ஒவ்வொருவருக்கும் முதல்–அமைச்சர் ஆசை வந்து விட்டதால், திராவிட கட்சிகளுக்கு எதிராக பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க முடியவில்லை என மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான இல.கணேசன் தினத்தந்தி நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்தபதில்கள் வருமாறு:–
கேள்வி:– பா.ஜ.,கட்சியில் இருந்து முதல்–அமைச்சர்வேட்பாளர் கிடையாது என்று முரளிதரராவ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதில் மாநில நிர்வாகிகளுக்கும் உடன்பாடு உண்டா?
பதில்:– மாநிலநிர்வாகிகள் அனைவரும் அமர்ந்து பேசிதான் இந்த முடிவை எடுத்தோம். எனவே அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதேவேளையில் கூட்டணி அமைத்து போட்டியிடும்பட்சத்தில், அந்த கட்சியின் முதல்–அமைச்சர் வேட்பாளரை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
கேள்வி:– கடந்ததேர்தலில் உங்களுடன் இருந்த தேமுதிக., பாமக., மதிமுக. உள்பட சில கட்சிகள் உங்களது தலைமையை தற்போது ஏற்றுகொள்ளவில்லை. இதன் மூலம் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மாநில பா.ஜ.க. தோல்வி அடைந்துவிட்டதா?
பதில்:– பாராளுமன்ற தேர்தலில் இருந்தநிலைப்பாடு வேறு. அப்போது மோடி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் அலைஇருந்தது. எனவே அந்த கட்சிகள் அனைத்தும் பா.ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தன.
ஆனால் இந்த சட்டசபைதேர்தலில் ஒவ்வொருவருக்கும் முதல்–அமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எனவேதான் அ.தி.மு.க.–தி.மு.க.வுக்கு மாற்றாக எங்கள் தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க முடியாமல் போய்விட்டது. திராவிட கட்சிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணையா விட்டால், அது அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் சாதகமாகி விடும்.
கேள்வி:– தமிழகத்தில் மோடி அலை இருந்தது என்று சொல்லுகிறீர்கள். ஆனால் அப்போது கூட இங்கு அ.தி.மு.க. தான் அதிக இடங்களை கைப்பற்றியது. உங்களுக்கு தோல்வி தானே கிடைத்தது?
பதில்:– பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் ஒருமாயை உருவாக்கி விட்டனர். அதாவது அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால்தான் மோடி பிரதமர் ஆவார் என்றும், இன்னும் சிலர் அ.தி.மு.க. வெற்றி பெறும் பட்சத்தில் மோடிக்கு ஆதரவாக இருக்கும் என்றும் பரப்பிவிட்டனர்.
அதனால்தான் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெற்று விட்டது. அதில் கடவுள் அருள் என்னவென்றால், நாங்கள் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் மத்தியில் முழுமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்து விட்டோம்.
கேள்வி:– தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.விற்குதான் அதிக வாக்குசதவீதம் என்று கடந்த தேர்தல்கள் எல்லாம் நிரூபித்துள்ளன. அந்த சூழ்நிலையில் இந்ததேர்தலில் எங்களுக்குதான் வெற்றி என்று உங்களை போல கட்சிகள் சொல்வது எல்லாம் எப்படி உண்மையாகும்?
பதில்:– இந்தியாவில் என்.டி.ராமாராவ் ஒருவர்தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே முதல்–அமைச்சர் ஆனார். இவரைதவிர வேறு யாருக்கும் இந்தவாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் மக்களுக்கு ஊழலற்ற, நல்லாட்சியை தருவோம் என்ற கோரிக்கையுடன் தேர்தலை சந்திக்கிறோம்.
எங்கள் முதல்–அமைச்சர்கள் உள்ள மாநிலத்தின் வளர்ச்சியே இதற்கு உதாரணம். அதுமட்டுமல்ல, கடந்த ஒன்றரை ஆண்டு கால மோடி ஆட்சியை நினைத்து பார்த்து மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று முழுமையாக நம்பி இந்த தேர்தலை சந்திக்கிறோம்.
கேள்வி:– தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? அது எந்தநிலையில் உள்ளது?
பதில்:– விஜயகாந்த் உள்பட கடந்த பாராளுமன்ற தேர்தலில் எங்களுடன் இருந்த அனைத்துகூட்டணி கட்சிகளிடமும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். விரைவில் கூட்டணி முடிவை தெரிவிப்போம்.
கேள்வி:– முதல்அமைச்சர் பதவியையும் பா.ஜ.க விரும்பவில்லை. அப்படியென்றால் தேமுதிக.வுடன் இன்னும் கூட்டணி உறுதியாகாமல் இருப்பதற்கு என்னதடை உள்ளது?
பதில்:– ஒருமித்த இருகட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படா விட்டால், அதில் தடை ஒன்று இருக்கிறது என்றுதானே அர்த்தம். அதேபோல் எங்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தையிலும் சிலதடைகள் இருக்கலாம். விரைவில் அது சரிசெய்யப்படும்.
கேள்வி:– திராவிட கட்சிகளை ஊழல்கட்சிகள் என்று சொல்கிறீர்கள். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் ஒழிக்கப்படும், தவறுகள்நடக்காது என்று மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே?
பதில்:– மு.க.ஸ்டாலின் சொல்வதை மக்கள் நிச்சயம் நம்பமாட்டார்கள். மக்கள் ஏமாளிகள் அல்ல. நான் மக்களிடம் கேட்டு கொள்வதெல்லாம், பணத்திற்காக அல்லாமல் குணத்துக்காக அனைவரும் நிச்சயம் வாக்குஅளிக்க வேண்டும். நல்ல ஆட்சியை யாரால் தரமுடியும் என்று சிந்தித்துபார்த்து உங்களது வாக்குகளை அளியுங்கள். இவ்வாறு அவர் பதிலளித்தார்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.