நவராத்திரி நாயகியாம் லலிதா பரமேஸ்வரிக்கு ஆயிரம்நாமங்கள். அதில் ஒவ்வொரு நாமமும் ஒருதனித்துவம் வாய்ந்தது. அம்பிகையின் அற்புதங்களை எடுத்துரைப்பது. அப்படி ஒரு நாமம்தான் சாம்பவி என்பது. நவராத்திரியின் ஏழாம் நாளில் நாம் சாம்பவி என்னும் திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதிக்கவேண்டும்.
சிவபெருமான் சாம்பு என்ற திருநாமத்தால் துதிக்கப்படுபவர். சாம்புவின் மனைவி சாம்பவி ஆகிறாள். மேலும் சாம்பவி என்னும் திருநாமத்துக்கு, உதவிகரமானவள், அன்பானவள், கருணையுள்ளம் கொண்டவள் என்னும் பொருள்களைக் கூறுகின்றன சாஸ்திரங்கள். லலிதா சகஸ்ரநாமத்தில் 122 ம் நாமமாக விளங்குவது சாம்பவி. விஷ்ணுசகஸ்ர நாமத்தில் 38வது நாமமாக விளங்குவதும் இந்தத் திருநாமமே. இவை இரண்டுமே பக்தர்கள் மீது எல்லையில்லாக் கருணையுள்ளவள் என்னும் பொருளிலேயே வழங்கப்படுகின்றன.
சண்ட முண்டர்களை வதைத்த பின் தேவி பொன்பீடத்தில் அமர்ந்து, வீணை வாசிக்கும் கோலமே சாம்பவியின் திருக்கோலம். கைகளில் வீணை ஏந்திக்காட்சி அருளினாலும் அன்னையின் வீரமான தோற்றம் மனதில் இருக்கும் பயங்களைப் போக்கவல்லது. இந்தநாளில் அன்னை வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் நீங்குவதோடு வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
7ம் நாள் படிக்க வேண்டிய கதை
முற்காலத்தில் ஆங்கீரஸ முனிவர் ஒருநாள் வனத்தின் வழியே செல்லும்போது ஒரு பெண் அழும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டார். சத்தம் கேட்ட திசை நோக்கிச் சென்றார். அங்கே ஒரு குடிசையில் ஒரு பெண் தன் கணவரை மடியில் கிடத்தி, கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட முனிவர் வெளியிலிருந்தபடியே குரல் கொடுத்தார். முனிவரின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள்.
அந்தப் பெண்ணின் முகத் தோற்றத்திலிருந்து அவள் அரசவம்சத்தைச் சேர்ந்தவள் என்று புரிந்துகொண்டார் முனிவர். “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார் முனிவர். அதற்கு அந்தப் பெண்ணும், தான் அண்டை நாட்டின் அரசி என்றும், சதிகாரர்கள் என்கணவரை ஏமாற்றி ராஜ்ஜியத்தைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டதாகவும், தன் கணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தாள். தன் கணவர் நலமடைய வேண்டும் என்று முனிவரைப் பிரார்த்தித்தாள். மேலும் தாங்கள் இழந்த ராஜ்ஜியம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஓர் ஆண் குழந்தை வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள்.
அவளுடைய நிலைக்கு மனம் வருந்திய முனிவர், ஒன்பது தினங்கள் அம்பிகைக்கு பூஜை செய்யும் நவராத்திரி வைபவத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் வழியையும் கூறினார். முனிவரின் ஆசிரமத்தில் தங்கி பூஜையை நிறைவேற்றினாள் அந்தப் பெண். அம்பிகை அந்தப் பெண்ணின் பூஜைக்கு மகிழ்ந்து அவள் வேண்டியபடி அவள் கணவனுக்கு ஆரோக்கியத்தையும் புத்திர பாக்கியத்தையும் அருளினாள்.
அவர்களின் மகன் வளர்ந்து பெரியவனாகி போர்க்கலையில் சிறந்து விளங்கினான். உரிய காலத்தில் முனிவர் அவனுக்குக் கடந்த காலத்தில் நிகழ்ந்ததை விளக்கிச் சொல்ல அவன் போர்தொடுத்துத் தன் தந்தை இழந்த நாட்டை வென்றான். அவன் பெற்றோரும் முனிவரும் வென்ற நகரின் தலைநகருக்குச் சென்று அவனுக்குப் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். அந்தப் பெண் தான் விடாது செய்துவந்த நவராத்திரி பூஜையின் பலனே இது என்பதை உணர்ந்து அதை நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க உத்தரவிட்டாள். இழந்த பொருள், உரிமை, பலம் ஆகியவற்றை வேண்டிப் பெற உரிய விரதம் நவராத்திரி விரதம் என்பதை நாட்டு மக்களும் அறிந்துகொண்டனர்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |