இனி வி.ஐ.பி., கிடையாது; இ.பி.ஐ., தான்: ஒவ்வொரு நபரும் முக்கியமானவர்களே

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். ஒவ்வொரு மனதின் குரலுக்கு முன்பாகவும், நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும், அனைத்து வயதினரிடமிருந்தும், மனதின்குரல் தொடர்பாக ஏராளமான ஆலோசனைகள் வந்து குவிகின்றன. ஆகாசவாணிக்கு எழுதுகிறார்கள், NarendraModiAppஇல் வருகின்றன, MyGov வாயிலாக வருகின்றன. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் காலம் ஒதுக்கி அவற்றைப் பார்க்கிறேன்,

 

இது எனக்கு ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது. பன்முகத்தன்மை நிறைந்த ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சக்திகள் நிறைந்து காணப்படுகின்றன. ஒரு சாதகனைப் போல சமூகப் பணியில் பலர் ஈடுபட்டு அளவேயில்லாத பங்களிப்பை நல்கி வருகிறார்கள், அவர்கள் பணியாற்றும் துறைகளில் அரசின் பங்களிப்பு கூட இல்லாமல் இருக்கலாம், அந்த அளவு பிரச்சனைகளும் ஏராளமாக காணக் கிடைக்கின்றன. இவற்றுக்கு அரசு அமைப்புகளும், மக்களும் பழகிப் போயிருக்கலாம். குழந்தைகளின் எதிர்பார்ப்புக்கள், இளைஞர்களின் பேராவல்கள், பெரியோர்களின் அனுபவங்களின் ஆற்றல் என பலவகையான விஷயங்கள் கண்முன்னே வருகின்றது. ஒவ்வொரு முறையும் இத்தனை ஆற்றல்மிக்க உள்ளீடுகள் மனதின் குரலில் வருகின்றன, ஆலோசனை எந்த மாதிரியானவை, புகார்கள் எந்த வகைப்பட்டவை, மக்களின் அனுபவம் என்ன என்பது பற்றி அரசு தரப்பில் விபரமான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது என்பது மனிதர்களின் இயல்பாக இருக்கிறது என்பதை நாம் பொதுவாகப் பார்க்கலாம்.

ரயில் வண்டிகளில், பேருந்துகளில் நாம் பயணிக்கும் போது, யாருக்காவது இருமல் வந்து விட்டால் உடனே யாராவது ஒருவர் இப்படிச் செய்யுங்கள் என்று ஆலோசனைகள் அளிப்பது, அறிவுரை கூறுவது போன்றவை இங்கே நமது இயல்பாகவே அமைந்திருக்கிறது. தொடக்கத்தில் மனதின் குரலுக்கு ஆலோசனைகள் வந்த போது, அவற்றில் ஆலோசனைகள் என்ற சொல் காணப்பட்டது, பலருக்கு இது ஒரு பழக்கமாக இருக்கலாம் என்று தான் எங்கள் அணியைச் சார்ந்தவர்களுக்குப் பட்டது,

 

ஆனால் நாங்கள் அதை அணுகிப் பார்க்க முயற்சித்த போது, உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன். அதிகப்படியான ஆலோசனைகள் அளிப்பவர்கள், என் காதுகளை எட்ட முயற்சி செய்பவர்கள் யாரென்று பார்த்தால், அவர்கள் தங்கள் வாழ்கையில் ஆக்கபூர்வமாக ஒன்றை செய்து கொண்டிருப்பவர்கள். தங்கள் பணிகளில் தங்கள் புத்தி, ஆற்றல், திறன் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சூழலுக்கு ஏற்ப ஈடுபட்டிருப்பவர்கள். இந்த விஷயங்கள் எல்லாம் என் கவனத்திற்கு வந்த போது இந்த ஆலோசனைகள் சாதாரணமானவை அல்ல என்று நான் உணர்ந்தேன். இவை பழுத்த அனுபவத்தின் வெளிப்பாடுகள். ஒரு கருத்து சில இடங்களில் வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால், அதைப் பற்றி மேலும் பலர் தெரிந்து கொள்ளலாமே, அதன் மூலம் அது மேலும் பரவுமே, இதனால் மேலும் பலருக்கு நலன்கள் கிடைக்குமே என்ற எண்ணத்திலும் சிலர் தங்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

ஆகையால் தான் மனதின் குரலில் தங்கள் கருத்துக்கள் இடம்பெற வேண்டும் என்ற இயல்பான ஆவல் அவர்கள் மனதில் இருக்கிறது. இவையனைத்துமே என் பார்வையில் ஆக்கபூர்வமானவை தாம். அதிகப்படியான ஆலோசனைகள் கர்மயோகிகளாக இருக்கும் செயல்வீரர்களிடமிருந்து தான் கிடைக்கப் பெறுகிறது, அவர்கள் மனதில் எப்போதும் சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற பேராவல் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமல்ல, நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், அதுபற்றி மக்களிடமிருந்து வரும் வெளிப்பாடுகள் மிகவும் ஆனந்தம் அளிப்பவையாக இருக்கின்றன.

கடந்த மனதின் குரலில் உணவு வீணாவது பற்றி சிலர் ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள், இது தொடர்பாக தங்கள் கவலைகளை வெளியிட்டார்கள், அதை நானும் வெளிப்படுத்தியிருந்தேன். நான் சுட்டிக்காட்டிய பிறகு NarendraModiAppஇல், MyGovஇல் எல்லாம் நாட்டின் மூலைமுடுக்குகளிலிருந்து எல்லாம், உணவு வீணாகாமல் தடுக்கும் பொருட்டு புதுமையான வழிமுறைகளைக் கையாண்டு என்னவெல்லாம் செயல்களில் ஈடுபட்டார்கள் தெரியுமா? சிறப்பாக நம் நாட்டின் இளைய தலைமுறையினர், நீண்ட காலமாகவே இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை.

சில சமூக அமைப்புகள் செய்து வருகின்றன என்பதை நாம் பல ஆண்டுகளாக அறிவோம், ஆனால் என் தேசத்தின் இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் – இது எனக்குப் பின்னர் தான் தெரிய வந்தது. பலர் எனக்கு வீடியோக்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். பல இடங்களில் ரொட்டி வங்கி நடத்தப்படுகின்றன. மக்கள் ரொட்டி வங்கியில், தங்கள் தரப்பிலிருந்து ரொட்டியை அளிக்கிறார்கள், காய்கறிகளை கொண்டு வந்து தருகிறார்கள், யாருக்குத் தேவையோ, அவர்கள் வந்து இவற்றைப் பெற்றுச் செல்கிறார்கள். அளிப்பவருக்கும் மகிழ்ச்சி, வாங்கிச் செல்பவரும் தங்களைத் தாழ்வாக நினைக்கத் தேவை இருப்பதில்லை. சமுதாயத்தில் ஒத்துழைப்போடு எப்படி செயல்படுவது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.


இன்று ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள். இன்றுடன் ஏப்ரல் மாதம் நிறைவுக்கு வருகிறது. குஜராத், மஹாராஷ்ட்ர மாநிலங்களின் நிறுவன நாள் மே மாதத்தில் வருகிறது. இந்த வேளையில் இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த மக்களுக்கும் என் சார்பாக நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள். இரு மாநிலங்களும் புதிய புதிய வளர்ச்சி சிகரங்களை எட்ட தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்திருக்கின்றன. இரு மாநிலங்களிலுமே தொடர்ந்து மஹாபுருஷர்கள் தோன்றி வந்திருக்கிறார்கள், சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் அவர்களின் வாழ்கை நமக்கு உத்வேகம் அளித்து வந்திருக்கிறது. இந்த மஹாபுருஷர்களை நினைவில் கொண்டு, மாநிலங்களின் நிறுவன நாளன்று, 2022ஆம் ஆண்டு, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் நாம் நமது மாநிலங்களை, நமது தேசத்தை, நமது சமூகத்தை, நமது நகரத்தை, நமது குடும்பத்தை எந்த நிலைக்கு உயர்த்துவது என்ற உறுதிப்பாட்டை நாம் மாநிலங்களின் நிறுவன நாளன்று மேற்கொள்ள வேண்டும். அந்த உறுதிப்பாட்டை மெய்யாக்க திட்டங்கள் தீட்ட வேண்டும், அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்போடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். நான் மீண்டும் இந்த இரு மாநில மக்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு காலத்தில் சூழல் மாற்றம் என்பது கல்வியாளர்கள், கருத்தரங்குகள் மட்டத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த விஷயமாக இருந்து வந்தது. ஆனால் இன்றோ, நமது அன்றாட வாழ்கையில், நாம் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், திகைப்பு மேலிடுகிறது. இயற்கை, தனது ஆட்டத்தின் விதிமுறைகளை எல்லாம் மாற்றி அமைத்து விட்டது. நமது தேசத்தில் மே-ஜூன் மாதங்களில் நாம் காணும் வெப்பத்தை இந்த முறை மார்ச்-ஏப்ரல் மாதங்களிலேயே அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. மனதின் குரலுக்கு மக்களின் ஆலோசனைகளை நான் பரிசீலித்துக் கொண்டிருந்த வேளையில், அதிகப்படியான ஆலோசனைகள் வெப்பக்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியவையாக அமைந்திருந்தன. அனைத்து விஷயங்களும் அறியப்பட்டவை தான், புதியவை என்று இல்லை என்றாலும், சரியான வேளையில் அவற்றை மீண்டும் நினைத்துப் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


ப்ரஷாந்த் குமார் மிஷ்ர, டி.எஸ். கார்த்திக் போன்ற பல நண்பர்கள் பறவைகள் பற்றிய தங்கள் கரிசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பால்கனியில், மேல்மாடிகளில், தண்ணீர் வைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். குடும்பத்தில் சின்னச்சின்ன பாலகர்கள் கூட இந்த விஷயத்தை சிறப்பாக செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பது அவர்கள் கருத்தில் பதிந்து விட்டால், அவர்கள் ஒரு நாளில் பத்து முறை, பாத்திரத்தில் நீர் இருக்கிறதா என்று பார்த்து விட்டு வருவார்கள். அது மட்டுமில்லாமல் பறவைகள் வந்து நீர் அருந்துகின்றனவா என்றும் கண்கொத்திப் பாம்பாக கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது ஏதோ ஒரு விளையாட்டுப் போல நமக்குத் தோன்றலாம், ஆனால் உண்மையில், அந்தப் பிஞ்சு மனங்களில் கருணையின் அற்புதமான அனுபவம் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கிறது. பறவைகள்-விலங்குகளோடு சற்றாவது ஈடுபாடு ஏற்பட்டு விட்டால் ஒரு புதிய ஆனந்தம் உங்கள் மனங்களில் துளிர்ப்பதை நீங்களே கூட கண்டு உணரலாம்.


சில நாட்கள் முன்பாக குஜராத்தைச் சேர்ந்த ஜகத் பாய் அவர்கள் எனக்கு ஒரு புத்தகத்தை அனுப்பி இருந்தார், Save the Sparrows என்ற தலைப்பிலான இந்தப் புத்தகத்தில் அவர் குறைந்து வரும் குருவிகள் எண்ணிக்கை குறித்துத் தன் கவலையை வெளிப்படுத்தி இருந்தார். அதே வேளையில் மனமொருமித்த சிந்தையோடு அவற்றைக் காக்க என்ன என்ன முயற்சிகளை மேற்கொண்டார், என்ன மாதிரியான வழிமுறைகளைக் கையாண்டார் என்பது பற்றியெல்லாம் அருமையாக அந்தப் புத்தகத்தில் விவரித்திருந்தார். நம் நாட்டில் பறவைகள்-விலங்குகள், இயற்கை இவற்றுடனான இசைவான வாழ்க்கை ஆகியன இயல்பாக அமைந்தவை, நம் நாடி நரம்புகளில் கலந்தவை; ஆனால் அதே வேளையில் சமுதாய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு வலு சேர்க்க வேண்டும் என்பது முக்கியம். நான் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வேளையில் ‘தாவூதி போஹ்ரா சமுதாயத்தின்’ தர்மகுரு சையத்னா சாஹபுக்கு 100 ஆண்டுகள் ஆகியிருந்தன. அவர் 103 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார். அவருக்கு 100 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் Burhani Foundation வாயிலாக, குருவிகளைக் காப்பதற்காக ஒரு மிகப் பெரிய இயக்கத்தை நடத்தினார்கள். இதைத் தொடக்கி வைக்கும் பேறு எனக்குக் கிட்டியது. சுமார் 52000 bird feederகள் / பறவைகளுக்கு உணவளிக்கும் கருவிகளை அவர்கள் உலகின் மூலை முடுக்கெங்கும் விநியோகம் செய்தார்கள். கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் கூட இதற்கு இடம் கிடைத்தது.


சில வேளைகளில் நாம் எந்த அளவுக்கு பரபரப்பாக இருக்கிறோம் என்றால், பால்காரர், காய்கறி விற்பனை செய்பவர், தபால்காரர் என யார் நமது வீட்டு வாயிலில் வந்தாலும், இந்தக் கோடை வெப்பத்தில் குடிக்க ஒரு வாய் நீர் அருந்துகிறீர்களா என்று கேட்க கூட நாம் மறந்து போகிறோம்.


என் இளைய நண்பர்களே, சில விஷயங்களை நான் உங்களுடனும் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். சில வேளைகளில் நமது இளைய தலைமுறையினரில் பலர் comfort zoneஇல், சொகுசு வட்டத்தில் வாழ்கை வாழ விரும்புகிறார்கள் என்பது எனக்கு சில வேளைகளில் கவலையை அளிக்கிறது. தாய் தந்தையர் அவர்களை மிகவும் பாதுகாப்பான முறையில் பேணி வளர்க்கிறார்கள். இப்படி ஒரு ரகம் என்றால் இன்னொரு ரகத்தினரும் இருக்கிறார்கள், ஆனால் அதிகம் பேர்கள் சொகுசு வட்டத்திலேயே இருக்கிறார்கள். இப்போது தேர்வுகள் முடிந்திருக்கின்றன. விடுமுறைகளைக் கழிக்க நீங்கள் திட்டங்களைத் தீட்டியிருப்பீர்கள். வெப்பம் நீங்கிய பிறகு கோடை விடுமுறை தான் சற்று இனிமையாக இருக்கும். ஆனால் உங்கள் நண்பன் என்ற முறையில் விடுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிலர் இதைக் கண்டிப்பாக செயல்படுத்துவீர்கள், என்னிடம் தெரிவிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் விடுமுறைக் காலத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள நான் 3 ஆலோசனைகளை அளிக்கிறேன், அவற்றில் மூன்றையுமே நீங்கள் செயல்படுத்தினால் சிறப்பு, ஆனால் அவற்றில் ஏதாவது ஒன்றையாவது செய்ய முயலுங்களேன். ஒரு புதிய அனுபவத்தைப் பெறுங்கள், முயன்று ஒரு புதிய திறனை அடையுங்கள், யாருமே கேள்விப்படாத, பார்க்காத, எண்ணியிராத, தெரிந்திராத ஒரு இடத்துக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்து சென்று வாருங்கள்.

புதிய இடங்கள், புதிய அனுபவங்கள், புதிய திறன்கள் கிடைக்கும். ஒரு விஷயத்தை டிவியில் பார்ப்பது அல்லது புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வது அந்த விஷயத்தைத் தானே அனுபவித்து உணர்வது ஆகியவற்றுக்கு இடையே வானத்துக்கும் பூமிக்கும் இடையேயான வேறுபாடு இருக்கும். இந்த விடுமுறைக் காலத்தில் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, எதை அறிந்து கொள்ள முயல்கிறீர்களோ, ஒரு புதிய பரிசோதனையாக அதைச் செய்து பாருங்கள். பரிசோதனை ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும், உங்கள் சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.

நாம் மத்தியத்தட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சுகமான குடும்பத்தவர்கள். ஆனால் முன்பதிவு செய்யாமல் ரயிலில் 2ஆம் வகுப்புச் சீட்டு எடுத்து ஏறிச் செல்லுங்கள், குறைந்தது 24 மணி நேரமாவது பயணம் மேற்கொள்ளுங்கள். என்ன அனுபவம் கிடைக்கிறது என்று பாருங்கள். அந்தப் பயணிகள் என்ன பேசிக் கொள்கிறார்கள், அவர்கள் ரயில் நிலையங்களில் இறங்கி என்ன செய்கிறார்கள், ஆண்டு முழுவதும் உங்களால் கற்க முடியாததை நீங்கள் 24 மணி நேரத்தில் முன்பதிவு செய்யப்படாத, கூட்ட நெரிசல் மிகுந்த ரயிலில் தூங்கக் கூட முடியாத நிலையில், நின்று கொண்டே பயணிக்கும் அனுபவம் மூலமாக நீங்கள் பெறுவீர்கள். ஒருமுறை அனுபவித்துத் தான் பாருங்களேன்!

இப்படி மீண்டும் மீண்டும் செய்யுங்கள் என்று நான் கூறவில்லை, ஒன்றிரண்டு முறையாவது செய்து பாருங்கள். மாலை நேரத்தில் உங்கள் கால்பந்தையோ, கூடைப்பந்தையோ எடுத்துக் கொண்டு அல்லது வேறு விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் பரம ஏழைகளின் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லுங்கள். அங்கிருக்கும் ஏழைக் குழந்தைகளோடு விளையாடிப் பாருங்கள், இதுவரை உங்கள் வாழ்கையில் விளையாடும் போது கிடைத்திராத ஆனந்தம் அப்போது உங்களுக்கு கிடைப்பதை நீங்கள் உணர்வீர்கள். சமுதாயத்தில் இப்படி ஏழ்மையில் உழலும் பிள்ளைகளுக்கு உங்களோடு விளையாடும் ஆனந்தம் கிடைக்கும் போது, அவர்கள் வாழ்கையில் எத்தனை பெரிய மாறுதல் ஏற்படும் என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா?

 

நீங்கள் ஒருமுறை சென்றால், மீண்டும் மீண்டும் அங்கே செல்லவேண்டும் என்று உங்கள் மனம் ஆசைப்படும். இந்த அனுபவம் உங்களுக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கும். பல தன்னார்வு அமைப்புகள் சேவையில் ஈடுபடுகின்றன. நீங்கள் கூகுள் குருவோடு உங்களை இணைத்துக் கொண்டு தேடுங்கள். ஏதோ ஒரு அமைப்போடு 15 நாட்கள், 20 நாட்கள் என உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். சில வேளைகளில் கோடை முகாம் நடத்தப்படும், ஆளுமை வளர்ச்சி முகாம் நடத்தப்படும், பலவகையான ஆக்கபூர்வமான முகாம்கள் நடத்தப்படும், அவற்றோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட முகாம்களில் கலந்து கொண்டு நீங்கள் தேர்ச்சி பெற்ற பிறகு, இலவசமாக, ஒரு சேவையாக நீங்கள் கற்றுக் கொண்டவற்றை, இவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏதும் இல்லாத ஏழைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.

 

எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். தொழில்நுட்பம் என்பது தூரங்களைக் குறைக்கவும், எல்லைகளைத் தகர்க்கவும் ஏற்பட்டன என்று கருதினாலும், இவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் என் மனத்தை அரித்துக் கொண்டிருக்கிறது. ஒரே வீட்டில் 6 பேர் ஒரே அறையில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு இடையிலான தொலைவு பற்றிக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஏன்? ஒவ்வொருவரும் தொழில்நுட்பம் காரணமாக அமிழ்ந்து போயிருக்கிறார்கள். சமூக இயல்பு என்பது ஒரு நல்ல விழுமியம், சமூக இயல்பு ஒரு ஆற்றல். நான் தெரிவித்த இன்னொரு விஷயம் திறன்கள் பற்றியது. ஏதாவது புதிய ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உங்கள் மனம் விரும்பவில்லையா? இது போட்டிகள் நிறைந்த உலகம். தேர்வுகளில் நாம் தோய்ந்து போயிருக்கிறோம். மிகச்சிறப்பான மதிப்பெண்களைப் பெற நாம் முனைந்திருக்கிறொம். விடுமுறைக்காலத்திலும் கூட சிலர் பயிற்சி வகுப்புக்களுக்குச் செல்கிறார்கள், அடுத்த தேர்வு பற்றிய கவலை அரித்துக் கொண்டிருக்கிறது. சில வேளைகளில் நமது இளைய தலைமுறை ரோபோவாக மாறி வருகிறதோ என்ற அச்சம் கூட ஏற்படுகிறது. இயந்திர வாழ்கையையா வாழ்கிறது நமது இளைய தலைமுறை!!


நண்பர்களே, வாழ்கையில் உயர நாம் காணும் கனவுகள் எல்லாம் நல்ல விஷயங்கள் தாம், ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லது தான், அப்படி சாதித்தும் காட்ட வேண்டும். ஆனால் நமக்குள்ளே இருக்கும் மனிதக் கூறுகளை நாம் குறுக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நமது மனிதத்துவத்தை விட்டு நாம் விலகிச் சென்று விடாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். திறன் மேம்பாடு என்பதன் மீது நாம் சற்று கவனம் செலுத்த முடியாதா என்ன! தொழில்நுட்பத்திலிருந்து சற்று விலகி, நம்முடன் நாம் நேரத்தை செலவு செய்யும் முயற்சி.

இசைக்கருவி ஏதோ ஒன்றை வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம், ஏதோ ஒரு புதிய மொழியின் 5 முதல் 50 வாக்கியங்கள் வரை கற்கலாம், அது தமிழோ, தெலுகுவோ, அஸாமியாவோ, பாங்க்லாவோ, மலையாளமோ, குஜராத்தியோ, மராட்டியோ, பஞ்சாபியோ, ஏதோ ஒரு மொழியாகட்டும். பன்முகத்தன்மை நிறைந்தது நம் நாடு, நாம் நம் பார்வையை சுற்றும்முற்றும் திருப்பினால், கற்றுக் கொடுக்க யாராவது கிடைப்பார்கள்.

நீச்சல் தெரியவில்லை என்றால் நீச்சல் கற்றுக் கொள்ளலாம், வரையக் கற்கலாம், மிகச் சிறப்பாக வரைய வராமல் போகலாம், ஆனால் காகிதத்தில் மைதீட்டக் கற்கலாமே! உங்கள் உள்ளத்தில் உள்ள உணர்வுகள் அதில் பிரதிபலிக்கத் தொடங்கும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட, நாம் ஏன் கற்க கூடாது, கற்றுக் கொள்ளலாமே என்று தோன்றும். நீங்கள் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா, ஆட்டோ ரிக்ஷா ஓட்ட மனம் விரும்புகிறதா, ஓட்டக் கற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கலாம், ஆனால் 3 சக்கர சைக்கிளை ஓட்ட முயற்சி செய்யுங்கள். இந்த அனைத்துத் திறன்களும், இந்தச் செயல்பாடுகளும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதை நீங்கள் உணர்வீர்கள்,

அது மட்டுமில்லாமல் உங்களை ஒரு சார்பாகக் கட்டி வைத்திருந்த கட்டுக்கள் விலகும். வித்தியாசமாக எதையாவது செய்யுங்கள் நண்பர்களே! உங்கள் வாழ்கையை அமைத்துக் கொள்ள இதுதான் உங்களின் வாய்ப்பு. அனைத்துத் தேர்வுகளும் முடிந்த பிறகு, உங்கள் தொழிலில் புதிய ஒரு நிலைக்கு வந்த பிறகு இதை எல்லாம் நான் கற்பேன் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்று சொன்னால், அந்த வாய்ப்பு உங்களுக்கு கிட்டவே கிட்டாது. அப்போது நீங்கள் வேறு ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம், ஆகையால்தான் நான் உங்களிடம் கூற விரும்புவது என்னவென்றால், மேஜிக் கற்றுக் கொள்ளும் நாட்டம் இருக்கிறதா, சீட்டுக்கட்டு மேஜிக்கை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களிடத்தில் இதைச் செய்து காட்டி மகிழுங்கள். உங்களுக்குத் தெரியாத ஏதாவது ஒன்று இருந்தால், அதைக் கற்றுக் கொள்ள முயலுங்கள்,

இதனால் உங்களுக்கு கண்டிப்பாக நன்மையே ஏற்படும். உங்களுக்குள்ளே இருக்கும் ஆக்கபூர்வமான ஆற்றல்களை விழித்தெழச் செய்யுங்கள். இது வளர்ச்சிக்கான அருமையான தளம் அமைத்துக் கொடுக்கும். என் அனுபவத்தில் நான் கண்டுணர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே, உலகில் நாம் கற்றுப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனை இருக்கின்றன என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. புதிய புதிய இடங்கள், புதிய புதிய நகரங்கள், புதிய புதிய கிராமங்கள், புதிய புதிய வட்டாரங்கள் என ஏராளம் இருக்கின்றன. ஆனால் அங்கே செல்லும் முன்பாக, நீங்கள் எங்கே செல்கிறீர்கள் அதைப் பற்றித் தெரிந்து கொண்டு, கற்றுக் கொள்ளும் ஆவலோடு சென்று பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள், மக்களோடு கலந்துரையாடுங்கள், உறவாடுங்கள், இந்த முயற்சியில் ஈடுபடும் போது கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்; அதிகம் பயணிக்க நினைக்காதீர்கள். ஓரிடம் சென்று அங்கே 3-4 நாட்கள் செலவிடுங்கள், பிறகு அடுத்த இடம் சென்று அங்கே 3-4 நாட்கள் செலவு செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் கிடைக்கும். நீங்கள் செல்லும் இடங்கள் பற்றிய படங்களை எனக்குக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அங்கே புதியதாக என்ன பார்த்தீர்கள், எங்கே சென்றீர்கள் என்பது பற்றியெல்லாம் நீங்கள் Hash tag Incredible India என்பதைப் பயன்படுத்தி இந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


நண்பர்களே, இந்த முறை பாரத அரசும் கூட உங்களுக்கு மிக அருமையான வாய்ப்பை அளித்திருக்கிறது. புதிய தலைமுறையினர் கிட்டத்தட்ட ரொக்கப் பரிவர்த்தனையை விடுத்திருக்கிறார்கள். அவர்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நீங்கள் என்னவோ இதில் ஈடுபடுகிறீர்கள் ஆனால் இந்தத் திட்டத்தின் மூலமாக நீங்கள் சம்பாதிக்கவும் முடியும். பாரத அரசின் ஒரு திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் BHIM App, அதாவது பீம் செயலியை தரவிறக்கம் செய்திருப்பீர்கள், அதைப் பயன்படுத்தியும் வருவீர்கள். ஆனால் வேறு ஒருவருக்கு இதை பரிந்துரை செய்யலாம். மற்றவர்களை இதனோடு நீங்கள் இணைக்கலாம்,

அந்தப் புதிய நபர் 3 பரிவர்த்தனைகளை இதன் மூலம் செய்தால், இதற்காக உங்களுக்கு 10 ரூபாய் வருமானம் கிடைக்கும். உங்கள் கணக்கில் அரசு தரப்பில் 10 ரூபாய் சேர்க்கப்படும். ஒரு நாளில் நீங்கள் 20 பேர்களை இதில் சேர்த்தீர்கள் என்று சொன்னால், மாலைக்குள்ளாக உங்கள் இருப்பில் 200 ரூபாய் வரவில் வைக்கப்படும். வியாபாரிகளும் இதன் மூலம் சம்பாதிக்கலாம், மாணவர்களும் இதன் மூலம் வருமானம் காணலாம். இந்தத் திட்டம் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வரை இருக்கும். டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க நீங்கள் உங்கள் பங்களிப்பை நல்குங்கள். புதிய இந்தியாவின் காப்பாளர்கள் நீங்கள். விடுமுறைக்கு விடுமுறையும் ஆயிற்று, சம்பாத்தியத்திற்கு சம்பாத்தியம். பரிந்துரை செய்வேன், பணம் சம்பாதிப்பேன். இந்த முழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.


பொதுவாக நமது தேசத்தில் VIP கலாச்சாரத்துக்கு எதிராக வெறுப்பு நிறைந்த ஒரு சூழல் நிலவினாலும், இந்தக் கலாச்சாரம் எந்த அளவுக்கு ஆழமாக இருக்கிறது என்பது எனக்கு இப்போது தான் விளங்கியது. என்னதான் முக்கியஸ்தராக இருந்தாலும், இந்தியாவில் அவரது வண்டியில் சிவப்பு விளக்கைப் போட்டுக் கொண்டு வலம் வரக் கூடாது என்று அரசு தீர்மானித்து ஆணை பிறப்பித்திருக்கிறது. இது ஒரு வகையான VIP கலாச்சாரத்தின் அடையாளமாகி விட்டது, ஆனால் சிவப்பு விளக்கு வாகனத்தில் இருந்தாலும், மெல்ல மெல்ல இது மூளையில் இறங்கி, VIP கலாச்சாரம் புரையோடி விட்டிருக்கிறது.

இப்போது சிவப்பு விளக்கு முடிந்த ஒன்றாகி விட்டது என்றாலும், மூளையில் புரையோடிப் போயிருக்கும் சிவப்பு விளக்கு தடுக்கப்பட்டு விட்டது என்று யாராலும் முடிவாகச் சொல்லி விட முடியாது. எனக்கு ஒரு மிக சுவாரசியமான தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் இது பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தினார் ஆனால் சாதாரணக் குடிமகன் இதை விரும்பவில்லை என்பதை இந்தத் தொலைபேசி அழைப்பு எனக்கு உணர்த்தியது. அவன் விலகிப் போனதாக உணர்கிறான்.


”வணக்கம் பிரதமர் அவர்களே, மத்திய பிரதேசத்தின் ஜபல் பூரிலிருந்து நான் ஷிவாசௌபே பேசுகிறேன். சுழலும் சிவப்பு விளக்கு பற்றி நான் பேச விரும்புகிறேன். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சாலையில் ஒரு VIP தான் என்ற ஒருவாசகத்தை நான் செய்தித்தாளில் படித்தேன். இதைப் படித்த பின்னர் என் மனதில் ஒரு பெருமிதம் குடிகொண்டது, எனது நேரமும் முக்கியமானது தான் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை, யாருக்காகவும் நான் காத்திருக்கத் தேவையில்லை. ஆகையால் நீங்கள் மேற்கொண்ட இந்த முடிவு காரணமாக நான் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் மேற்கொண்டிருக்கும் தூய்மையான பாரதம் இயக்கம் காரணமாக நமது நாடு மட்டும் தூய்மை அடையவில்லை, நமது சாலைகளும் கூட, VIP செருக்கொழிந்து தூய்மையாகி இருக்கின்றன. இதனை சாதித்த உங்களுக்கு மீண்டும் நன்றிகள்”.

சிவப்பு விளக்கு ஒழிக்கப்பட வேண்டும் என்று அரசு எடுத்த முடிவு என்னவோ அமைப்புரீதியிலான ஒரு நடவடிக்கைதான். ஆனால் மனதில் புரையோடியிருக்கும் இந்தக் கலாச்சாரத்தை வேரோடு கிள்ளி எறிய வேண்டும். நாமனைவரும் இணைந்து விழிப்புணர்வோடு முயற்சிகளை மேற்கொண்டால் இதை தூர எறிய முடியும். புதிய இந்தியா என்ற நமது கொள்கை என்பது VIP என்ற இடத்தில் EPI என்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தான். நான் VIP என்ற இடத்தில் EPI என்று கூறும் போது என் நோக்கம் தெளிவானது – Every person is important, ஒவ்வொருவரும் முக்கியம் தான். ஒவ்வொரு நபருக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது, 125 கோடி நாட்டு மக்களின் முக்கியத்துவத்தை நாம் ஏற்றுக் கொண்டால், 125 கோடி நாட்டு மக்களின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொண்டால், மிகப்பெரிய கனவுகளைக் கூட நனவாக்கும் மிகப் பெரிய ஆற்றல் வசப்படும். இதை நாமனைவரும் இணைந்து செய்ய வேண்டும்.


அன்புநிறை நாட்டுமக்களே, நாம் வரலாற்றை, நமது பண்பாட்டை, நமது பாரம்பரியத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். அதிலிருந்து நமக்கு மிகப்பெரிய ஆற்றலும், உத்வேகமும் கிடைக்கிறது. இந்த ஆண்டு 125 கோடி நாட்டு மக்களான நாமனைவரும் மகான் இராமானுஜரின் 1000வது ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். ஏதோ காரணத்தால் நாம் தளைகளில் சிக்கினோம், மிகச் சிறுத்து விட்டோம், நாம் அதிகப்படியாக நூற்றாண்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் பழகி விட்டோம். உலகில் மற்ற நாடுகளில் நூற்றாண்டு என்பதே கூட மிக மகத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. ஆனால் பாரதம் எத்தனை தொன்மையான தேசம் என்றால், ஓராயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான நினைவலைகளைக் கொண்டாடும் ஒரு பேறு கிட்டி இருக்கிறது. ஓராயிரம் ஆண்டு முன்னதாக சமுதாயம் எப்படி இருந்தது? அதன் எண்ணப்பாடு எப்படி இருந்திருக்கும்? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இன்றும் கூட சமூக நிலைப்பாடுகளைத் தகர்த்து வெளிவருவது என்பது எத்தனை கடினமாக இருக்கிறது! ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இது எப்படி இருந்திருக்கும்? சமுதாயத்தில் இருந்த கசடுகளை, உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற உணர்வினை, தீண்டத்தகாதவர் என்ற நிலையை, சாதி என்ற நிலையை எதிர்த்து பெரிய போராட்டத்தைக் கட்டவிழ்த்தார் இராமானுஜர் என்பது சிலருக்குத் தான் தெரிந்திருக்கும். சமூகம் யாரைத் தீண்டத்தகாதவர் என்று கருதியதோ, அவரைத் தழுவிக் கொண்டு, தனது செயல்பாட்டின் மூலம் செய்து காட்டினார். ஆயிரம் ஆண்டுகள் முன்பாக அவர்களின் ஆலயப் பிரவேசத்திற்காக அவர் இயக்கம் நடத்தினார், வெற்றிகரமாக ஆலயப் பிரவேசம் நிகழ்த்தினார். ஒவ்வொரு யுகத்திலும் நமது சமுதாயத்தின் கசடுகளைக் களையெடுக்க எப்படிப்பட்ட மஹாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது நாம் எத்தனை பாக்கியம் செய்தவர்கள் என்பதை உணர்கிறோம். புனிதர் இராமானுஜாச்சார்யாரின் 1000வது ஆண்டை நாம் கொண்டாடும் இந்த வேளையில், சமுதாய ஒருமைப்பாட்டுக்காக, ஒற்றுமை தான் சக்தி என்ற உணர்வுக்கு உருவேற்ற நாம் அவரிடமிருந்து உத்வேகம் பெறுவோம்.


பாரத அரசும் நாளை மே மாதம் 1ஆம் தேதி புனிதர் இராமானுஜாச்சாரியாரின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு தபால் தலையை வெளியிடவிருக்கிறது. நான் புனிதர் இராமானுஜாச்சாரியாரை மரியாதையுடன் வணங்குகிறேன், என் பக்தி மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்.


என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, நாளை மே மாதம் 1ஆம் தேதிக்கு மேலும் ஒரு மகத்துவம் இருக்கிறது. உலகின் பல பாகங்களில் இதை உழைப்பாளிகள் தினம் என்ற வகையில் கடைபிடிக்கிறார்கள். உழைப்பாளர்கள் தினம் என்று பேசும் போது, உழைப்பு பற்றியும், தொழிலாளிகள் பற்றியும் பேச்சு வருகிறது; இயல்பாகவே எனது மனம் பாபா சாஹேப் அம்பேட்கரின் நினைவோடு கலக்கிறது. இன்று தொழிலாளிகளுக்கு கிடைத்து வரும் சலுகைகள், மரியாதை இவற்றுக்காக நாம் பாபா சாஹேப் அவர்களுக்குத் தான் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உழைப்பாளிகள் நலனுக்காக பாபா சாஹேப் அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாத ஒன்றாகும். இன்று நாம் பாபா சாஹேப் பற்றிப் பேசும் போதும், புனிதர் இராமானுஜாச்சாரியார் பற்றிப் பேசும் போது, 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்நாடகத்தின் மகத்தான புனிதரும், சமூக சீர்திருத்தவாதியுமான ஜகத்குரு பஸவேஸ்வர் அவர்களையும் நினைவு கூரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரது பொன்மொழிகளின் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பும் கிட்டியது. 12ஆம் நூற்றாண்டில் கன்னட மொழியில் அவர் உழைப்பு, உழைப்பாளர்கள் ஆகியோர் குறித்து ஆழமான கருத்துக்களை வெளியிட்டார். கன்னட மொழியில் அவர், ‘காய கவே கைலாஸ’ என்று கூறியிருக்கிறார், அதன் பொருள், நீங்கள் உழைப்பின் மூலம் மட்டுமே பகவான் சிவனிருக்கும் கைலாஸத்தை அடைய முடியும், அதாவது செயல் புரிவதனால் மட்டுமே சுவர்க்கம் கிட்டும் என்பதாகும். இதை வேறு சொற்களில் கூற வேண்டுமானால், உழைப்பே சிவம். நான் அடிக்கடி ‘श्रमेव-जयते’ உழைப்பே உயர்வு என்று கூறி வந்திருக்கிறேன், dignity of labour, உழைப்பின் கண்ணியம் பற்றிப் பேசி வந்திருக்கிறேன். பாரதீய மஸ்தூர் சங்கத்தின் நிறுவனரும், சிந்தனையாளருமான தத்தோபந்த் தேங்கடீ அவர்கள் அடிக்கடி கூறும் விஷயம் ஒன்று எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது – ஒரு புறம் மாவோயிச கொள்கை முன்னிறுத்தும் கருத்து, “உலகின் உழைப்பாளிகள் ஒன்றுபட வேண்டும்” என்பது தான்; ஆனால் தத்தோபந்த் தேங்கடீ அவர்கள் இதற்கு மாற்றாக, பாரத நாட்டு சிந்தனை ஓட்டத்துக்கு ஏற்ப, “உழைப்பாளிகளே வாருங்கள், நாம் உலகை ஒன்றுபடுத்துவோம்” என்பது தான். உழைப்பாளிகள் பற்றிப் பேசும் வேளையில் தத்தோபந்த் தேங்கடீ அவர்களை நினைத்துப் பார்ப்பது இயல்பான ஒன்று.


என் அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் கழித்து நாம் புத்த பூர்ணிமாவை கொண்டாட இருக்கிறோம். உலகம் முழுக்க பகவான் புத்தரோடு தொடர்புடையவர்கள் இதை விழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள். உலகம் இன்று சந்தித்து வரும் வன்முறை, போர், அழிவு, ஆயுதங்களின் மோதல் போன்றவற்றைப் பார்க்கும் போது, பகவான் புத்தரின் கருத்துக்கள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன. பாரதத்தில் அசோகரின் வாழ்க்கை யுத்தம் துறந்து புத்தம் ஏற்றது ஒரு உன்னதமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புத்த பூர்ணிமை என்ற இந்த மகத்தான நாளை ஐக்கிய நாடுகள் சபை vesak day என்று கொண்டாடுகிறது. இந்த ஆண்டு இலங்கையில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த புனிதமான நாளன்று இலங்கையில் பகவான் புத்தருக்கு என் அஞ்சலி மலர்களை அர்ப்பணிக்கும் பேறு எனக்குக் கிட்டியிருக்கிறது. புத்தர் பற்றிய நினைவுகளை என் மனதில் நிறைத்துக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.


என் பிரியமான நாட்டுமக்களே, பாரதத்தில் எப்போதும் ‘அனைவரையும் அரவணைத்துச் சென்று, அனைவருக்குமான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தல் என்ற தாரக மந்திரத்தை மனதில் இருத்தி முன்னேறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. நாம் அனைவரின் முன்னேற்றம் என்று கூறும் போது, இது பாரதத்தை சேர்ந்தவர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை, உலகில் இருக்கும் அனைவரைப் பற்றியும் கூறுகிறோம். குறிப்பாக நமது அண்டை நாடுகளுக்காகவும் பேசுகிறோம். நமது அண்டை அயல் நாடுகளோடு இசைவாக இருக்க வேண்டும், அவர்களும் முன்னேற வேண்டும் என்றே கருதுகிறோம். பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மே மாதம் 5ஆம் தேதியன்று பாரதம் தெற்காசிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இருக்கிறது.

இந்த செயற்கைகோளின் திறன் மற்றும் இதில் இருக்கும் வசதிகள் காரணமாக தெற்காசியாவில் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி செயல்பாடுகளுக்கு கணிசமான உதவி கிடைக்கும். இயற்கை வளங்களை அடையாளம் காணும் விஷயயமாகட்டும், tele medicine பற்றியதாகட்டும், கல்வித் துறையாகட்டும், அதிக ஆழமான கணிப்பொறி இணைப்பாகட்டும், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகட்டும். தெற்காசியாவின் இந்த செயற்கைக்கோள் ஒட்டுமொத்த பிராந்தியத்தை முன்னெடுத்துச் செல்ல முழுமையாக ஒத்துழைக்கும். ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியத்தில் கூட்டுறவை பலப்படுத்த பாரதத்தின் மகத்துவம் நிறைந்த முயற்சி இது – விலைமதிப்பில்லாத பரிசு. தெற்காசியா பொருட்டு நமக்கு இருக்கும் முனைப்புக்கான இது உகந்ததொரு எடுத்துக்காட்டு. இந்த தெற்காசிய செயற்கைக்கோளோடு இணைந்திருக்கும் தெற்காசிய நாடுகள், இந்த மகத்துவம் நிறைந்த முயற்சியில் ஈடுபட்டதை நான் வரவேற்கிறேன், வாழ்த்துக்கள் அளிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, வெப்பம் அதிகமாக இருக்கிறது, உங்களைச் சார்ந்தவர்களையும் கவனியுங்கள், உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நன்றி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...