டெல்லியில் வன்முறை பரவியசமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலிறுத்திவருகிறது.
இந்தவிவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்கவேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் முழக்க மிட்டனர். ஆனால், வன்முறை தொடர்பாக விவாதிக்க இப்போது நேரம் ஒதுக்கமுடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா திட்டவட்டமாக கூறினார்.
இதனை ஏற்காத காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்க மிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்பிக்கள் சிலர், காங்கிரஸ் உறுப்பினர்கள் நின்றிருந்த இடத்திற்குவந்து அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
இருதரப்பினரும் ஒருவரையொருவர் நெட்டித்தள்ளினர். இதனால் கடும்கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவை முதலில் 3 மணிவரையிலும், பின்னர் 4 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.