உலகில் பல்வேறு பகுதிகளில் மன்னராட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, கூட்டாட்சி என்ற மாறுபட்ட அனுபவங்களை கடந்த மனித குலம் மக்கள் அனைவரையும் அனைத்துச் செல்லும் மக்களாட்சியே தலைசிறந்தது. மனித மாண்புக்கேற்றது என்ற முடிவுக்கு வந்தது.
மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் மக்களுடைய ஆட்சியே குடியரசு என்பதை அமெரிக்க ஜனாதிபதி
ஆபிரகாம்லிங்கன் தனது கெட்டிஸ்பர்க் பேருரையில் தெளிவாக்கினார்.
1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளன்று இந்தியா தனக்கென்று வகுத்துக் கொண்ட அரசியல் சாசன சட்டப்படி தன்னை ஒரு சுதந்திர மத சார்பற்ற சம்தர்ம ஜனநாயகக் குடியரசு என்று பிரகடனம் செய்து கொண்டது.
1776ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திரப் போரின் முடிவில் உலகில் முதன்முறையாக அரசியல் சட்டத்தை வகுத்த பெருமையை பெற்றது அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனப்படும் வல்லரசு. அந்த சுதந்திர தீயின் தாக்கத்தில் வெந்த பிரெஞ்சு ஏகாதிபத்யம் அணைந்து முதல் குடியரசு எனப்பெயர் பெற்றது.
பிரான்சிடமிருந்தும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தும் நாம் குடியரசுக் கோட்பாட்டைக் கற்று பின்பற்றுகிறோம் என்று இன்றும் ஏராளமானோர் அறியாமை இருளில் உள்ளனர்.
உலகத்திற்கே குடியரசுத் தத்துவத்தை முதன் முதலில் போதித்தது மட்டுமின்றி ஒரு முன் உதாரணமாகவும் திகழ்ந்த வைசாலி என்ற இந்தியப் பகுதிதான் குடியரசுகளின் பிறப்பிடம். அது பீகார் மாநிலத்தில் பாடலிபுத்திரத்திலிருந்து 48 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சதுர்புஜ தர்ம தீப பூமி என்ற கௌரவம் பெற்று விளங்குகிறது.
இது சரித்திரத்தில் மட்டுமின்றி புராணத்திலும் இடம் பெற்றுள்ள மிகப் புராதன பூமியாகும். ரீஜ் டேவிட்ஸ் என்பவர் கபில வஸ்துவில் சாக்கியம் (Sakhyam) புலீயில் (Buli) அல்லகம் (Allagam) ராமகாம் என்ற இடத்தில் கோலியே (Koliya) பாவாவைச் (parva) சேர்ந்த மல்ல (Malla) மிதிலையின் விதேஹம், கோலபுத்ரத்தில் (Kalam) கலாம் மற்றும் வைசாலியின் லிச்சவி (lichavi) குடியரசுகளைப் பட்டியலிட்டுள்ளார்.
வைசாலியின் லிச்சவி குடியரசு அந்தக் காலத்து சர்வ வல்லமை மிக்க உலகிற்கே எடுத்துக்காட்டான ஒரே குடியாட்சியாக விளங்கியது. வஜ்ஜீ (Vajji) சங்கம் முழுவதற்கும் தலைநகராக இருந்தது வைசாலி. புத்த கோஷரின் அஷ்ட கதையின் பிரகாரம் வைசாலியில் வசித்து வந்த வஜ்ஜீ சங்கத்தைச் சேர்ந்த 1,68,000 மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனால் வைசாலி ஆளப்பட்டது.
குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுப் பிரதிநிதி ஒவ்வொருவரும் சபதம் ஏற்கும் விழாவின் போது அபிஷேக – மங்களப் புஷ்கரிணியின் அனுஷ்டான ஸ்நானம் செய்து சங்கத்தின் (குடியரசின்) சட்ட திட்டங்களையும் நியமங்களையும் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். அந்தப் புஷ்கரிணியில் ஸ்நானம் செய்யும் உரிமை வாழ்நாளில் ஒருமுறை தான் ஒரு லிச்சவிக்குக் கிடைக்கும். இன்றும் இந்த புஷ்கரிணி (குளம்) பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா தலமாகத் திகழ்கிறது.
கங்கையும் கண்டகியும் சங்கமம் ஆகும் இடத்தில் தொடங்கி நீண்ட சமவெளியில் பரந்து கிடக்கும் வைசாலியின் புனித பூமி நமது தழைத்தோங்கிய ஆன்மீக, அரசியல் மற்றும் கலாச்சார பரம்பரைகளுக்குக் கட்டியம் கூறி நிற்கிறது. குடியரசுக்கெல்லாம் அன்னை என்ற பெருமையுடன் அரசியல் மேடையில் உலகிற்கே வழிகாட்டியாகவும், இந்தியக் கலாச்சாரத்தின் கலைச்செல்வத்திற்கே வாரிசாகவும் வைசாலி கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.
விஷ்ணு புராணத்திலும், பாகவத புராணத்திலும் வைசாலியின் பெருமை இடம் பெற்றுள்ளது. வால்மீகி ராமாயணம் ஆதிகாண்டத்தில் 47வது சர்க்கத்தின் 11-12ஆம் ஸ்லோகங்களில் வைசாலியைப் பற்றிய குறிப்பு வருகிறது. பகவான் ராமரும் லட்சுமணரும் விஸ்வாமித்ர முனிவருடன் ஜனக்புரி செல்லும் வழியில் வைசாலியின் அரசன் சுமதி வைசாலியில் அவர்களை வரவேற்று உபசரித்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது. சரணடைய வந்த விபீஷணனை தன் அணியில் சேர்ப்பதா என்ற விவாதத்தின் போதும், சீதா குற்றமற்றவள் என்பதை லங்காபுரியில் நிரூபிக்க வேண்டிய தருணத்திலும், வண்ணான் இழிச் சொல்லால் சீதாதேவியைப் பற்றி குறை சொன்னபோதும் ராமன் எடுத்த முடிவுகளில் குடியாட்சியின் சுவடுகள் பதிந்திருப்பதைக் காணலாம்.
இந்த வைசாலியின் புனித மண்ணில் தான் கி.மு. 599ல் சித்திரை மாத சுக்ல திரயோதசி அன்று திங்கட்கிழமை சித்தார்த்தர் என்ற அரசருக்கும் த்ரிசாலா என்ற அரசிக்கும் பகவான் மஹாவீரர் மகனாக அவதரித்தார் என்பது வரலாறு கூறும் உண்மை. தனது இருபதாவது வயதில் மனிதகுலம் உய்வதற்காக 12 ஆண்டுகள் கடும்தவம் மேற்கொண்ட மகான் பகவான் மஹாவீரர், 32 வயதில் சந்யாசியாக ஆனார். ஜைன மதத்தை உய்வித்த தீர்த்தங்கரரான மஹாவீரர் அஹிம்சை, சத்யம், சமத்வம் ஆகிய கொள்கைகளை பின்பற்றினார். வேற்றுமை ஒழிந்து ஒற்றுமை நிலவும் நிலைதான் தர்மம் அனைவருக்கும் அனைத்துயிர்களுக்கும் நன்மை பயப்பது தான் தர்மம் என்பதே அவரது உபதேச சாரம்.
கி.மு.562ல் கபிலவஸ்துவில் சாக்கியமுனி சுத்தோதனரின் செல்வனாக அவதரித்த கௌதமபுத்தர் பிறந்த ஏழுநாட்களுக்குப் பிறகு தாயை இழந்து சிற்றன்னை ப்ரஜாவதியால் வளர்க்கப்பட்டு யசோதையை மணந்து ராகுலன் என்ற மகனைப் பெற்று குடியரசான கபிலவஸ்துவில் போர் தொடுப்பதற்கான சங்கக் கட்டளையை ஏற்க மனமின்றி தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொள்ளும் வகையில் வனவாசம் சென்றார். அந்த புத்தரின் கர்மபூமியாகும் பேற்றை வைசாலி பெற்றது.
வைசாலீயின் பெருமைக்கு மகுடம் சூட்டிய பெண் ஆம்ரபாலியை அறியாதவர் இவர். குழந்தையாக இருந்த போது ஒரு மாமரத்தின் அடியில் வீசி எறியப்பட்டவள் வளர்ந்து வைசாலியின் எழில் கொஞ்சும் வனிதையாக வைசாலியின் நகர நர்த்தகியாக ஆனாள் ஆம்ரபாலி. அவளுக்கு விமல் கௌண்டேயன் என்ற மகனும் உண்டு. பகவான் புத்தரையே தனது மாமரப் பூங்காவில் வரவழைத்த பெருமை ஆம்ரபாலிக்கு உண்டு. உடனிருந்தவர்கள் மாற்றுக் கருத்துக்களை கூறியபோதும் ஆம்ரபாலியின் அழைப்பை ஏற்று அவளை புத்தர் சந்தித்தது பௌத்த மத வரலாற்றில் ஒரு திருப்பு முனையையே ஏற்படுத்தியது. ஆம்ரபாலி தொடுத்த வாதங்கள் அனைத்தையும் கேட்டு அவற்றிற்குத் தலைவணங்கி புத்தர் தனது மதத்தில் முதல்முதலாக மகளிரும் சேருவதற்கு அனுமதி தந்தது இந்த வைசாலியில் தான்.
வைசாலியின் மீது அஜாத சத்ரு என்ற மன்னன் படை எடுத்த போது தாய்நாட்டின் பற்றினை வெளிப்படுத்த ஆம்ரபால் போரில் குதித்தாள். தீய எண்ணத்துடன் அஜாத சத்ரு அவளை சந்திக்க சென்றபோது யானை தந்தத்தில் பொறிக்கப்பட்ட அஜாத சத்ருவின் தந்தை பிம்பிசாரனின் படத்தைக் காட்டியதும் அஜாத சத்ரு வெட்கத்தால் தலைகுனிந்து ஆம்ரபாலிக்கு தாய்க்குரிய மரியாதையை தந்தான்.
1995 சதுர கிலோமீட்டர் பரப்பில், 27,12,389 மக்கள் தொகை கொண்ட வைசாலி இன்றும் குடியரசுகளின் அன்னையாக இந்தியக் கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக, பெண்மையின் பெருமைகாத்த புனித பூமியாக ராமபிரான், புத்தர், மகாவீரர் திருப்பாதங்கள் பதித்த புண்யஷேத்ரமாக ஒளி வீசி நிற்கிறது.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.