மனதின் குரல் நிகழ்ச்சியின் 113-வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரை

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே.  21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன.  எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம்.  நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.  கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.  பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.

நண்பர்களே,

தேசத்தின் இளைஞர்களுக்கு விண்வெளித் துறை சீர்திருத்தங்களாலும் கணிசமான ஆதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதால், நாம் ஏன் இன்று மனதின் குரலில் விண்வெளித் துறையோடு தொடர்புடைய நமது இளைய நண்பர்களோடு உரையாடி மகிழக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.  ஸ்பேஸ்டெக் ஸ்டார்ட் அப்பான, கேலக்ஸி ஐயின் குழுவினர் என்னுடன் இணைந்திருக்கிறார்கள்.  இந்த ஸ்டார்ட் அப்பினை ஐஐடி மதராஸின் முன்னாள் மாணவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.  இந்த இளைஞர்கள் அனைவரும் இன்று நம்மோடு தொலைபேசி-வழித் தொடர்பில் இணைந்திருக்கிறார்கள் – சூயஷ், டேனில், ரக்ஷித், கிஷன், பிரணீத் ஆகியோர்.  வாருங்கள் இந்த இளைஞர்களின் அனுபவங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பிரதமர் – ஹெலோ

அனைத்து இளைஞர்களும் – ஹெலோ

பிரதமர் – வணக்கம்ங்க

அனைத்து இளைஞர்களும் – வணக்கம் சார்

பிரதமர் – நல்லது நண்பர்களே, ஐஐடி மதராஸில ஏற்பட்ட உங்களுடைய நட்பு, இன்றைக்கும் கூட பலமானதா இருக்கறத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.  இதனால தான் நீங்க எல்லாருமா இணைஞ்சு GalaxEyeஐ ஆரம்பிக்க முடிவு செஞ்சீங்க. இன்னைக்கு நான் மேலும் இதுபத்தி தெரிஞ்சுக்க விரும்பறேன்.  கூடவே உங்க தொழில்நுட்பத்தால தேசத்துக்கு எந்த அளவுக்கு நன்மை ஏற்பட இருக்குன்னும் சொல்லுங்க.

சூயஷ் – ஐயா என் பேரு சூயஷ்.  நீங்க சொன்னா மாதிரி, ஐஐடி மதராஸில சந்திச்சோம், அங்க நாங்க எல்லாரும் எங்க படிப்பை முடிச்சோம், ஆனா வேறவேற வருஷங்கள்ல எங்க பொறியியல் படிப்பை நிறைவு செஞ்சோம்.  அப்பத்தான் நாங்க என்ன நினைச்சோம்னா, ஹைப்பர்லூப்னு ஒரு ப்ராஜக்ட் இருக்கு, இதை நாம ஒண்ணா சேர்ந்து செய்யலாமேன்னு தோணிச்சு.  இதன்படி நாங்க ஆவிஷ்கார் ஹைப்பர்லூப்னு ஒரு குழுவை உருவாக்கினோம், இது தொடர்பா நாங்க அமெரிக்காவுக்கும் பயணிச்சோம்.   அந்த ஆண்டு அமெரிக்காவுல போட்டியில பங்கெடுக்கப் போன ஒரே ஆசிய அணி நாங்க தான். அங்க நம்ம நாட்டோட கொடியை நாட்டினோம். உலகத்தில சுமார் 1500 அணிகள்ல நாங்க தலைசிறந்த 20 அணிகள்ல ஒண்ணா இருந்தோம்.

பிரதமர் – சரி, நீங்க மேல தொடர்றதுக்கு முன்னால நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.

சூயஷ் – ரொம்ப ரொம்ப நன்றிங்க.  இந்த சாதனைக்குப் பிறகு எங்களோட நட்பு மேலும் ஆழமாச்சு, இந்த மாதிரியான கடினமான, சிரமங்கள் நிறைஞ்ச திட்டங்களை செய்யத் தேவையான தன்னம்பிக்கை ஏற்பட்டுச்சு.  மேலும் இந்த வேளையில தான் ஸ்பேஸ் எக்ஸை பார்த்தோம். விண்வெளித் துறையை அப்ப நீங்க திறாந்து விட்டீங்க. அதில தனியார் பங்களிப்பை உறுதி செய்யற வகையில 2020ல நீங்க ஒரு திருப்புமுனையான தீர்மானத்தை மேற்கொண்டீங்க.  இது எங்களுக்கு ரொம்ப ஆர்வத்தை ஏற்படுத்திச்சு.  இப்ப நாங்க என்ன உருவாக்கிட்டு இருக்கோங்கறதையும், அதனால என்ன பயன் அப்படீங்கறது பத்தியும் பகிர்ந்துக்க ரக்ஷித்தை உங்ககூட உரையாட அழைக்க விரும்பறேன்.

ரக்ஷித் – ஐயா, என் பேரு ரக்ஷித்.  இந்தத் தொழில்நுட்பத்தால நமக்கு எப்படி ஆதாயங்கள் கிடைக்கும்ங்கறது பத்தி நான் பதில் சொல்றேன்.

பிரதமர் – ரக்ஷித், நீங்க உத்தராகண்டில எங்கிருந்து வர்றீங்க?

ரக்ஷித் – சார் நான் அல்மோடாவிலேர்ந்து வர்றேன்.

பிரதமர் – ம்ம், அப்ப நீங்க பால் இனிப்புக்காரங்கன்னு சொல்லுங்க.

ரக்ஷித் – ஆமா சார், ஆமா சார்.  பால் இனிப்புத் தான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சமானது.

பிரதமர் – நம்ம லக்ஷ்ய சேன் இருக்காருல்ல, அவரு தான் அப்பப்ப எனக்கு பால் இனிப்பைத் தருவாரு.  சரி ரக்ஷித் சொல்லுங்க.

ரக்ஷித் – எங்களோட தொழில்நுட்பத்தால, விண்வெளியிலிருந்து, மேகங்களைத் தாண்டிப் பார்க்க முடியும், இரவிலயும் கூட இதால பார்க்க முடியும்.  இதனால தேசத்தின் எந்த ஒரு மூலையா இருந்தாலும், அது மேலிருந்து ஒரு தெளிவான படத்தை எடுக்க முடியும்.  மேலும் இப்படி கிடைக்கக்கூடிய இந்தத் தரவுகளை வெச்சு, இரண்டு துறைகள்ல மேம்பாட்டை ஏற்படுத்த முடியும்.  முதலாவதா, பாரதத்தோட பாதுகாப்பை உறுதி செய்யறதுல.  நம்மளோட எல்லைப் பகுதிகள், நம்மோட கடல்பகுதிகள், இவை மேல நம்மால கண்காணிப்பை ஏற்படுத்த முடியும்.  மேலும் எதிரிகளோட செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம், நம்ம இராணுவத்துக்குத் துப்புகளைக் கொடுக்கலாம். இரண்டாவதா, பாரதநாட்டு விவசாயிகளை மேலும் சக்தி படைத்தவர்களா ஆக்கலாம்.  ஏற்கெனவே நாங்க உருவாக்கியிருக்கற ஒரு பொருளைக் கொண்டு, விண்வெளியிலிருந்து, இரால் வளர்ப்புல ஈடுபட்டிருக்கற விவசாயிகளோட குளங்கள்ல இருக்கற நீரோட தரத்தை, தற்போது இதுக்கு ஆகற செலவுல பத்துல ஒரு பங்கு செலவுல கணக்கிட முடியும். மேலும் நாங்க என்ன விரும்பறோம்னா, உலகத்துக்குச் சிறந்த தரமான செயற்கைக்கோள் படங்களைப் பிடிச்சு, உலகளாவிய பிரச்சனைகளான உலக வெப்பமயமாக்கம் போன்ற சிக்கல்களோட போராடத் தேவையான சிறந்த தரம்வாய்ந்த செயற்கைக்கோள் தரவுகளை அளிக்க விரும்பறோம்.

பிரதமர் – அப்படீன்னா உங்க குழு ஜவானுக்கும் ஜய் போடுவீங்க, கிஸானுக்கும் ஜய் போடுவீங்க இல்லையா?

ரக்ஷித் – ஆமாம் சார், கண்டிப்பா.

பிரதமர் – நண்பர்களே, நீங்க இத்தனை பணிகளை செஞ்சிக்கிட்டு இருக்கீங்களே, உங்களோட இந்தத் தொழில்நுட்பத்தோட துல்லியம் எந்த அளவுன்னு சொல்றீங்களா?

ரக்ஷித் – சார், 50 செ.மீ. resolution அதாவது பிரிதிறன் வரைபடங்கள் இருக்கும்.   மேலும் ஒரேஒரு முறையில எங்களால சுமார் 300 சதுர கி.மீ. பகுதியோட படத்தைப் பிடிச்சுட முடியும்.

பிரதமர் – நீங்க சொல்றதை எல்லாம் நம்ம நாட்டுமக்கள் கேட்கும் போது அவங்க எவ்வளவு பெருமிதப்படுவாங்கன்னு நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.   சரி இப்ப நான் மேலும் ஒரு கேள்வியைக் கேட்க விரும்பறேன்.

ரக்ஷித் – சொல்லுங்க சார்.

பிரதமர் – விண்வெளி சூழலமைப்புங்கறது ரொம்பவே துடிப்பானதா ஆயிட்டு வருது.  இப்ப உங்களோட குழு, இதில என்ன மாற்றங்களைப் பார்க்கறீங்க?

கிஷன் – என் பேரு கிஷன் சார், நாங்க இந்த GalaxEyeஐ தொடங்கின பிறகுல இருந்தே நாங்க IN-SPACe வர்றதை பார்த்தோம், நிறைய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படுறதைப் பார்த்தோம். எடுத்துக்காட்டா ஜியோ ஸ்பேஷியல் டேடா பாலிஸி, அதாவது புவியியல் சார்ந்த தரவுக் கொள்கை,  இந்திய விண்வெளிக் கொள்கை.  மேலும் நாங்க கடந்த மூன்றாண்டுகள்ல நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதைப் பார்த்தோம், நிறைய செயல்முறை மாற்றங்கள், நிறைய கட்டமைப்பு மாற்றங்கள், நிறைய வசதிகள், இஸ்ரோவால இவையெல்லாம் நல்ல முறையில செய்யப்பட்டிருக்கு. இப்ப நாங்க இஸ்ரோவுக்குப் போயி எங்க வன்பொருளை ரொம்ப சுலபமா பரிசோதனை செய்ய முடியுது.  மூணு வருஷங்களுக்கு முன்னால இந்தச் செயல்முறைகள்லாம் இந்த அளவுக்கு இருக்கல. இதெல்லாம் எங்களுக்கு மட்டுமில்லை, மேலும் பல ஸ்டார்ட் அப்புகளுக்கு ரொம்பவே உதவிகரமா இருக்கு.  மேலும், அண்மைக்கால அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் காரணமா, இந்த வசதிகள் கிடைக்கறது காரணமா, நிறைய ஸ்டார்ட் அப்புகள் உருவாகவும் ஊக்கமா இருக்கு, இப்படிப்பட்ட ஸ்டார்ட் அப்புகள் வந்து ரொம்ப சுலபமா, பொதுவா மேம்பாட்டை ஏற்படுத்தறதுக்கு அதிக செலவும் நேரமும் ஆகற துறைகள்ல கூட நல்ல மேம்பாடு ஏற்படுத்த முடியும். ஆனா தற்போதைய கொள்கைகள் காரணமாவும், IN-SPACe வந்ததுக்குப் பிறகும், ஸ்டார்ட் அப்புகளுக்கு நிறைய விஷயங்களைச் செய்யறது சுலபமாகியிருக்கு.  என் நண்பன் டேனில் சாவ்டாவும் கூட இது தொடர்பா பகிர்ந்துக்க விரும்பறாரு.

பிரதமர் – டேனில் சொல்லுங்க.

டேனில் – சார், நாங்க ஒரு விஷயத்தை கவனிச்சோம், அது என்னென்னா, பொறியியல் படிக்கற மாணவர்களோட சிந்தனைக் கண்ணோட்டத்தில ஒரு மாற்றத்தை கவனிச்சோம்.  முன்ன எல்லாம் அவங்க வெளிநாட்டுக்குப் போயி விண்வெளித் துறையில மேற்படிப்பை படிக்க விரும்புவாங்க, அங்க வேலை பார்க்க விரும்புவாங்க, ஆனா இப்ப இந்தியாவுலேயே ஒரு விண்வெளி சூழலமைப்பு ரொம்ப நல்லமுறையில வளர்ந்திட்டு இருக்கற நிலையில அவங்க எல்லாம் திரும்ப வந்து இந்தச் சூழலமைப்போட ஒரு அங்கமா ஆக விரும்பறாங்க.  இது ஒரு நல்ல பின்னூட்டம் நமக்குக் கிடைக்குது, எங்க கம்பெனியிலேயே கூட, இந்தக் காரணத்தாலேயே சிலர் திரும்ப வந்து வேலை பார்த்திட்டு இருக்காங்க.

பிரதமர் – நீங்க ரெண்டு பேரும் சொன்ன கண்ணோட்டங்கள், அதாவது கிஷனும் சரி, டேனிலும் சரி சொன்ன கருத்துக்கள் மேல பலரோட கவனமும் ஈர்க்கப்பட்டிருக்கும் அப்படீன்னு நான் கண்டிப்பா நம்பறேன்.  மேலும் ஒரு துறையில சீர்திருத்தம் செய்யப்படும் போது, சீர்திருத்தம் காரணமா எத்தனை வகையான பலன்கள் ஏற்படுது, எத்தனை பேர் ஆதாயம் அடையறாங்க அப்படீங்கறது பத்தி எல்லாம் நீங்க விவரமா எடுத்துச் சொன்னீங்க.  ஏன்னு சொன்னா நீங்க அந்தத் துறையிலேயே இருக்கீங்க, அதை உன்னிப்பா கவனிச்சிருப்பீங்க, இதோட கூட நம்ம நாட்டோட இளைஞர்களும் இப்ப இந்தத் துறையில, நம்ம நாட்டிலேயே தங்களோட எதிர்காலத்தை அமைச்சுக்கறாங்க. தங்களோட திறமைகளை இங்க பயன்படுத்த விரும்பறாங்கன்னும் சொல்லி இருக்கீங்க. இது ரொம்ப அருமையான ஒரு கவனிப்பு.  இப்ப நான் மேலும் ஒரு கேள்வி கேட்க விரும்பறேன். இப்ப ஸ்டார்ட் அப்புகள் மற்றும் விண்வெளித் துறையில வெற்றியடைய விரும்பற இளைஞர்களுக்கு நீங்க தெரிவிக்க வேண்டிய செய்தி என்னவா இருக்கும்?

பிரணித் – நான் பிரணித் பேசறேன், இதுக்கான விடையை நான் அளிக்கறேன்.

பிரதமர் – சொல்லுங்க பிரணித்.

பிரணித் – சார், என்னோட சில ஆண்டுக்கால அனுபவத்திலிருந்து நான் ரெண்டு விஷயங்களைத் தெரிவிச்சுக்க விரும்பறேன்.  முதலாவதா, யாராவது ஸ்டார்ட் அப்பை தொடங்க நினைச்சாங்கன்னா, அதுக்கான நேரம் இது தான்.  ஏன்னா, உலகம் முழுவதிலயும், இந்தியா தான் மிகவும் வேகமாக வளர்ந்திட்டு வர்ற பொருளாதாரம். இதோட அர்த்தம் என்னன்னா, உங்க கிட்ட ஏராளமான வாய்ப்பு இருக்குங்கறது தான்.  அடுத்த வருஷம் எங்களோட ஒரு செயற்கைக்கோள் ஏவப்படும்னு நினைச்சு எப்படி நான் 24 வயசுல பெருமைப்படுறேன் இல்லையா, அந்த மாதிரி.  இந்த அடிப்படையில நம்ம அரசாங்கம் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கும். அதில எங்களோட ரொம்ப சின்ன பங்களிப்பும் ஒண்ணா இருக்கும்.  இப்படி தேசிய அளவுல தாக்கம் ஏற்படுத்தும் சில திட்டங்களோட இணைஞ்சு பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைச்சுது.   இது எப்படிப்பட்ட துறை, என்ன மாதிரியான நேரம் இது அப்படீன்னு பார்க்கும் போது, இது இன்னைக்கு, இப்பக்கூட துவங்கிட்டு இருக்குன்னு சொல்லலாம்.  நான் என்னோட இளைய நண்பர்கள் கிட்ட சொல்ல விரும்பறதெல்லாம், இந்த வாய்ப்பு தாக்கம் தொடர்பானது மட்டுமில்லை, அவங்களோட தனிப்பட்ட நிதி வளர்ச்சி பத்தினது. உலக அளவிலான ஒரு பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்துவது பத்தினது. நாங்க பரஸ்பரம் என்ன பேசிக்குவோம்னா, சின்ன வயசுல எல்லாம் என்ன ஆகணும்னு நினைக்கும் போது, பெரிய நடிகராகணும், விளையாட்டு வீரரா ஆகணும், இப்படி ஏதாவது நினைப்போம் இல்லையா?  ஆனா இன்னைக்கு யாராவது வளர்ந்த பிறகு விண்வெளித் துறையில வேலை பார்க்க விரும்பறேன், பெரிய தொழில்முனைவோரா ஆக விரும்பறேன்னு சொன்னா, அது தான் எங்களுக்குப் பெருமையான தருணம். இந்த மொத்த முழு மாற்றத்தில ஒரு சின்ன அங்கமா நாங்க இருக்கோம்.

பிரதமர் – நண்பர்களே, ஒரு வகையில பிரணித், கிஷன், டேனில், ரக்ஷித், சுயஷ் உங்களோட நட்பு எந்த அளவுக்கு ஆழமானதோ, அதே அளவுக்கு உங்க ஸ்டார்ட் அப்பும் ஆழமானது.  இதனால தான உங்களால இத்தனை அருமையா பணியாற்ற முடிஞ்சிருக்கு!  சில ஆண்டுகள் முன்னால ஐஐடி மதராஸ் போகக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சுது. அந்த அமைப்போட சிறப்புத்தன்மையை நானே அனுபவிச்சிருக்கேன்.  மேலும் ஐஐடி தொடர்பா உலகம் முழுவதிலயுமே கூட ஒரு மரியாதை கலந்த உணர்வு இருக்கு.  அங்கிருந்து படிச்சுட்டு வெளியேறும் மாணவர்கள், பாரதத்திற்காக பணியாற்றும் போது கண்டிப்பா நல்லதொரு பங்களிப்பை அளிக்கறாங்க.  நீங்க எல்லாருக்கும் சரி, விண்வெளித் துறையில பணியாற்றக்கூடிய எல்லா ஸ்டார்ட் அப்புகளுக்கும் சரி என்னோட பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவிச்சுக்கறேன். நீங்க ஐந்து நண்பர்களோடயும் பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு.  பலப்பல நன்றிகள் நண்பர்களே!!

சுயஷ் – தேங்க்யூ சோ மச்.

எனதருமை நாட்டு மக்களே,

அரசியல் பின்புலம் ஏதும் இல்லாத ஒரு இலட்சம் இளைஞர்களை, அரசியலமைப்போடு இணைப்பது குறித்த விஷயமாக, இந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து நான் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என்னுடைய இந்த விஷயம் குறித்து நிச்சயம் எதிர்வினை ஏற்பட்டிருப்பதை அறிகிறேன்.  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க விரும்புகிறார்கள் என்பதுதான்.  அவர்கள் அதற்காக சரியான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக நாடெங்கிலுமிருந்து இளைஞர்கள் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள்.  சமூக ஊடகங்களில் பலமான பதிலுரைகள் கிடைத்திருக்கின்றன.  பலவகையான ஆலோசனைகளை மக்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள்.  தங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றும் சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.  தாத்தா அல்லது தாய்-தந்தை என எந்த உறவும் இல்லாத காரணத்தால், விரும்பியும் கூட அவர்களால் அரசியலுக்கு வர இயலவில்லை.  கள அளவில் பணியாற்றிய நல்ல அனுபவம் தங்களிடம் இருப்பதால், பிரச்சனைகளுக்கான தீர்வைக் காண்பதில் உதவிகரமாக இருக்க முடியும் என்று இளைஞர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள்.  குடும்ப அரசியல் என்பது புதிய திறமைகளை அழித்து விடுகிறது என்று சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.  இதுபோன்ற முயற்சிகளால் நமது ஜனநாயகம் மேலும் பலமடையும் என்றும் சிலர் கருத்து  தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தங்கள் ஆலோசனைகளை அளித்த அனைவருக்கும் நான் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இப்போது நமது சமூக அளவிலான முயற்சிகளால், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத இத்தகைய இளைஞர்கள் அரசிலுக்குள் பிரவேசிப்பார்கள், அவர்களுடைய அனுபவம், அவர்களுடைய உற்சாகம் ஆகியன தேசத்திற்குப் பயன்படும்.

நண்பர்களே,

சுதந்திரப் போரின் போது சமூகத்தின் அனைத்துத் துறைகளிலிருந்தும் பலர் முன்வந்து பங்கேற்றார்கள், இவர்களுக்கு எந்த விதமான அரசியல் பின்புலமும் இருக்கவில்லை.  இவர்கள் தாங்களே முன்வந்து பாரதத்தின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தார்கள்.  இன்றும் கூட வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, மீண்டும் ஒருமுறை இதே உணர்வு தேவைப்படுகிறது.  நீங்கள் இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் என்னுடைய அனைத்து இளைய நண்பர்களிடமும் வேண்டிக் கொள்கிறேன்.  உங்களுடைய இந்த அடியெடுப்பு, உங்கள் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை மாற்ற வல்லது.

எனக்குப் பிரியமான நாட்டு மக்களே,

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி – இந்த இயக்கம் இந்த முறை முழுவீச்சில் நடந்தேறியது.  தேசத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் இந்த இயக்கத்தோடு தொடர்புடைய அற்புதமான படங்கள் வந்திருக்கின்றன. நமது வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்து இடங்களிலும் மூவண்ணக்கொடி!  மக்கள் தங்கள் கடைகளில், அலுவலகங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார்கள்.   தங்கள் கணிப்பொறிகளில், செல்பேசிகளில், வண்டிகளில் மூவண்ணக் கொடியைப் பறக்கச் செய்தார்கள்.  மக்கள் அனைவருமாக இணைந்து இப்படிப்பட்ட உணர்வினை எப்போது வெளிப்படுத்துகிறார்களோ, அப்போது அது அந்த இயக்கத்திற்கு மகுடம் சூட்டி விடுகிறது.  இப்போது நீங்கள் உங்கள் டிவி திரையில் காணும் படங்கள், இவை ஜம்மு-கஷ்மீரத்தைச் சேர்ந்தது.  இங்கே 750 மீட்டர் நீளம் கொண்ட மூவண்ணக் கொடியோடு கூடிய ஒரு மூவண்ணப் பேரணி நடத்தப்பட்டது, மேலும் இது உலகின் மிகவும் உயரமான சினாப் ரயில்பாலத்தின் மீது நடந்தது.  யாரெல்லாம் இந்தப் படங்களைப் பார்த்தார்களோ, அவர்களுடைய மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நிரம்பின.  ஸ்ரீநகரின் டல் ஏரியிலும் கூட மூவண்ணக்கொடி யாத்திரையின் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களை நாம் அனைவரும் கண்டோம்.  அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமேங்க் மாவட்டத்திலும் கூட 600 அடி நீளமான மூவண்ணக் கொடியோடு யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.  தேசத்தின் பிற மாநிலங்களிலும் கூட இதைப் போலவே, அனைத்து வயதினரும், இப்படிப்பட்ட மூவண்ணக்கொடிப் பேரணிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  சுதந்திரத் திருநாள் இப்போது ஒரு சமூகத் திருநாளெனவே ஆகி வருகிறது. இதனை நீங்களுமே கூட உணர்ந்திருப்பீர்கள். மக்கள் தங்களுடைய இல்லங்களையும் கூட மூவண்ண மாலைகளால் அலங்கரிக்கின்றார்கள்.  சுய உதவிக் குழுக்களோடு இணைந்த பெண்கள், இலட்சக்கணக்கான கொடிகளைத் தயார் செய்கின்றார்கள்.   இணையவழி வர்த்தகத் தளங்களில் மூவண்ணம் நிரம்பிய பொருட்களின் விற்பனை அதிகரிக்கின்றன.  சுதந்திரத் திருநாளின் போது தேசத்தின் நீர்-நிலம்-வானம் என அனைத்து இடங்களிலும் நமது கொடியின் மூன்று நிறங்கள் பளிச்சிட்டன.  இல்லந்தோறும் மூவண்ணம் இணையதளத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தங்கள் படத்தையும் தரவேற்றம் செய்திருந்தார்கள்.  இந்த இயக்கமானது தேசம் முழுவதையும் ஓரிழையில் இணைத்தது! இது தானே ஒரே பாரதம், உன்னத பாரதம்!!

என் மனம்நிறை நாட்டு மக்களே,

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான அன்பு பற்றி எத்தனையோ திரைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்!!  ஆனால் ஒரு நிஜக் கதை இப்போது அசாமிலே நடந்து வருகிறது.  அசாமின் தின்சுகியா மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமமான போர்குரியில், மோரான் சமூகத்தவர் வசிக்கிறார்கள். இதே கிராமத்தில் தான் ஹோலோ பந்தர் என்று இங்கே அழைக்கப்படும் ஹூலாக் கிபன் வசிக்கிறது.  இந்த கிராமத்தவருக்கும் ஹூலாக் கிபனுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். கிராமவாசிகள் இன்றும் கூட, தங்களுடைய பாரம்பரியமான நற்பண்புகளைப் பின்பற்றி வருகிறார்கள்.  ஆகையால் இந்த கிப்பன் குரங்குகளோடு இருக்கும் உறவுகள் மேலும் பலப்படும் வகையில் அனைத்துச் செயல்களையும் செய்திருக்கிறார்கள். இந்த கிப்பன்ஸ் குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் பிடிக்கும் என்று உணர்ந்த போது, உடனடியாக வாழை சாகுபடியை ஆரம்பித்தார்கள்.  இதைத் தவிர, எப்படி தங்களைச் சேர்ந்தவர்களுக்குச் செய்வார்களோ, அதைப் போலவே கிப்பன்ஸ் குரங்குகளின் பிறப்பு-இறப்போடு தொடர்புடைய அனைத்துச் சடங்குகளையும் செய்தார்கள்.   இவர்கள் கிப்பன்ஸ் குரங்குகளுக்குப் பெயர்களையும் சூட்டியிருக்கிறார்கள்.  தற்போது மின்கம்பிகளால் இவற்றுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன என்பதறிந்து இதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள், விரைவாக இதற்கான தீர்வும் காணப்பட்டது.  இப்போதெல்லாம் படங்களெடுத்தால் அவற்றுக்கு ஏற்ப இந்த கிப்பன்ஸ் குரங்குகள் போஸ் கொடுக்கின்றன என்று எனக்குச் சொன்னார்கள்.

நண்பர்களே,

விலங்குகளிடம் நேசத்தோடு இருப்பதிலே நமது அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.  அருணாச்சலைச் சேர்ந்த நமது சில இளைய நண்பர்கள், 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.  ஏன் தெரியுமா?  ஏனென்றால், கொம்புகளுக்காகவும், பற்களுக்காகவும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை இவர்கள் தடுத்து அவற்றைக் காக்க விரும்புகிறார்கள்.  நாபம் பாபு, லிகா நானா ஆகியோரின் தலைமையின் கீழ் இந்தக் குழுவானது, விலங்குகளின் பல்வேறு பாகங்களை 3டி பிரிண்டிங் செய்கிறது. விலங்குகளின் கொம்புகளாகட்டும், அவற்றின் பற்களாகட்டும், இவையனைத்தும் 3 டி பிரிண்டிங்கால் தயார் செய்யப்படுகின்றன.  இவற்றைக் கொண்டு மீண்டும் உடைகள் மற்றும் தொப்பி போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.  இந்த வித்தியாசமான மாற்றுக்களைத் தயாரிப்பதில் மக்கும் தன்மையுடைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இப்படிப்பட்ட அற்புதமான முயற்சிகளுக்கு எத்தனை ஆதரவளிக்க முடியுமோ அத்தனையும் அளிக்க வேண்டும்.  அதிக அளவிலான ஸ்டார்ட் அப்புகள் இந்தத் துறையிலே முன்வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இதனால் நமது விலங்கினங்கள் பாதுகாக்கப்படும், நமது பாரம்பரியமும் வளப்படும்.

என் உளம்நிறை நாட்டு மக்களே,

மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவாவிலே மிக அருமையான ஒரு விஷயம் நடந்து வருகிறது, இதை நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அங்கே நமது துப்புரவுப் பணியாள சகோதர சகோதரிகள் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.  இந்த சகோதர சகோதரிகள், கழிவுப் பொருட்களிலிருந்து செல்வம் ஈட்டுதல் என்ற விஷயத்தை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.  இந்தக் குழுவானது ஜாபுவாவின் ஒரு பூங்காவில் சேரும் குப்பைகளைக் கொண்டு, அற்புதமான கலைப்படைப்புக்களை உருவாக்கியிருக்கின்றது.  தங்களுடைய இந்தப் பணிக்காக அக்கம்பக்கத்திலிருந்து நெகிழிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், டயர்கள், குழாய்கள் ஆகியவற்றைத் திரட்டியிருக்கிறார்கள். இந்தக் கலைப்படைப்புக்களில் ஹெலிகாப்டர்கள், கார்கள், பீரங்கிகள் போன்றவை அடங்கும்.  அழகான தொங்கும் பூஞ்சட்டிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள்.  இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் டயர்கள், ஓய்வெடுக்கும் இருக்கைகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  துப்புரவுப் பணியாளர்களின் இந்தக் குழு, Reduce, Reuse, Recycle, அதாவது குறைவாய் பயன்படுத்தி, மீள்பயன்படுத்தி, மறுசுழற்சி செய்தல் என்ற மந்திரத்தை தனதாக்கிக் கொண்டிருக்கிறது.  இவர்களுடைய முயற்சிகளால் பூங்கா மிகவும் நேர்த்தியாகக் காட்சியளிக்கிறது.  இதைக் காண வட்டார மக்களோடு சேர்ந்து அக்கம்பக்க மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள்.

நண்பர்களே,

நமது தேசத்தின் பல ஸ்டார்ட் அப் குழுக்களும் கூட சுற்றுச்சூழலுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.   e -Conscious என்ற பெயருடைய ஒரு குழுவானது, நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்தி, சூழலுக்கு நேசமான பொருட்களைத் தயாரித்து வருகிறது.  நமது சுற்றுலாத் தலங்கள், குறிப்பாக மலைப் பகுதிகளில் பரவியிருக்கும் குப்பைக்கூளங்களைப் பார்த்த பிறகுதான் இப்படிச் செய்வதற்கான எண்ணமே இவர்களுக்கு வந்ததாம்.  இப்படிப்பட்ட மனிதர்களின் மேலும் ஒரு குழுவானது, Ecokaari என்ற பெயருடைய ஒரு ஸ்டார்ட் அப்பைத் தொடங்கியிருக்கிறது.  இந்த நெகிழிக் கழிவுகளைக் கொண்டு பலவகையான அழகான பொருட்களைத் தயாரிக்கின்றார்கள்.

நண்பர்களே,

பொம்மைகளை மறுசுழற்சி செய்வதும் கூட, நாமனைவரும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு துறை தான்.  குழந்தைகள் பலர் விரைவாகவே பொம்மைகளிடம் சலித்துப் போய் விடுகின்றனர். அதே நேரத்தில், பொம்மைகளோடு விளையாட மாட்டோமா என்ற ஏக்கக் கனவுகளைக் காணும் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எந்தப் பொம்மைகளோடு உங்கள் குழந்தைகள் விளையாடுவதில்லையோ, அவை எங்கே பயனாகுமோ அத்தகைய இடங்களில் நீங்கள் அளிக்கலாமே!!  இதுவுமே கூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு நல்ல வழியாகும்.  நாமனைவரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டால் தான் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும், தேசத்தை முன்னேற்றவும் முடியும்.

எனக்குப் பிரியமான நாட்டு மக்களே,

சில நாட்கள் முன்பாக, நாம் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று ரக்ஷாபந்தன் நன்னாளைக் கொண்டாடினோம். அந்த நாளன்று உலகம் முழுவதும் உலக சம்ஸ்கிருத தினமும் கொண்டாடப்பட்டது.  இன்றும் கூட நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சம்ஸ்கிருதத்தின்பால், மக்களுக்கு சிறப்பானதொரு ஈர்ப்பு தென்படுகிறது.  உலகின் பல நாடுகளில் சம்ஸ்கிருத மொழி தொடர்பாக பல வகையான ஆய்வுகளும், சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன.  மேலும் நாம் தொடர்வதற்கு முன்பாக உங்களுக்காக நான் ஒரு சிறிய ஒலிக்குறிப்பை இசைக்க விரும்புகிறேன்.

  • ஒலிக்குறிப்பு –

நண்பர்களே, இந்த ஒலிக்குறிப்பு ஐரோப்பாவின் ஒரு நாடான லிதுவேனியாவோடு தொடர்புடையது.  அங்கே வைடிஸ் விடூனஸ் என்ற ஒரு பேராசிரியர், வித்தியாசமானதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார், இதன் பெயர் “சம்ஸ்கிருதம் ஆன் தி ரிவர்ஸ்”, அதாவது ஆற்றங்கரைகளில் சம்ஸ்கிருதம் என்பதே இதன் பொருள்.  சிலர் அடங்கிய ஒரு குழுவானது அங்கே ஓடும் நேரிஸ் ஆற்றின் கரையிலே கூடி, அங்கே வேதங்கள் மற்றும் கீதையை ஓதினார்கள்.  இப்படிப்பட்டதொரு முயற்சி கடந்த சில ஆண்டுகளாக அங்கே நடந்து வருகிறது.  நீங்களும் கூட சம்ஸ்கிருதத்தைப் பெருக்கும் இப்படிப்பட்ட முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வாருங்கள்.

எனதருமை நாட்டு மக்களே,

நம்மனைவரின் வாழ்க்கையிலே உடலுறுதி என்பதற்கு மிகவும் மகத்துவம் உண்டு.  உடலுறுதியோடு இருக்க நாம் நமது உணவு, வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்.  உடலுறுதியின்பால் விழிப்புணர்வை  மக்களிடம் ஏற்படுத்த, ஃபிட் இண்டியா இயக்கம் தொடங்கப்பட்டது.  ஆரோக்கியமாக இருப்பதற்காக இன்று அனைத்து வயது, அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், யோகக்கலையைப் பயின்று வருகிறார்கள்.  மக்கள் தங்களுடைய உணவுத் தட்டுக்களில் இப்போதெல்லாம் அருமையான உணவான சிறுதானியங்கள், அதாவது ஸ்ரீ அன்னத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  இந்த அனைத்து முயற்சிகளின் நோக்கம் என்னவென்றால், அனைத்துக் குடும்பங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது தான்.

நண்பர்களே,

நம்முடைய குடும்பங்கள், நமது சமூகம், நமது தேசம், இவை அனைத்தின் எதிர்காலமும் நமது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைச் சார்ந்தே இருக்கின்றன; குழந்தைகளின் நல்ல உடல் ஆரோக்கியத்தின் அடித்தளம் அவர்களுக்கு சரியான வகையிலான ஊட்டச்சத்து கிடைப்பது தான்.  குழந்தைகளின் ஊட்டச்சத்து தான் தேசத்தின் முதன்மை. அவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளின் மீது ஆண்டு முழுவதும் நமது கவனம் இருக்கிறது என்றாலும், ஒரு மாதம், தேசமானது இதன் மீது விசேஷ கவனத்தைச் செலுத்துகிறது.  இதன் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு இடையே ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்படுகிறது.  ஊட்டச்சத்து தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊட்டச்சத்து விழாக்கள், ரத்த சோகை தொடர்பான முகாம்கள், சிசுக்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிடுதல், கருத்தரங்குகள், இணையவழி கருத்துப் பரிமாற்றங்கள் போன்ற பல வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  பல இடங்களில் ஆங்கன்வாடிகள் மூலமாக தாய்-சேய் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  இந்தக் குழுவானது ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிசுக்களின் அன்னையரைக் கண்காணிக்கின்றது. தொடர்ந்து கவனிக்கின்றது. அவர்களுடைய ஊட்டச்சத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.  கடந்த ஆண்டு ஊட்டச்சத்து இயக்கம், புதிய கல்வித் திட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது.  ஊட்டச்சத்தோடு சேர்ந்த படிப்பு என்ற இயக்கம் வாயிலாக, குழந்தைகளின் சமச்சீரான வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படுகிறது.  நீங்களும் கூட உங்கள் பகுதியிலே ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு இயக்கங்களோடு இணைய வேண்டும்.  உங்களுடைய ஒரு சிறிய முயற்சியால், ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் அதிக சக்தி கிடைக்கும்.

எனதருமை நாட்டுமக்களே,

இந்த முறை மனதின் குரலில் இவ்வளவே! மனதின் குரலில் உங்களோடு உரையாடியது எனக்கு எப்போதும் போலவே நன்றாக இருந்தது.  ஏதோ நான் எனது குடும்ப உறுப்பினர்களோடு அமர்ந்து, மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தது போன்றதொரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது.  நான் என்றுமே உங்கள் மனங்களோடு தொடர்புடையவனாக இருந்திருக்கிறேன்.  உங்களுடைய பின்னூட்டங்கள், உங்களுடைய ஆலோசனைகள் ஆகியன எனக்கு மிகவும் மதிப்பானவை. அடுத்த சில நாட்களில் பண்டிகைகள் பல வரவிருக்கின்றன.  நான் உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  ஜன்மாஷ்டமி பண்டிகையும் வரவிருக்கிறது.  அடுத்த மாதத் தொடக்கத்தில் பிள்ளையார் சதுர்த்தியும் வரவிருக்கிறது.  ஓணம் பண்டிகையும் சில நாட்களில் வந்து விடும். மிலாத் உன் நபிக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே,

இந்த மாதம் 29ஆம் தேதியன்று தெலுகு பாஷா தினம் வரவிருக்கிறது.  இது உண்மையிலேயே மிகவும் அற்புதமானதொரு மொழி. உலகெங்கிலும் இருக்கும் அனைத்துத் தெலுகு மொழி பேசுவோருக்கும், தெலுகு பாஷா தினத்திற்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

பிரபஞ்ச வியாப்தங்கா உன்ன,

தெலுகு வாரிகி,

தெலுகு பாஷா தினோத்ஸவ ஷுபாகாங்க்ஷலு.

நண்பர்களே,

நீங்களனைவரும் மழைக்காலத்தில் கவனமாக இருங்கள், மழைநீரைச் சேகரிக்கும் இயக்கத்தில் பங்கெடுக்கவும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.  ஒரு மரம், தாயின் பெயரில் இயக்கம் பற்றி உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  அதிக அளவிலான மரங்களை நடுங்கள், மற்றவர்களையும் நட ஊக்கப்படுத்துங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.   வரவிருக்கும் நாட்களில் பேரிஸ் நகரிலே, பேராலிம்பிக்ஸ் தொடங்க இருக்கிறது.  நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகள் அங்கே செல்லவிருக்கிறார்கள்.  140 கோடி பாரதீயர்கள், தங்களுடைய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கக்குரல் கொடுப்போம்.  நீங்களும் கூட #cheer4bharat என்பதோடு இணைந்து, நமது விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளியுங்கள்.  அடுத்த மாதம் நாம் மீண்டும் ஒருமுறை இணைவோம், பல விஷயங்கள் குறித்து உரையாடி மகிழ்வோம்.  அதுவரை, எனக்கு விடை தாருங்கள்.  பலப்பல நன்றிகள், வணக்கம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...