காஞ்சிபுரத்திற்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்தவர் கேசவசோமயாஜி. இவரது மனைவியின் பெயர் காந்திமதி. இவர்களுக்கு நீண்டகாலம் குழந்தை பேறின்றி இருந்தது. கேசவர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்கி வந்தார். பெருமாளின் அருளால் கலியுகம் 4119. சாலிவாகன பிங்கள நாமசம்வத்சரம், சைத்ர சுக்ல பஞ்சமி, திருவாதிரை நட்சத்திரம், மத்யானம் கடக லக்னத்தில், வியாழக்கிழமை ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதாவது 4.4.1017ல் கேசவ சோமயாஜி – காந்திமதி தம்பதியினருக்கு பிறந்த குழந்தைதான் ராமானுஜர்.
உடையவர், ஸ்ரீ பாஷ்யக்காரர், எம்பெருமானார், திருப்பாவை ஜீயர், யதிராஜ முனி, இளையபெருமாள் என்று பல திருநாமங்களைக் கொண்டவர் ராமானுஜர்.
காந்திமதி, கேசவ சோமயாஜி தம் மகனுக்கு உபநயனம் செய்து வைத்தனர். பின்னர் தம் தந்தை கேசவ சோமயாஜிடமே ஆரம்பக் கல்வியையும் வேத வேதாந்தங்களையும் கற்றுக்கொண்டார் ராமானுஜர்.
ராமானுஜருக்கு வயது 16 ஆயிற்று. பெற்றோர் திருமணம் செய்து வைக்க விரும்பினர். தஞ்சம்மாள் என்ற பெண்ணைப் பார்த்து, வெகு சிறப்பாக ராமானுஜருக்கு கல்யாணம் செய்து வைத்தனர். ராமானுஜருக்குத் திருமணம் முடிந்த சில மாதங்களில் அவருடைய தந்தை வைகுண்டபதியை அடைந்தார். ராமானுஜருக்கு மேலும் கல்வி கற்கவேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்தது. தம் மனைவி தஞ்சம்மாளுடன் காஞ்சிபுரத்தில் ஒரு நல்ல வீட்டினைப் பார்த்துக் குடியேறினார்.
கேசவ சோமயாஜி வாழ்ந்து கொண்டிருந்த போது பரம வைஷ்ணவரான திருக்கச்சி நம்பிகளோடு பேசுவார். திருக்கச்சி நம்பிகளும் உரையாடுவதைப் பலமுறை கேட்டிருந்தார் ராமானுஜர். திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவர். இவரிடம் பக்தி விசாரங்களை அறிந்துகொள்ள விரும்பினார் ராமானுஜர்.
திருக்கச்சி நம்பிகள் ஒரு பூந்தோட்டம் அமைத்திருந்தார். தோட்டத்தில் மலரும் மலர்களை மாலையாகக் கட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளுக்கு சாத்துவதற்காக, தினமும் ஸ்ரீ பெரும்புதூர் வழியாகச் செல்லுவார். அதோடு பெருமாளுக்கு விசிறி (ஆலவட்டம் என்பர்) கைங்கர்யமும் செய்வார். இவருடைய சுயநலமற்ற தொண்டினைக் கண்டுகளித்த அத்திகிரி அருளாளன் திருக்கச்சி நம்பியிடம் பேசுவார். இதனைக் கண்ட பட்டாச்சார்யர்கள், நிர்வாகிகள், மக்கள் என அனைவரும் தங்கள் காரியங்களை நிறைவேற்ற திருக்கச்சி நம்பிகளை அணுகி, பெருமாளின் இசைவினைப் பெற்றுத் தருமாறு வேண்டுவர். இப்படி இறைவனோடு பேசக்கூடிய அருளாள பெருமானின் அன்பர் நம்பியிடம் தன்னைச் சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார் ராமானுஜர். திருக்கச்சி நம்பிகள் ராமானுஜரின் வேண்டுகோளை நிராகரித்தார். அதோடு, ‘நானோ வைஸ்யன்; நீரோ உத்தம பிராமணர். பரம வைஷ்ணவர்; நான் உங்களுக்குச் செய்ய வேண்டி இருக்க, நீரோ எனக்குச் சேவை செய்யவும் உபதேசம் பெறுவதும் முறையல்ல’ என்றார். ராமானுஜர் இதனைக் கேட்டு, ‘மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை குரு தெய்வமாக கொண்டாடினார் அல்லவா? ஏன் திருப்பாணாழ்வார் உட்பட இவர்கள் மூவரையும் ஆழ்வார்கள் வரிசையில் வைத்துக் கொண்டாடுகிறோம்?’ என்றார். திருக்கச்சி நம்பிகள் ராமானுஜரின் சாதுர்யமான பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து அவரது ஆசையை நிறைவேற்றுகிறார்.
ராமானுஜரைப் போன்று, அவருக்கு முன் வாழ்ந்த ஸ்ரீ சங்கரர் காசியில் இருந்தபோது பனை மரங்கள் உள்ள இடத்தின் வழியாக கயாவிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முதியவர்; தள்ளாமை வயது. ஆனாலும் அவருடைய தொழில் பனை மரத்திலிருந்து கள் இறக்கினால்தான் அதை விற்றுவரும் வருவாயில் வாழ்க்கை அந்தத் தள்ளாத வயதில் பனை மரம் ஏற முடியவில்லை. ஆகையால் அந்த மரத்தினிடம் சென்று, கீழே நின்றுகொண்டு ஒரு மந்திரத்தைக் கூறுவார். உடனே பனைமரம் வளைந்து கொடுக்கும். முதியவர் கள்ளை இறக்கிவிட்டு கலசத்தை மாட்டிவிட்டு மீண்டும் ஒரு மந்திரத்தைச் சொல்லுவார். அந்தப் பனைமரம் நிமிர்ந்து கொள்ளும். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஸ்ரீசங்கரர் மறவர் குலத்தைச் சார்ந்த அந்த முதியவரை அணுகி, ‘ஐயனே! இந்த வித்தையை யாரிடம் கற்றீர்கள்? எனக்கும் தாங்கள் குருவாக இருந்து கற்பிக்க வேண்டும்’ என்று வேண்டுகிறார். முதியவரோ நடுநடுங்கி, ‘சுவாமி! நான் தீண்டத்தகாதவன்; என்னை மன்னிச்சிடுங்க சுவாமி! நீங்கள் வருவதை கவனிக்கவில்லை’ என்கிறார். ஸ்ரீ சங்கரரோ, ‘ஐயனே! கலை யாரிடம் இருந்தாலும் கற்றுக் கொள்ளலாம். ஈசன் முன்பாக நீங்களும் நானும் ஒன்றுதானே? இதில் என்ன வேற்றுமை உள்ளது? தயவுசெய்து மறுக்காதீர்கள்; நான் தங்களைக் குருவாகப் பார்க்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டு சொல்லித் தாருங்கள்’ என்றுகூறி வணங்க, அந்த முதியவனும் சொல்லித் தருகிறான்.
ஆக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்த ராமானுஜர் ஒருசமயம் திருக்கச்சி நம்பிகளைத் தனது இல்லத்திற்கு உணவு உண்ண அழைத்து இருந்தார். அவரும் அதற்கு இசைந்திருந்தார்.
ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாளோ மிகுந்த ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்தவள். ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளோடு பேசுவதையே விரும்பாதவள்; அவரையே குருவாக ஏற்றுக் கொண்டது அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் ராமானுஜர் தஞ்சம்மாளிடம், ‘திருக்கச்சி நம்பிகளை அமுதுண்ண அழைத்துள்ளேன். விரைவில் தளிகை (சமையல்) செய்’ என்றார். தஞ்சம்மாள் வேண்டா வெறுப்பாக தளிகை செய்ய, ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளை அழைத்து வர புறப்பட்டுப்போனார். நம்பிகளோ, வேறு வேலை இருந்ததால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ராமானுஜரின் வீட்டிற்கு வந்துவிட்டார்.
தஞ்சம்மாள் இரண்டு திண்ணைகளுக்கிடையில் இருக்கும் நடைபாதையில் அவரை அமரச் செய்து உணவிட்டாள். திருக்கச்சி நம்பிகள் சென்றபின் அவர் சாப்பிட்ட இலையைக் கோலால் எடுத்தெறிந்து, வீடு முழுவதும் சாணம் தெளித்து சுத்தம் செய்து, தானும் குளித்துவிட்டு, புதியதாக சமையல் செய்து ராமானுஜரின் வருகையைப் பார்த்துக் காத்திருந்தாள். விவரம் அறிந்த ராமானுஜர் கோபம் கொண்டார். தன் பக்தி மார்க்கத்திற்கும் மனித நேயத்திற்கும் வைணவ வளர்ச்சிக்கும் தஞ்சம்மாள் உறுதுணையாக இருக்கமாட்டாள்; உபத்திரமாகத்தான் இருப்பாள் என்று எண்ணிக் கொண்டார்.
இன்னொரு சமயம், ராமானுஜருக்கு எண்ணெய்த் தேய்க்க ஒரு வைணவர் வருவார். ஒருநாள் அந்த வைணவர் பசிக்கிறது என்றுகூற, ராமானுஜர் தஞ்சம்மாளை அன்னமிடச் சொல்கிறார். அவளோ தளிகை இன்னும் செய்யவில்லை என்கிறாள். அப்படியா? சரி! பழைய சாதம் இருக்குமே! அதைப் போடு என்கிறார். தஞ்சம்மாள் அதுவும் இல்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்றாள். அப்போது உள்ளே சென்று பார்த்த ராமானுஜர், உணவு மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டார்.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமலிங்க சுவாமிகள் பசி கொடுமையானது; பசி வந்தால் பத்தும் பறந்து போகும். மானம் மரியாதை கூட இழக்க நேரிடும் என்பதாலேயே வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறியதோடு தர்மசாலை அமைத்து பசியாறச் செய்தார் என்பதைப் பார்க்கும் போது, பத்தாம் நூற்றாண்டிலேயே ராமானுஜர் இத்தகு முயற்சியில் ஈடுபட்டது நோக்க வேண்டியதாகும்.
மற்றொரு சமயம் பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்ட ராமானுஜர் அவரையும் அவரது மனைவி விஜயாம்பாளையும் தம் இல்லத்திற்கு அழைத்து வந்தார். அவர்களை வீட்டில் இருக்கச் செய்து மேல்மாடியில் பெரிய நம்பிகளிடம் உபதேசம் பெற்று வந்தார். ஒருநாள் ராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூர் சென்றிருந்தார். அப்போது தஞ்சம்மாளுக்கும் விஜயம்பாளுக்கும் கிணற்றங்கரையில் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த போது மனஸ்தாபம் ஏற்பட்டது. விஜயம்பாள் எடுத்த குடத்து நீர்த்துளிகள் தஞ்சம்மாளின் குடத்து நீரில் சிந்திவிட்டன. மிகுந்த ஆசாரம் பார்க்கும் தஞ்சம்மாள், விஜயாம்பாள் பிராமணளாக இருப்பினும் தன் தாழ்ந்தவள்; செல்வத்திலும் தனக்குச் சமமாக இல்லை என்று கருதி, ‘ஏம்மா! குரு பத்தினி என்ற நினைப்போ?’ என்று கேட்டுவிட்டாள். பெரிய நம்பிகளும் விஜயம்பாளும் ராமானுஜர் வருவதற்கு முன் கிளம்பிவிட்டனர்.
ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து வந்த ராமானுஜர் செய்தி அறிந்து மிகவும் விசனப்பட்டார். சாதி வேறுபாடுகளை பார்க்கக் கூடாது என்ற தம் கொள்கைகளுக்கு தன் மனைவியே எதிரி என்று புரிந்து கொண்ட ராமானுஜர்,
‘சற்றே ஏறுமாறாக நடப்பாளேயாகில் கூறாமல் சந்நியாசம் கொள்’ என்பதற்கேற்ப துறவறம் மேற்கொண்டார். ஓடும் உதிரத்தில் உருண்டு விழும் கண்ணீரில் சாதி தெரிவதுண்டோ? என்ற உண்மை தஞ்சம்மாளை போன்று பலருக்குப் புரியாமல் இன்றளவும் இருப்பது புரியாத புதிரேயாகும்.
மகாத்மாகாந்தி தென்னாப்பிரிக்கா ரயிலில் பயணம் முதல் வகுப்பு பயணச்சீட்டு எடுத்திருந்தார். அதே வகுப்பில் பயணம் செய்த ஒரு ஆங்கிலேயன் நிறவெறியால் அவரைக் கீழே தள்ளினான் என்ற செய்தி அனைவரும் அதன் பின்னர்தான் காந்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதை இந்திய மக்கள் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
பேரருளாளன் சந்நிதியில் துறவறம் மேற்கொண்ட ராமானுஜருக்கு யதிராஜர் என்ற திருநாமம் ஏற்பட்டது. பெரிய நம்பியைச் சந்தித்து மன்னிப்புக் கேட்க, எதுவுமே நடந்துவிடவில்லை என்று அவர் ராமானுஜருக்கு ஆறுதல் கூறினார்.
பிறகு திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்று த்வயம் மந்திரத்தின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளும்படி ராமானுஜருக்கு அறிவுறித்தினார் பெரிய நம்பி. காஞ்சியில் இருந்த ராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பி திருப்பதிக்கு வந்திருப்பதை அறிந்துகொண்டு அங்கு சென்று வணங்கினார். தன்னை சீடனாக ஏற்று த்வயம் மந்திரத்தின் ரகசியத்தை உபதேசித்து அருளுமாறு வேண்டினார். ‘த்வயம்’ மந்திரத்தை அறிந்துகொள்வதில் ராமானுஜருக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள எண்ணிய திருக்கோஷ்டியூர் நம்பி அவரைப் பிறகு வரும்படி கூறினார். இப்படி பதினெட்டு முறை காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதிக்கு ராமானுஜர் அவரிடம் சென்றார். பதினெட்டாவது முறையும் பிறகு பார்க்கலாம் என்று கூற ராமானுஜர், கூரேசர், முதலியாண்டான் ஆகியோரோடு திரும்பினார். சற்று தூரம் சென்றதும் திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களை அழைத்தார். திருக்கோஷ்டியூர் நம்பி ராமானுஜரைப் பார்த்து, ‘உம்முடைய தெண்டம், பவித்ரம் ஆகியவற்றோடு தானே வரச் சொன்னேன்’ என்றார். ராமானுஜர் அதற்கு, கூரேசரையும் முதலியாண்டானையும் காட்டி, ‘இவர்கள் தான் என்னுடைய தெண்டம், பவித்ரம்’ என்று பதில் கூறினார்.
இந்தப் பதிலைக் கேட்டு மகிழ்ந்த திருக்கோஷ்டியூர் நம்பி, த்வயம் மந்திரத்தின் ரகசியத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டு திருமந்திரத்தையும் சரமஸ்லோகத்தையும் சொல்லிக் கொடுத்தார். திருமந்திரத்தின் அர்த்தத்தை நிச்சயம் வீடுபேறு கிடைக்கும் என்றார் திருக்கோஷ்டியூர் நம்பி.
உலகத்தில் துன்பப்படும் அனைத்து பிறவிகளுக்கும் வீடுபேறு கிடைக்க வேண்டும் என்று விரும்பியது இளையாழ்வாராகிய ராமானுஜரின் உள்ளம். அதனால் பாடத்தைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டார். பிறகு அங்கிருந்த கோயில் கோபுரத்தின் மீது ஏறி, அந்த ஊரில் இருந்த அனைவரையும் அழைத்து, ஆசிரியர் சொன்ன ரகசியார்த்தங்களை மிகுந்த சத்தமாக கூறினார் ராமானுஜர். இதைச் சொல்லக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பிகள் மிகுந்த கோபம் கொண்டு ராமானுஜரை அழைத்தார்.
‘ஒருவருக்கும் சொல்லக்கூடாது என்று நான் சொல்லியிருக்க அதை மறுத்த நீ சண்டாளனே! இதனால் உனக்கு என்ன பலன்?’ என்று வினவ, ‘ஆச்சார்ய நியமனத்தை மறுத்த எனக்கு பலன் நரகமே! ஆனால், அடியேன் ஒருவன் மட்டும்தான் நரகம் புகுவேன்; பொருள் கேட்ட ஆத்ம கோடிகள் அனைத்துக்கும் வீடுபேறு கிட்டுமே’ என்றார் புன்சிரிப்புடன் ராமானுஜர்.
இதைக்கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பிகள் திகைத்து, மகிழ்ந்து தனக்கு இந்த உள்ளம் இல்லாமல் போய்விட்டதே என்று வருந்தினார். ‘இந்த சித்தாந்தம் ராமானுஜர் சித்தாந்தம் என்று வழங்கப்படட்டும். உம்மை’ எம்பெருமானார் என்று இனி உலகம் அழைக்கட்டும் என்று வாழ்த்தி அருளினார் திருக்கோஷ்டியூர் நம்பிகள்.
ராமானுஜருக்கு ஜாதி வேறுபாட்டில் நம்பிக்கை கிடையாது. அதுவும் பக்தியில் ஒன்றியவர்களை இந்த வேறுபாட்டின் அடிப்படையில் பார்க்கக் கூடாதென்பது அவரது எண்ணம். ராமானுஜர் கூரேசர், முதலியாண்டான் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு காவேரிக்குச் சென்று தீர்த்தமாடிவிட்டு (நீராடிவிட்டு) வரும்போது உறங்காவில்லிதாசர் தோளில் கையை வைத்துக்கொண்டு வருவார். இச்செயல் அக்ரஹாரத்திலும் மடத்திலிருந்த சீடர்களுக்கும் பிடிக்கவில்லை. ஏனெனில் உறங்காவில்லிதாசர் அகளங்கர் என்ற குறுநில மன்னரின் மெய்க்காப்பாளர். தம் மனைவி பொன்னாச்சியின் அழகை மடைமாற்றம் செய்து திருவரங்கனின் நித்ய அழகை காண வைத்தவர் ராமானுஜர்.
இதை அறியாத சீடர் ஒருவர் ராமானுஜரிடம் உறங்காவில்லிதாசரின் மேல் கை போட்டுக் கொண்டு வருவது பிடிக்கவில்லை என்றார். அதற்கு ராமானுஜர் பதில் கூறவில்லை.
ஒரு நாள் இரவு தம் சீடர்களில் அந்தரங்கமான ஒருவரை அழைத்து யாருக்கும் தெரியாமல் சீடர்களின் துணிகளைக் கிழித்து வைக்கச் சொன்னார். பொழுது விடிந்தது. சீடர்களில் ஒருவர் தன் துணியெல்லாம் கிழிக்கப்பட்டுள்ளது என்றார். மற்றொருவரும் அப்படியே கூறினார். இப்படி அடுத்தடுத்து பலரும் சொல்லி கோபத்தில் தகாத பேச்சுகளை எல்லாம் பேசினர். ராமானுஜர் ஒன்றும் பேசவில்லை.
இன்னொரு நாள் இரண்டு சீடர்களை அழைத்து, உறங்காவில்லிதாசரின் மனைவி பொன்னாச்சி தூங்கும் போது அவள் அணிந்திருக்கும் நகைகளை எடுத்து வருமாறு கட்டளையிட்டார். சீடர்கள் உறங்காவில்லிதாசரின் வீட்டிற்குச் சென்று, அவள் உறங்கிக் கொண்டிருக்கும் போது காதணிகளைக் கழற்றினர். இதனை உணர்ந்த பொன்னாச்சி இன்னொரு பக்க காதணியையும் கழற்றிக் கொள்ளட்டும் என்று வசதியாகத் திரும்பி படுத்தாள். சீடர்கள் அவள் விழித்து விட்டாள் என்று பயந்து ஓடிவந்து ராமானுஜரிடம் நடந்ததைக் கூறினர்.
ராமானுஜர் மீண்டும் அவர்களை பொன்னாச்சி வீட்டுக்கு அனுப்பினார். அங்கு நடப்பதை அறிந்து வருமாறு கூறினார். அவர்கள் சென்று வாசல் கதவருகே நின்றனர். உள்ளே உறங்காவில்லிதாசருக்கு பொன்னாச்சியிடம் கோபம். ‘திருட வந்தவர்களுக்கு உன்னுடைய நகைகளைக் கொடுக்கின்றோம் என்ற கர்வம் உனக்கு. அதனால் தான் அவர்களுக்கு நகைகள் கிடைக்கவில்லை’ என்றார் உறங்காவில்லிதாசர். சீடர்கள் உறங்காவில்லியின் மனப்பாங்கு கண்டுவியந்து உடையவரிடம் தெரிவித்தனர். அடுத்த நாள் ராமானுஜர் சீடர்கள் அனைவரையும் அழைத்தார். முதல்நாள் அனுப்பிய சீடர்களை அழைத்து உறங்காவில்லிதாசர் வீட்டில் கூறும்படி கட்டளையிட்டார். அவர்கள் கூறினார்கள்.
ராமானுஜர் புன்னகை பூத்தார். ‘நீங்கள் உங்களுடைய ஆடைகள் கிழிந்திருப்பதைக் கண்டு கோபப்பட்டு தகாத வார்த்தைகளைக் கூறினீர்கள். ஆனால், திருடர்கள் வந்து போனார்கள் என்பதை அறிந்தும் உறங்காவில்லிதாசர் எப்படி நடந்து கொண்டார் என்பதை நினைத்துப் பாருங்கள். அந்தணர்களாகிய உங்களுக்கு இது பாடமாக இருக்கட்டும். உறங்காவில்லிதாசர் இயல்பாகவே அடக்கமானவர். அவர் பிராமணராகப் பிறக்கவில்லையே தவிர, அதனால் தன்னை தாழ்த்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் நீராடிய பின் உறங்காவில்லிதாசரின் தோள்களின் மீது கைகளை வைத்துக் கொண்டு வருவதன் காரணம் புரிந்ததா? அவர் பவித்ரமானவர்’ என்றார் ராமானுஜர்.
ஆம், ராமானுஜர் யார்? இளையாழ்வாராயிற்றே! எப்படி?
ஒருசமயம் திருவரங்கத்தை விட்டுச் செல்ல வேண்டிய சூழல் ராமானுஜருக்கு ஏற்பட்டது. திருவரங்கரத்திலிருந்து புறப்பட்டு நீலகிரி காடுகளைச் சென்று அடைந்தார். அங்கு ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு ஈமக்கிரியைகள் செய்ததால் பிராமண சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட நல்லான் சக்ரவர்த்தி என்பவரைக் கண்டார். நல்லான் சக்ரவர்த்தி அனைவரும் இறைவனின் மக்கள் என்ற உறுதி கொண்டு வாழ்ந்ததால், நீலகிரி காட்டில் வாழ்ந்த வேடுவர்களுக்கு வைணவமாகிய அன்பு மதத்தைப் பரப்பி வருவதை நேரில் பார்த்து மெய்சிலிர்த்தார்.
மைசூரில் விட்டல்தேவன் என்ற ஹொய்சாள மன்னன் போரினால் உடற்குறை ஏற்பட, அவனது உடற்குறையைக் கூறி மற்றவர்கள் உதாசீனப்படுத்தினர். ராமானுஜர் அவன் மனக்குறையைப் போக்கி, அவனது மகனின் நோயையும் குணப்படுத்தினார். இதனால் விட்டல்தேவன் வைணவ மதத்துக்கு மாறி விஷ்ணு வர்த்தனராயன் என்ற பெயரும் கொண்டான். மைசூரில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வைணவ மதத்திற்கு வந்தனர்.
கோயிலில் ஹரிஜனப் பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்தார். தீண்டாமை ஒழிப்பு சட்டரீதியாக சென்ற நூற்றாண்டில்தான் செயல்பட்டதென்றாலும் பத்தாம் நூற்றாண்டிலேயே மேல்கோட்டையில் ஹரிஜன மக்கள் ஆலயத்திற்குள் பிரவேசிக்க வழிவகை செய்தார். காரணம் டில்லி பாதுஷா மன்னரிடமிருந்து விக்ரகத்தை முஸ்லிம் மன்னரிடமிருந்து தன்னைக் காப்பாற்றியவர்கள் என்பதால் நன்றியைத் தெரிவிக்க ஆலய பிரவேசத்தை நடைமுறைப்படுத்தினார். ஹரிஜனங்களுக்கு அவர் அளித்த பெயர் திருக்குலத்தார்.
தொண்டனூரில் மோதிதலா என்ற ஏரி உண்டாவதற்குக் காரணமாக இருந்தார். பக்கத்திலிருந்த நதியிலிருந்து இந்த ஏரிக்கு நீர் கொண்டு வரச் செய்தவர் ராமானுஜர் என்று ஹில்டன் ப்ரௌன் என்ற வரலாற்று அறிஞர் கூறியுள்ளார். இன்று நாம் நதிகளின் இணைப்பு, நீர்வரத்து போன்ற பலவற்றை பற்றி பேசக்கூடியவர்களாக மட்டும் உள்ளோம். ஆனால் அன்றே சொல்வதன் சிறப்பு செயலில் இருக்கிறது என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமானுஜர்.
டாக்டர். ஆ. பூமா
நன்றி விஜெயபாரதம்
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.