ராஜதந்திரத்தின் வெற்றி!

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதன் பின்னணியில், நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய ராஜதந்திரம் அடங்கி இருக்கிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததுமுதலே இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமான நெருக்கம் அதிகரித்திருக்கிறது. அந்த நெருக்கத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது அபுதாபி இளவரசர் நமது 68-ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்றது.


1991 வரை இந்தியா மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தது. அதை மாற்றி, இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் கிழக்கு நோக்கிய கவனத்தில் முனைப்புக் காட்ட முற்பட்டது நரசிம்ம ராவ் அரசுதான். அதேபோல இப்போது நரேந்திர மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையில் மேற்கு நோக்கிய கவனம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகள் மட்டுமல்லாமல், மேற்கு ஆசியாவில் கூடுதல் கவனம் செலுத்தும் முனைப்பு காணப்படுகிறது. இந்தியாவைப் போலவே மேற்கு ஆசிய நாடுகளும், அங்கே ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுத் தங்கள் கவனத்தை இந்தியா பக்கம் திருப்ப முற்பட்டிருப்பது நமக்கு சாதகமாகியிருக்கிறது.


இந்திரா காந்திக்குப் பிறகு, ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் அரபு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றது 2015-இல்தான். பிரதமர் நரேந்திர மோடியின் அரபு நாடுகள் விஜயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய – இஸ்ரேல் உறவின் நெருக்கம் மிகவும் அதிகரித்திருந்தும்கூட, அரபு நாடுகளுடனான நமது நெருக்கத்தை அது பாதிக்கவில்லை. அதற்கு சில காரணங்கள் இல்லாமல் இல்லை.


மேற்கு ஆசியாவில் காணப்படும் ஷியா முஸ்லிம்களின் எழுச்சியும், ஈரானும் அமெரிக்காவும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நெருக்கமும் பல அரேபிய சன்னி முஸ்லிம் நாடுகளை, குறிப்பாக, சவூதி அரேபியாவையும் ஐக்கிய அரபு அமீரகத்தையும் கவலைப்பட வைத்திருக்கிறது. நீண்டகாலமாக, இந்த இரண்டு நாடுகளும் பாகிஸ்தானுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பவை. அப்படி இருந்தும்கூட, யேமனில் ஷியாக்களின் எழுச்சியை அடக்க ராணுவ உதவி கோரப்பட்டபோது, பாகிஸ்தான் மறுத்தது உறவில் விரிசலை ஏற்படுத்தியது. அபுதாபி அரச குடும்பம் இந்தியாவுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ள அது காரணமாக அமைந்தது.


அதேபோல, தீவிரவாதத்திற்கும், சமூகவிரோத சக்திகளுக்கும் அடைக்கலம் தரப்படும் இடம் என்கிற கண்ணோட்டத்தை மாற்றி, ஐக்கிய அரபு அமீரகத்தை சிங்கப்பூர், ஹாங்காங் போல, ஒரு பொருளாதார மையமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறது அபுதாபி அரச குடும்பம். குறிப்பாக, துபை வர்த்தக, சுற்றுலா நகரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.


இந்தியாவுடனான நெருக்கம், பாகிஸ்தானுடனான நெருக்கத்தைவிட சிறந்த பொருளாதார உறவுக்குப் பயன்படும் என்று அமீரகம் கருதுவதற்குக் காரணம் உண்டு. இந்தியக் கோடீஸ்வரர்கள் பலருடைய பணம் துபையில்தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிய கருப்புப் பணத்தைவிட துபையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் தொழில்துறையினரின் கருப்புப் பணம்தான் அதிகம்.


எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்டுக் கிடந்த ஈரான் இப்போது அணுஆயுத பலத்துடனும், அமெரிக்க நட்புறவுடனும் பலம் பெற்றிருப்பது மேற்காசிய நாடுகளுக்கு இடையேயான அதிகார சமன்பாட்டை மாற்றியிருக்கிறது. அமீரகம், சவூதி அரேபியா, குவைத் ஆகிய சன்னி முஸ்லிம் நாடுகளால் ஈரான் போன்ற ஷியா முஸ்லிம் நாடு வலிமை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் சன்னி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்தியாவுடனான நட்புறவு, தங்களுக்கு அதிக வலிமையைத் தரக்கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


ஒரு காலத்தில் பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான நட்புறவு பாராட்டி வந்த நாடு அமீரகமாகத்தான் இருந்தது. இஸ்லாமாபாத் அரசியல்வாதிகளின் கருப்புப் பணம் மொத்தமுமே அங்கேதான் முதலீடு செய்யப்பட்டிருந்தது. மும்பை தாக்குதலின் பின்னணியில் உள்ள தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்த நாடும் அமீரகம்தான். அப்படிப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம் இப்போது இந்தியாவுடன் நெருக்கமாகி இருக்கிறது என்றால், அது நிச்சயமாக மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி என்றுதான் கருத வேண்டும்.


ஏறத்தாழ 26 லட்சம் இந்தியர்கள் அமீரகத்தில் வாழ்கிறார்கள். அதாவது, மொத்த மக்கள்தொகையில் 30%. இந்தியாவுக்கு அதிகமாக கச்சா எண்ணெய் வழங்கும் நான்கு நாடுகளில் அமீரகமும் ஒன்று. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஏறத்தாழ 65,000 கோடி டாலர் (சுமார் ரூ.44 லட்சம் கோடி). 2012 நிலவரப்படி, மேற்கு ஆசியாவிலிருந்து மட்டும், அங்கே வேலை செய்யும் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிய பணம் 31,000 கோடி டாலர் (சுமார் ரூ.21 லட்சம் கோடி). அதில் அமீரகத்தின் பங்கு 15,700 கோடி டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி).
ஐக்கிய அரபு அமீரகத்துடனான நட்புறவால், இந்தியாவுக்கு முதலீடுகள் வந்து குவியுமானால் அதைவிடப் பெரிய நன்மை வேறு எதுவும் இருக்க முடியாது. இரண்டு தரப்புக்குமே நன்மை பயக்கும் இந்த நட்புறவை அபுதாபி இளவரசரின் விஜயம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு தரப்புக்குமே இது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி!

நன்றி தினமணி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...