தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது உடலுக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் நேற்று, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவவரும், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன், 93, சென்னையில் நேற்று முன்தினம், வயது மூப்பின் காரணமாக இறந்தார்.
சில நாட்களுக்கு முன், அவருக்கு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து, சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்ச் 19ல், மருத்துவமனையில் இருந்தபடியே, தன்னுடைய 93வது பிறந்த நாளை, ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரத்தில் சுதந்திர போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன், தங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன். குமரி மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால், குமரி அனந்தனாக மாறினார்.
தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற அவர், காமராஜர் மீதுள்ள பற்று காரணமாக, மாணவர் காங்கிரசில் இணைந்து, அரசியல் வாழ்க்கையை துவக்கினார். கிருஷ்ணகுமாரி என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு, தமிழிசை உள்ளிட்ட 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாக ஒரு முறையும், 5 முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்துள்ளார். காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் மற்றும் தொண்டர் காங்கிரஸ் என்ற பெயரில், இரண்டு கட்சிகளை நடத்திய பின், மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
பார்லிமென்டில் முதல் முறையாக தமிழில் பேசியவர் குமரி அனந்தன். துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு, வாஞ்சி மணியாச்சி என, பெயர் சூட்ட காரணமாக இருந்தார். சமீபத்தில் தன் கடைசி ஆசையாக, வாஞ்சி மணியாச்சி ரயில்வே நிலையத்தின் பெயர் பலகைக்கு, தன் உதவியாளர் பாஸ்கர் வாயிலாக, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வைத்தார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க காரணமாக இருந்தார். ‘பனை மரத்தை பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்திய அவர், கள் போதை பொருள் என்பதால், கள்ளுக்கடை திறக்கக்கூடாது என போராடியவர். பூரண மதுவிலக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக, 17 முறை பாதயாத்திரை சென்றுள்ளார்.
‘இலக்கிய செல்வர்’ என அழைக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு, கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில், ‘தகைசால் விருது’ வழங்கப்பட்டது.
‘உலகம் சுற்றும் குமரி பயண அனுபவங்கள், கடலில் மிதக்கும் காடுகள், பேச்சு கலை பயிற்சி’ என, பல்வேறு தலைப்புகளில் நுால்கள் எழுதியுள்ளார்.
மறைந்த குமரி அனந்தனின் உடல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின், மகள் தமிழிசைக்கு ஆறுதல் கூறினர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாளவன், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, த.வெ.க., பொதுச்செயலர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குமரி அனந்தனின் உடல், வடபழனி ஏ.வி.எம்., மின் மயானத்தில், அரசு மரியாதையுடன், நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |