குஜராத்தின் நர்மதைக்கரையில் அமைந்திருக்கும் வல்லபபாய் படேல்சிலை பற்றிய இந்தக் கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் உங்களிடம் இரண்டு கேள்விகள்! 1) படேல் சிலையின் உச்சியிலிருந்துபார்த்தால் என்ன தெரியும்? a) அரேபியக் கடல் b) விந்தியமலை c) வியாழனின் துணைக் கோள்கள். 2) 787 அடி உயரச் சிலையின் உச்சியை அடைய லிஃப்ட் எவ்வளவுநேரம் எடுத்துக் கொள்ளும்? a) 3 நிமிடங்கள் b) 10 விநாடிகள் c) 30 விநாடிகள். விடைகள்: கட்டுரையின் இறுதியில்! இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, சிதறிக்கிடந்த மாகாணங்களை ஒன்றிணைத்தவர் சர்தார் வல்லபபாய்படேல். இவருக்கு 3,000 கோடி ரூபாய் செலவில் சிலை அமைத்து உலகின் பார்வையைத் தன்பக்கம் திருப்பியது குஜராத் மாநில அரசு. அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையைவிட உயரமான சிலை என்று பெயர் பெற்றது! இரும்புமனிதர் படேலுக்கு உலகமேவியக்கும் வண்ணம் சிலை அமைக்கத் திட்டமிட்டு, 2013-ம் ஆண்டு அக்டோபர்மாதம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தவர் அன்று குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடி. அவரே நாட்டின் பிரதமராக 2018 அக்டோபர் 31 அன்று அந்த சிலையைத்திறந்து வைத்தார். அன்று படேலின் 143ஆவது பிறந்ததினம். படேல் சிலை அமைக்கப்பட்டு ஓராண்டு முடிந்தநிலையில் சிலை அமைந்திருக்கும் `கேவாடியா’ நகருக்குள்சென்றோம். படேல் சிலை அமைந்துள்ள நர்மதை நதிக்கரையில் 17 கி.மீ தூரத்துக்கு வண்ண வண்ணப் பூக்களால் நிறைந்த பூந்தோட்டம் அமைத்து வருகின்றனர். சர்தார் வல்லபபாய் படேல் சிலையைச்சுற்றி 12 சதுர கிலோமீட்டர் தூரத்துக்கு ஏரி அமைத்துள்ளனர். சர்தார் சரோவர் அணையைப் பார்த்தவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது படேலின் சிலை. அணையிலிருந்து சிலையை அடைய 3.2 கி.மீ தூரத்துக்கு பாலம் அமைக்க பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபபாய் படேல் நினைவு அருங்காட்சியகத்தில் 2000 புகைப்படங்களும், 40,000 ஆவணங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் தங்குவதற்காக 3 நட்சத்திர ஹோட்டலும் உணவுக்கூடமும் உள்ளன. குளிர்சாதனம் உள்ளிட்ட பலவித வசதிகளுடன் 250 டென்ட்கள் உள்ளன. படேல் சிலையின் மொத்தஉயரமான 787 அடியில் கீழுள்ளபீடம் மட்டுமே 190 அடி. சிலைக்கு உள்ளேயே பார்வையாளர் மாடம் உள்ளது. சிலைக் குள்ளிருந்தபடியே, ஒரேநேரத்தில் 200 பார்வையாளர்கள் சத்புரா மற்றும் விந்தியாச்சல் மலைத் தொடர்களையும். நர்மதை நதியையும் அணைக்கட்டையும் பார்வையிடலாம். சிலையின் கால்களின் உள்ளேயே 2 அதிவேக மின்தூக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின் தூக்கியிலும் 26 பேர் பயணிக்கலாம். சிலைப் பராமரிப்புப்பணி, வழிகாட்டிப் பணி ஆகியவற்றில் உள்ளூர் பழங்குடி இன மக்களே ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். படேல் சிலையைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்விதத்தில் செல்ஃபி ஸ்பாட், மூலிகை தாவரங்கள்கொண்ட ஆரோக்கிய வனம், பாரத் வனம், வண்ணத்துப்பூச்சிப் பூங்கா, 15,000 கற்றாழைச் செடிகளைக் கொண்ட கற்றாழைப் பூங்கா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பூங்கா ஆகியவை உள்ளன. சுற்றுச்சூழல் பற்றிய செயல் விளக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏக்தா நர்சரி, ஒற்றுமைக்கான வனம் (Forest Of Unity) மற்றும் கிராமப்புறக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகும் கலைப்பொருள்களை விற்பனை செய்வதற்கான ஏக்தாமால் ஒன்றும் அமைக்கப்படவுள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில்வளரும் தாவரங்களையும் இந்திய வரைபடத்தின் வடிவத்தில் வளர்த்து சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பெயர் ஏக்தாவனம். உலகளவில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை உணர்த்தும் வகையில், ஏழுகண்டங்களில் உள்ள செடி, கொடி, மரங்களை வைத்து விஸ்வவனம் அமைக்கவும் திட்டமுள்ளதாம். டைனோசர்கள் இந்தியாவில் அதிகம் காணப்பட்ட பகுதிகளுள் முக்கியமானபகுதி குஜராத். அதை பிரபலப்படுத்தும் வகையில், வல்லபபாய் படேல்சிலை அருகில் டைனோசர் பார்க் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. மேற்கண்ட பணிகளை ஒருங்கிணைக்கும் பணியில் இருப்பவர் நம் ஊர்க்காரர் தலைமை கன்சர்வேட்டர் சசிகுமார். “கடந்த ஆண்டு சிலை திறக்கப் பட்டதிலிருந்து ஒரு வருடத்துக்குள் 27 லட்சத்துக்கும் அதிமானோர் படேல்சிலையைப் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் 54 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் வந்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் 30,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வகையில் திட்டமிட்டு, கட்டண ஹெலிகாப்டர் சவாரி, சாகச பயணத்துக்கான `ரிவர் ராஃப்டிங்’, லேசர் லைட் ஷோ, சர்தார் சரோவர் அணையின் அருகில் உள்ள ஜர்வாணி கிராமத்தில் உள்ள நீர்வீழ்ச்சியை யொட்டி அட்வென்ச்சர் பார்க் உட்பட பல சுவாரஸ்யங்களை உருவாக்கவும் திட்டமிட்டுவருகிறோம். புதிய இடம், புதிய அனுபவங்கள் என இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்கவைக்க அனைத்து வகையிலும் செயல்படுவதே சிலையை அமைத்த ‘சர்தார் வல்லபபாய் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா டிரஸ்ட்’ (SVPRET) அமைப்பின் குறிக்கோள்’’ என்கிறார் சசிகுமார். பிரபல `டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டின் ‘உலகில் பார்க்கவேண்டிய 100 இடங்கள்’ பட்டியலில் வல்லபபாய் படேலின் சிலை இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படேல் சிலையை பார்வையிட நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் Soutickets.in என்ற இணையதளம் மூலமாக டிக்கெட் முன் பதிவு செய்துகொள்ளலாம். அல்லது SOU டிக்கெட்டிங் சென்டரிலும் பாரத் பவனிலும் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை டிக்கெட்டுகளைப் பெறலாம். அதிக வெயில் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி மாதம்வரை, சிலையைக் காண்பதற்குச் சிறப்பான காலம். டேல் சிலையை வடிவமைத்தது 94 வயதான சிற்பி ராம் வி.சுடார். இவர் நொய்டா நகரைச் சேர்ந்தவர், உலகின் அழகான கட்டுமானங்களுக்கு வழங்கப்படும் விருதுதான வான் (WAN – World Architecture News Award). 2019-ம் ஆண்டுக்கான வான் விருதுக்கு, உலகின் உயரமான படேல் சிலைக் கட்டுமானம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் பத்தியில் உள்ள கேள்விக்கான விடைகள்: 1) b – விந்திய மலைகள் 2) c – 30 விநாடிகள்.\ நன்றி ஜூனியர் விகடன்
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |