஜார்நிய கிராமத்தில் இருக்கும் ஷஹபுதீன் வீட்டின் கொல்லையில். ஷஹபுதீன்  பயங்கரவாதத்தில் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்ததற்கு இதை விட சாட்சி தேவையா? இது மட்டும் அல்ல. ஷராபுதின் மீது 21  கடுமையான கிரிமினல் வழக்குகளும் பதிவாகி இருந்தன. இந்த உண்மைகள் அனைத்தும் நிருபிக்கப்பட்டவை.

இந்த சூழ்நிலையில் மோடியை குறிவைக்க  ஷராபுத்தீனை விட இன்னும் சிறந்த ஒரு மதசார்பின்மை வாதியை தேடி கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சஞ்சய் பட் என்னும் குஜராத் போலீஸ் அதிகாரிக்கு அந்த மதசார்பற்ற தொப்பி  பொருந்தியது. மோடியின் மீது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் மதசார்பற்ற வாதிகளின் குறிக்கோள். எனவே 2011ஆம் ஆண்டில் சஞ்சய் பட் மூலமாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அது என்ன தெரியுமா? கோத்ரா படுகொலைக்குப் பிறகு “தங்களுடைய கோபத்தை வெளிப் படுத்த ஹிந்துக்களுக்கு அனுமதி அளிக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்” என்று 9 வருடங்களுக்கு முன்னால் மோடி போலீஸ் அதிகாரிகளிடம் சொன்னாராம். இதுதான் சஞ்சய் பட் சொன்ன குற்றச்சாட்டு.

உச்ச நீதி மன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக்  குழுவை அமைத்து சஞ்சய் பட்டின் குற்றச்சாட்டு உண்மையா என்று ஆராய கேட்டுக் கொண்டது. சஞ்சய் பட்டின் குற்றச்சாட்டு கடைந்து எடுத்த பொய் என்று இந்த புலனாய்வுக் குழு தெரிந்து கொண்டது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் ர.கே.ராகவன் என்பவர். அவர் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி. அப்பழுக்கு அற்ற நேர்மையாளர். தன்னுடைய குற்றச்சாட்டு பொய் என்று சிறப்பு புலனாய்வுக் குழு கூறியதால் அதன் தலைவர் மோடியை காப்பாற்ற முயற்சிப்பதாக சஞ்சய் பட் குற்றம் சாட்டினார். மேலும், அப்போது குஜராத் அரசில் பணி புரிந்து கொண்டு இருந்த சஞ்சய் பட் முதல்வர் நரேந்திர மோடியை “கிரிமினல்” என்று வர்ணித்தார். மத சார்பற்ற வாதிகள் ஏங்கிக் கொண்டு இருந்த ஆள் இந்த சஞ்சய் பட் தான் என்பது சொல்லியா தெரிய வேண்டும்? அவர்களது எதிர்பார்ப்புக்கு சஞ்சய் பட் எவ்வளவு சரியாக பொருந்துகிறார்?

சஞ்சய் பட்  என்னும் மதசார்பற்ற அவதாரத்தின் கடந்த கால வாழ்க்கையை கொஞ்சம் பார்ப்போம். 1996 ஆம் ஆண்டில் இந்த சஞ்சய் பட் என்ன செய்தார் தெரியுமா 1988ஆம்  ஆண்டில்தான் இந்த பட் இந்தியன் போலீஸ் சர்வீசில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள பலன்பூர் நகரில் ஒரு ஹோட்டல் அறையில் 1 கிலோ போதை மருந்துகளை பதுக்கி வைக்க சஞ்சய் பட் ஏற்பாடு செய்தார். ராஜஸ்தான்  மாநிலத்தை சேர்ந்த சுமர் சிங் ராஜ் ப்ரோஹித் என்பவர் அந்த ஹோட்டல் அறையில் தங்கி இருந்தது போல் சஞ்சய் பட் போலி ஆவணங்களை தயார் செய்தார். சுமார் சிங் ஒரு வழக்கறிஞர். சுமர் சிங்கை போதை மருந்து கடத்தலில் மாட்டிவிடவே சஞ்சய் பட் இவ்வாறு அனைத்து மோசடி களையும் செய்தார். எதற்காக  பட்  இவ்வாறு செய்தார்? இதன் பிறகு நடந்த க்ளைமாக்ஸ் படித்தால் உங்களுக்குப் புரியும்.

சஞ்சய் பட்,  சுமன்சிங்கை நடு இரவில் கடத்தி வர ஏற்பாடு செய்தார். அவரை அந்த மேலே சொன்ன ஹோட்டல் அறையில் தள்ளினார். அங்கு ஏற்கனவே போதை மருந்துகள் இருக்குமாறு செய்யப் பட்டதை  ஏற்கனவே சொல்லி உள்ளோம். இதன் மூலம் சுமன் சிங்கை குற்றவாளி ஆக்கி அவரை கைது செய்வதுதான் சஞ்சய் பட் போட்ட திட்டம். எதற்காக இதெல்லாம்? ஆர்.ஆர்.ஜெயின் என்பவர் அப்போது குஜராத் உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தார். அவருடைய உறவினர் ஒருவரின் சொத்தை சுமன் சிங் குத்தகைக்கு எடுத்து இருந்தார். உடனே சுமன் சிங் அந்த சொத்தை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக சஞ்சய் பட்  இவ்வளவு மோசடி வேலைகளிலும்  ஈடுபட்டார்.

சஞ்சய் பட்டின் அசகாய சூரத்தனமான மோசடி வேலைகளைக் கண்டு சுமன் சிங் நடுநடுங்கிப் போனார். சஞ்சய் பட் சொன்னபடி அவர் செய்தார். உடனே சஞ்சய் பட் சுமன் சிங்கை விடுதலை செய்தார். ஆளை அடையாளம் காட்டுவதற்காக நடத்தப்பட்ட அணி வகுப்பில் ஒருவரும் சுமன் சிங்கை அடையாளம் காட்டவில்லை என்று நீதிமன்றத்தில் சஞ்சய் பட் பொய் சொல்லி சுமன் சிங் விடுதலை ஆக வழி செய்தார். சுமன் சிங் ராஜஸ்தானுக்கு சென்று சஞ்சய் பட்  மற்றும் ஆர்.ஆர்.ஜெயின் மீது கிரிமினல் வழக்குகளைத்  தொடுத்தார். உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கை ராஜஸ்தானுக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று சஞ்சய்பட்டும், ஜெயினும் மனு செய்தனர். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு குஜராத் அரசாங்கம் ராஜஸ்தான் உயர் நீதி மன்றத்தில் மனு செய்தது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் பிறகு அந்த  வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு சென்றது. இந்த கிரிமினல் வழக்கை உச்ச நீதி மன்றம் இப்போது நிறுத்தி வைத்துள்ளது. இதன் பிறகு குஜராத்  விஜிலன்ஸ் கமிஷன்  ஜூலை 2002 மற்றும் அக்டோபர் 2006 இல் சஞ்சய் பட் மீது உள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமானவை என்பதால் அவரை பதவியில் இருந்து தற்காலிக வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்று எழுதியது, இருந்தும் குஜராத் அரசாங்கம் பட்டை பதவி நீக்கம் செய்யவில்லை. ஆமாம், பதவி நீக்கம் செய்யவில்லை. இதோடு கதை முடிந்துவிடவில்லை. இன்னும் தொடர்கிறது ஜூன் 1996லேயே ராஜஸ்தானில் உள்ள பாலி நகர வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் தேசிய மனித உரிமைகள் கமிஷனுக்கு சஞ்சய்பட்டின் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து புகார் அனுப்பினார். 14 வருடங்கள் கழித்து செப்டம்பர் 2010இல் இந்த புகாரில் உண்மை இருக்கிறது என்று தேசிய மனித உரிமைகள் கமிஷன்  கண்டுபிடித்தது. சுமன் சிங் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுக்கப்பட வேண்டும் என்று அந்த கமிஷன்  தீர்ப்பு அளித்தது. குஜராத் அரசாங்கம் அந்த தொகையை கொடுத்துவிட்டு சஞ்சய்பட்டை அந்த தொகையை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டது. ஆனால் சஞ்சய் பட்டின் திருவிளையாடல்கள் இதோடு நின்று விடவில்லை.

இந்திய போலீஸ் சர்வீஸில் சேர்ந்த இரண்டே வருடங்களில் சஞ்சய்பட் தன் சுயரூபத்தைக்  காண்பிக்க ஆரம்பித்தார். 1990இல் பாரத் பந்த் நடந்தது. அப்போது பட் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமல் செய்தார். தடா சட்டத்தை அளவுக்கு அதிகமாக பிரயோகம் செய்தார். அளவுக்கு அதிகமான பலத்தை பிரயோகம் செய்தார். இதனால் இரண்டு பேருடைய சிறு நீரகங்கள் நொறுங்கிப் போயின. அதில் ஒருவர் பிறகு இறந்து போனார். இதன் காரணமாக சஞ்சய்பட்டின் மேல் கொலை வழக்கு குற்றச்சாட்டு எழுந்தது. இது இன்னும் நிலுவையில் உள்ளது. அது மட்டுமல்ல 22 போலீஸ்காரர்களை தன்னுடைய வீட்டில் தன்னுடைய சொந்த பணிகளை செய்ய சஞ்சய் பட் அமர்த்தி இருந்தார். 1997 இல் ராஜ்கோட்டில் உள்ள சஞ்சய் பட்டின் வீட்டில் இந்த போலீஸ்காரர்கள் பட்டின் சொந்த வேலைகளை கவனித்து வந்தனர்.

இவ்வளவு பேர் தனக்கு பணி செய்வது போதாது என்று சஞ்சய் பட் 1999 இல் கருதினார். எனவே பனஸ்கந்தாவில் இருந்த தனது வீட்டில் தனது சொந்த வேலைகளை கவனிக்க 36  ஆர்டர்லிகளை சஞ்சய்பட் நியமித்தார். இதில் 11 போலீஸ்காரர்கள் அவரது வீட்டுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை கவனித்துக் கொண்டனர். 3 பேர் பாதுகாப்பை கவனித்துக் கொண்டனர். 4 பேர் காவல் வேலைகளையும் 12 பேர் தாக்குதல் தொடுக்கவும் 3 பேர் தோட்ட வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். இன்னும் இருக்கிறது. நிலப்பறிப்பு வழக்கு ஒன்றில் ஒருவருக்கு சாதகமாக நடந்து கொள்ள இன்னொருவரை பட் மது அருந்தும் குற்றங்களில் சிக்க வைத்தார். இன்னும் கூட இருக்கிறது. மே 1996 ஆம் ஆண்டில் போலீஸ்காரர்களை தேர்ந்து எடுப்பதில் தன்னுடைய பதவியைப்  பயன்படுத்தி  முறைகேடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சஞ்சய் பட் மீது விசாரணைகள் இன்றும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு கொடுக்கப் பட்ட அதிகாரத்தைக் காட்டிலும் வரம்பு மீறி அதிக ஆயுத லைசென்சுகளை வழங்கியதாக பட் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. போலீஸ் ஆயுதங்களை கணக்கில் காட்டாமல் எடுத்து சென்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் சஞ்சய் பட் என்னும் மதசார்பற்ற  தேவதையின் இந்த எல்லா கிரிமினல் விஷயங்களும் ரகசியமாக இன்னும் மறைத்து வைக்கப்பட்டே உள்ளன. ஏன்?

2011இல் குஜராத் கலவரங்கள் நடந்து 9 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி வீட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் தான் இருந்ததாகவும் அதில் ஹிந்துக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று மோடி தங்களுக்கு உத்தரவு இட்டதாகவும் சஞ்சய் பட் சொன்னார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் அனைவரும் ஏகமனதாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் சஞ்சய் பட் அந்த கூட்டத்தில் இருக்கவில்லை என்று சொன்னார்கள்.

இருந்தும் சஞ்சய் பட் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை  பிடித்து தான் அந்த கூட்டத்தில் இருந்ததாக  ஒரு அபிடவிட் தயார் செய்தார். அதில் அவரின் கையெழுத்தை வாங்கினர். ஆனால் அந்த நாளில் அந்த கான்ஸ்டபில் தன்னுடைய குடும்பத்துடன் மும்பையில் இருந்தார் என்ற செய்தி இப்போது வெளியாகி உள்ளது. இந்த “இன்றியமையாத உண்மையை” இவ்வளவு காலம் கழித்து சொல்வது ஏன் என்று எவருமே அந்த கான்ஸ்டபிளை  கேள்வி கேட்கவில்லை.

நரேந்திர மோடியின் குரல் வளையை பிடித்து நொறுக்க வேலை செய்து கொண்டு இருக்கும் ஏராளமான தன்னார்வு தொண்டு குழுக்களுடனும், காங்கிரஸ் தலைவர்களுடனும் சஞ்சய் பட் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்பது ஏன் என்றும் எவரும் கேள்வி எழுப்பவில்லை. “மதசார்பற்ற தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடனும்” காங்கிரஸ் தலைவர்களுடனும் பட் பல மின் அஞ்சல்கள் மற்றும் தொலைபேசி தொடர்புகளை வைத்துள்ளார். இதையெல்லாம் இப்போது பரிசீலனை செய்துள்ளனர். அதன் பிறகு உச்ச நீதி மன்றம் நியமித்த சிறப்பு புலன் ஆய்வுக் குழு “பித்தலாட்ட எண்ணம் கொண்ட குழுக்கள்” அதாவது சஞ்சய் பட் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் காங்கிரஸ்காரர்கள் ஆகியோர் உச்ச நீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு ஆகிய அமைப்புகளை தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ளும்  நோக்கத்துடன் உபயோகித்துக் கொள்ள முயன்று வருவதாக சொன்னது.

இறுதியில் உச்ச நீதி மன்றம் தன்னுடைய புலன் ஆய்வு அறிக்கையில் இவ்வாறு முடிவுக்கு வந்துள்ளது, அந்த அறிக்கை சொல்கிறது ; “சஞ்சய் பட் பித்தலாட்ட குழுக்களுடன்  இணைந்து கொண்டு, நரேந்திர மோடி மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்து விடப்படவேண்டும் என்னும் எண்ணத்தோடு செயல்பட்டுள்ளார். இந்த காரணத்துக்காகத் தானே சஞ்சய் பட் இன்று மத சார்பின்மை வாதிகளின் வளர்ப்புப் பிள்ளையாக திகழ்கிறார்.

ஆங்கிலத்தில். எஸ்.குருமூர்திஜி

தமிழாக்கம்       ல.ரோஹிணி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...