Editorஅத்திரி முதலான சப்த ரிஷிகளும் வேலூருக்கு கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகவதி மலையில் சிவலிங்க பூஜை செய்தனர். அவர்களில் அறுவர் தவம் முடித்து வேறொரு தலம் நகர, அத்திரி முனிவர் மட்டும் வேல மரங்கள் நிறைந்த ( வேலூர் ) வனப்பகுதியில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார் . சில காலம் அவரும் அத்தலம் விட்டு அகன்றார். பிறகு லிங்கத்தைச் சுற்றி புற்று சூழ்ந்தது.
புற்றுக்குள் இருக்கும் பரமனைக் காண பசு ஒன்று வந்தது. பரமனுக்கு பாலை அபிஷேகித்தது. ஊரார் இதை கவனித்து மன்னர் பொம்மி நாயக்கரிடம் சொன்னார்கள். அவர் அதை நேரில் காண வேண்டுமென்று விரும்பி சென்று பார்த்தார். அங்கே அவருக்குப் பேரதிசயம் ஒன்று காத்திருந்தது.
மிகப்பெரிய நாகமொன்று புற்றிலிருந்து வெளிப்பட்டு பசுவின் காம்புகளிலிருந்து பாலைக் குடித்துவிட்டு, புற்றுக்குள் ஓடி மறைந்தது. திகைப்பால் தடுமாறினார் மன்னர். திகைப்பு விலகாத உறக்கத்தில் அன்று இரவு அவர் கனவில் ஈசன் தோன்றினார். தானே அந்த நாகமென்று உரைத்தார். பொம்மி பிரமித்தார். இத்தகைய அதிசயம் நிகழ்த்திய ஈசனுக்கு ஓர் ஆலயம் அமைக்க விரும்பினார். இறைவனிடம் ஆலயம் அமைக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினார். ஆலயம் அமைப்பது எளிதானதா? அதற்கு அதிகம் செலவாகுமே என்று ஈசன் தெரிவித்தார் . 'உன் அருள் இருந்தால் பிற எல்லாம் தாமே வந்து சேரும்' என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார் பொம்மி. அவருடைய ஆழ்ந்த பக்தியை மெச்சிய ஐயன், பள்ளிகொண்டராயன் மலையில் ஒரு புதையல் இருப்பதாகவும், அதை ஏழு நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளுமாறும் அருளாணையிட்டார்.
கனவில் நடந்தவை அனைத்தும் நனவிலும் நிகழத் தொடங்கியது. புதையல் இருந்த இடத்திலிருந்து புற்றுவரை மக்களை வரிசையாக நிற்கவைத்து ஒருவர் கை மாற்றி அடுத்தவர் என்று பொக்கிஷம் அத்தனையையும் கொண்டு சேர்த்தார். கோயில் கட்டுவதற்காக வேலமரக்காடு சீர் செய்யப்பட்டது. சிவபெருமான் பொம்மியின் முன் தோன்றி இன்னும் ஒன்பது ஆண்டுகள் கழித்து ஜலகண்டேஸ்வரர் என்ற பெயரில் லிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தார்.
அப்போது ஓர் அதிசய காட்சியை கண்டார் பொம்மி. ஒரு புதரில் இருந்து சில முயல்கள் வேகமாக ஓட நாய் ஒன்று அந்த முயல்களை துரத்தியது. பயந்து ஓடிய முயல்களில் ஒன்று சட்டென்று நின்றது. திரும்பியது. பீறிட்ட ஆக்ரோஷத்துடன் நாயை துரத்தியது! நீண்ட தூரம் ஒரு வட்டபாதையில் நாயை துரத்திய முயல் சிவலிங்கம் இருந்த புற்றினையும் சிறு வட்ட பாதையில் சுற்றிவிட்டு புற்றுக்குள் மறைந்தது. முயல் புற்றை சுற்றிய வட்டத்தையே எல்லையாகக் கொண்டு கோயிலை அமைப்பாயாக என்று ஓர் அசரீரி கட்டளையிட்டது.
கோயில் கட்டத் தேவையான கற்கள் பள்ளிகொண்டராய மலையில் இருந்து யானை சுமையாகக் கொண்டு வரப்பட்டன. கோயில் பணி தொடங்கியது. சில தடைகளைத் தாண்டி கோட்டையும் கோயிலும் கட்டி முடிக்கப் பட்டன.
கோயிலின் தெற்கு புறத்தில் பிரதான நுழைவாயில் உள்ளது. நுழைவாயில் கோபுரம் ஏழு நிலைகளை கொண்டது. கோபுரத்தின் கம்பீரம் சிலிர்க்க வைக்கிறது. உள்ளே நுழைந்தால் வலது புறத்தில் குளம்; இடது புறத்தில் கல்யாண மண்டபம். கோயிலின் ஒவ்வொரு தூணும் கண்ணைக் கவரும் புராண சம்பவ சிற்பங்களைக் கொண்டு, வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்திலும் உட்பிராகாரத்திலும் ஆலய சுவர்களை ஒட்டி ஆறு அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட முழு நீள மண்டபம் அமைந்துள்ளது.
கோயிலில் உள்ள மண்டபம் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வட மேற்கில் வசந்த மண்டபமும், அதையட்டி சிம்ம கிணறும், வட கிழக்கில் வெளிப் பிராகார யாகசாலையும், தென் கிழக்கில் உற்சவ மண்டபம் மற்றும் வெளிப் பிராகார மடப்பள்ளியும் அமைந்துள்ளன.
கோயிலின் தனி சந்நதியில் வலம்புரி விநாயகர் அருளே உருவாகி அமர்ந்துள்ளார். அவரையடுத்து செல்வ விநாயகர், வெங்கடேசப் பெருமாள், வள்ளி&தேவசேனா உடனுறை சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி, அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நதிக்குச் செல்லலாம். அம்மன் சந்நதியின் சுற்றுப்புற சுவர்களில் விநாயகர், மாகேஸ்வரி, வைஷ்ணவி, பிராம்மி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ விக்கிரகங்கள் எழிலோடு பதிக்கப்பட்டுள்ளன. அகிலாண்டேஸ்வரி சந்நதியின் இருபுறமும் கம்பீரமாக துவார பாலகியர் உள்ளனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்கள், பிள்ளையார், சப்த கன்னியர், வீரபத்திரர் விக்கிரகங்களும் உள்ளன. உட்பிராகாரத்தில் மிக கம்பீரமாகவும், நெடிதுயர்ந்தும் துவார பாலகர்கள் ஜலகண்டேஸ்வரர் சந்நதி முன் நிற்கிறார்கள்.தன்னைச் சுற்றிலும் கோட்டையையும், அகழியும் கொண்டு ஆயிரமாயிரம் லீலைகளை நடத்திக் கொண்டிருக்கும் கம்பீரமான ஜலகண்டேஸ்வரரை காணும் போது நாம் மிகச் சாமானியர்களாக மாறி விடுவதை உணரமுடிகிறது. நீர் தத்துவத்திற்கு உரித்தான அவர் தரிசிப்போரின் தீவினைகளை கரையச் செய்கிறார். கடலளவு அன்பு கொண்டவர் இங்கு நம் பொருட்டு கருணைமிகு லிங்க மூர்த்தியாக அருள்கிறார்.
ஜலகண்டேஸ்வரர் , வேலூர் கோட்டை
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.