தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு நல்வாழ்வை தரும்பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்.
ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரிய பகவானின் அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல்பண்டிகை அன்று, சூரியனை வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும். மழை, பனி, வெப்பம் இவை அனைத்தும் சூரியபகவானின் சஞ்சாரத்தால்தான் உண்டாகுகிறது என்கிறது சாஸ்திரம். அதுபோல சிவன், விஷ்ணு, சக்திதேவி, இவர்களுக்கு வலதுகண்ணாக சூரியபகவான் இருக்கிறார் என்கிறது புராணம்.
“ஒம்” என்ற சக்திவாய்ந்த பிரணவ மந்திரத் திலிருந்து உருவானவர் சூரிய பகவான் என்கிறது மார்க்கண்டேய புராணம். சூரிய பகவானை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும். தேவர்களின் ஆசி கிடைக்கும். விரோதம் மறையும்.
பொங்கல் திருநாள் அன்று, சூரிய பகவானுக்கு பூஜைசெய்து வழிபட்டால் பலநன்மைகள் ஏற்படும். நம்மை காக்கவே சூரிய பகவான் எந்நேரமும் காத்திருக்கிறார். அதனால் தான் தினமும் நாள் தவறாமல் சரியானநேரத்தில் வானத்தில் ஆஜராகி விடுகிறார்.
முன்னொரு காலத்தில் காலவமுனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. இறைவனை வணங்கியும் நோய் நீங்கவில்லை. “செய்தபாவம் அனுபவிக்க வேண்டும், அது உன் விதி. என்று கூறிவிட்டார் பிரம்ம தேவன். தன் நோய் குணமடைய வரம்வேண்டி, நவகிரகங்களை நினைத்து வழிபட்டார் காலவ முனிவர்.
நவகிரகங்கள் காலவ முனிவருக்கு உதவ முன்வந்தனர். இதில் முனிவரின் பக்தியை பாராட்டி, முனிவரின் முன்ஜென்ம விதியின்படி அனுபவிக்க வேண்டிய பாவங்களை போக்கி, முனிவரை பரி பூரணமாக குணப் படுத்தினார் நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவான்.
அதனால் பிரம்மதேவனின் சாபத்திற்கு ஆளானார் சூரியபகவான். தான் கஷ்டபட்டாலும், தன்னைவணங்கும் பக்தர்கள் கஷ்டப்படக் கூடது என்ற உயர்ந்த எண்ணத்தில் தோஷங்களையும் கர்மாக்களை நீக்கி, நல்வாழ்வுதர சூரியபகவான் எந்நேரமும் நமக்கு அருள்புரிய காத்திருக்கிறார். அப்படிபட்ட உயர்ந்தகுணம் கொண்ட சூரியபகவானை வணங்கி, நன்றி தெரிவிக்கும் நாள்தான் பொங்கல் திருநாள்.
இந்த நன்னாளில் நல்ல நேரம் பார்த்து, பொங்கல் பானையிலோ அல்லது குக்கரிலோ பொங்கல் செய்யவேண்டும். பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும் போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள்கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்திகாட்டி வணங்க வேண்டும்.
சூரியபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வணங்கினால் இன்னும் சிறப்பு. இப்படிமுறையாக மகிழ்ச்சியுடன் பொங்கல் திரு நாளை கொண்டாடி, சூரியபகவானின் கருணை பார்வையை பெற்று பல்லாண்டு பல்லாண்டு தலைமறை தலைமறையாக மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
Leave a Reply
You must be logged in to post a comment.