நாம் தேசத்தின் நலன் குறித்து எந்த அளவுக்கு விவாதிக்கிறோமோ, அந்தளவுக்கு சக்தி பிறக்கிறது

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலின் இந்த 98ஆவது பகுதியில் உங்களனைவரோடும் இணைவதில் எனக்கு ஈடில்லா மகிழ்ச்சி.  சதம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம், மனதின் குரலை நீங்கள் அனைவரும் உங்களுடைய பங்களிப்பால் ஒரு அற்புதமான மேடையாக மாற்றியிருக்கிறீர்கள்.  ஒவ்வொரு மாதமும், எத்தனையோ இலட்சக்கணக்கான செய்திகள் வாயிலாக, பல்வேறு மக்களின் உள்ளத்தின் குரல்கள் என்னை வந்தடைகின்றன.  நீங்கள் உங்களுடைய மனதின் சக்தியை நன்கறிவீர்கள்; அதைப் போலவே சமூக சக்தியானது எவ்வாறு தேசத்தின் சக்தியை அதிகரிக்கிறது என்பதை மனதின் குரலின் பலப்பல பகுதிகளில் கவனித்திருக்கிறோம், புரிந்து கொண்டிருக்கிறோம், இவற்றை நானும் அனுபவித்திருக்கிறேன், ஏற்றுக் கொண்டும் இருக்கிறேன்.  எனக்கு இன்னும் அந்த நாள் நினைவில் இருக்கிறது…… அன்று தான் நாம் மனதின் குரலிலே, பாரதத்தின் பாரம்பரியமான விளையாட்டுக்களுக்கு ஊக்கமளிப்பது பற்றிப் பேசினோம், அல்லவா?   உடனடியாக பாரதநாட்டு விளையாட்டுக்களோடு இணைவது, அதில் திளைப்பது, அவற்றைக் கற்றுக் கொள்வது பற்றிய எழுச்சி நாட்டில் உருவானது.  மனதின் குரலில் நாம் பாரத நாட்டு விளையாட்டுப் பொருட்கள் பற்றிப் பேசிய போது, நாட்டுமக்கள் இதற்கும் கூடத் தங்கள் கைகளாலேயே மெருகேற்றினார்கள்.  இப்போது பாரத நாட்டு விளையாட்டுப் பொருட்கள் மீது எந்த அளவுக்கு மோகம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அயல்நாடுகளிலும் இவற்றுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது.  மனதின் குரலில் பாரத நாட்டுப் பாரம்பரியங்களில் ஒன்றான கதை சொல்லுதல் பற்றி நாம் பேசினோம், உடனடியாக இதன் புகழ் தொலை தூரங்களையும் சென்றடைந்து விட்டது.  மக்கள் மிக அதிக அளவில் பாரத நாட்டுக் கதை சொல்லும் முறைகளின்பால் ஈர்க்கப்படத் தொடங்கினார்கள்.

 

நண்பர்களே, சர்தார் படேலின் பிறந்த நாளான ஒற்றுமை தினம் தொடர்பாக நாம் மனதின் குரலில் மூன்று போட்டிகள் பற்றிப் பேசினோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  இந்தப் போட்டிகள், தேசபக்திப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் மற்றும் ரங்கோலி என்ற கோலம் போடுதலோடு தொடர்புடையன.  நாடெங்கிலும் இருந்து 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரளாக இதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூறும் போது பேருவகை எனக்கு ஏற்படுகிறது.  சிறுவர்கள், பெரியோர், மூத்தோர் என இதில் அனைவரும் பெரும் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டு, 20க்கும் மேற்பட்ட மொழிகளில் தங்களுடைய நுழைவுகளை அனுப்பி இருக்கிறார்கள்.  இந்தப் போட்டிகளில் பங்கெடுக்கும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துக்கள்.   உங்களில் ஒவ்வொருவருமே ஒரு சாம்பியன் தான், கலையின் சாதகர் தாம்.  நம்முடைய தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தின் மீது உங்கள் இதயங்களில் எத்தனை பிரேமை இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

 

நண்பர்களே, இன்று இந்தச் சந்தர்ப்பத்தில் லதா மங்கேஷ்கர் அவர்கள், லதா அக்காவின் நினைவு எழுவது என்பது மிகவும் இயல்பான விஷயம் தான்.  ஏனென்றால் இந்தப் போட்டி தொடங்கிய வேளையில், அன்றைய நாளன்று தான் லதா அக்கா ஒரு ட்வீட் வாயிலாக, நாட்டுமக்களிடம் இந்த நிகழ்ச்சியோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

நண்பர்களே, தாலாட்டு எழுதும் போட்டியிலே முதல் பரிசினை, கர்நாடகத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.எம். மஞ்சுநாத் அவர்கள் வென்றிருக்கிறார்.  கன்னட மொழியில் எழுதப்பட்ட இவருடைய தாலாட்டுப் பாடலான மலகு கந்தாவிற்காக இவர் இந்தப் பரிசினை வென்றிருக்கிறார்.  இதை எழுதும் உத்வேகம் தனது தாய், பாட்டி ஆகியோர் பாடிய தாலாட்டுப் பாடல்களால் இவருக்குக் கிடைத்திருக்கிறது.   நீங்களும் இதைக் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கும் மிக ஆனந்தமாக இருக்கும்.

உறங்கி விடு, உறங்கி விடு, செல்லமே,

என் புத்திசாலிச் செல்லமே, உறங்கி விடு,

பகல் கடந்து போச்சுது இரவு வந்தாச்சுது

உறக்க மங்கை இப்ப வந்துடுவா.

நட்சத்திரத் தோட்டத்திலிருந்து,

கனவுகளைக் கொண்டு வருவா,

உறங்கி விடு, உறங்கி விடு.

ஜோஜோ…. ஜோ…. ஜோ…

ஜோஜோ…. ஜோ…. ஜோ….

 

 

அஸாமின் காமரூபம் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய தினேஷ் கோவாலா அவர்கள் இந்தப் போட்டியிலே இரண்டாம் பரிசை வென்றிருக்கிறார்.  இவர் எழுதியிருக்கும் தாலாட்டுப் பாடலில் வட்டார மண் மற்றும் உலோகப் பாத்திரங்களைத் தயாரிக்கும் கைவினைஞர்களின் பிரபலமான கைவினைத்திறத்தின் முத்திரை இருக்கிறது.

 

பானை செய்யும் தாத்தா பையோடு வந்திருக்காரு,

பையில அந்தப் பையில என்ன இருக்குது?

பானைத் தாத்தா பையைத் திறந்து பார்த்தாக்க,

பையுக்குள்ள இருந்திச்சுது ஒரு அழகு சட்டுவம்!

எங்க பாப்பா கேட்டா, பானை தாத்தா சொல்லு,

இந்த அழகு சட்டுவம், சொல்லு எப்படி ஆச்சுது!!

 

பாடல்கள், தாலாட்டுப் பாடல்களைப் போலவே கோலப்போட்டியும் கூட மிகவும் விரும்பப்பட்டதாக இருந்தது.  இதில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் விஞ்சும் அளவுக்கு அழகான கோலங்களைப் போட்டு அனுப்பியிருந்தார்கள்.  இதிலே வெற்றி பெற்ற நுழைவு, பஞ்சாபின் கமல் குமார் அவர்களுடையது தான்.  இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், உயிர்த்தியாகி வீரன் பகத் சிங்கின் மிகவும் அழகான கோலத்தை வரைந்திருந்தார்.  மகாராஷ்டிரத்தின் சாங்க்லியின் சச்சின் நரேந்திர அவசாரி அவர்கள் தனது கோலம் வாயிலாக ஜலியான்வாலா பாக், அங்கு அரங்கேறிய படுகொலை, உயிர்த்தியாகி உதம் சிங்கின் தைரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தார்.  கோவாவில் வசிக்கும் குருதத் வாண்டேகர் அவர்கள் காந்தியடிகள் தொடர்பான கோலத்தை ஏற்படுத்தியிருந்தார்.  புதுச்சேரியைச் சேர்ந்த மாலதி செல்வம் அவர்களும் கூட சுதந்திரத்தின் பல மகத்தான வீரர்கள் மீது தனது குவிமையத்தைச் செலுத்தியிருந்தார்.  நாட்டுப்பற்றுப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர் டி. விஜய் துர்க்கா, இவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.  இவர் தெலுகுவில் தனது நுழைவை அனுப்பியிருந்தார்.  இவர் தனது பகுதியில் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரரான நரசிம்ம ரெட்டி காருவினால் அதிகக் கருத்தூக்கம் பெற்றிருக்கிறார்.  நீங்களே கேளுங்களேன், விஜய் துர்க்கா அவர்களின் நுழைவின் ஒரு பகுதியை.

 

 

ரேனாடு பகுதியின் சூரியனே,

வீரம் நிறைந்தவனே நரசிம்மா!

சுதந்திரப் போராட்டத்தின் அச்சாணியே, ஆணிவேரே!

பரங்கியனின் கொடுமையான அடக்குமுறை பார்த்து

உன் குருதி கொதித்தது, நெஞ்சு தீயில் வெந்தது!

ரேனாடு பகுதியின் சூரியனே,

வீரம் நிறைந்தவனே நரசிம்மா!!

 

தெலுகுவிற்குப் பிறகு, இப்போது, உங்களுக்கு ஒரு மைதிலி மொழிப் பகுதியைப் பற்றிக் கூறுகிறேன்.  இதை தீபக் வத்ஸ் அவர்கள் அனுப்பியிருக்கிறார்.  இவரும் கூட இந்தப் போட்டியில் பரினை வென்றிருக்கிறார்.

 

 

பாரின் பெருமை பாரதம் அண்ணே,

மாட்சிமை உடையது நம் நாடண்ணே,

மூன்று திசையிலும் கடல்கள் சூழும்,

வடக்கில் இமயம் பலமாய் இருக்கும்,

கங்கை யமுனை கிருஷ்ணை காவிரி,

கோசி, கமலா பலான் நதிகள் ஆகும்.

மாட்சிமை உடையது நம் நாடண்ணே,

மூவண்ணத்திலே நம் உயிர்கள் உறையும்.

 

நண்பர்களே, எனக்கு நம்பிக்கை இருக்கிறது, உங்களுக்கும் இவை கண்டிப்பாகப் பிடித்திருக்கும்.  போட்டியில் இடம் பெற்றிருக்கும் இவை போன்ற நுழைவுகளின் பட்டியல் மிகவும் நீளமானது.  நீங்கள், கலாச்சார அமைச்சகத்தின் இணையத்தளத்திற்குச் சென்று, இவற்றை உங்கள் குடும்பத்தாரோடு பாருங்கள், கேளுங்கள், உங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாய் இவை இருக்கும்.

 

எனதருமை நாட்டுமக்களே, விஷயம் பனாரஸ் பற்றியதாக இருந்தாலும், ஷெஹனாய் பற்றியதாக இருந்தாலும், உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் அவர்களைப் பற்றியதாக இருந்தாலும், என்னுடைய சிந்தையானது இயல்பாகவே அதை நோக்கிச் சென்றுவிடும்.  சில நாட்கள் முன்பாக, உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் இளைஞர் விருதுகள் அளிக்கப்பட்டன.  இந்த விருதானது இசை மற்றும் நிகழ்த்துக் கலைகள் துறையில் உயர்ந்துவரும் திறமைமிக்கக் கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.  இது கலை மற்றும் இசையுலகின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதோடு, இதன் வளத்திற்கும் தனது பங்களிப்பை அளித்து வருகின்றது.  எந்த இசைக்கருவிகளின் புகழ் காலப்போக்கில் மங்கத் தொடங்கியிருக்கிறதோ, அவற்றில் யார் புத்துயிரைப் புகுத்தியிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள்.  நீங்கள் அனைவரும் இந்த மெட்டினைக் கவனமாகக் கேளுங்கள்…….

 

இந்த இசைக்கருவி என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?  உங்களுக்கு இது என்ன என்பது தெரியாமல் இருக்கலாம்.  இந்த இசைக்கருவியின் பெயர் சுரசிங்கார் ஆகும், இந்த மெட்டினை ஏற்படுத்தியிருப்பவரின் பெயர் ஜாய்தீப் முகர்ஜி.  ஜாய்தீப் அவர்கள், உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் விருதினைப் பெறும் இளைஞர்களில் ஒருவராவார்.  இந்தக் கருவியின் இசையைக் கேட்பது என்பதே கடந்த 50கள், 60களுக்குப் பிறகு இயலாத ஒன்றாகி விட்டது.  ஆனால் ஜாய்தீப் அவர்கள், சுரசிங்காரை மீண்டும் பிரபலமடையச் செய்வதில் முழு ஈடுபாட்டாடு இறங்கியிருக்கிறார்.  இதைப் போலவே சகோதரி, உப்பலப்பு நாகமணி அவர்களின் முயற்சியும் கூட மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது, இவருக்கு மாண்டலின் கருவியில் கர்நாடக இசைக்காக விருது அளிக்கப்பட்டு இருக்கிறது.  இதைப் போலவே சங்க்ராம் சிங் சுஹாஸ் பண்டாரே அவர்களுக்கும் வார்க்கரி கீர்த்தனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.  இந்தப் பட்டியலில் இசையோடு இணைந்த கலைஞர்கள் மட்டுமே இல்லை.  வீ துர்க்கா தேவி அவர்கள், மிகப் பழமையான நாட்டிய வகையான கரகாட்டத்திற்காக இந்த விருதினைப் பெறுகிறார்.  இந்த விருதின் மேலும் ஒரு வெற்றியாளர், ராஜ் குமார் நாயக் அவர்கள், தெலங்கானாவின் 31 மாவட்டங்களில், 101 நாட்கள் வரை நடக்கக்கூடிய பேரினி ஓடிசி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.  இன்று, மக்கள் இவரை பேரினி ராஜ்குமார் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள்.  பேரினி நாட்டியம், பகவான் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாட்டியம், இது காகதீய வம்சம் கோலோச்சிய காலத்தில் மிகவும் பிரபலமானதாக இருந்தது.  இந்த வம்சத்தின் வேர்கள் இன்றைய தெலங்கானாவோடு தொடர்புடையது.  விருதைப் பெறும் மேலும் ஒரு வெற்றியாளர் சைகோம் சுர்சந்திரா சிங் அவர்கள்.  இவர் மைதேயி புங் இசைக்கருவியைத் தயாரிப்பதில் வல்லவர் என்று அறியப்படுகிறார்.   இந்த இசைக்கருவி மணிப்பூரோடு தொடர்புடையது. பூரன் சிங் ஒரு மாற்றுத்திறனாளிக் கலைஞர், இவர் ராஜூலா-மலுஷாஹி, ந்யௌலி, ஹுட்கா போல், ஜாகர் போன்ற பலவகைப்பட்ட இசை வடிவங்களையும் பிரபலமாக்கிக் கொண்டு வருகிறார்.  இவற்றோடு தொடர்புடைய பல ஒலிப்பதிவுகளையும் இவர் தயாரித்திருக்கிறார்.  உத்தராக்கண்டின் நாட்டுப்புற இசையில் தனது புலமையை வெளிப்படுத்தி பூரன் சிங் அவர்கள் பல விருதுகளை வென்றிருக்கிறார்.   போதிய அவகாசம் இல்லாமையால், விருது பெறும் அனைவரின் விபரங்களையும் என்னால் கூற முடியவில்லை; ஆனால் நீங்கள் அவர்களைப் பற்றிக் கண்டிப்பாகப் படித்துப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.  அதே போல, இந்தக் கலைஞர்கள் அனைவரும், நிகழ்த்துக் கலைகளை மேலும் பிரபலப்படுத்த, வேர்கள் மட்டத்தில் அனைவருக்கும் உத்வேகம் அளித்து வருவார்கள்.

 

என் மனம் நிறை நாட்டுமக்களே, வேகமாக முன்னேறி வரும் நமது தேசத்தின் டிஜிட்டல் இந்தியாவின் பலம், மூலை முடுக்கெங்கும் காணப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இண்டியாவின் சக்தியை வீடுகள் தோறும் அடையாளம் காணும் வகையிலே பல்வேறு செயலிகள் பெரும் பங்காற்றி வருகின்றன.  இப்படிப்பட்ட ஒரு செயலி தான், ஈ-சஞ்சீவனி. இந்தச் செயலி வாயிலாக தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை, அதாவது தொலைவான பகுதிகளில் இருந்தவாறே, காணொளி ஆலோசனை மூலமாக, மருத்துவர்களிடம் தங்கள் நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெற முடிகிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, இதுவரை தொலைபேசி ஆலோசனை செய்வோரின் எண்ணிக்கை பத்து கோடி என்ற எண்ணிக்கையையும் கடந்து விட்டது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள், காணொளி ஆலோசனை வாயிலாக பத்து கோடிக்கும் மேற்பட்ட ஆலோசனைகள்!!  நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஒரு அலாதியான உறவு – இது ஒரு மிகப்பெரிய சாதனை.  இந்தச் சாதனைக்காக, நான் மருத்துவர்கள் அனைவருக்கும், இந்த வசதியால் பயனடையும் நோயாளிகளுக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரத நாட்டு மக்கள், தொழில்நுட்பத்தை எவ்வாறு தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு. கொரோனா காலத்தில் ஈ சஞ்சீவனி செயலி வாயிலாக தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டு, எத்தனையோ பேர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்பதை நாம் பார்த்தோம்.  இதைப் பற்றி மனதின் குரலில், ஒரு மருத்துவர், ஒரு நோயாளி ஆகியோரோடு உரையாடிப் பார்க்கலாமே, உங்களிடம் அவர்களின் எண்ணங்களைக் கொண்டு சேர்க்கலாமே, இது எப்படி ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்தேன்.   நம்மோடு சிக்கிமைச் சேர்ந்த மருத்துவர் மதன் மணி அவர்கள் இணைந்திருக்கிறார்.  மருத்துவர் மதன் மணி அவர்கள் சிக்கிமில் வசிப்பவர் என்றாலும், இவர் தனது மருத்துவப்படிப்பை தன்பாதிலே முடித்திருக்கிறார், பிறகு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் எம்.டி. மேற்படிப்பை நிறைவு செய்திருக்கிறார்.  இவர் ஊரகப் பகுதிகளில் பல்லாயிரம் மக்களுக்கு தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

 

 

பிரதமர்:  வணக்கம்… வணக்கம் மதன் மணி அவர்களே.

டாக்டர் மதன் மணி:  வணக்கம் சார்.

பிரதமர்:  நான் நரேந்திர மோதி பேசுகிறேன்.

டாக்டர்:  சார்…. சொல்லுங்க சார்.

பிரதமர்:  நீங்க பனாரஸில படிசீங்க தானே!

டாக்டர்:  ஆமாங்க, நான் பனாரசில தான் படிச்சேன் சார்.

பிரதமர்:  உங்க மருத்துவப் படிப்பை அங்க தானே படிச்சீங்க?

டாக்டர்:  ஆமாங்க…. ஆமாங்க.

பிரதமர்:  சரி, அப்ப நீங்க இருந்த போது இருந்த பனாரஸ், இப்ப மாறியிருக்கு, இதைப் பார்க்க நீங்க போயிருக்கீங்களா?

டாக்டர்:  ஐயா பிரதமர் ஐயா என்னால போக முடியலை, நான் சிக்கிமுக்கு வந்த பிறகு அங்க போக முடியலை, ஆனா அங்க பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். 

பிரதமர்:  அப்ப நீங்க பனாரஸை விட்டு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கு?

டாக்டர்:  நான் 2006ஆம் ஆண்டு பனாரசை விட்டு வந்தேன் சார்.

பிரதமர்:  ஓ…. அப்படீன்னா நீங்க கண்டிப்பா அங்க போய் பார்த்தே ஆகணும்.

டாக்டர்:  கண்டிப்பா சார்.

பிரதமர்:  நல்லது, நான் உங்களுக்கு ஏன் ஃபோன் பண்ணினேன்னா, நீங்க சிக்கிம்ல, ரொம்ப தொலைவான மலைகள்ல வசிக்கறவங்களுக்கு தொலைபேசிவழியாக ஆலோசனைகள் சொல்கிற விஷயத்தில மிகப்பெரிய சேவைகளைச் செய்யறீங்க.

டாக்டர்: ஆமாம் சார்.

பிரதமர்:  மனதின் குரல் நேயர்களுக்கு உங்களோட அனுபவத்தைத் தெரிவிக்கணும்னு நான் விரும்பறேன்.

டாக்டர்:  சரி சார்.

பிரதமர்:  கொஞ்சம் சொல்லுங்களேன், உங்க அனுபவம் என்ன?

டாக்டர்:  அனுபவம்…. என்னோட அனுபவம் ரொம்பவே அருமையானது சார்.  அது என்னென்னா, சிக்கிம்ல ரொம்ப அருகில இருக்கற பொதுச் சுகாதார மையம்னா, அங்க போகவே மக்கள் வண்டியில பயணிச்சு, குறைஞ்சது அதுக்கே 100-200 ரூபாய் செலவாயிரும்.  மேலும் மருத்துவர் இருப்பாரா மாட்டாராங்கறது இன்னொரு பிரச்சனை.  ஆகையால Tele Consultation, தொலைபேசிவழி ஆலோசனை மூலமா நாங்க மக்களோட நேரடியா தொடர்பு ஏற்படுத்திக்கறோம், தொலைவான பகுதிகள்ல இருக்கற மக்கள் கிட்ட.  நல்வாழ்வு ஆரோக்கிய மையத்தில இருக்கற சமுதாய சுகாதார அதிகாரி இருக்காங்களே, அவங்க எங்களுக்கும், தொலைவான பகுதிகள்ல இருக்கற மக்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தறாங்க.  மேலும், அவங்களோட ரொம்ப நாளைய நோய்கள், அவை தொடர்பான அறிக்கைகள், அவங்களோட இப்போதைய நிலைமை, இது மாதிரியான எல்லா விவரங்களையும் எங்க கிட்ட அவங்க சொல்லிடுவாங்க. 

பிரதமர்:  அதாவது ஆவணங்களை உங்களுக்கு அனுப்பிடுவாங்களா?

டாக்டர்:  ஆமா ஆமா.  ஆவணங்களை அனுப்பவும் செய்வாங்க, அப்படி அனுப்ப முடியலைன்னா, அதைப் படிச்சுக் காட்டியும் கூட எங்களுக்குத் தெரிவிச்சிருவாங்க.

பிரதமர்:  அதாவது அங்க இருக்கற நல்வாழ்வு மையத்தோட மருத்துவர் உங்ககிட்ட சொல்லிடுவாரு.

டாக்டர்:   ஆமாங்க, நல்வாழ்வு மையத்தில இருக்கற Community Health Officer, சமூக சுகாதார அதிகாரி தான்.

பிரதமர்:  பிறகு நோயாளியே அவங்க தங்களோட கஷ்டங்களை உங்ககிட்ட நேரடியாவே சொல்லுவாங்க.

டாக்டர்:  ஆமாங்க.  நோயாளிகளும் தங்களோட கஷ்டங்களை எங்க கிட்ட சொல்லுவாங்க.  பிறகு நாங்க பழைய பதிவுகளைப் பார்த்து, வேற ஏதாவது புதுசா தெரிஞ்சுக்கணுமான்னு விசாரிப்போம்.   இப்ப ஒருத்தரோட இதயத் துடிப்பைக் கேட்கணும்னா, இல்லை ஒருத்தரோட கால் வீங்கியிருக்கான்னு தெரிஞ்சுக்கணும்னா என்ன செய்ய?  ஒருவேளை சமுதாய சுகாதார அதிகாரி இதை கவனிக்கலைன்னா, முதல்ல போய் கால்ல வீக்கம் இருக்கா இல்லையான்னு பாருங்க, கண்ணைப் பாருங்க, ரத்தசோகை இருக்கா இல்லையான்னு பாருங்க, இருமல் இருந்துக்கிட்டே இருந்திச்சுன்னா, மார்பை சோதனை செய்யுங்க, அதில ஏதும் ஒலிகள் கேட்குதான்னு பார்க்க சொல்லுங்க.

பிரதமர்:  நீங்க தொலைபேசியில பேசுவீங்களா இல்லை காணொளி அழைப்பை பயன்படுத்தறீங்களா?

டாக்டர்:  ஐயா நாங்க காணொளி அழைப்பை பயன்படுத்தறோம்.

பிரதமர்:  அப்ப உங்களால நோயாளியை பார்க்கவும் முடியுது.

டாக்டர்:  ஆமா, நோயாளியை எங்களால பார்க்கவும் முடியுது.

பிரதமர்:  அப்ப நோயாளியோட உணர்வு எப்படி இருக்குது?

டாக்டர்:  நோயாளிக்கு ரொம்ப இதமா இருக்குது, டாக்டர் நம்மை உன்னிப்பா கவனிக்கறாருன்னு அவரு உணர்றாரு.  மருந்தைக் குறைக்கணுமா கூட்டணுமானு அவருக்குக் குழப்பம் இருக்கு;  ஏன்னா சிக்கிம்ல இருக்கற பெரும்பாலான நோயாளிங்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் தான் உபாதைகள்.  இந்த நீரிழிவுக்கும், உயர் ரத்த அழுத்தத்துக்கும் மருந்து மாற்றம் செய்ய அவங்க மருத்துவரைப் போய் சந்திக்க ரொம்ப தொலைவு பயணிக்க வேண்டியிருக்கு.  ஆனா, தொலைபேசி வழி ஆலோசனை வாயிலா இது அவங்களுக்கு இருந்த இடத்திலேயே கிடைச்சுடுது, மருந்துகளும் கூட உடல்நல மையங்கள்ல, இலவச மருந்துகள் முனைப்பு மூலமா கிடைச்சுப் போகுது.  அங்கயிருந்தே மருந்துகளையும் வாங்கிட்டுப் போயிடறாங்க.

பிரதமர்:  சரி மதன் மணி அவர்களே, டாக்டர் வந்து பார்க்காத வரைக்கும், நோயாளிகளுக்குப் பொதுவா ஒரு நிம்மதி ஏற்படுறதில்லை, இது பொதுவா அவங்க இயல்பா இருக்குது.  அதே போல டாக்டருக்கும் கூட கொஞ்சம் நோயாளியைப் பார்த்தா நல்லாயிருக்கும்னு படும்.  அந்த வகையில எல்லாம் தொலைபேசி வழி ஆலோசனைன்னு வரும் போது, டாக்டர்கள் எப்படி இதை உணர்றாங்க, நோயாளிகளோட உணர்வு எப்படி இருக்கு?

டாக்டர்:  ஆமாம் சார், நோயாளிகள் மருத்துவர்களைப் பார்க்கணும்னு   எங்களுக்குமே தோணிச்சுன்னா, நாங்க என்ன செய்யறோம்னா, என்ன என்ன எல்லாம் பார்க்கணும்னு நாங்க நினைக்கறோமோ, அங்க இருக்கற சமுதாய சுகாதார அதிகாரி கிட்ட சொல்லி, வீடியோவிலேயே காட்ட நாங்க சொல்றோம்.  சில வேளைகள்ல நோயாளிகளை வீடியோவுல பக்கத்தில வந்து காட்டச் சொல்லி, அவங்க பிரச்சனைகள் பத்தி, ஒருத்தருக்கு சருமப் பிரச்சனை இருக்குன்னா, அதை நாங்க காணொளியிலேயே கவனிச்சுடறோம்.  இதனால அவங்களுக்கும் ஒரு மன நிறைவு ஏற்படுது. 

பிரதமர்:  அப்புறமா அதுக்கான சிகிச்சைக்குப் பிறகு அவங்களுக்கும் ஒரு நிறைவு உண்டாகி, அவங்க அனுபவம் எப்படி இருக்கு?  நோயாளிகள் குணமாகறாங்களா?

டாக்டர்:  சார், அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க.  எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.  ஏன்னா, நான் இப்ப சுகாதாரத் துறையில இருக்கேன், கூடவே தொலைபேசி வழியா மருத்துவ ஆலோசனையும் செய்யறேன்ங்கற போது, கோப்புகளோட சேர்த்து நோயாளிகளையும் கவனிச்சுக்கறது ரொம்ப அருமையான சுகமான அனுபவமா நான் உணர்றேன்.

பிரதமர்:  இதுவரை எத்தனை நோயாளிகளுக்கு நீங்க தொலைபேசி வாயிலா ஆலோசனை அளிச்சிருக்கீங்க?

டாக்டர்:  இதுவரை நான் 536 நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கேன். 

பிரதமர்:  ஓ… அதாவது இப்ப இது உங்களுக்கு கைவந்த கலைன்னு சொல்லலாம் இல்லையா?

டாக்டர்:  ஆமாம் சார், இது ரொம்ப பிடிச்சுப் போச்சு.

பிரதமர்:  சரி, உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.  இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீங்க சிக்கிமோட தொலைவான வனங்கள்ல, மலைகள்ல வசிக்கறவங்களுக்கு ரொம்ப சிறப்பான சேவை ஆற்றி வர்றீங்க.  மேலும் சந்தோஷம் அளிக்கும் விஷயம் என்னென்னா, தேசத்தின் தொலைவான பகுதிகள்லயும் கூட தொழில்நுட்பம்  எத்தனை சிறப்பான முறையில பயன்படுத்தப்படுது அப்படீங்கறது தான்.  சரி, என் தரப்பிலிருந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள். 

மருத்துவர்:  ரொம்ப ரொம்ப நன்றி சார்.

 

     நண்பர்களே, டாக்டர் மதன் மணி அவர்கள் கூறியதிலிருந்து, ஈ-சஞ்சீவனி செயலியானது, எந்த வகையில் அவருக்கு உதவிகரமாக இருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.  டாக்டர் மதன் அவர்களை அடுத்து நாம் மேலும் ஒரு மதன் அவர்களை சந்திக்க இருக்கிறோம்.  இவர் உத்தர பிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் வசிக்கும் மதன் மோஹன் லால் அவர்கள்.  இப்போது இவரும் கூட தற்செயல் நிகழ்வாக, இவர் இருக்கும் சந்தௌலியும் பனாரஸோடு தொடர்புடையது தான்.  வாருங்கள் மதன் மோஹன் அவர்களிடமிருந்து, ஈ சஞ்ஜீவனி பற்றி ஒரு நோயாளி என்ற வகையிலே அவருடைய அனுபவம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம். 

பிரதமர்:  மதன் மோஹன் அவர்களே, வணக்கம்.

மதன் மோஹன்:  வணக்கம், வணக்கம் ஐயா.

பிரதமர்:  வணக்கம், சரி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கறதா சொன்னாங்க, சரியா?

மதன் மோஹன்:  ஆமாங்கய்யா.

பிரதமர்:  மேலும் நீங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைபேசிவழி ஆலோசனை மூலமா உங்க நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கிட்டு வர்றீங்க இல்லையா?

மதன் மோஹன்:  ஆமாங்க. 

பிரதமர்:  ஒரு நோயாளிங்கற முறையில, கஷ்டப்படுறவர்ங்கற வகையில, உங்க அனுபவம் என்னங்கறதை தெரிஞ்சுக்க விரும்பறேன், ஏன்னா நாட்டுமக்கள் வரை இந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்க நினைக்கறேன்.  இன்றைய தொழில்நுட்பம் வாயிலா நமது கிராமங்கள்ல வசிக்கறவங்களும் கூட இதனால எப்படி பயனடையலாம், எப்படி பயன்படுத்தப்படுதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.

மதன் மோஹன்:  அது என்னென்னா சார், மருத்துவமனைகள் தொலைவுல இருக்கு, நீரிழிவுன்னு சொன்னா, அதுக்கு 5-6 கிலோமீட்டர் பயணிச்சு சிகிச்சைக்குப் போக வேண்டியிருந்திச்சு.  ஆனா நீங்க ஏற்படுத்தியிருக்கற அமைப்பு மூலமா, நாங்க இப்ப போறோம், எங்களை பரிசோதனை செய்யறாங்க, வெளி மருத்துவர்களோடயும் எங்களை பேச வைக்கறாங்க, மருந்துகளையும் தந்துடறாங்க.  இதனால எங்களுக்கு பெரிய ஆதாயம், எல்லா மக்களுக்கும் இதனால ரொம்ப சௌகரியமா இருக்கு. 

பிரதமர்:  சரி, ஒரே மருத்துவர் ஒவ்வொரு முறையும் உங்களை பரிசோதனை செய்யறாரா இல்லை மருத்துவர்கள் மாறிக்கிட்டே இருக்காங்களா?

மதன் மோஹன்:  அங்க இருக்கறவங்களுக்குப் புரியலைன்னா, மருத்துவர் கிட்ட காட்டுறாங்க.  அவங்க ஆராஞ்சுட்டு வேற டாக்டர் கிட்ட எங்களைப் பேச வைக்கறாங்க.

பிரதமர்:  இப்ப மருத்துவர் உங்களுக்கு அளிக்கற ஆலோசனைகளால உங்களுக்கு முழுப் பயனையும் அடைய முடியுதா?

மதன் மோஹன்:  கண்டிப்பா பயனுடையதா இருக்குங்க.  இதனால ரொம்பவே உபயோகமா இருக்கு.  மேலும் கிராமத்து மக்களுக்கும் இதனால ரொம்ப பயன் இருக்கு.  எல்லாரும் அங்க போய் ஆலோசனை கேட்கறாங்க, அண்ணே எனக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கு, எனக்கு சர்க்கரை இருக்கு, பரிசோதனை செய்யுங்க, மருந்து சொல்லுங்கன்னு கேட்கறாங்க.  முன்ன எல்லாம் 5-6 கிலோமீட்டர் தூரம் பயணம் செஞ்சு போயிக்கிட்டு இருந்தாங்க, நீளமான வரிசை இருக்கும், ரத்த பரிசோதனைக்கு பெரிய வரிசை கட்டி நிப்பாங்க.  ஒவ்வொரு நாளும் வேதனையா இருக்கும்.

பிரதமர்:  அதாவது இப்ப உங்க நேரம் பெரிய அளவுல மிச்சமாகுது!!

மதன் மோஹன்:  அது மட்டுமா, பணமும் விரயமாச்சு.  ஆனா இப்ப இங்க இலவச சேவைகள் கிடைச்சு வருது.

பிரதமர்:  நல்லது, நீங்க உங்க முன்னால ஒரு மருத்துவரை நேரடியா சந்திக்கும் போது ஒரு நம்பிக்கை கண்டிப்பா ஏற்படும்.  அப்ப மருத்துவர் உங்க நாடிய பிடிச்சுப் பார்க்கறாரு, உங்க கண்களை ஆராயறாரு, உங்க நாக்கை நீட்டச்சொல்லிப் பார்க்கறாரு, அப்ப ஒரு விதமான உணர்வு ஏற்படும்.  ஆனா இப்ப இந்த தொலைபேசி வழி ஆலோசனைங்கற போது எப்படி நீங்க உணர்றீங்க?

மதன் மோஹன்:  ஆமா, கண்டிப்பா நிம்மதியா இருக்கும்.  அதாவது அவங்க நாடி பிடிச்சுப் பார்க்கறாங்க அப்படீங்கற உணர்வு வித்தியாசமா இருக்கும், ஆரோக்கியமான உணர்வு ஏற்படும்.   நீங்க ரொம்ப நல்லதொரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கீங்க, இதனால பல பிரச்சனைகள்லேர்ந்து விடுதலை கிடைச்சிருக்கு.  போகறதே ஒரு கஷ்டமா இருக்கும், நீளமான வரிசையில நிக்கணும், வண்டிக்கு வாடகை வேற குடுக்கணும்….. ஆனா இப்ப எல்லா வசதிகளும் வீட்டில இருந்தபடியே கிடைச்சுட்டு வருது. 

பிரதமர்:  சரி மதன் மோஹன் அவர்களே, என் தரப்பிலிருந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.  வயதான இந்த நிலையிலயும் நீங்க தொழில்நுட்பத்தைக் கத்துக்கிட்டு இருக்கீங்க, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தறீங்க.  மத்தவங்களுக்கு இதுபத்திச் சொல்லுங்க, இதனால அவங்க நேரவிரயம் தடுக்கப்படும், பணம் மிச்சமாகும், அவங்களுக்குக் கிடைக்கற ஆலோசனைகளைத் தவிர, அவங்களுக்கு நல்ல முறையில மருந்துகளும் கிடைக்கும்.

மதன் மோஹன்:  ஆமாம் ஐயா, அருமை.

பிரதமர்:  சரி உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள் மதன் மோஹன் அவர்களே.

மதன் மோஹன்:  பனாரஸை நீங்க காசி விஸ்வநாத் நிலையமா ஆக்கிட்டீங்க, வளர்ச்சியை ஏற்படுத்திட்டீங்க.  என் தரப்பிலிருந்து உங்களுக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள் ஐயா.

பிரதமர்:  நான் உங்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கறேன்.  நான் என்னங்க செஞ்சுட்டேன், பனாரஸ்வாசிங்க தான் பனாரஸை உருவாக்கி இருக்காங்க. இல்லைன்னா, நான் அன்னை கங்கைக்குச் சேவையின் பொருட்டு, அன்னை கங்கையோட அழைப்புக்கு அடிபணிஞ்சேன், அவ்வளவு தான், வேற ஒண்ணும் இல்லை.  சரிங்க, உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.  வணக்கங்க.

மதன் மோஹன்:  வணக்கங்க.

பிரதமர்:  வணக்கங்க.

 

நண்பர்களே, தேசத்தின் சாமான்ய குடிமகனுக்காக, மத்தியத் தட்டு மக்களுக்காக, மலைப்பிரதேசங்களில் வசிப்போருக்காக, இந்த ஈ-சஞ்சீவனியானது உயிர்க்கவசமாகத் திகழும் ஒரு செயலி.  இது பாரதத்தின் டிஜிட்டல் புரட்சியின் சக்தி. மேலும் இதன் தாக்கத்தை இன்று நாம் ஒவ்வொரு துறையிலும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பாரதத்தின் யுபிஐயின் சக்தியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். உலகின் எத்தனையோ தேசங்கள் இதன்பால் கவரப்பட்டு இருக்கின்றன.  சில நாட்கள் முன்பாக பாரதத்திற்கும், சிங்கப்பூருக்கும் இடையே, யுபிஐ-பே நௌ இணைப்பு தொடங்கப்பட்டது. இப்போது சிங்கப்பூர் மற்றும் பாரதத்தின் மக்கள் தங்கள் மொபைல் வாயிலாக, அவரவர் தங்கள் நாடுகளுக்குள்ளே எப்படி பணப்பரிமாற்றத்தைச் செய்து கொள்கிறார்களோ, அதைப் போலவே இப்போது பரஸ்பரம் பரிமாற்றத்தைச் செய்து கொள்ள முடியும்.  மக்களும் இதனால் ஆதாயம் அடையத் தொடங்கிவிட்டர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரதத்தின் ஈ-சஞ்ஜீவனி செயலியாகட்டும், யுபிஐ ஆகட்டும், வாழ்க்கையை சுலபமாக்கும் தன்மையை அதிகரிப்பதில் இவை மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.

 

என் கனிவான நாட்டுமக்களே, ஒரு தேசத்தில் அழிந்து வரும் பறவையினமோ, ஏதோ ஒரு உயிரினமோ, அழிவின் விளிம்பிலிருந்து அவை காப்பாற்றப்படுகிறன, இது உலகிலே பேசுபொருளாக ஆகிறது.  நமது தேசத்திலும் கூட இப்படி பல மகத்துவமான பாரம்பரியங்கள் அழிந்து விட்டன, மக்களின் மனங்களிலிருந்து அகன்று விட்டன.  ஆனால் இப்போது மக்களின் பங்களிப்புச் சக்தியின் துணையோடு, இவற்றிற்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, இது தொடர்பான விவாதத்தை அரங்கேற்ற மனதின் குரலை விடச் சிறப்பான மேடை வேறு என்னவாக இருக்க முடியும்?

 

நான் உங்களிடத்திலே இப்போது கூறவிருப்பது, இந்தத் தகவல் உள்ளபடியே உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வல்லது, நமது மரபின் மீது உங்களுக்குப் பெருமை உண்டாகும்.  அமெரிக்காவில் வசிக்கும் கஞ்சன் பேனர்ஜி அவர்கள், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு தொடர்புடைய இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின்பால் என் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.  நான் அவர்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.  நண்பர்களே, மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பான்ஸ்பேரியாவிலே, இந்த மாதம், த்ரிபேனி கும்போ மொஹொத்ஷோவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதிலே எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள் என்றாலும், இது ஏன் இத்தனை விசேஷமானது என்பதை நீங்கள் அறிவீர்களா?  ஏன் விசேஷமானது என்றால், இந்த நிகழ்வு 700 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.  இந்தப் பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது என்றாலும் கூட, துரதிர்ஷ்டவசமாக 700 ஆண்டுகளுக்கு முன்பாக, பங்காலின் திரிபேனியில் நடக்கும் இந்த மஹோத்சவம் தடைப்பட்டுப் போனது.  இது நாடு விடுதலை அடைந்த பிறகு தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால், அப்படி நடக்கவில்லை.  ஈராண்டுகள் முன்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், ‘திரிபேனி கும்போ பொரிசாலோனா ஷொமிதி’ மூலமாக, இந்த மகோத்ச்வத்தை மீண்டும் தொடங்கினார்கள்.  இந்த ஏற்பாட்டோடு தொடர்புடைய அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீங்கள் ஒரு பாரம்பரியத்திற்கு மட்டும் உயிர் அளிக்கவில்லை, மாறாக, நீங்கள், பாரதத்தின் கலாச்சார மரபின் பாதுகாப்பிற்கும் பேருதவியாக இருந்திருக்கிறீர்கள்.

 

நண்பர்களே, மேற்கு வங்கத்தின் திரிபேனி, பல நூற்றாண்டுகளாகவே ஒரு பவித்திரமான இடமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.  இதைப் பற்றிய குறிப்புகள், பல்வேறு புனித நூல்களில், வைணவ இலக்கியங்களில், சாக்த இலக்கியங்களில், இன்னும் பிற வங்காள இலக்கியங்களில் காணப்படுகிறது.  பல்வேறு வரலாற்று ஆவணங்களிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், ஒரு காலத்திலே இந்தப் பகுதி, சம்ஸ்கிருதம், கல்வி மற்றும் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் மையமாக விளங்கியிருந்தது என்பது தான்.  பல புனிதர்களும், இதை மாக சங்கராந்தியில் கும்ப ஸ்நானம் செய்ய பவித்திரமான இடமாகக் கருதுகிறார்கள்.  திரிபேனியில் நீங்கள் கங்கைத் துறை, சிவன் கோயில், சுடுமண் சிற்பக்கலையால் அலங்கரிக்கப்பட்ட பண்டைய கட்டிடங்களைக் காணலாம்.  திரிபேனியின் மரபை மீள் நிறுவவும், கும்பப் பாரம்பரியத்தின் பெருமைக்குப் புத்துயிர் அளிக்கவும் இங்கே, கடந்த ஆண்டு கும்ப மேளாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கும்ப மஹாஸ்நானம் மற்றும் திருவிழாவானது, இந்தத் துறையில், ஒரு புதிய சக்தியைப் பெருக்கெடுத்து ஓட விட்டிருக்கிறது.  மூன்று நாட்கள் வரை, ஒவ்வொரு நாளும் நடைபெறும் கங்கை ஆரத்தி, ருத்ராபிஷேகம் மற்றும் யாகங்களில் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டார்கள்.  இந்த முறை நடைபெற்ற மஹோத்சவத்தில் பல்வேறு ஆசிரமங்கள், மடங்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  வங்காளப் பாரம்பரியங்களோடு தொடர்புடைய பல்வேறு வழிமுறைகளான கீர்த்தனைகள், பாவுல், கோடியோன் நடனங்கள், ஸ்திரீ-கோல், போரேர் கானம், சோஊ-நடனம், மாலைநேர நிகழ்ச்சிகளில், கருத்தைக் கவரும் மையங்களாக ஆகியிருந்தன.   தேசத்தின் பொன்னான கடந்த காலத்தோடு நமது இளைஞர்களை இணைக்கும் பாராட்டுக்குரிய முயற்சியாக இது அமைந்திருந்தது.  பாரதத்தில் இப்படிப்பட்ட மேலும் பல பழக்கங்கள் இருந்தன, இவற்றை மீளுயிர்ப்பிக்க வேண்டியது அவசியம்.  இவை பற்றி நடக்கும் விவாதங்கள், இவற்றின்பால் மக்களின் மனங்களில் கண்டிப்பாக உத்வேகத்தை ஊட்டும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

 

என் அன்புநிறை நாட்டுமக்களே, தூய்மை பாரதம் இயக்கத்தில் நமது தேசத்தில் மக்களின் பங்கெடுப்பு என்பதன் பொருளையே மாற்றி விட்டது. தேசத்தில் எங்காவது யாராவது தூய்மையோடு தொடர்புடையவராக இருக்கிறார், சிலர் இவை பற்றிய தகவல்களை எனக்கு அவசியம் அனுப்பி வருகிறார்கள்.  இப்படிப்பட்ட ஒன்றின் மீது என் கவனம் ஈர்க்கப்பட்டது, இது ஹரியாணாவின் இளைஞர்களின் தூய்மை இயக்கம்.  ஹரியாணாவில் இருக்கும் ஒரு கிராமம், துல்ஹேடி.  இங்கிருக்கும் இளைஞர்கள், நாம் பிவானி நகரத்தைத் தூய்மைக்கான ஒரு எடுத்துக்காட்டாக ஆக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.  இவர்கள் தூய்மை மற்றும் மக்கள் சேவைக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள்.  இந்தக் குழுவோடு தொடர்புடைய இளைஞர்கள் காலை 4 மணிக்கு பிவானிக்குச் சென்று விடுவார்கள்.  நகரின் பல்வேறு இடங்களில், இவர்கள் இணைந்து துப்புரவுப் பணியை மேற்கொள்வார்கள்.  இவர்கள் இதுவரை நகரின் பல்வேறு பகுதிகளில் பல டன் பெறுமானமுள்ள குப்பையை அகற்றியிருக்கிறார்கள்.

 

நண்பர்களே, தூய்மை பாரதம் இயக்கத்தின் ஒரு மகத்துவம் வாய்ந்த இலக்கு Waste to Wealth குப்பையிலிருந்து கோமேதகம்.  ஒடிஷாவின் கேந்திரபாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியான கமலா மோஹ்ரானா, ஒரு சுயவுதவிக் குழுவை இயக்கி வருகிறார்.  இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள், பால்கவர் மற்றும் பிற பேக் செய்யப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களைக் கொண்டு கூடைகள், மொபைல் ஸ்டாண்டுகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்கள்.  இது இவர்களுக்குத் தூய்மையோடு கூடவே வருமானத்தையும் ஈட்டும் ஒரு நல்ல வழிமுறையாக ஆகி வருகிறது.  நாம் தீர்மானம் மட்டும் செய்து விட்டால் போதும், தூய்மை பாரதத்திற்கு நமது மிகப்பெரிய பங்களிப்பை நம்மால் அளிக்க முடியும்.  குறைந்தபட்சம் நெகிழிப் பைகளுக்கு பதிலாகத் துணிப் பைகளைப் பயன்படுத்துவோம் என்ற உறுதிப்பாட்டை நாமனைவரும் மேற்கொண்டாக வேண்டும்.  உங்களுடைய இந்த உறுதிப்பாடு, உங்களுக்கு எத்தனை நிறைவை அளிக்குமோ, அதே அளவுக்கு இது பிறகுக்குக் கருத்தூக்கமாகவும் அமையும்.

 

எனதருமை நாட்டுமக்களே, இன்று நானும் நீங்களும் இணைந்து, உத்வேகமளிக்கும் பல விஷயங்கள் குறித்து,  மீண்டும் ஒருமுறை கலந்தோம்.  குடும்பத்தோடு அமர்ந்து இதைக் கேட்டோம், இப்போது இதை நாள்முழுவதும் அசை போட்டுக் கொண்டிருப்போம்.  நாம் தேசத்தின் கடமையுணர்வு குறித்து எந்த அளவுக்கு விவாதங்களில் ஈடுபடுகிறோமோ, அந்த அளவுக்கு நமக்குள் சக்தி பிறக்கிறது.   இந்த சக்திப் பெருக்கோடு பயணித்து இன்று நாம் மனதின் குரலின் 98ஆவது பகுதி என்ற கட்டத்தை எட்டியிருக்கிறோம்.  இன்றிலிருந்து சில நாட்கள் கழித்து ஹோலிப் பண்டிகை வரவிருக்கிறது.  அனைவருக்கும் ஹோலிப் பண்டிகைக்கான நல்வாழ்த்துக்கள்.  நாம், நமது பண்டிகைகளின் போது உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற உறுதிப்பாட்டோடு கொண்டாட வேண்டும்.  உங்களுடைய அனுபவங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.  இப்போது நான் விடை பெறுகிறேன்.  அடுத்த முறை, மீண்டும் புதிய விஷயங்களோடு சந்திப்போம்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருளாதாரத்தை மீட்க மாலத்தீவு ...

பொருளாதாரத்தை மீட்க மாலத்தீவுக்கு இந்தியா உதவி ஆசிய நாடான மாலத்தீவு, இந்திய பெருங்கடல் பகுதியில் முக்கியமான ...

மனித உரிமை மீறலில் ஈடுபடும் நக் ...

மனித உரிமை மீறலில் ஈடுபடும் நக்ஸலைட்டுகள் -அமித்ஷா நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ...

வரும் 2026-ம் ஆண்டிற்குள் நாட்டில ...

வரும் 2026-ம் ஆண்டிற்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்- அமித்ஷா உறுதி 'வரும் 2026ம் ஆண்டுக்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ...

மாலத்தீவுக்கு உதவி செய்வது முத ...

மாலத்தீவுக்கு உதவி செய்வது முதலில் இந்தியா தான் -முகமது முயிசு மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா ...

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் ச ...

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் பிரதமர் மோடி -அமித்ஷா பெருமிதம் '23 ஆண்டுகால பொது வாழ்வை பிரதமர் மோடி நிறைவு ...

நவராத்திரியை முன்னிட்டு பிரதம ...

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, கடவுள் துர்க்கைக்கு அர்ப்பணிக்கும் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...