காஷ்மீர் பிரச்னையை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு தொடர் குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு, எங்களாலும் அதே விளையாட்டை உங்களிடம் விளையாடி காட்ட முடியும்' என பிரதமர் நரேந்திர மோடி கையிலெடுத்துள்ளதுதான் பலுசிஸ்தான் விவகாரம். இதனையடுத்து பலுசிஸ்தானை, இன்னொரு வங்கதேசமாக பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்று கோபத்தில் கொந்தளித்து, ஆவேசத்தில் அரற்றிக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.
பலுசிஸ்தானில் இந்திய உளவு நிறுவனமான 'ரா', பாகிஸ்தானுக்கு எதிராக அப்பகுதி மக்களை கிளர்ச்சிக்கு தூண்டி வருகிறது என்பது அந்நாட்டு தலைவர்கள் பல ஆண்டு காலமாக கூறிவரும் குற்றச்சாட்டு. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதியன்று, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றிய மோடி, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பலுசிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அங்கு உரிமைகளுக்காக போராடும் தலைவர்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் கூறியிருந்தார்.
இதனால் பதறத்தொடங்கிய பாகிஸ்தான், " பார்த்தீர்களா… நாங்கள் சொன்னது உண்மை என்பது உறுதியாகிவிட்டது" என பரப்புரை செய்யத் தொடங்கி உள்ளது. இந் நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் எப்படி பாகிஸ்தானுடன் இணைந்தது, அதன் பிரச்னை என்ன என்பதை பார்க்கலாம்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது பலுசிஸ்தான் மாகாணம். மேற்கு எல்லைப்பகுதிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லைப் பகுதிகளுடனும், தெற்கு பகுதி அரேபியக் கடல் பகுதியை ஒட்டியும் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பரப்பளவில் 43.6 சதவீதத்தை அது கொண்டுள்ள போதிலும், மக்கள் தொகை பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 3.6 சதவீதம்தான். மேடு பள்ளமாகவும், கரடுமுரடான நிலப்பகுதியையும் கொண்ட பீடபூமி பலுசிஸ்தான். பூகோள அமைப்பில், அதாவது மிக உயரமான நிலங்கள், சற்றே உயரம் குறைவான நிலங்கள், சமவெளி மற்றும் பாலைவனம் என வெவ்வேறு நிலப்பகுதிகளுடன் நான்கு மாவட்டங்களை இம்மாகாணம் கொண்டுள்ளது.
தாது வளம் மிகுந்த பலுசிஸ்தானில், எண்ணெய், எரிவாயு, காப்பர், நிலக்கரி, குரோமைட், சல்பர், மார்பிள், இரும்புத் தாது, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவ்வளவு வளங்கள் நிறைந்து காணப்பட்டாலும் பலுசிஸ்தான், பாகிஸ்தானின் மிக ஏழ்மையான மாகாணங்களில் ஒன்றாக உள்ளது. இம்மாகாணத்தின் முக்கிய பிரச்னையே வறுமை, வேலைவாய்ப்பின்மைதான். பெரும்பான்மையான மக்கள் இன்னமும் குடிசை வீடுகளில், மின்சாரம் மற்றும் தூய்மையான குடி நீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அல்லாடும் நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு பலுசிஸ்தானை, பாகிஸ்தான் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
எப்படி இணைந்தது?
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் பலுசிஸ்தானின் நான்கு மாகாணங்களும் பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாகத்தின் கீழ்தான் இருந்தது. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் நம்பிக்கைக்குரிய மன்னர் ஆட்சியை கவனித்து வந்தார். இந்நிலையில் சுதந்திரம் அடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் முகம்மது அலி ஜின்னா, பலுசிஸ்தானை பாகிஸ்தானுடன் இணைக்குமாறு கோரி பிரிட்டிஷாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே சமயம் பலுசிஸ்தானை இந்தியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்து பலுசிஸ்தான் மன்னர் ஜவஹர்லால் நேருவுக்கு ஒருபுறம் கடிதம் எழுதினார். ஆனால் பூகோள ரீதியாக பலுசிஸ்தான், பாகிஸ்தானுக்கு நெருக்கமாக அமைந்திருப்பதால், நேரு அதனை அவ்வளவாக விரும்பவில்லை. இந்நிலையில் பலுசிஸ்தானுக்கு பிரிட்டிஷ் அரசு விடுதலை வழங்கியதை தொடர்ந்து, 1947 -ம் ஆண்டு,. ஆகஸ்ட் 11 ல் பலுசிஸ்தானை, பாகிஸ்தானுடன் ராணுவக் கூட்டணி ஒப்பந்த அடிப்படையில் மன்னர் இணைத்தார். அதே சமயம் இந்திய மாநிலங்களைப் போன்றல்லாமல், பலுசிஸ்தானை சுயாட்சி அதிகாரம் கொண்ட மாகாணமாக அங்கீகரித்து பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தானுடன் இணைக்கப்படுவதை பலுசிஸ்தான் மக்களில் பெரும்பாலானோர் விரும்பாத நிலையில், 1948 ம் ஆண்டு, மார்ச் 27 ல் அதிரடியாக படையெடுத்து சென்று, பலுசிஸ்தானை தன்னுடன் இணைத்துக் கொண்டது பாகிஸ்தான்.
அன்று தொடங்கி இன்று வரை, தங்களுக்கு சுயாட்சி உரிமை வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய, பலுசிஸ்தானின் மறைந்த தலைவர் அக்பர் புக்தியின் பேரன் ப்ரஹம்தா புக்தி மற்றும் ஹர்ப்யார் மர்ரி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு பயந்து சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்நிலையில் பலுசிஸ்தானின் பூர்வகுடி மக்களை ஒடுக்க, அங்கு பழமைவாதத் தீவிரவாதிகளை குடியமர்த்தியது பாகிஸ்தான். அந்த தீவிரவாதிகள்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் மற்றும் அல் காய்தா தீவிரவாதிகளுக்கு பக்கபலமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
பிரச்னை ஏன்?
2001 ல் நிகழ்ந்த அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் படையெடுத்து, அங்கிருந்த தாலிபான் ஆட்சியை அகற்றிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரால், தாலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் திணறினர். இதனையடுத்து தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியபோது, அங்கிருந்த தீவிரவாத தலைவர்கள் பலர் பலுசிஸ்தானுக்குள் ஓடிவந்து பதுங்கிக்கொண்டனர். அவ்வாறு பதுங்கி இருக்கும் தலைவர்களின் இருப்பிடங்களை உளவுத்தகவல் மூலம் அறிந்து அமெரிக்க படையினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியபோது, தீவிரவாதிகளுடன் சேர்ந்து அப்பாவி மக்களும் ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதே உயிரிழப்புகள் பாகிஸ்தானின் மையப்பகுதியில் நிகழ்ந்திருந்தால், அந்நாட்டு அரசு கடும் எதிர்ப்பை சந்தித்து இருக்கும். ஆனால், ' கொல்லப்பட்டது அப்பாவி பலுசிஸ்தான் மக்கள்தானே…' என்ற அலட்சிய மனோபாவம் பாகிஸ்தான் அரசுக்கு இருந்ததால்தான், சம்பிரதாயத்துக்காக தங்கள் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவதாக கூறி அவ்வப்போது வெறும் கண்டனங்களை மட்டும் பாகிஸ்தான் அரசு பதிவு செய்து வந்தது. இந்நிலையில் தீவிரவாதிகள் ஒரு கட்டத்தில், பலுசிஸ்தானின் பல பகுதிகளின் அரசு நிர்வாகத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தினர்.
இதனிடையே பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற (Balochistan Liberation Army) அமைப்பினர் பாகிஸ்தானின் மையப்பகுதிக்குள் புகுந்து பல இடங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்தவும்தான், அவர்களை ஒடுக்கும் வேலைகளில் தீவிரம் காட்டியது பாகிஸ்தான் ராணுவம். இந்த நடவடிக்கையின்போதும் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு அமெரிக்க படை, தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆகிய மூன்று தரப்பாலும் வெகுவாக பாதிப்புக்குள்ளான பலுசிஸ்தான் பூர்வகுடி மக்கள், மீண்டும் தங்களது விடுதலை முழக்கங்களை உரக்க எழுப்பத்தொடங்கினர். ஆனால் அவர்களது குரல் வெளியே கேட்காதவாறு கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பாகிஸ்தான் ராணுவம். பல கிராமங்களை எரித்தும், வெடிகுண்டுகளை வீசி தாக்குதலும் நடத்தி வருவதால் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாகவும், சுமார் ஒரு லட்சம் பேர் சொந்த ஊரிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இவர்களைப்போன்றே பலுச் குடியரசு ராணுவம், பலுச் விடுதலை முன்னணி மற்றும் லஷ்கர் இ பலுசிஸ்தான் ஆகிய ஆயுத குழுக்களும் பூகோள ரீதியில் வலுவாக உள்ள தங்களது பகுதிகளில் இயங்கி வருகின்றனர்.
இந்த ஆயுத குழுக்களை தவிர்த்து, பலுச் குடியரசு கட்சி மற்றும் பலுச் தேசிய இயக்கம் ஆகிய கட்சிகளும் அரசியல் கட்சிகளுடன் பலூச் மாணவர்கள் அமைப்பும் பலுசிஸ்தான் விடுதலைக்கு குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்த மூன்று இயக்கங்களாலும் வலுவான மக்கள் ஆதரவை திரட்டமுடியவில்லை. ஏனெனில் பலுச் விடுதலைக்கு குரல் கொடுக்கும் எந்த ஒரு இயக்கத்தையும் பாகிஸ்தான் அரசு மிகக்கடுமையாக அடக்கி ஒடுக்கிவிடுவதுதான். இருப்பினும் பலுசிஸ்தான் மக்களின் விருப்பம் என்னெவெனில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே அணியில் திரண்டு போராட வேண்டும் என்பதுதான். ஆனால் அவர்களிடையே காணப்படும் யார் பெரியவன் என்ற ஈகோ மோதல் அதற்கு தடையாக உள்ளது.
மோடி எடுத்த அஸ்திரம்
இத்தகைய சூழ்நிலையில்தான் கடந்த ஜூலை 9-ம் தேதியன்று, பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லப்பட்ட 23 வயது இளைஞரான புர்ஹான் வானி-யை காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து வெடித்த கலவரமும், போராட்டமும் காஷ்மீரில் இன்னமும் அடங்கியபாடில்லை. அதே சமயம் புர்ஹான் வானி கொல்லப்பட்டதை வைத்து காஷ்மீரில் கலவரச்சூடு தணியாமல் பார்த்துக்கொள்வதில் வழக்கம்போல் பாகிஸ்தான் பின்னணியில் இருப்பதை அறிந்த இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானை தட்டிவைக்க கையிலெடுத்த அஸ்திரம்தான் 'பலுசிஸ்தான்'.
கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதியன்று, சுதந்திர தின உரையாற்றிய மோடி, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பலுசிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அங்கு உரிமைகளுக்காக போராடும் தலைவர்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் பேசியது பாகிஸ்தானை பதறவைத்ததோடு மட்டுமல்லாது, பலுசிஸ்தான் மக்களின் பிரச்னையை உலகம் உற்று நோக்க வைத்தது. கூடவே வெளிநாடுகளில் வசிக்கும் பலுசிஸ்தான் அரசியல் தலைவர்கள் இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஆதரவு தரும்படி கோர ஆரம்பித்தனர். மேலும் இப்பிரச்னையை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கிளப்பியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினர்.
சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள தலிபான் மற்றும் அல்கய்தா தீவிரவாதிகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதில் இந்தியாவைக் காட்டிலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகத் தீவிரமாக உள்ளன. எனவே அத்தீவிரவாதிகளின் புகலிடங்களில் ஒன்றாக திகழும் பலுசிஸ்தானைப் பிரித்து, ஐநா கட்டுப்பாட்டின் கீழ் தனி நிர்வாகத்தில் வைக்க வேண்டும் என அமெரிக்காவில் சில முயற்சிகள் தொடங்கியுள்ளன.
இதனிடையே, பலுசிஸ்தான் பகுதியில் பேசப்படும் பலுச்சி மொழியில் நிகழ்ச்சியை ஒலிபரப்பி வரும் அகில இந்திய வானொலி, மோடியின் சுதந்திர தின உரையை தொடர்ந்து, பலுசிஸ்தான் பிரச்னைகளையும், அம்மக்களின் கருத்துகளையும் வெளி உலகிற்கு கொண்டு சேர்க்கும் விதமாக, தனது செய்தி நேரத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஜெனீவாவில் உள்ள பலுச் குடியரசு கட்சித் தலைவர் பிரகும்தாக் புக்தியிடம் பேட்டி எடுக்க தூர்தர்ஷன் நிருபர் குழுவை அது அனுப்பி உள்ளது.
இப்படி பலுசிஸ்தானை மையமாக வைத்து பலமுனைகளில் இருந்தும் நெருக்கடிகள் சூழவும் பதறத் தொடங்கியது பாகிஸ்தான். இதனையடுத்து இந்தியா தனது வரம்பை மீறுவதாக ஆவேசப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் பான்கி மூனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்திய பிரதமர் மோடி பேசியுள்ளது முற்றிலும் தேவையற்றது என்றும், காஷ்மீரில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரச்னையிலிருந்து உலகின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே அவர் அதனை பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க உண்மை அறியும் குழு ஒன்றினை அனுப்புமாறும் அவர் அதில் கேட்டுக்கொண்டிருந்தார். நவாஸின் இந்த கடிதத்தை தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள ஐ.நா. சபையின் வருடாந்திரக் கூட்டத்திலும், அதனையொட்டி நடைபெற உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்திலும் காஷ்மீர் பிரச்னையை எழுப்பப்போவதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான்
ஆனால் பாகிஸ்தான் இனி சர்வதேச அரங்குகளில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினால், பதிலடியாக பலுசிஸ்தான் பிரச்னையை எழுப்புவது என்று மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை நன்கு உணர்ந்துகொண்ட பாகிஸ்தான், பலுசிஸ்தான் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வெளிநாட்டில் தஞ்சமடைந்து இருக்கும் அம்மாகாணத்தின் அதிருப்தி தலைவர்களை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவருமாறு தற்போது அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக பலுசிஸ்தான் குடியரசுக் கட்சித் தலைவர் பிரஹம்தக் புக்தியுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், " பலுசிஸ்தான் பிரச்னையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது. அதற்காக, வெளிநாடுகளில் வசித்து வரும் அப்பகுதி தலைவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கவும், அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும் அரசு தயாராக உள்ளது. மேலும் பலுசிஸ்தான் மாகாணத்தின் 15 ஆயிரம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அப்பகுதி விவசாயிகளுக்கு 400 கோடி ரூபாய் மானியம் அரசு அளிக்கும்." என்றார்.
இன்னொரு பங்காளதேஷா?
பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு ஒரு வகையில் மோடியின் அஸ்திரத்திற்கு கிடைத்த வெற்றிதான் என்றாலும், உண்மையிலேயே பலுசிஸ்தானை இன்னொரு பங்காளதேஷாக உருவாக்க முடியுமா என்றால், அது சாத்தியமில்லை என்று கூறுகின்றார் பலுசிஸ்தானின் மூத்த செய்தியாளரும் அரசியல் ஆய்வாளருமான சிராஜ் அக்பர். அதற்கு அவர் முக்கியமாக முன்வைக்கும் காரணங்கள், " பங்காளதேஷ் போன்று, பலுசிஸ்தான் இந்திய எல்லையையொட்டி அமைந்திருக்கவில்லை. அதன் எல்லைப்பகுதிகள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானையொட்டி அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் வழியாக போராட்டத்திற்கான உதவிகளை செய்யலாமே என்று சிலர் வாதிடலாம். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள இடங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் பலுசிஸ்தானின் பூர்வகுடி பழமைவாதிகள். அவர்கள் இந்தியாவுக்கு ஆதரவான மனநிலை கொண்டவர்கள் அல்ல." என்பதுதான்.
அப்படியானால் மோடியின் பேச்சால் பலன் யாருக்கு என்றால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மூன்று தரப்புக்கும்தான் என்று சொல்லும் அக்பர், "பலுச் மக்களை பொறுத்தவரை வெளிநாட்டு பிரதமர் ஒருவர் தங்களது பிரச்னையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவி உள்ளார். இதற்காக அவர்கள் மோடிக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை 'பலுசிஸ்தான்' இனி காஷ்மீர் குறித்து சர்வதேச அமைப்புகளில் பாகிஸ்தான் பிரச்னை எழுப்பாமல் இருக்க பயன்படப்போகும் ஒரு துருப்புச் சீட்டு.
பாகிஸ்தானை பொறுத்தவரை ஆட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள், பாகிஸ்தான் மக்களிடையே இந்தியா குறித்த வெறுப்புணர்ச்சியை மேலும் தூண்டிவிட இதனை வகையாக பயன்படுத்திக்கொள்வார்கள். 'பலுசிஸ்தானில் கிளர்ச்சியை தூண்டிவிடுவது இந்தியாதான்' என்ற பிரசாரத்தை அவர்கள் இன்னமும் வேகமாக முன்னெடுப்பார்கள். அந்த வகையில் மோடியின் பேச்சு அவர்களுக்கு சாதகமானதுதான்." என்று மேலும் கூறுகிறார்.
இருப்பினும் மோடியின் பலுசிஸ்தான் அஸ்திரம் தூதரக ரீதியில் ஒரு நல்ல நடவடிக்கை என்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக முன்னாள் செயலர் விவேக் கட்ஜு. " 'உங்களது மண்ணில் எங்களாலும் குட்டையை குழப்பமுடியும்' என்று தூதரக ரீதியில் பாகிஸ்தானுக்கு நாம் தெளிவான ஒரு செய்தியை உணர்த்திவிட்டோம். மோடியின் சுதந்திர தின உரையால் ஏற்கனவே உற்சாகமடைந்து இருந்த பலுசிஸ்தான் மக்கள், தற்போது அகில இந்திய வானொலி அவர்களது தரப்பு செய்திகளை உலகுக்கு கொண்டு செல்ல இருப்பது குறித்து மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலுசிஸ்தானின் உண்மை நிலவரத்தை பாகிஸ்தான் அரசு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வரும் நிலையில், இந்திய வானொலி மூலம் பலுசிஸ்தான் மக்கள் இனி தங்களது பிரச்னைகளையும், தங்களது நியாயமான கோரிக்கைகளையும் வெளியுலகுக்கு தெரிவிக்க முடியும்" என்கிறார் கட்ஜு மேலும்.
அதே சமயம், " பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து இந்தியா பேசுவது ஒன்றும் புதிது அல்ல; கடந்த காலங்களிலும் இதுபற்றி பேசியுள்ளது. காஷ்மீர் பிரச்னை கிளம்பும்போதெல்லாம் அதுபற்றி பேசியுள்ளது. ஆனால் பின்னர் காஷ்மீர் சூடு குறைந்ததும், அதை அப்படியே விட்டுவிடும் அல்லது மறந்துவிடும். தற்போது கூடுதலாக வானொலி பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது இந்தியா. இது ஒரு தூதரக ரீதியான மற்றும் தார்மீக ஆதரவுதானே தவிர, இந்தியா ஒன்றும் அங்கு தனது படையைக் கொண்டுபோய் நிறுத்தவில்லை. எனவே இது பெரிய அளவிலான தாக்கம் எதையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை.
மேலும் இது பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல. சீனாவின் நலன்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், அந்த நாடும் மோடியின் பேச்சால் ஆத்திரமடைந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக 3 ஆயிரம் கி.மீ. தொலைவில், பலுசிஸ்தான் வழியாக, சிபிஇசி என்னும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டல ( The China–Pakistan Economic Corridor – CPEC ) திட்டத்தை நிறைவேற்றுவதில் சீனா மிகவும் முனைப்புடன் உள்ளது. 46 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த திட்டம் சீனாவின் லட்சிய திட்டம். தெற்கு சீனகடல் பகுதி, சர்ச்சைக்குரியது என்று இந்தியா ஆய்வுபணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, இந்தியா சம்பந்தப்பட்டுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மேம்பாட்டு பணிகளை செய்வது சரியென நியாயப்படுத்தியது. இந்நிலையில் பலுசிஸ்தான் குறித்த இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கை, தங்களது பொருளாதார மண்டல திட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று பதறுகிறது. ஆனாலும் அது அத்தனை சுலபத்தில் எதனையும் விட்டுக்கொடுத்துவிடாது. அதனால்தான் இது தொடர்பாக இந்தியாவுடன் அடுத்தடுத்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி, சிபிஇசி திட்டத்திற்கு இந்தியாவினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது நம் இருநாட்டு உறவில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என எச்சரித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். " என்கிறார் முன்னாள் வெளியுறவுத் துறை செயலரான ஷியாம் சரண்.
அவரது கருத்தை ஆமோதிக்கும் இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் செயலரான லலித் மான்சிங், " 'பலுசிஸ்தான் மக்களுக்கான ஆதரவு என்பது காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் கிளறாமல் இருப்பதற்கான தந்திரமான நடவடிக்கை என்று நாம் கருதினால் அது ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கும். இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கவலையுடன் கவனிக்கக்கூடும். பங்காளதேஷ் விடுதலைக்கு முன்னர் நடைபெற்ற கிளர்ச்சி மற்றும் அதனையொட்டிய முஜிபு ரஹ்மானின் கைது நடவடிக்கை போன்றவற்றின்போது அகில இந்திய வானொலி திறம்பட பயன்படுத்தப்பட்டது. அதேபோன்று மியான்மரிலும், ஜனநாயகம் கோரி நடந்த போராட்டத்தின் தொடக்க காலத்தில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொண்டபோது, இந்திய வானொலியின் சேவை தாக்கத்தை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்களும் இந்திய வானொலியை வானளவ புகழ்ந்து தள்ளினர். ராணுவ ஆட்சியாளர்கள், தங்களது அடக்குமுறைகள் குறித்து நாட்டின் எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடாமல் பார்த்துக்கொண்ட நிலையில், நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக மியான்மர் மக்களும் இந்திய வானொலியைத்தான் கேட்டார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வானொலி ஒலிபரப்பின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது விவாதத்திற்குரியது.
பலுசிஸ்தான் குறித்து பேசுவதும், அங்குள்ள பிரச்னைகளை இந்திய வானொலி மூலம் ஒலிபரப்புவதும் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பேசி வருவதற்கான நமது பதிலடிதான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் காஷ்மீர் பிரச்னையில் நாம் மிகத்தைரியமாக, வலுவான கொள்கையை மேற்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. காஷ்மீரில் பாகிஸ்தானின் அழிவுவேலைகளை பல பத்தாண்டுகளாக நாம் தொடர்ந்து அனுமதித்துவிட்டோம். எனவே 'காஷ்மீரில் நீங்கள் விளையாண்டால் நாங்களும் பலுசிஸ்தானில் விளையாடுவோம்' என்பதை பாகிஸ்தானுக்கு பொட்டிலடித்தார்போல் உணர்த்துவதற்காக பலுசிஸ்தான் விவகாரத்தை இந்தியா சீரியசாக கையிலெடுக்க வேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் பலுசிஸ்தான் தேசியத் தலைவர்களுடன் தொடர்ந்து பேசி, வரவிருக்கும் நாட்களில் ஏராளமான சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்திட வேண்டும். அந்த தலைவர்களை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாம்; அவர்களுடன் நமது நாட்டு தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தலாம். காஷ்மீரின் ஹூரியத் தலைவர்களுக்கு பாகிஸ்தான் எப்படி வரவேற்பு கொடுக்கிறதோ, அதேபோன்று நாமும் பலுசிஸ்தான் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பளம் வரவேற்பு கொடுக்கலாம்" என்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிராக தாம் வீசிய 'பலுசிஸ்தான்' அஸ்திரத்தை எப்படி பயன்படுத்தப்போகிறார் மோடி?
நன்றி விகடன் – பா. முகிலன்
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.