சண்டை தொடருமா? அல்லது சமாதானம் ஏற்படுமா?
மோடி அவர்களின் முயற்சி பலனளிக்குமா?
எல்லோரும் எதிர்பார்த்ததை போலவே உக்ரைன் மீது இன்று அதிகாலை 5 மணிக்கு ரஷ்யா ராணுவ தாக்குதலைத் தொடங்கிவிட்டது. உக்ரைன் நாட்டை அமெரிக்காவின் தலைமையிலான – பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ’NATO – North Atlantic Treaty Organization’ என்ற ராணுவ கூட்டமைப்பிற்குள் சேர்க்கக்கூடாது என்றும்; ரஷ்யாவின் எல்லைப் பகுதி நாடுகளான போலந்து, ருமேனியா போன்ற நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளையும், நேட்டோ படைகளையும் அகற்றிட வேண்டும் என்றும் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புட்டின் வலியுறுத்தி வருகிறார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையுமேயானால் நேட்டோ படைகள் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு மிக அருகாமையில் நிறுத்தப்படும் சூழல் ஏற்படும். அது ரஷ்யா நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். எனவே தான், ’உக்ரைன் நேட்டோவில் சேருவதை அனுமதிக்க முடியாது’ என புட்டின் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். உக்ரைனை சேர்ப்பது, ரஷ்யா மீதான யுத்த முஸ்தீபு என்பதால் தான் 2 லட்சத்திற்கு மேற்பட்ட ரஷ்யப் படைகளை உக்ரைன் எல்லைப் பகுதியில் புட்டின் நிறுத்தி இருக்கிறார்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் மையமாக விளங்கிய ஐரோப்பாவில் இன்னொரு யுத்தத்திற்கு வழி காட்டும் ’நேட்டோ அமைப்பு’ அவசியமற்றது. எனவே புட்டினிடமிருந்து இந்த கோரிக்கை எழுந்த பொழுதே, ’உக்ரைன் நேட்டோ அமைப்பிற்குள் சேர்க்கப்படாது என்ற உறுதியையும், அதற்கு முன்னோடியாக போலந்து, ருமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏவுகணைகள் அகற்றப்படும்” என்று அமெரிக்கா அறிவித்திருந்தால் இந்த யுத்தத்தை அறவே தடுத்திருக்க முடியும்.
எனவே, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் எதற்கோ காலம் தாழ்த்துகின்ற என்பதை அறிந்து கொண்ட புட்டின் இன்று உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கிறார். அப்போர் சாதாரண மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இராணுவ, விமான தளங்கள் மீதானது என அறிவித்து இருக்கிறார். ‘உக்ரைன் நாட்டை பிடிப்பதல்ல; உக்ரைன் நாட்டை நேட்டோ படைகள் ஆக்கிரமித்து விடக்கூடாது’ என்பதே அவரது எண்ணமாக இருக்கக் கூடும்.
உலகத்தில் எல்லாம் சரியாக இருக்கும் நேரத்தில் இப்பொழுது நேட்டோ அமைப்பின் அவசியம் என்ன? என்பதை அமெரிக்காவோ மற்ற நாடுகளோ உலக மக்களுக்கு அறிவிக்கவில்லை. ஆனால் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது எனக் குற்றம் சுமத்தப்படுகிறது. எப்படியோ அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய போர் பசிக்கு உக்ரைனை பயன்படுத்திக் கொண்டனர். கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக ரஷ்யப் படைகள் உக்ரைன் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்ட பொழுதே ரஷ்யா மற்றும் நேட்டோ நாடுகளை அழைத்து ஐ.நா போர் பதட்டத்தைத் தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஐ.நாவும் அமெரிக்காவின் இன்னொரு குரலாகவே இருக்கின்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டதால், ஐ.நாவும் தனது பங்கை முழுமையாக ஆற்றத் தவறிவிட்டது.
உக்ரைனில் ‘டான்பாஸ்’ எனும் சுதந்திரப் பகுதிகளை ரஷ்யா அங்கீகரிக்க முற்பட்ட உடனேயே ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் அறிவித்து விட்டன. முழுக்க முழுக்க அடிப்படை மதவாத எண்ணங்களை மட்டுமே ஆயுதமாகக் கொண்டிருக்கக்கூடிய தலிபான்கள் வசம் உள்ள ஆப்கானிஸ்தானிய மக்களுக்கு மனித நேயத்தோடு உணவுப்பொருட்கள், மருந்துகளை அனுப்ப பெரும்பாலான நாடுகள் ஒப்புக்கொண்டு அவைகளை அனுப்பி வருகின்றனர். ஆனால் ஒரு நாடு இன்னொரு நாட்டின் போர் தொடுப்பதற்காக பொருளாதாரத் தடை விதித்தால் அது சாதாரண மக்களைப் பாதிக்காதா? அமெரிக்காவின் கட்டளைகளுக்கு கீழ்படியவில்லை என்றால் உடனடியாக பொருளாதாரத் தடை என்பது ஒரு மூன்றாம் தர நடவடிக்கை மட்டுமல்ல, மிகத் தவறான நடவடிக்கையும் ஆகும். இப்படித்தான் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது; ஆனால் அதையும் மீறி ஈரான் மீண்டெழுந்தது.
ரஷ்யா – உக்ரைன் போருக்கு மையப் புள்ளியே ’நேட்டோ’ தான் என்பதை மறைத்து விட்டு, போரை நிறுத்தச் சொல்வதோ, ரஷ்யா மீது பழி போடுவதோ பிரச்சினைக்குத் தீர்வு ஆகாது. இதில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், சாதாரண மக்களே பெரும் துயரத்திற்கு ஆளாகுவார்கள். ரஷ்யாவின் நோக்கம் உக்ரைனை ஆக்கிரமிப்பதாக இருக்க வாய்ப்பில்லை. நேட்டோ படைகளுக்கு உக்ரைன் தளமாக அமையாது என அதன் தலைவர் அறிவிக்கும் வரை உக்ரைன் சுதந்திர நாடாகச் செயல்பட வாய்ப்பே இல்லை. ரஷ்யா – உக்ரைன் போர் இந்த அளவோடு நின்று விடுமா? அது ஐரோப்பாவையும் பற்றிக் கொள்ளுமா? அல்லது உலகப் போராக மூளுமா? என்பதைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது.
ஆனால், உலகத்தில் ‘STALWARTS’ என்று அழைக்கப்படக்கூடிய பரந்த சிந்தனையோடு செயல்படக்கூடிய உலக அளவிலான தலைவர்கள் எந்த நாட்டிலும் இல்லாததால் இது போன்ற உலக மாந்தர்களுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. போர் துவங்கி விட்டால், குறிப்பிட்ட கால கட்டம் வரையிலும் தான் போர் அந்த நாட்டின் தலைவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். அதற்குப் பிறகு, அனைவரது கையையும் மீறி போய்விடும். போரை எந்த நாட்டு மக்களும் விரும்ப மாட்டார்கள். எல்லா மக்களும் அமைதியையே விரும்புவார்கள். போருக்கான காரணிகளை ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஊண்டாண பாணியில் நியாயப்படுத்துவார்கள். இப்பொழுது மிக ஆபத்தான சூழல் உருவாகி இருப்பதாகத் தெரிகிறது.
ஏற்கனவே பிரென்சு அதிபர் மேக்ரோன், ஜெர்மன் அதிபர் ஃப்ராங் வாட்லர் எனப் பலரும் நேரடியாக பேசிவிட்டார்கள். அமெரிக்க, பிரிட்டன் அதிபர்களின் அழைப்புகளுக்கு புட்டின் மதிப்பு கொடுக்கும் காலமும் முடிந்து விட்டது. இனி சீனாவின் தலைவர் ஜிங் பின், இந்தியாவின் பிரதமர் மோடி ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே பேசுவதற்கான வாய்ப்பும், அதைக் காது கொடுத்து புட்டின் கேட்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. சீனா அதிபரை காட்டிலும், பிரதமர் மோடி அவர்கள் இந்த பிரச்சினையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டால் புட்டின் தனது படைகளை வாபஸ் வாங்கி கொள்ளவோ, பிடன் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோ ஏவுகணைகளையும், படைகளையும் விலக்கிக் கொள்ளவும், உக்ரைனை நேட்டோவில் சேர்க்கும் முயற்சியும் கைவிடப்படலாம்.
சண்டை தொடருமா? அல்லது சமாதானம் ஏற்படுமா? என ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். சர்வதேச அமைதியைக் கணக்கிலே கொண்டு பாரத பிரதமர் மோடி அவர்கள் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்த முயற்சியை மேற்கொள்வது அவரது மதிப்பையும், இந்தியாவின் மதிப்பையும் சர்வதேச அளவில் உயர்த்தும் வாய்ப்பு உண்டு.
பொறுத்திருந்து பார்ப்போம்!
– டாக்டர்.க.கிருஷ்ணசாமி
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |