இந்தியா – குவைத் இடையேயான உறவுகள், பல்துறைகளில் ஒத்துழைத்து, இணைந்து செயல்படும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக இரு நாட்டு தலைவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டனர்.
மேற்காசிய நாடான குவைத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். கடந்த 1981ல் அப்போதைய பிரதமர் இந்திரா அங்கு சென்றார். 43 ஆண்டுகளுக்குப் பின், இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் பயணமாக இது அமைந்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு ஏற்கனவே உள்ளது. இரு தரப்பு வர்த்தகம், 2023 – 2024ல், 89,000 கோடி ரூபாயாக இருந்தது.
நம் நாட்டின் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியில், ஆறாவது பெரிய நாடாக குவைத் உள்ளது. நாட்டின் மொத்த பெட்ரோலியப் பொருட்களின் தேவைகளில், 3 சதவீதம் அந்த நாட்டில் இருந்து பெறப்படுகிறது.
குவைத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி முதல் முறையாக, 17,000 கோடி ரூபாயை சமீபத்தில் தாண்டியுள்ளது. அதே நேரத்தில், குவைத் முதலீட்டு ஆணையம், நம் நாட்டில், 85,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளது.
இந்த நிலையில், குவைத் மன்னர் ஷேக் மஷேல் அல் அஹமது அல் ஜபார் அல் ஷாபாவின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி அங்கு சென்றார். குவைத் வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு உட்பட பல நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் பங்கேற்றார்.
குவைத் மன்னரை நேற்று அவர் சந்தித்து பேசினார். முன்னதாக, குவைத் மன்னர் அரண்மனையில், மோடிக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது, தகவல் தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு, நிதி தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உட்பட பல துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இரு நாட்டுக்கு இடையே நீண்ட வர்த்தக உறவு இருந்தாலும், அது பல துறைகளில் ஒத்துழைத்து, இணைந்து பணியாற்றும் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளதாக இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பட்டத்து இளவரசர் ஷேக் ஷபா அல் காலித் அல் ஷாபாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக இருவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பரஸ்பரம் பாராட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.
‘பிரதமர் மோடியின் இந்த பயணத்தால், இரு நாட்டுக்கு இடையேயான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது’ என, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குவைத் மன்னருடனான பேச்சுக்கு முன், ‘ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற அந்நாட்டின் மிகவும் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதை, குவைத் மன்னர் வழங்கி கவரவித்தார். இரு தரப்பு உறவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியதற்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக, குவைத் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதையும் சேர்த்து, பிரதமர் மோடிக்கு இதுவரை, 20 நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |