தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் என்ற சிறிய கிராமத்தில் சின்னப்ப நாடார் – பார்வதி அம்மாள் தம்பதிகளுக்கு குழந்தைப்பேரு இல்லாத நிலையில் குமாரசாமி என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். குமாரசாமி சொந்தத் தொழிலாக தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். குமாரசாமியின் வளர்ப்பு தாயான பார்வதியம்மாள், சிவகாமியம்மாள் என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்து வைத்தார்.
குமாரசாமி – சிவகாமியம்மாள் இல்லறத்தின் பயனாக 1903-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி காமராசர் பிறந்தார். காமராசரின் ஆறாம் வயதில் தந்தை நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். காமராசரும், அவரது தங்கையும் தாயின் பராமரிப்பில் வளர்ந்தனர்.
தலைவனில்லாத குடும்பத்தை காமராஜரின் மாமனான கருப்பையா நாடார் பராமரித்து வந்தார். அவர் காமராசரை நன்கு படிக்க வைக்க நினைத்தார். ஆனால் அவருக்கு கல்வியில் நாட்டமில்லை, கவனம் முழுவதும் நாட்டின் விடுதலையைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தது. காமராசருக்கு பேச்சாற்றல் இல்லையென்றாலும் தம் கருத்தையும், எண்ணங்களையும் பிறர்க்கு புரியும்படி எடுத்துக் கூறுவார். அவருக்கு வியாபாரத்திலும் நாட்டம் செல்லவில்லை.
மதுரையில் 1923-ம் ஆண்டு கள்ளுக்கடை மறியலை காமராசர் அவர்கள் முன்னின்று நடத்தினார். மறியல் செய்ய வந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கையில் போலீசார் அங்கிருந்தவர்களை கைது செய்து அலுவலகத்தையும் இழுத்து பூட்டினர். கைது செய்தவர்கள் அனைவரும் சிறையில் வாட தாம் மட்டும் வெளியில் இருப்பதை எண்ணி அவர் மிகவும் மனம் வருந்தினார்.
காமராசர் கலந்து கொள்ளாத போராட்டமே இல்லை எனலாம். 1927-ம் ஆண்டு அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி இந்திய மக்கள் யாரும் 6 அங்குல நீளத்திற்கு கத்தி வைத்திருக்கக் கூடாது என சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. போலீஸ் அடக்குமுறைக்கு பயந்து பலர் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தயங்கினர். அச்சமயத்தில் காமராசரே வாளை ஏந்தி முன்னோடியாகச் சென்றார்.
1930ம் ஆண்டு அரசின் அனுமதியில்லாமல் உப்புக் காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. இதனை காந்திஜி அவர்கள் தொடங்கி வைத்தார். அத்துடன் உப்புவரியை ஒழிக்கும்படி அறைகூவல் விடுத்தனர். இதனால் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். காமராசரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தீவிரமாகப்போராடினார்.
ஆங்கிலேய அரசு காமராசரை கைது செய்து இரண்டாண்டு காலம் தண்டனை விதித்து அலிப்பூர் சிறையிலடைத்தது. காமராசார் பல போராட்டங்களில் கலந்து கொண்ட போதிலும் சிறை சென்றது கிடையாது. இதுவே அவருடைய முதல் சிறைவாசமாகும். பிறகு 1931-ம் ஆண்டு இர்வின் ஒப்பந்தத்தின்படி விடுதலையானார்.
1954-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இடைக்கால மந்திரிசபையை அமைத்து மூன்றரை ஆண்டுகள் முதல்வராக ஆட்சி அமைத்தார். 1957-ல் நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் முதல்வராக வெற்றிபெற்றார். 1962-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையும் முதல்வரானார்.
ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் 1954-ம் ஆண்டில் அவரது ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. எனவே காங்கிரஸ் கட்சி ஒன்று கூடி வேறொருவரை முதல்வராக தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டது. இதனிடையே இராஜாஜி தன் ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டுமேயன்றி வேறொருவர் பெயரையும் முன்மொழியக் கூடாது என்று கூறப்பட்டது.
அதனால் அவர் வேறு சிலர் பெயரை முன்மொழியும் நோக்கத்தை தன் மனதுக்குள் வைத்துக் கொண்டார். அதன்படி இராஜாஜி தன் ராஜினாமாவை சமர்ப்பித்ததுடன் சி.சுப்ரமணியத்தின் பெயரை முன்மொழிய, எம்.பக்தவத்சலம் அதை வழி மொழிந்தார். ஆனால் இதை காமராசர் எதிர்த்தார். இறுதியில் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராசருக்கு 91 பேரும், சி. சுப்ரமணியத்திற்கு 43 பேரும் ஆதரவு அளித்தனர்.
1954-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதியன்று எட்டுப் பேர்களைக் கொண்ட அமைச்சர்களுடன் காமராசர் தமிழகதில் முதல்வராகப் பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் தமது நேர் எதிரான இராஜாஜியின் சகாக்களான சி. சுப்ரமணியம், எம்.பக்தவத்சலம், ஜோதி வெங்கடாசலம் போன்றோர்களையும் அமைச்சராக்கினார். மேலும் எம்.ஏ. மாணிக்க வேலு, எஸ்.எஸ். இராமசாமி படையாச்சி, ஏ.பி.ஷெட்டி, சண்முக இராஜேஸ்வர சேதுபதி, பீ. பரமேஸ்வரன் போன்றோர்களும் இவரது அமைச்சரவையில் அங்கம் வகித்தனர்.
இவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றதும், மக்களுக்கு விடுத்த அறிக்கையில்; "தமிழ் நாட்டிலுள்ள மக்கள்தான் எனது சுற்றமும், குடும்பமும், அவர்கள் நலன் ஒன்றே என் நலனாகக் கருதி செயல்படுவேன். ஏழைகளின் நலனுக்காகப் பாடுபடுவதே எனது லட்சியம் என்றார். அதுபோன்றே அவர்தன் வாழ்வினை இறுதிவரை கழித்தார் எனலாம்.
அவர்தான் அனுபவத்தின் வாயிலாக, கல்வியறிவு மிக்க நாடுகளே பொருளாதாரம் மற்றும் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்க அடிப்படையான காரணமாகும் என்பதைக் கண்டறிந்தார். அதுபோன்று இந்தியநாடு முன்னேற கல்வியறிவை மக்களிடையே பெருகச் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினார். மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்வுக்கு அடிப்படைக் காரணம் கல்வியறிவு என்பதையும், அதிலும் முக்கியமாக அரிசன மக்களுக்கு கல்வியறிவு அவசியமென்று அவர் பெரிதும் விரும்பினார். கிராமத்து பெற்றோர்களும், வேலையில்லாதவர்களும் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி அதன மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர். என்பதை நன்குணர்ந்த காமராசர், இலவசக் கல்வித்திட்டத்தையும் ,மதிய உணவுத் திட்டத்தையும் அறிவித்தார். தன்னால் இளமையில் பெறமுடியாத கல்வியை தன் சந்ததியினராவது பெறட்டும் என்பதில் காமராசர் எடுத்த அரும்பெரும் முயற்சிகளைப் பாராட்டி மக்கள் அவரை 'கல்விக்கண் திறந்த காமராசர்' என்று கூறுவதுண்டு.
தமிழகத்தில் நடந்த காமராசரின் சீரிய சிறப்பான ஆட்சியானது மற்ற மாநிலங்களுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம். ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்தபோது 7 சதவீதமாக இருந்த கல்வியறிவு காமராசரின் ஆட்சியில் முப்பத்தேழாக உயர்ந்தது. இவர் முதல்வராக பொறுப்பேற்றபோது தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் ஆறாயிரம் மட்டுமே. இவர் மேலும் பதினைந்தாயிரம் பள்ளிகளைத் திறந்தார். இவரது ஆட்சிக் காலத்தின்போது ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போனது.
பள்ளியில் பயிலும் குழந்தைகளின் வயிறு வாடாமலிருக்க அளிக்கப்பட மதிய உணவுத்திட்டம் அரசு மானியத்துடன் தொடங்கப்பட்டது. மதிய உணவுத் திட்டத்திற்கான பால் பவுடர், சோள மாவு, தாவர எண்ணெய் போன்றவற்றை 1961-ல் அமெரிக்காவைச் சேர்ந்த கேர் நிறுவனம் நன்கொடையாக வழங்கியது. அன்றைய அரசின் குறைந்த வருமானத்தைக் கொண்டு நிறைவான திட்டங்கள் பலவற்றை மக்களுக்கு பயன்படும் வகையில் நிறைவேற்றினார்.
மேலும் ஏழைக் குழந்தைகள் படிக்க இலவச சிலேட்டு, புத்தகங்களும் வழங்கப்பட்டது ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பட பொது மக்களிடமிருந்தும் நன்கொடை வசூலிக்கப்பட்டு இலவச புத்தகங்கள், சிலேட்டு போன்றவற்றை வழங்கினார். காங்கிரசிலிருந்து விலகிய ஈ.வெ.ரா. பெரியார் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் காமராசர் முதல்வரானதும் அவரை தாமாகவே முன்வந்து ஆதரித்தார்.
மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். இவரது ஆட்சியின் போது பள்ளியின் வருகை நாட்கள் அதிகரிக்கப்பட்டது. பாடத்திட்டங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
ஆசிரியர்களுக்கு பென்ஷன், பிராவிடன்ட்பண்ட், இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களை முதன்முறையாகக் கொண்டு வந்தார்.
உயர்கல்வி பயில வங்கிகளில் கடன் உதவிபெற வழிவகை செய்தார். ராஜாஜியால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வி திட்டத்தை அடியோடு ஒழித்தார். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் பைகாரா, பாபநாசம் என இரண்டுநீர் மின் திட்டங்களே செயல்பட்டு வந்தன. காமராசரின் ஆட்சிகாலத்தின்போது கீழ்பவானி, மணிமுத்தாறு, காவிரி டெல்டா, ஆரணியாறு, வைகை நீர்த் தேக்கம், அமராவதி அணை, சாத்தனூர் அணை, கிருஷ்ணகிரி அணை, புள்ளம்பாடி அணை, விடூர் நீர்த் தேக்கம், பரம்பிக்குளம், ஆழியாறு அணை, கட்டளை மேல்நிலைக் கால்வாய்த் திட்டம், நெய்யாறு அணை போன்ற பல அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. இதன் காரணமாக தமிழகத்தில் பசுமைப்புரட்சி ஏற்பட்டது.
கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் பெரும் சீர்திருத்தங்களை கொண்டுவந்த காமராசர் தமிழகம் தொழில் துறையில் முன்னேறவும் பல முன்னேற்றத் திட்டங்களைக் கொண்டு வந்தார். நெய்வேலி நிலக்கரி திட்டம், நீலகிரி கச்சா பிலிம் தொழிற்சாலை, கிண்டி ரணசிகிச்சை கருவித் தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலைகள், ஆவடி கனரக ஆயுத தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகள் இவரது காலத்தில் கொண்டுவரப்பட்டதேயாகும்.
இவரது ஆட்சிக்காலத்தின் போது செக் நாட்டு நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் உயர் அழுத்த மின் சக்தி மூலம் செயல்படும் கனரக கொதிகலன் தொழிற்சாலை ஒன்றை நிறுவ மத்திய அரசின் அனுமதி பெற்று தமிழகம் வந்தது. அவர்களுடன் மத்திய அரசு அதிகாரிகளும், தமிழக அரசு அதிகாரிகளும் இணைந்து அதற்கான இடம் தேடி அலைந்தனர். ஆனால் அதற்கேற்ற இடம் கிடைக்கவில்லை என முடிவெடுத்து அவர்கள் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப திட்டமிட்டனர்.
இதனையறிந்த காமராசர் அதிகாரிகளிடம் தற்போது பெல் நிறுவனம் இயங்கிவரும் இடம் பற்றி நினைவூட்டவே, அவ்விடம் சென்று பார்வையிட்ட அதிகாரிகள் அவ்விடத்தையே தேர்வு செய்தனர். அந்நிறுவனமே இன்று உலக நாடுகளுக்கே தமது உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்து புகழ் பெற்று விளங்கும் பெல் (BHEL) நிறுவனமாகும்.
ராஜகோபாலச்சாரியார் சுதந்திராக் கட்சி எனும் தனி இயக்கம் துவங்கி, காங்கிரசுக்கு எதிராக களங்கண்டதுண்டு. ஆனாலும் இவ்வியக்கம் இந்திய மக்களின் ஆதரவால் உயர்ந்து நின்றது. பல தலைவர்களை உள்ளடக்கி வெற்றிகரமாக ஆட்சி புரிந்தது. பல இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஐந்தாண்டு திட்டங்கள் பல தீட்டப்பட்டாலும் அவையாவும் கடைக் கோடிவரை சென்றடையாமல் இடைத்தரகர்களால் தடைப்பட்டு நின்றது.
காங்கிரசுக்கு புது ரத்தம் பாய்ச்ச நேரு விரும்பியபோது அவரது நினைவிற்கு வந்தவர் காமராசர் மட்டுமே. காங்கிரசில் அநேகம் பேர் பதவிகளில் அமர்த்தப்பட்டதால் கட்சி வளர்ச்சி தடைப்பட்டது. தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. இது பற்றி நேருஜி காமராசரிடம் கலந்தாலோசித்தார். இதன் காரணமாக முதல்மட்ட தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பை இரண்டாம் நிலை தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் கட்சிப் பணியில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் காமராசரிடம் தோன்றியது. இத்திட்டம் நேருஜியை மிகவும் கவர்ந்தது.
இத்திட்டதிற்கே கே.கே.பிளான் என பெயரிட்டது. இத்திட்டத்தின் முன்னோடியாக நேருஜி தன் பிரதமர் பதிவியை துறக்க முன் வந்தபோது ஏனைய தலைவகள் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் காமராசர் தான் வகித்துவந்த தமிழக முதல்வர் பதவிய துறந்து ஏனைய தலைவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தார். மேலும் மொரார்ஜிதேசாய் சாஸ்திரி போன்றோர் தாம் வகித்து வந்த தலைவர் பதவியை உதறினர். இந்த கே.கே.பிளான் திட்டம் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது.
நன்றி : நாஞ்சில் ஸ்ரீ விஷ்ணு
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.